
அஞ்சுகம் கதவைத் திறந்தாள்.
மணி பதட்டதுடன் நின்று கொண்டிருந்தான்.
"என்னடா ஆச்சு? உள்ள வா" என்றாள் அஞ்சுகம்.
"அத்தை! ஊர்ல ஒரே கலவரமா இருக்கு. யாரும் வெளியில போகாதீங்க. அதைச் சொல்லத்தான் வந்தேன்"
"நாங்க எங்கேயும் போகல."
"ஜாக்கிரதை, அத்தை!" என்று சொல்லி விட்டுக் கிளம்ப யத்தனித்த மணி, திரும்பி உள்ளே பார்த்து விட்டு,"மாமா எங்கே?" என்றான்.
"அவர் எப்ப வீட்டில இருந்திருக்காரு? யாருக்கோ உடம்பு சரியில்லைன்னு பாத்துட்டு வரேன்னுட்டுப் போனாரு. வர நேரம்தான்."
"கலவர சமயத்தில வெளியே போயிருக்காரே! வந்தப்புறம் எங்கேயும் போகாம பாத்துக்கங்க" என்றான் மணி.
மணி மீண்டும் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, மாலை மணி நான்கு ஆகியிருந்தது.
கதவைத் திறந்த அஞ்சுகம், "காலையில போனவர் இன்னும் வரவே இல்லியேடா. மதியம் சாப்பாட்டுக்கே வர வேண்டியவரு. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு" என்றாள், கவலையுடன்.
"அப்படியா?" என்ற மணி, "நான் போய்ப் பாத்துட்டு வரேன். இப்ப வெளியில கொஞ்சம் அமைதியாயிருக்கு. தைரியமா இருங்க" என்று சொல்லி விட்டுப் போனான்.
மாலை ஆறு மணிக்கு மணி வந்து பார்த்தபோதும், அஞ்சுகத்தின் கணவர் சுந்தரமூர்த்தி வீட்டுக்கு வந்திருக்கவில்லை.
அஞ்சுகம் கவலை அதிகமாகி அழுது விடுவாள் போலிருந்தாள். "யாருக்காவது ஏதாவது உதவி செய்யறேன்னு அடிக்கடி வெளியே போயிட்டு லேட்டா வரது வழக்கம்தான். ஆனா ஊர்ல கலவரமா இருக்கறப்ப, அவர் இவ்வளவு நேரமா வராததுதான் கவலையா இருக்கு" என்றாள்.
"அவருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?" என்றாள் தொடர்ந்து.
"அப்படியெல்லாம் இருக்காது அத்தை" என்று மணி சொன்னபோது, அவன் குரல் நம்பிக்கையாக ஒலிக்கவில்லை. சற்றுத் தயங்கி விட்டு, "கலவரத்தில் அடிபட்டவங்களைப் பக்கத்து ஊர் ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம். நான் போய்ப் பாத்துட்டு வரேன்" என்றான் மணி.
அஞ்சுகத்திடமிருந்து வெடித்து வந்த விம்மல்தான் அவனுக்கு பதிலாக இருந்தது.
மணி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, மருத்துவமனையின் வாசலிலும், படிக்கட்டுகளிலும், வராந்தாவிலும் நீல நிற மருந்திடப்பட்ட திறந்த காயங்கள், கட்டுக்கள் இவற்றுடன் பலர் அமர்ந்த நிலையிலும், படுத்துக் கொண்டும் இருந்ததைப் பார்த்தான்.
அதிகமாக அடிபட்டவர்கள் உள்ளே கட்டில்களில் படுக்க வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
அதிகம் அடிபடாமல் வெளியில் இருந்தவர்களிடையே சுந்தரமூர்த்தி இல்லாததால், மணி கலக்கத்துடன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து. ஒவ்வொரு கட்டிலாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.
ஒரு கட்டிலில் சுந்தரமூர்த்தி படுத்திருப்பது சற்றுத் தொலைவிலிருந்தே தெரிந்தது. அருகில் ஓடிச் சென்று பார்த்தபோது, அவர்தான் என்று உறுதியாயிற்று.
எங்கே அடிபட்டிருக்கிறது என்று தெரியவில்லை. மேலே போர்வை போர்த்தப்பட்டிருக்க, கண் மூடிப் படுத்திருந்தார். நினைவில்லாமலோ, உறங்கிக் கொண்டோ இருந்தார். மேலே தொங்கிய பாட்டிலிலிருந்து குழாய் மூலம் மணிக்கட்டில் மருந்து இறங்கிக் கொண்டிருந்தது.
யாரைக் கேட்பது என்று மணி யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த ஒருவர் கட்டிலில் படுத்திருந்த சுந்தரமூர்த்தியைப் பார்த்து விட்டு, "எல்லாரும் கலவரத்துக்கு பயந்து ஓடிக்கிட்டிருக்கச்சே, இவர் மட்டும் உயிரைப் பத்திக் கவலைப்படாம, தெருத்தெருவா நடந்து போய், அடிபட்டவங்களையெல்லாம் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செஞ்சுக்கிட்டிருந்தாரு. கடைசியில, இவருக்கே கலவரத்தில் காயம் பட்டுடுச்சு போலருக்கு. பாவம்!" என்று சொல்லி விட்டுப் போனார்.
சில நிமிடங்கள் கழித்து அங்கே வந்த ஒரு நர்ஸிடம் "என்னங்க! இவருக்கு பலமா அடிபட்டிருக்கா?" என்றான் மணி.
"அடிபடறதா? இவர் காலையிலேந்து அடிபட்டவங்களையெல்லாம் தேடிப் பிடிச்சு, ஆட்டோவிலேயும், வண்டியிலேயும் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிக்கிட்டிருந்திருக்காரு. எப்ப சாப்பிட்டாரோ தெரியல. களைப்பு அதிகமாகி மயங்கி விழுந்துட்டாரு. இவரை யாரோ இங்கே கொண்டு வந்து சேத்தாங்க. குளூகோஸ் ஏத்திக்கிட்டிருக்கோம். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு இவரை நீங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போகலாம்" என்றாள் நர்ஸ்.
துறவறவியல்
அதிகாரம் 25
அருளுடைமை
குறள் 244மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
உலகில் உள்ள உயிர்களிடம் அன்பு கொண்டு, அவற்றைப் பேணி வளர்ப்பவருக்குத் தன் உயிர் பற்றி அஞ்சும் நிலை ஏற்படாது.
No comments:
Post a Comment