About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, October 21, 2020

369. அத்தனைக்கும் ஆசைப்படு!

"என்னங்க எக்ஸ்சேஞ்ஞ் ஆஃபர்ல இந்த சங்கிலியைக் கொடுத்துட்டுப் புதுசா ஒரு நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்!" என்றாள் கார்த்திகா.

அவள் கணவன் ராஜா எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

"நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலியே நீங்க?"

"நீ எங்கிட்ட எதுவும் கேக்கலியே! நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்னு சொன்னே. நான் இதில பதில் சொல்றதுக்கு என்ன இருக்கு? தகவல் சொன்னதுக்கு நன்றின்னு வேணும்னா சொல்லலாம்!" என்று சொல்லி விட்டு உடனே சிரித்தான் ராஜா, மனைவி கோபித்துக் கொள்ளப் போகிறாளே என்ற பயத்தில்.

"எனக்குன்னு ஏதாவது வாங்கிக்கிட்டா உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். நீங்களாவும் எனக்கு வாங்கிக் கொடுக்க மாட்டீங்க. நானா வாங்கிக்கிட்டாலும் உங்களுக்குப் பிடிக்காது" என்றாள் கார்த்திகா கோபத்துடன்.

'கோபித்துக் கொண்டு 'சரி வேண்டாம்' என்று மட்டும் சொல்ல மாட்டாயே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ராஜா, "இங்க பாரு கார்த்திகா! நீ எதை வாங்கினாலும் நான் வேண்டாம்னு தடுத்ததில்ல. ஆனா நீ நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படற. தேவையில்லாம குக்கர், மிக்ஸி மாதிரி பொருட்களை அடிக்கடி மாத்தற. வாரத்தில ரெண்டு நாள் மாட்னி ஷோ போற. நமக்கு வசதி இருக்குதான். ஆனா நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படறது உனக்கே நல்லது இல்லைன்னு எனக்குத் தோணுது. அப்புறம் உன் இஷ்டம்" என்று சொல்லி விட்டு அவள் பதில் சொல்வதற்கு முன் அங்கிருந்து வெளியேறி விட்டான் ராஜா. 

ல பொருட்களை வாங்குவது, வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது போன்ற கார்த்திகாவின் பழக்கம் தொடர்ந்தது. 

அவள் மகனும், மகளும் கூட, "ஏம்மா, சோஃபா, டிவின்னு எல்லாத்தையும் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கே? நாங்களே அந்த அளவுக்குப் புதுசா வர பொருட்களை வாங்க ஆசைப்படறதில்லையே!" என்று அவளிடம் பலமுறை சொன்னார்கள்.

"உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் எதையுமே வாங்கறேன். அதைப் புரிஞ்சுக்காம நீங்களும் உங்கப்பா சொல்ற மாதிரியே சொல்றீங்களே!" என்று குறைப்பட்டுக் கொண்டாள் கார்த்திகா.

சில வருடங்களுக்குப் பிறகு, பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள் கார்த்திகா. சினிமாவுக்குப் போவதையும் விட்டு விட்டாள்.

அவளுடைய மாற்றத்துக்குக் காரணம் ராஜாவுக்குப் புரியவில்லை. யாராவது ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொன்னதைக் கேட்டு மனம் மாறி இருப்பளோ என்று நினைத்தான்.

ஒருமுறை ராஜாவே அவளிடம் புதிதாக வந்திருக்கும் ஒரு விலை உயர்ந்த கைபேசியை வாங்கிக் கொள்ளச் சொன்னபோது அவள் வேண்டாமென்று சொல்லி விட்டாள். "இந்த ஃபோன்லேயேதான் எல்லாம் இருக்கே! இதுக்கு மேல என்ன வேணும்?" என்றாள் அவள்.

"ரொம்ப ஆச்சரியமா இருக்கே! எப்படி இப்படித் தலைகீழா மாறின?"

"நீங்க சொன்ன மாதிரி எல்லாத்துக்கும் ஆசைப்படற மனநிலைதான் எனக்கு இருந்தது. ஆனா அப்பல்லாம் நான் சந்தோஷமாவே இல்லை. புதுசா ஏதாவது வாங்கினா கூட, அதை சந்தோஷமா அனுபவிக்காம வேற எதுக்காவது ஆசைப்படறது, அதைப் பத்தி நினைக்கறதுன்னு எப்பவும் மனசு அலைபாஞ்சுக்கிட்டே இருந்தது. 

"சினிமா பாக்கறது, கச்சேரிகளுக்குப் போறது, லேடீஸ் கிளப் நிகழ்ச்சிகளுக்குப் போறது எல்லாம் கூட அப்படித்தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா யோசிச்சுப் பாத்தேன். எங்கிட்ட ஏதோ குறை இருக்கற மாதிரி தெரிஞ்சுது. 'அத்தனைக்கும் ஆசைப்படு'ன்னு ஒரு சாமியார் சொல்லுவாரே, அது மாதிரிதான் நான் உண்மையிலேயே இருக்கேனோன்னு தோணிச்சு!

"அப்புறம் எனக்கு வந்த ஆசைகளையெல்லாம் அலட்சியப்படுத்த ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்க ஆரம்பச்சுது. நம்ம பிள்ளைங்களோட படிப்பு, அவங்களோட, தேவைகள், உங்களோட தேவைகள் எல்லாம் என் கவனத்துக்கு வர ஆரம்பச்சுது. அப்புறம் செய்ய வேண்டிய காரியங்கள்ள கவனம் செலுத்திக்கிட்டு இருக்கறப்ப ஒரு அலாதியான திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குது. இப்பல்லாம் நான் முன்னை விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள் கார்த்திகா.

ராஜா அவளை வியப்புடன் பார்த்தான். 

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்:
துன்பங்களுக்குள் கொடிய துன்பமான ஆசை என்னும் துன்பத்தை ஒழித்து விட்டால், இடைவிடாத இன்பம் கிட்டும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Sunday, October 11, 2020

368. பாதை மாறிய பின்...

"நமக்கென்ன குறைச்சல்? அரசாங்க வேலை. நாம குடும்பம் நடத்தப் போதுமான அளவுக்கு சம்பளம். அளவா, அருமையா ரெண்டு குழந்தைகள். நாம சந்தோஷமாத்தானே இருக்கோம்?" என்றான் பரசு, தன் மனைவி பிரேமாவிடம்.

அவள் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல் மௌனமாகத் தலையசைத்தாள்.

ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவள் மனநிலை சற்று மாறி விட்டது.

"நம்ம பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேக்கணுங்க" என்றாள் ஒரு நாள்.

"ஏன், இந்தப் பள்ளிக்கூடம் நல்லாத்தானே இருக்கு? ரெண்டு பேரும் நல்லாத்தானே படிக்கறாங்க?" என்றான் பரசு.

"படிக்கிறாங்க. ஆனா இப்பல்லாம் படிப்பு மட்டும் இருந்தாப் போதாதுங்க. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்னு சொல்றாங்களே, அதெல்லாமும் இருந்தாதான் எதிர்காலத்தில நம்ம பிள்ளைங்களால மத்தவங்களோட போட்டி போட்டு முன்னுக்கு வர முடியும். சில பள்ளிக்கூடங்கள்ள ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கெல்லாம் கூட மாணவர்களை ஆறாம் வகுப்பலேந்தே தயார் செய்யறாங்களாம்!" என்றாள் பிரேமா.

"சரி. விசாரிச்சுப் பாக்கறேன்" என்றான் பரசு.

சில நாட்கள் கழித்து, "நீ சொன்ன மாதிரி ரெண்டு மூணு பள்ளிக்கூடங்கள்ள விசாரிச்சுப் பாத்தேன், பிரேமா! அவங்க வாங்கற கட்டணம் நமக்குக் கட்டுபடியாகாது" என்றன் பரசு.

"அப்படியா?" என்றாள் பிரேமா ஏமாற்றத்துடன். 

சில நாட்களுக்குப் பிறகு "நீ சொன்ன மாதிரி நம்ப பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேத்துடலாம்!" என்றான் பரசு பிரேமாவிடம்.

"எப்படிங்க? அவங்க வாங்கற ஃபீஸ் நமக்குக் கட்டுப்படி ஆகாதுன்னு சொன்னீங்களே!" என்றாள் பிரேமா மகிழ்ச்சியுடனும், வியப்புடனும்.

லஞ்சம் புழங்கும் அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கக் கூடாது என்று நேர்மையுடன் செயல்பட்டு வந்த சிறுபான்மையருள் ஒருவனாக இருந்த தான் இப்போது பணத்தேவைக்காக மனம் மாறி லஞ்சம் வாங்கும் பெரும்பான்மையினர் கட்சியில் இணைந்து விட்டதை மனைவியிடம் தயக்கத்துடன் தெரிவித்தான் பரசு. 

பிரேமா எதுவும் சொல்லவில்லை.

பரசுவிடம் பணப்புழக்கம் அதிகமானதும் அவர்கள் வீட்டில் பெரிய திரை எல் ஈ டி டிவி முதலிய பல புதிய வசதிகளும் இடம் பெறத் தொடங்கின.

"என்னங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் பிரேமா.

"நான் செய்யறது சரியான்னே தெரியல. ஒரு வருஷம் முன்னால சந்தோஷமா, நிம்மதியா இருந்தேன். இப்ப கொஞ்ச நாளா ஒரே மன உளைச்சல்!"

"ஏன் ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா?"

"ஆமாம். ஆனா எல்லாம் நானா வர வழைச்சுக்கிட்டதுதான். ஆஃபீஸ்ல நான் ஒரு சின்ன அதிகாரிதான்னா கூட எனக்கு ஒரு மதிப்பு, மரியாதை எல்லாம் இருந்தது.  இப்ப எல்லாம் போயிடுச்சு. மதிப்பு மரியாதையை விடு, அது முக்கியமில்ல. 

"ஆனா இப்பல்லாம் விதிகளுக்கு மீறி சில விஷயங்களைச் செய்யச் சொல்லி எனக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. தங்களுக்கு வேலை நடக்க வேண்டியவங்க, 'அதான். பணம் வாங்கறியே, அப்புறம் என்ன? அட்ஜஸ்ட் பண்ணி செஞ்சு கொடுக்க வேண்டியதுதானே, ரூல்ஸ் பத்தி எல்லாம் ஏன் பேசறே' ன்னு உரிமையோட கேக்கறாங்க. மேலதிகாரிகள் அவங்க விருப்பப்படி நான் நடந்துக்கணும்னு எதிர்பாக்கறாங்க. 'நீ ஒண்ணும் யோக்கியன் இல்லையே' என்கிற மாதிரி பேசறீங்க.

"எனக்கு வேற எப்ப மாட்டிக்கப் போறோமோன்னு எப்பவும் ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கு. முன்ன மாதிரி இருந்திருந்தா நிம்மதியா சந்தோஷமா இருந்திருக்கலாமேன்னு தோணுது,"

"எல்லாத்தையும் விட்டுடுங்க. பழையபடியே இருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, குடும்பத்துக்கும் நல்லது" என்றாள் பிரேமா.

"என்ன சொல்ற பிரேமா? பிள்ளைங்க படிப்பு என்ன ஆறது? அதுக்காகத்தானே இப்படியெல்லாம் செய்யறேன்!" என்றான் பரசு குழப்பத்துடன்.

"நானே உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன். பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் புதுப் பள்ளிக்கூடம் பிடிக்கவே இல்லையாம். 'என்னம்மா இது, எவ்வளவுதான் கத்துக்கறது? நாள் முழுக்க வாட்டி எடுக்கறாங்க. ஏகப்பட்ட ஹோம் ஒர்க் வேற. தூங்கக்கூட நேரமில்ல. வீட்டில பெரிய டி வி வாங்கி இருக்கீங்க. அதை அரை மணி நேரம் கூடப் பாக்க முடியல. சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ், ஞாயித்துக்கிழமை நாள் பூரா செய்ய வேண்டிய அளவுக்கு ஹோம் ஒர்க். எங்களால முடியல அம்மா. இந்த வருஷம் முடியப் போகுது, அடுத்த வருஷம் எங்களைப் பழைய ஸ்கூலிலேயே சேத்துடுங்க. நாங்க நல்லாப் படிக்கறோம்'னு எங்கிட்ட புலம்பறாங்க. 

"அதிகமா ஆசைப்பட்டது என்னோட தப்புதான். அவங்களைப் பழைய பள்ளிக்கூடத்திலேயே சேத்துடலாம். அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. நீங்களும் பழையபடியே நேர்மையானவரா சந்தோஷமா, நிம்மதியா இருக்கலாம்" என்றாள் பிரேமா.

பரசுவுக்கு ஏதோ லாட்டரியில் பெரிய பரிசு கிடைத்து விட்டதுபோல் இருந்தது. 

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

பொருள்:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசைகள் இருந்தால் மேலும் மேலும் துன்பங்கள் தொடர்ந்து வரும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Wednesday, October 7, 2020

367. வீடு தேடி அலைந்தபோது

ரகுராமன் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. இத்தனை ஆண்டுகளாக அவன் பணி செய்த பள்ளியில் அவனுக்கு இலவசமாக வீட்டு வசதி செய்து கொடுத்திருந்தார்கள். 
ஓய்வு பெற்ற பிறகும் அவன் வேறு வீடு பார்த்துப் போகும் வரை அவன் மூன்று மாதங்கள் அங்கே தங்கி இருக்க அவர்கள் அனுமதி கொடுத்திருந்தார்கள். அதில் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன.

"இத்தனை வருஷமா பள்ளிக்கூடத்தில கொடுத்த வீட்டிலேயே இருந்துட்டோம். நமக்குன்னு சொந்த வீடு இல்ல. வாடகைக்கு வீடு எடுத்து, என்னோட பென்ஷன்ல வாடகையும் கொடுத்து குடும்பத்தையும் நடத்தணும்னா கஷ்டம்தான். அதனாலதான் குறைஞ்ச வாடகையில வீடு கிடைக்குமான்னு பாத்துக்கிட்டிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது" என்றான் ரகுராமன் கவலையுடன். 

"நீங்க வேலையில இருந்தப்பவே ஒரு சின்ன வீடாவது வாங்கி இருக்கலாம். உங்களுக்கும் அந்த எண்ணம் வரல, எனக்கும் வரல. நான் ஆசைப்பட்டிருந்தேன்னா, நீங்க எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கி இருப்பீங்க!' என்றாள் அவன் மனைவி புவனேஸ்வரி.

"நாம ரெண்டு பேருமே நமக்குன்னு எந்த ஆசையும் வச்சுக்கல. நம்ப ரெண்டு பெண்களையும் படிக்க வச்சுக் கல்யாணம் பண்ணி வைக்கறதுலதான் கவனம் செலுத்தினோம். கடன் வாங்கி வீடு வாங்கியிருந்தா, என்னோட வருமானத்தில கடனுக்கு மாசா மாசம் பணம் கட்டி இருக்க முடியுமாங்கறது சந்தேகம்தான். அதனால நான் அப்படிப்பட்ட ஆசைக்கே இடம் கொடுக்கல. நீயும் என்னை மாதிரியே தனிப்பட்ட ஆசைகள் இல்லாமயே இருந்தது என்னோட அதிர்ஷ்டம்தான். பாக்கலாம். ஏதாவது வழி பிறக்காமயா போயிடும்?"

அன்று வீடு பார்க்க வெளியே அலைந்து விட்டு வீடு திரும்பிய ரகுராமன், "இன்னிக்கு ஒரு வீடு பாத்தேன். ஆனா வீட்டுக்காரர் வேற எங்கேயோ இருக்காரு. அவரு என்னை நேரில பாத்துட்டுத்தான் வீடு கொடுப்பாராம். நாளைக்கு என்னை அவர் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காரு. போய்ப் பாத்துட்டு வரேன்" என்றான்.

றுநாள் காலை வீட்டுக்காரரைப் பார்ப்பதற்காக வெளியே சென்ற ரகுராமன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மதியத்துக்கு மேல் புவனா அவனைத் தொலைபேசியில் அழைத்தபோது அழைப்பு செல்லவில்லை.

மாலை ரகுராமன் வீடு திரும்பியதும் புவனேஸ்வரி, "ஏங்க இவ்வளவு நேரம்? ஃபோன் பண்ணினா கூட நீங்க எடுக்கல. எனக்கு ரொம்பக் கவலையாயிடுச்சு. சாப்பிட்டீங்களா இல்லையா?" என்றாள் படபடப்புடன்.

"சாப்பிட்டுட்டேன். ரொம்ப தூரம் போயிருந்தேன். அங்கே சிக்னல் கிடைக்காம இருந்திருக்கும்" என்றான்.

"அப்படி எங்கே போனீங்க? வீட்டுக்காரரைப் பாத்தீங்களா இல்லையா? வீடு தரேன்னு சொன்னாரா?'

"நான் பாக்கப் போன வீட்டுக்காரர் ஒரு பெரிய புள்ளி. என்னைப் பத்தின விவரங்களைக் கேட்டதும், 'நான் ஒரு இனடர்நேஷனல் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன். அதுக்கு பிரின்சிபல் வேலைக்கு ஒரு நல்ல ஆளைத் தேடிக்கிட்டிருக்கேன். நீங்க வரீங்களா?'ன்னு கேட்டாரு, அப்புறம் கார்ல என்னை அந்த ஸ்கூலுக்கு அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டினாரு. ஸ்கூல் கட்டிடம் எல்லாம் முடிஞ்சு தயாரா இருக்கு. எல்லா அனுமதியும் வாங்கிட்டாரு."

"வேலையை ஒப்புத்துக்கிட்டீங்களா இல்லையா?" என்றாள் புவனேஸ்வரி பொறுமையின்றி. 

'உன்னைக் கேட்டுக்கிட்டுத்தானே சரின்னு சொல்லணும்?" என்றான் ரகுராமன் சிரித்தபடி.

"என்னை எதுக்குக் கேக்கணும்?"

"சம்பளம் நான் ரிடயர் ஆறப்ப வாங்கினதை விட பத்தாயிரம் ரூபா அதிகம். இப்ப வந்துக்கிட்டிருக்கற பென்ஷனும் வரும். நான் விரும்பற வரை வேலையில இருக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா ஒரு சிக்கல்..."

"அதானே பாத்தேன்? என்ன சிக்கல்?" என்றாள் புவனா சற்று ஏமாற்றத்துடன்.

"நாம அங்கேயேதான் இருக்கணும். இதை விடப் பெரிய வீடு கொடுக்கறாங்க. வாடகை கிடையாது. பரவாயில்லையா?"

"ஏங்க உங்களுக்குப் பைத்தியமா? இவ்வளவு நல்ல வாய்ப்பை உடனே ஒத்துக்காம எங்கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் ஒத்துப்பேன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க! அவரு மனசு மாறிடப் போறாரு!" என்றாள் புவனேஸ்வரி கவலையுடன்.

"கவலைப்படாதே! நான் வேலையைஒத்துக்கிட்டேன். அவர் அப்பாயின்ட்மென் ஆர்டர் கொடுத்துட்டாரு. வீட்டுச் சாவியையும் கொடுத்துட்டாரு. நாம மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!" என்றான் ரகுராமன், பையிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து ஆட்டியபடியே.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

பொருள்:
ஒருவன் ஆசையை முழுவதுமாக ஒழித்து விட்டால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய செயல் அவன் விரும்பியபடியே வாய்க்கும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Thursday, October 1, 2020

366. கண்ணன் கேட்ட கீதை!

குருட்சேத்திரப் போரில் வென்ற பிறகு யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுர அரசனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களைக் காண துவாரகையிலிருந்து கண்ணன் வந்தார்.  

தன் நண்பன் அர்ஜுனன், அவன் மனைவியும் தன் தங்கையுமான சுபத்ரா, திரௌபதி, யுதிஷ்னிரனின் மற்ற சகோதரர்கள் அனைவரையும் நலம் விசாரித்த பின் யுதிஷ்டிரனைப் பார்க்க வந்தார் கண்ணன்.

"வா கண்ணா! உன் தங்கை, உன் அன்புக்குரிய மைத்துனன், என் மற்ற எல்லா சகோதரர்கள் எல்லோரையும் பார்த்த பின் இப்போதாவது என்னைப் பார்க்க நேரம் கிடைத்ததே உனக்கு!" என்றான் யுதிஷ்டிரன்.

"யுதிஷ்டிரா! நீ அரசன். உன் நேரத்தை நான் வீணாக்கக் கூடாது. அதனால் உன் முக்கியமான பணிகள் பற்றி உன் அமைச்சரிடம் கேட்டறிந்து, உனக்கு வேலைச்சுமை குறைவாக இருக்கும் நேரம் எது என்று கேட்டறிந்து இப்போது வந்திருக்கிறேன்" என்றார் கண்ணன்.

"உன்னைச் சந்தித்து உரையாட என் எந்தப் பணியும் தடையாக இருக்காது கண்ணா!" என்றான் யுதிஷ்டிரன்.

சற்று நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிய பின், இருவரும் அறத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

"கண்ணா! நீ அர்ஜுனனுக்கு கீதை உரைத்தபோது பல தர்மங்களை எடுத்துச் சொன்னாய். நான் அவற்றை அவனிடம் கேட்டறிந்து உன் அறிவுரையைப் பின்பற்ற முயன்று வருகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.

"உனக்குத் தெரியாத தர்மமா யுதிஷ்டிரா? எல்லோரும் உன்னை தர்மபுத்திரன் என்றல்லவா அழைக்கிறார்கள்? காலப்போக்கில் யுதிஷ்டிரன் என்ற உன் பெயரே மறக்கப்பட்டு தர்மபுத்திரன் என்ற பெயர்தான் உனக்கு நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறேன்."

"இல்லை கண்ணா! அறத்தைப் பற்றிய ஒரு அடிப்படையான உண்மையை நான் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டேன். எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு அதுதான் முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.

கண்ணன் வியப்புடன், "எந்த உண்மையை நீ புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டாய்?" என்றார்.

"ஆசைகளுக்கு அஞ்சி வாழ்வதே அறம் என்ற உண்மையை நான் புரிந்து கொள்ளவில்லை."

"நீ சொல்வது வியப்பாக இருக்கிறது. நீ எதற்கும் ஆசைப்பட்டவன் அல்லவே! உங்களுக்காக துரியோதனனிடம் நான் தூது போனபோது, 'துரியோதனன் எங்களுக்கு உரிய நாட்டைக் கொடுக்க மறுத்தால், ஐந்து கிராமங்களாவது கொடுக்கச் சொல், அதற்கும் அவன் ஒப்புக்கொள்ளாவிட்டால் ஐந்து வீடுகளாவது கொடுக்கச் சொல்' என்று என்னிடம் சொல்லி அனுப்பியவன் அல்லவா நீ? உனக்கு ஆசை என்று ஒன்று எப்போது இருந்ததது?" என்றான் கண்ணன்.

"இருந்தது கண்ணா. எனக்குப் பகடை ஆட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியுமே!"

கண்ணன் பெரிதாகச் சிரித்து, "இதைத்தான் ஆசை என்று சொல்ல வந்தாயா? பகடை ஆட்டம் ஒரு விளையாட்டு. அதில் ஈடுபாடு இருப்பது பெரிய குற்றம் இல்லையே!" என்றார்.

"ஒரு விளையாட்டு என்ற அளவில் அதில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தால் நீ சொல்வது சரி. ஆனால் பொருட்களைப் பணயம் வைத்து ஆடும் பகடை ஆட்டம் அறத்துக்கு விரோதமானதல்லவா? பொருளைப் பணயம் வைத்து ஆடப்படும் பகடை ஆட்டத்தில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. யாராவது என்னைப் பகடை ஆட்டத்துக்கு அழைத்தால் என் எல்லாப் பணிகளையும் விட்டு விட்டு பகடை விளையாடப் போய் விடுவேன். என்னுடைய இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்டுதான் சகுனி துரியோதனனுடன் சதி செய்து திருதராஷ்டிரர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தான். அதை ஏற்றுக் கொண்டதன் விளைவு நாங்கள் எல்லாவற்றையும் இழந்து காட்டுக்குச் செல்ல நேரிட்டதில் தொடங்கி குருட்சேத்திரப் போருக்கு வழி வகுத்து லட்சணக்கணக்கானோர் போரில் மடியும் வரை நீண்டு விட்டது."

"திருதராஷ்டிரர் அழைப்பை ஏற்காவிட்டால் அவர் மனம் புண்படும், உங்களுக்கும், கௌரவர்களுக்குமான பகை அதிகரிக்கும் என்று கருதித்தானே அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாய்?"

"நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அழைப்பை ஏற்றதற்கு உண்மையான காரணம் பகடை ஆட்டத்தின் மீது எனக்கு இருந்த ஆசைதான் என்று இப்போது எனக்குப் புரிகிறது. ஆசையைக் கண்டு அஞ்சும் மனநிலையை அப்போது நான் கொண்டிருந்தால், திருதராஷ்டிரரின் அழைப்பைப் பணிவுடன் மறுத்து, நடந்த விபரீதங்களைத் தவிர்த்திருக்க முடியும். இப்போது அதை நினைத்து அடிக்கடி வருந்துகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.

"வருந்தாதே யுதிஷ்டிரா! நடதவற்றை நினைத்து வருந்துவதில் பயனில்லை என்பதை நீ நன்கு அறிவாய். அறம் பற்றிய உன் ஆழ்ந்த அறிவுதான் உன்னை இவ்வாறு சிந்தித்து உன் செயல்களின் பின்னணியை ஆராய வைத்திருக்கிறது. இது உன் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு உதவும். ஆசைகளுக்கு அஞ்சி வாழ்ந்தால்தான் அறத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்ற உன் சிந்தனையை எனக்கும் ஒரு பாடமாக நான் எடுத்துக் கொள்கிறன்" என்றார் கண்ணன்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

பொருள்:
ஆசைகளுக்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏனெனில், நம் மனதை மயக்கி நம்மை வஞ்சிப்பது ஆசைகள்தான்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்