"நீங்க வேலையில இருந்தப்பவே, ஒரு சின்ன வீடாவது வாங்கி இருக்கலாம். அந்த எண்ணம் உங்களுக்கும் வரல, எனக்கும் வரல. நான் ஆசைப்பட்டிருந்தேன்னா, நீங்க எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கி இருப்பீங்க!' என்றாள் அவன் மனைவி புவனேஸ்வரி.
"நாம ரெண்டு பேருமே நமக்குன்னு எந்த ஆசையும் வச்சுக்கல. நம்ப ரெண்டு பெண்களையும் படிக்க வச்சுக் கல்யாணம் பண்ணி வைக்கறதுலதான் கவனம் செலுத்தினோம். கடன் வாங்கி வீடு வாங்கியிருந்தா, என்னோட வருமானத்தில கடனுக்கு மாசா மாசம் பணம் கட்டி இருக்க முடியுமாங்கறது சந்தேகம்தான். அதனால, நான் அப்படிப்பட்ட ஆசைக்கே இடம் கொடுக்கல. நீயும் என்னை மாதிரியே தனிப்பட்ட ஆசைகள் இல்லாமயே இருந்தது என்னோட அதிர்ஷ்டம்தான். பாக்கலாம், ஏதாவது வழி பிறக்காமயா போயிடும்?"
அன்று வீடு பார்க்க வெளியே அலைந்து விட்டு வீடு திரும்பிய ரகுராமன், "இன்னிக்கு ஒரு வீடு பாத்தேன். ஆனா, வீட்டுக்காரர் வேற எங்கேயோ இருக்காரு. அவரு என்னை நேரில பாத்துட்டுத்தான் வீடு கொடுப்பாராம். நாளைக்கு என்னை அவர் வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காரு. போய்ப் பாத்துட்டு வரேன்" என்றான்.
மறுநாள் காலை வீட்டுக்காரரைப் பார்ப்பதற்காக வெளியே சென்ற ரகுராமன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மதியத்துக்கு மேல் புவனா அவனைத் தொலைபேசியில் அழைத்தபோது, அழைப்பு செல்லவில்லை.
மாலை ரகுராமன் வீடு திரும்பியதும், "ஏங்க இவ்வளவு நேரம்? நான் ஃபோன் பண்ணினா எடுக்கவும் இல்ல. எனக்கு ரொம்பக் கவலையாயிடுச்சு. சாப்பிட்டீங்களா இல்லையா?" என்றாள் புவனேஸ்வரி, படபடப்புடன்.
"சாப்பிட்டுட்டேன். ரொம்ப தூரம் போயிருந்தேன். அங்கே சிக்னல் கிடைக்காம இருந்திருக்கும்" என்றான்.
"அப்படி எங்கே போனீங்க? வீட்டுக்காரரைப் பாத்தீங்களா இல்லையா? வீடு தரேன்னு சொன்னாரா?"
"நான் பாக்கப் போன வீட்டுக்காரர் ஒரு பெரிய புள்ளி. என்னைப் பத்தின விவரங்களைக் கேட்டதும், 'நான் ஒரு இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன். அதுக்கு பிரின்சிபல் வேலைக்கு ஒரு நல்ல ஆளைத் தேடிக்கிட்டிருக்கேன். நீங்க வரீங்களா?'ன்னு கேட்டாரு, அப்புறம் கார்ல என்னை அந்த ஸ்கூலுக்கு அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டினாரு. ஸ்கூல் கட்டிடம் எல்லாம் கட்டி முடிச்சு, வகுப்புகள் தயாரா இருக்கு. எல்லா அனுமதியும் வாங்கிட்டாரு."
"வேலையை ஒப்புத்துக்கிட்டீங்களா இல்லையா?" என்றாள் புவனேஸ்வரி பொறுமையின்றி.
'உன்னைக் கேட்டுக்கிட்டுத்தானே சரின்னு சொல்லணும்?" என்றான் ரகுராமன், சிரித்தபடி.
"என்னை எதுக்குக் கேக்கணும்?"
"சம்பளம் நான் ரிடயர் ஆறப்ப வாங்கினதை விட பத்தாயிரம் ரூபா அதிகம். இப்ப வந்துக்கிட்டிருக்கற பென்ஷனும் வரும். நான் விரும்பற வரை வேலையில இருக்கலாம்னு சொல்லிட்டாரு. ஆனா ஒரு சிக்கல்..."
"அதானே பாத்தேன்? என்ன சிக்கல்?" என்றாள் புவனா, சற்று ஏமாற்றத்துடன்.
"நாம அங்கேயேதான் இருக்கணும். இதை விடப் பெரிய வீடு கொடுக்கறாங்க. வாடகை கிடையாது. பரவாயில்லையா?"
"ஏங்க, உங்களுக்குப் பைத்தியமா? இவ்வளவு நல்ல வாய்ப்பை உடனே ஒத்துக்காம, எங்கிட்ட கேட்டுக்கிட்டுத்தான் ஒத்துப்பேன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க! அவர் மனசு மாறிடப் போறாரு!" என்றாள் புவனேஸ்வரி, கவலையுடன்.
"கவலைப்படாதே! நான் வேலையை ஒத்துக்கிட்டேன். அவர் அப்பாயின்ட்மென் ஆர்டர் கொடுத்துட்டாரு. வீட்டுச் சாவியையும் கொடுத்துட்டாரு. நாம மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!" என்றான் ரகுராமன், பையிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து ஆட்டியபடியே.
குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
No comments:
Post a Comment