"சார்! டைரக்டர் உங்ளைக் கூப்பிடறாரு!" என்று அறிவித்தான் பியூன்.
சம்பந்தம் டைரக்டரின் அறைக்குப் போனபோது, அங்கே இன்னொரு மனிதர் உட்கார்ந்திருந்தார்.
சம்பந்தத்தை அமரச் சொன்ன டைரக்டர், "மிஸ்டர் சம்பந்தம்! இவர் மிஸ்டர் தேவராஜன். இவரோட ப்ராஜக்டுக்கு நிலம் அலாட் பண்ற விஷயமாப் பேச வந்திருக்காரு" என்றார் டைரக்டர்.
"சார்! என்னோட பரிந்துரையை உங்களுக்கு அனுப்பிட்டேனே!" என்றார் சம்பந்தம், டைரக்டரிடம்.
"பாத்தேன். அவர் தொடங்கப் போற தொழிற்சாலைக்கு அரசாங்க நிலம் அலாட் பண்ண விதிமுறைகள் அனுமதிக்கலைன்னு சொல்லி இருக்கீங்க. அதை நான் அவர்கிட்ட சொல்லிட்டேன். அவர் இதை மறுபரிசீலனை செய்யச் சொல்லிக் கேக்கறாரு. நீங்கதான் முடிவு செய்யணும்" என்றார் டைரக்டர், சிரித்தபடி.
சம்பந்தத்துக்குச் சுருக்கென்று கோபம் வந்தது. அலுவலகத்தின் கோப்புகளில் கூறப்பட்ட கருத்துக்களை வெளியாட்களிடம், அதுவும் விண்ணப்பம் அளித்தவரிடமே, பகிர்ந்து கொள்வதே தவறு. அத்துடன் தனக்கு நேரடியான அழுத்தமும் கொடுக்கப்படுகிறது!
கோபம் கொள்ளக் கூடாது என்ற தன் தீர்மானத்தை நினைவு கூர்ந்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார் சம்பந்தம்.
"சாரி! என்னைப் பொருத்தவரை, மறுபரிசீலனை செய்யறதுக்கு இதில எதுவும் இல்ல" என்றார் சம்பந்தம், சுருக்கமாக.
"இவர் யாருன்னு தெரிஞ்சா நீங்க இப்படிப் பேச மாட்டீங்க. இவர் தாமோதரனோட சம்பந்தி. தாமோதரனைத்தான் உங்களுக்குத் தெரியுமே!"
சம்பந்தத்தின் உடல் முழுவதும் குப்பென்று ஒரு உணர்வு பரவியது - கோபம், திகில், அதிர்ச்சி, சோர்வு எல்லாம் கலந்த உணர்வு.
ஆயினும் உடனே சமாளித்துக் கொண்டு, "ஓ! அப்படியா? தாமோதரன் சாரை நான் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்க" என்று வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் தேவராஜனிடம் சொல்லி விட்டு, டைரக்டரின் பதிலை எதிர் பார்க்காமல், இருக்கையிலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினார் சம்பந்தம்.
அலுவகம் முடிந்ததும், சம்பந்தம் நேரே தன் நண்பர் ராமநாதனின் வீட்டுக்குச் சென்றார். ராமநாதன் சம்பந்தத்தின் உதவியாளராக இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.
ராமநாதன் சம்பந்தத்தை விட ஐந்து ஆண்டுகள் பெரியவர், சம்பந்தம் அவருடைய மேலதிகாரியாக இருந்தவர் என்பதையெல்லாம் தாண்டி, இருவருக்குமிடையே ஒரு நட்பு ஏற்பட்டு, அது ராமநாதன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் நீடித்தது.
அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை ராமநாதனிடம் விவரித்தார் சம்பந்தம்.
"ஒரு காலத்தில, பணத்தாசையால, நான் காசு வாங்கிக்கிட்டு சட்டத்தை மீறி நடந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மைதான். அப்ப நான் சட்டத்தை மீறி தாமோதரனுக்கு உதவி செஞ்சிருக்கேன். அதை வச்சு டைரக்டர் என்னை மடக்கப் பாத்தாரு. பழசெல்லாம் ஞாபகம் வந்து, ஒரு நிமிஷம் வெலவெலத்துப் போயிட்டேன். ஆனாலும் சமாளிச்சுக்கிட்டு, முடியாதுன்னு சொல்லிட்டேன்."
"நல்ல வேலை செஞ்சீங்க!" என்றார் ராமநாதன்.
"கடந்த காலத்தில எவ்வளவு முட்டாள்தனமா நடந்துக்கிட்டிருக்கேன்னு நெனச்சா, எனக்கே சங்கடமா இருக்கு. அப்பல்லாம் என்னை ஆசை புடிச்சு ஆட்டிச்சு. பணத்தாசை! யாராவது நான் செய்யறது தப்புன்னு சொன்னா, கோபம் வரும். இதெல்லாம் தப்புன்னு நீங்க கூட நிறைய தடவை சொல்லி இருக்கீங்க . உங்க மேலயும் நான் கோபப்பட்டிருக்கேன். பணத்தில உங்களுக்கும் பங்கு கொடுத்தா சரியாயிடும்னு நெனச்சேன். ஆனா, நீங்க நான் கொடுத்த பங்கை வாங்கிக்கல. அப்புறம் நான் சஸ்பெண்ட் ஆகி, விசாரணையெல்லாம் நடந்து, ஆறு மாசம் கழிச்சு, என் மேல வந்த புகாருக்கு ஆதாரம் இல்லேன்னு சொல்லித் திரும்பவும் வேலையில சேத்துக்கிட்டாங்க. இதெல்லாம் துன்பங்களை வரவழைச்சுக்கற வழின்னு அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சுது. இப்ப நேர்மையா இருந்துக்கிட்டிருக்கேன். இப்பதான் நிம்மதியா இருக்கு. ஆனாலும், நான் முன்னே செஞ்ச தப்பை வச்சு என்னை வளைச்சுப் போட அப்பப்ப யாராவது முயற்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க!" என்று மனதில் இருந்தவற்றைக் கொட்டித் தீர்த்தார் சம்பந்தம்.
"இப்பதான் நீங்க உறுதியா இருக்கீங்களே! இனிமே உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது" என்றார் ராமநாதன்.
"உங்ககிட்ட மனசு விட்டுப் பேசிட்டுப் போனா நிம்மதியா இருக்கு. அதனாலதான் உங்களைப் பாக்க வந்தேன்" என்று சொல்லி விடை பெற்றார் சம்பந்தம்.
"வாங்க! மனசு விட்டுப் பேசறதுக்குத்தானே நண்பர்கள் இருக்காங்க!" என்று சொல்லி விடை கொடுத்தார் ராமநாதன்.
குறள் 360
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
பொருள்:
விருப்பு, கோபம், அறியாமை இந்த மூன்றையும் அறவே ஒழித்து விட்டவர்களுக்கு எந்தத் துன்பமும் வராது.
forceful story line !
ReplyDeleteThank you.
Delete