குருட்சேத்திரப் போரில் வென்ற பிறகு, யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுர அரசனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, பாண்டவர்களைக் காண துவாரகையிலிருந்து கண்ணன் வந்தார்.
தன் நண்பன் அர்ஜுனன், அவன் மனைவியும் தன் தங்கையுமான சுபத்ரா, திரௌபதி, யுதிஷ்ரனின் மற்ற சகோதரர்கள் அனைவரையும் நலம் விசாரித்த பின், யுதிஷ்டிரனைப் பார்க்க வந்தார் கண்ணன்.
"வா, கண்ணா! உன் தங்கை, உன் அன்புக்குரிய மைத்துனன், என் மற்ற சகோதரர்கள் எல்லோரையும் பார்த்த பின், இப்போதாவது என்னைப் பார்க்க நேரம் கிடைத்ததே உனக்கு!" என்றான் யுதிஷ்டிரன்.
"யுதிஷ்டிரா! நீ அரசன். உன் நேரத்தை நான் வீணாக்கக் கூடாது. அதனால், உன் முக்கியமான பணிகள் பற்றி உன் அமைச்சரிடம் கேட்டறிந்து, உனக்கு வேலைச்சுமை குறைவாக இருக்கும் நேரம் எது என்று அறிந்து கொண்டு, இப்போது வந்திருக்கிறேன்" என்றார் கண்ணன்.
"உன்னைச் சந்தித்து உரையாட என் எந்தப் பணியும் தடையாக இருக்காது, கண்ணா!" என்றான் யுதிஷ்டிரன்.
சற்று நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிய பின், இருவரும் அறத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.
"கண்ணா! நீ அர்ஜுனனுக்கு கீதை உரைத்தபோது, பல தர்மங்களை எடுத்துச் சொன்னாய். நான் அவற்றை அவனிடம் கேட்டறிந்து, உன் அறிவுரையைப் பின்பற்ற முயன்று வருகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.
"உனக்குத் தெரியாத தர்மமா, யுதிஷ்டிரா? எல்லோரும் உன்னை தர்மபுத்திரன் என்றல்லவா அழைக்கிறார்கள்? காலப்போக்கில், யுதிஷ்டிரன் என்ற உன் பெயரே மறக்கப்பட்டு, தர்மபுத்திரன் என்ற பெயர்தான் உனக்கு நிலைத்து நிற்கும் என்று நினைக்கிறேன்."
"இல்லை, கண்ணா! அறத்தைப் பற்றிய ஒரு அடிப்படையான உண்மையை நான் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டேன். எங்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு அதுதான் முக்கியமான காரணம் என்று இப்போது எனக்குப் புரிகிறது" என்றான் யுதிஷ்டிரன்.
"எந்த உண்மையை நீ புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டு விட்டாய்?" என்றார் கண்ணன், வியப்புடன்,
"ஆசைகளுக்கு அஞ்சி வாழ்வதே அறம் என்ற உண்மையை நான் புரிந்து கொள்ளவில்லை."
"நீ சொல்வது வியப்பாக இருக்கிறது. நீ எதற்கும் ஆசைப்பட்டவன் அல்லவே! உங்களுக்காக துரியோதனனிடம் நான் தூது போனபோது, 'துரியோதனன் எங்களுக்கு உரிய நாட்டைக் கொடுக்க மறுத்தால், ஐந்து கிராமங்களையாவது கொடுக்கச் சொல், அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளாவிட்டால் ஐந்து வீடுகளையாவது கொடுக்கச் சொல்' என்று என்னிடம் சொல்லி அனுப்பியவன் அல்லவா நீ? உனக்கு ஆசை என்று ஒன்று எப்போது இருந்ததது?" என்றான் கண்ணன்.
"இருந்தது, கண்ணா. எனக்குப் பகடை ஆட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியுமே!"
கண்ணன் பெரிதாகச் சிரித்து, "இதைத்தான் ஆசை என்று சொல்ல வந்தாயா? பகடை ஆட்டம் ஒரு விளையாட்டு. அதில் ஈடுபாடு இருப்பது பெரிய குற்றம் இல்லையே!" என்றார்.
"ஒரு விளையாட்டு என்ற அளவில் அதில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தால், நீ சொல்வது சரி. ஆனால் பொருட்களைப் பணயம் வைத்து ஆடும் பகடை ஆட்டம் அறத்துக்கு விரோதமானதல்லவா? பொருளைப் பணயம் வைத்து ஆடப்படும் பகடை ஆட்டத்தில் எனக்குப் பெரிய ஆசை இருந்தது. யாராவது என்னைப் பகடை ஆட்டத்துக்கு அழைத்தால், என் எல்லாப் பணிகளையும் விட்டு விட்டுப் பகடை விளையாடப் போய் விடுவேன். என்னுடைய இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்டுதான், சகுனி துரியோதனனுடன் சதி செய்து திருதராஷ்டிரர் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தான். நான் அதை ஏற்றுக் கொண்டதன் விளைவாக, நாங்கள் எல்லாவற்றையும் இழந்து காட்டுக்குச் செல்ல நேரிட்டதில் தொடங்கி, குருட்சேத்திரப் போர் நிகழ்ந்து, லட்சணக்கணக்கானோர் போரில் மடிந்தது வரை பல விபரீதங்கள் நிகழ்ந்து விட்டன."
"திருதராஷ்டிரர் அழைப்பை ஏற்காவிட்டால் அவர் மனம் புண்படும், உங்களுக்கும், கௌரவர்களுக்குமான பகை அதிகரிக்கும் என்று கருதித்தானே, நீ அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாய்?"
"நானும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், நான் அழைப்பை ஏற்றதற்கு உண்மையான காரணம் பகடை ஆட்டத்தின் மீது எனக்கு இருந்த ஆசைதான் என்று இப்போது எனக்குப் புரிகிறது. ஆசையைக் கண்டு அஞ்சும் மனநிலை அப்போது என்னிடம் இருந்திருந்தால், திருதராஷ்டிரரின் அழைப்பைப் பணிவுடன் மறுத்து, நடந்த விபரீதங்களைத் தவிர்த்திருக்க முடியும். இப்போது அதை நினைத்து அடிக்கடி வருந்துகிறேன்" என்றான் யுதிஷ்டிரன்.
"வருந்தாதே, யுதிஷ்டிரா! நடதவற்றை நினைத்து வருந்துவதில் பயனில்லை என்பதை நீ நன்கு அறிவாய். அறம் பற்றிய உன் ஆழ்ந்த அறிவுதான் உன்னை இவ்வாறு சிந்தித்து, உன் செயல்களின் பின்னணியை ஆராய வைத்திருக்கிறது. இது உன் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு உதவும். ஆசைகளுக்கு அஞ்சி வாழ்ந்தால்தான் அறத்தைக் கடைப்பிடிக்க முடியும் என்ற உன் சிந்தனையை எனக்கும் ஒரு பாடமாக நான் எடுத்துக் கொள்கிறன்" என்றார் கண்ணன்.
குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
No comments:
Post a Comment