"இன்னிக்கு நானும் உன்னோட ஆசிரமத்துக்கு வரேன்" என்றான் ராஜன்.
பார்வதி மௌனமாகத் தலையாட்டினாள். என்றுமில்லாமல் திடீரென்று ஆசிரமத்துக்கு வருவதில் ராஜன் ஆர்வம் காட்டியது அவளுக்கு வியப்பளித்தாலும், அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆசிரமத்துக்குச் சென்றதும், சுவாமிஜியிடம் தன் கணவனை அறிமுகப் படுத்தினாள் பார்வதி.
"பார்வதி பல வருஷங்களா தினமும் சில மணி நேரம் இந்த ஆசிரமத்துக்கு வந்து சேவை செஞ்சுட்டுப் போறா. இங்கே இருக்கிற துறவிகள், இங்கே சேவை செய்யற பக்தர்கள், அடிக்கடி இங்கே வருகிறவர்கள் எல்லாருக்கும் பார்வதி மேல அன்பும் மதிப்பும் உண்டு. அவளோட அன்பு, பொறுமை, சேவை மனப்பான்மை இதெல்லாம் நிறைய பேருக்குப் பெரிய தூண்டுதலா இருந்திருக்கு. நீங்க இன்னிக்கு இங்கே வந்திருக்கறது எனக்கு சந்தோஷமா இருக்கு!" என்றார் சுவாமிஜி.
சுவாமிஜியிடமிருந்து இப்படி ஒரு புகழ்ச்சியை பார்வதி எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் அவரை நன்றியுடன் பார்த்தாள்.
"ஆமாம், சுவாமிஜி! நானும் அவளோட சேவைகளை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். என்னால இங்க வந்து எதுவும் செய்ய முடியல. ஆனா அவளுக்கு ஆதரவா நான் எப்பவுமே இருப்பேன். அதை உங்ககிட்ட நேரில சொல்லணும்னுதான் இன்னிக்கு இங்கே வந்தேன்" என்றான் ராஜன்.
சுவாமிஜி சிரித்துக் கொண்டே மௌனமாகத் தலை அசைத்தார்.
"சுவாமிஜி! அடுத்த ஜன்மத்திலேயும் பார்வதிதான் என் மனைவியா இருக்கணும். நீங்க அதுக்கு அருள் புரியணும்!" என்றான் ராஜன்.
"அது என்னோட ஜூரிஸ்டிக்ஷன்ல இல்லையே!" என்றார் சுவாமிஜி, பார்வதியைப் பார்த்துச் சிரித்தபடியே.
"என்னோட ஆசையும் அதுதான், சுவாமிஜி" என்றாள் பார்வதி.
அடுத்த நாள், பார்வதி தயக்கத்துடன் சுவாமிஜியின் அருகில் வந்து நின்றாள்.
"சொல்லும்மா!" என்றார் சுவாமிஜி.
"சுவாமிஜி! நேத்து நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன்"
"என்ன பொய்?"
"என் கணவர் அடுத்த ஜன்மத்திலேயும் நான்தான் அவரோட மனைவியா வரணும்னு சொன்னப்ப, என்னோட ஆசையும் அதுதான்னு சொன்னேன்."
"ஏன், உனக்கு அதில விருப்பம் இல்லையா?"
"அப்படி இல்ல, சுவாமிஜி. இந்த ஆசிரமத்துக்கு நான் வர ஆரம்பிச்சப்பறம், எனக்கு எந்த ஆசையும் வரதில்ல. அடுத்த ஜன்மத்தைப் பத்தியோ, அப்பவும் இவர்தான் என் கணவரா வரணும்னோ நான் நினைச்சுப் பாத்ததே இல்ல. ஆனா என் கணவர் அப்படிச் சொன்னதும், நானும் அப்படிச் சொன்னாதான் அவர் சந்தோஷப்படுவார்னு நினைச்சு, டக்னு அப்படிச் சொல்லிட்டேன். ஆனா அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்படாதபோது, 'அதுதான் என்னோட ஆசையும்'னு சொன்னது தப்புதானே? அதுதான் உங்ககிட்ட உண்மையைச் சொல்லணும்னு சொல்றேன்" என்றாள் பார்வதி.
அவளை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த சுவாமிஜி, "ஆசைகள் இருந்தா, அவை மறுபடி பிறவி ஏற்பட வழி வகுக்கும்கறது பல ஞானிகளோட கருத்து. உனக்கு ஆசைகள் இல்லாம இருக்கறது பெரிய விஷயம். உன் கணவரோட மனத் திருப்திக்காக, உனக்கும் அப்படி ஒரு ஆசை இருக்கறதா நீ சொன்னது தப்பு இல்லை. கடவுளோட அருள் உனக்கு நிறைய இருக்கணும்னு வாழ்த்தறேன்" என்றார் சுவாமிஜி.
குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
பொருள்:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.
No comments:
Post a Comment