"குளிக்காம பூஜை அறைக்குள்ள போகக் கூடாதுன்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்?" என்று கூவினார் விஸ்வநாதன்.
"அவ குழந்தைதானே, அவளுக்கென்ன தெரியும்?" என்றாள் அவர் மனைவி சாந்தா.
"பத்து வயசு ஆகுது. இன்னும் குழந்தையா? சொன்னா புரிஞ்சுக்கற வயசுதானே? நீதான் சொல்லிப் புரிய வைக்கணும்."
"பாட்டி சொன்னாங்க, தாத்தா! நான் பந்து விளையாடச்சே, அது பூஜை அறைக்குள்ள விழுந்துடுச்சு. அதனால அதை எடுக்கப் போனேன். குளிக்காம போகக் கூடாதுங்கறது ஞாபகம் வல்ல. இனிமே போக மாட்டேன். பாட்டியை ஒண்ணும் சொல்லாதே!" என்றாள் அவர்கள் பேத்தி உமா. அவள் பெற்றோர்கள் இருவரும் அலுவலகத்துக்குச் சென்றிருந்தனர்.
"எவ்வளவு புத்திசாலியாப் பேசறா பாருங்க நம்ம பேத்தி!" என்றாள் சாந்தி, பெருமையுடன்.
"ஏம்மா, பந்தை வெளியில மண்ல எல்லாம் விளையாடற. அதில எவ்வளவு அழுக்கு இருக்குமோ, அதைத் துக்கிப் பூஜை அறைக்குள்ள போட்டிருக்கியே!" என்றார் விஸ்வநாதன்.
"நான் என்ன வேணும்னா போட்டேன்? அது போய் விழுந்துடுச்சு!" என்றாள் உமா, காயம் பட்டவளாக.
"போதும், நீங்களும், உங்க சுத்தமும்! நீ வாம்மா! உங்க தாத்தா இப்படித்தான் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாரு!" என்று பேத்தியை அணைத்துக் கொண்டாள் சாந்தி.
"நாளைக்கு சுவாமிஜி நம்ம வீட்டுக்கு வராரு. அவர் வரப்ப இப்படி எல்லாம் நடந்துக்கக் கூடாது!" என்றார் விஸ்வநாதன்.
"வேணும்னா சொல்லுங்க. அவர் வரப்ப, நாங்க ரெண்டு பேரும் எங்கேயாவது போயிடறோம்! அவ அப்பா அம்மாவையும் ஆஃபீஸ் போகச் சொல்லிடறேன்!" என்றாள் சாந்தி, கோபத்துடன்,
விஸ்வநாதன் பதில் சொல்லவில்லை.
அடுத்த நாள் சுவாமிஜி அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, சாந்தியும், உமாவும் குளித்து விட்டு சுத்தமாக இருந்தனர். விஸ்வநாதனின் மகனும், மருமகளும் கூட அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தனர். அவர்களும் குளித்து விட்டு சுத்தமாக இருந்தனர்.
அவர்கள் வீட்டின் உள்ளறை ஒன்றில், தான் கொண்டு வந்திருந்த மான் தோலைத் தரையில் விரித்து, அதன் மீது அமர்ந்திருந்தார் சுவாமிஜி.
சுவாமிஜி விஸ்வநாதனுடன் பொதுவாகப் பேசி விட்டு, "பிசினஸ் எல்லாம் நல்லா நடக்குதா?" என்றார்.
"உங்க ஆசீர்வாத்தில, நல்லாப் போய்க்கிட்டிருக்கு, சாமி. இன்னும் பெரிய அளவில செய்யணும்னு நினைக்கிறேன். அதுக்கு பாங்க்ல கடன் வாங்கணும். கடன் வாங்கி எல்லாம் பெரிசா நடத்த வேண்டாம், இப்ப இருக்கறதே போதும்னு என் பையன் சொல்றான்!" என்றார் விஸ்வநாதன், மகனை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
"உன் பையன் விவேகமாத்தான் இருக்கான்" என்றார் சுவாமிஜி, சிரித்துக் கொண்டே.
"என்ன சொல்றீங்க, சாமி?" என்றார் விஸ்வநாதன்.
"உனக்கு எவ்வளவு வயசு?"
"அறுபத்தாறு முடிஞ்சு போச்சு, சாமி!"
"அறுபத்தாறு வயசாச்சு. உன் பையன் படிச்சு வேலைக்குப் போய், அவனுக்குக் கல்யாணம் ஆகி, 10 வயசில உனக்கு ஒரு பேத்தியும் இருக்கா. இனிமே, நீ உன் ஆசைகளைக் குறைச்சுக்கிட்டு உண்மையான விஷயங்களைத் தேட ஆரம்பிக்கணும். உண்மையான விஷயம்னா, வாழ்க்கையோட அர்த்ததைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யறது, ஆன்மீகத் தேடல் இதெல்லாம். உனக்கு இதிலெல்லாம் நாட்டம் இருக்கறதாலதான், என்னை மாதிரி சாமியார்கள்கிட்ட ஈடுபாடு வச்சிருக்க. அதனால, ஆசைகளைக் குறைச்சுக்கிட்டு, ஆன்மீக விஷயங்கள்ள அதிகமா ஈடுபட முயற்சி செய்!" என்றார் சுவாமிஜி.
"நான் ஏற்கெனவே பூஜையெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கேன், சாமி!"
'தெரியும். அதான் உன் பூஜை அறையைப் பாத்தேனே! சுத்தமா இருக்கறது, பூஜை பண்றது இதுக்கெல்லாம் மேல, ஆன்மீகத் தேடல் இருக்கணும். அது இருந்தா, மனசில ஆசைகள் தோணுவது குறைஞ்சு, ஒரு பற்றற்ற தன்மை வந்துடும்" என்ற சுவாமிஜி, உமாவைப் பார்த்து, "இங்க வாம்மா!" என்றார்.
"போம்மா!" என்று உமாவைப் பார்த்துக் கூறிய விஸ்வநாதன், சுவாமிஜியிடம் திரும்பி, "அவ குளிச்சுட்டு சுத்தமாத்தான் இருக்கா!" என்றார்.
"அதெல்லாம் முக்கியமில்ல. கோவிலுக்கு வரவங்கள்ளாம் குளிச்சுட்டு சுத்தமா வராங்களான்னு கடவுள் பாக்கறாரா என்ன?" என்றபடியே, தன் முன் வந்து நின்ற உமாவின் கையை அன்புடன் தொட்டார் சுவாமிஜி.
உமா தன் தாத்தாவைப் பார்த்துச் சிரித்தாள்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 37
அவாவறுத்தல்
குறள் 364
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்..
பொருள்:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே ஆகும், அவா அற்ற அத்தன்மை, மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
No comments:
Post a Comment