"உங்கள் பிறவியின் நோக்கம் என்ன என்று நான் கேட்டதற்குப் பலரும் பல்வேறு விடைகளைக் கூறினீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதிலிருந்து, மற்றவர்களுக்கு உதவ வேண்டும், உங்கள் பெயர் நிலைத்திருக்கும்படியான சாதனை புரிய வேண்டும் என்று பல நோக்கங்களைக் கூறினீர்கள்.
"எல்லாமே உயர்ந்த நோக்கங்கள்தான். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த நோக்கம், மீண்டும் ஒரு பிறவி ஏற்படாமல் இருக்க வகை செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பற்றுக்களை விட்டு விட்டால், பிறவிப் பிணி உங்களுக்கு இருக்காது.
"பற்றுக்களை விடுவது என்றால் என்னைப் போல் துறவியாக வேண்டும் என்று பொருளல்ல. ஆசைகளைத் துறந்து, உங்கள் கடமைகளைப் பலனை எதிர்பாராமல் செய்து வர வேண்டும். இதுதான் கீதை காட்டும் வாழ்க்கை நெறி.
"பற்றை விட்டு விட்டு வாழ்ந்தால், நாம் மீண்டும் பிறக்காமல், இந்தப் பிறவி முடிந்ததும் இறைவனின் திருவடிகளை அடைந்து விடுவோம். இதுதான் வாழ்க்கையின் மிக உயர்ந்த நோக்கமாக இருக்க முடியும்."
ஆனந்தரங்கர் தன் பேச்சை முடித்து விட்டு, அவையைத் திருப்தியுடன் பார்த்தார். அவர் சொன்னதை அவர்கள் பின்பற்றுவார்களோ என்னவோ தெரியாது, ஆனால் அவர் பேச்சை ஆர்வத்துடன் கேட்டு, அவர் சொன்ன கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
வெளியூர்ப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆனந்தரங்கர் ஆசிரமத்துக்குத் திரும்பினார். மடத்தின் நலைவர் அனந்தரங்கர் அவரைப் பார்க்க விரும்பியதாக ஒரு துறவி அவரிடம் தெரிவித்திருந்ததால், உடல் சுத்திகரிப்புக்கான நியமங்களைச் செய்து முடித்த பின், அனந்தரங்கரைப் பார்க்கச் சென்றார் ஆனந்தரங்கர்.
அவர் அனந்தரங்கரின் அறைக்கருகில் சென்றபோது, அறைக்குள்ளிருந்து சாந்தரங்கர் வந்து கொண்டிருந்தார். சாந்தரங்கர் அந்த மடத்தில் ஆனந்தரங்கருக்கு அடுத்த நிலையில் இருப்பவர். ஆனந்தரங்கரைப் பார்த்து "நாராயணா" என்று சொல்லி வணங்கிய சாந்தரங்கர், "பாராட்டுக்கள்" என்றார், புன்சிரிப்புடன்.
"நாராயணா" என்று இயந்திரமயமாக அவருக்கு பதில் வணக்கம் தெரிவித்த ஆனந்தரங்கர், 'பாராட்டுகள் என்று எதற்குச் சொல்கிறார்?' என்று யோசித்தார்.
'அப்படித்தான் இருக்க வேண்டும். அனந்தரங்கர் என்னைத் தன் வாரிசாக அறிவிக்கப் போகிறார். அதற்குத்தான் என்னை வரச் சொல்லி இருக்கிறார். அனந்தரங்கர், ஆனந்தரங்கர் என்று இருவர் பெயரும் ஒரே மாதிரி இருப்பதால், பலரும் என்னை மடத்தின் தலைவர் என்றே நினைத்துக் கொள்கிறார்கள். இனிமேல் அந்தக் குழப்பத்துக்கே அவசியம் இருக்காது!'
ஆனந்தரங்கரை வரவேற்று, அவர் சுற்றுப் பயண விவரங்களைக் கேட்டறிந்த பின், அனந்தரங்கர், "நான் உன்னைப் பார்க்க விரும்பியது எதற்கென்று ஊகித்திருப்பாய். எனக்குப் பிறகு இந்த மடத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்று தீர்மானித்து விட்டேன். அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல வேண்டும் இல்லையா?" என்றார்.
"சொல்லுங்கள், குருவே!" என்றார் ஆனந்தரங்கர், எதிர்பார்ப்புடன்.
"தலைமைப் பொறுப்பை சாந்தரங்கருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இதில் உனக்கொன்றும் வருத்தமில்லையே!" என்றார் அனந்தரங்கர், ஆனந்தரங்கரின் கண்களை நேராகப் பார்த்தபடி.
"இல்லை, சுவாமி. எனக்கு மகிழ்ச்சிதான்!" என்றார் ஆனந்தரங்கர், அனந்தரங்கரின் பார்வையைத் தவிர்க்கும் வகையில் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
எவ்வளவு முயன்றும், ஆனந்தரங்கரால் தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள முடியவில்லை. தன்னை அறியாமலேயே தன் ஏமாற்றம் வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து, "நான் போய் முதலில் சாந்தரங்கருக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு எழுந்தார்.
அப்போதுதான் அவருக்கு சாந்தரங்கர் தன்னைப் பாராட்டியது நினைவுக்கு வந்தது. 'அவர் ஏன் என்னைப் பாராட்டினார்?'
சட்டென்று திரும்பிய ஆனந்தரங்கர், "குருவே! சாந்தரங்கரிடம் இதைச் சொல்லி விட்டீர்களா?" என்றார்.
"சொன்னேன், தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக!" என்றார் அனந்தரங்கர், சிரித்தபடி.
ஆனந்தரங்கர் குழப்பத்துடன் அனந்தரங்கரைப் பார்த்தார்.
"உட்கார்!" என்ற அனந்தரங்கர், "தலைமைப் பொறுப்பை உனக்குக் கொடுக்கப் போவதாக சாந்தரங்கரிடமும், அவனுக்குக் கொடுக்கப் போவதாக உன்னிடமும் சொன்னதற்குக் காரணம், உங்கள் இருவரின் மனநிலையை அறிந்து கொள்ளத்தான்.
"நாம் ஆசைகளை விட வேண்டும் என்று உபதேசிக்கிறோம். ஆனால், ஆசைகள் நம்மை விடுவதில்லை! ஆசைகளை விடுவதற்குக் கடும் பயிற்சியும், மன உறுதியும் வேண்டும். அதற்கு முன், நாம் இன்னும் ஆசைகளிலிருந்து விடுபடவில்லை என்ற புரிதல் நமக்கு வர வேண்டும்.
"எனக்குப் பிறகு யார் என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அப்படி நான் முடிவு செய்யும் நாள் வருவதற்குள், நீ ஆசைகளை முழுமையாகத் துறந்து பக்குவ நிலைக்கு வந்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் பணிகளை நீ நன்றாகச் செய்து வருகிறாய். தொடர்ந்து சிறப்பாகச் செய்து வா!" என்று ஆனந்தரங்கரை வாழ்த்தினார் அனந்தரங்கர்.
குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
No comments:
Post a Comment