"வணக்கம், மன்னரே! தாங்கள் என்னை அழைத்ததாகச் செய்தி கிடைத்தது."
"வாருங்கள், படைத்தலைவரே! உங்கள் வீரத்தாலும், ஆற்றலாலும், நாம் பல போர்களை வென்றிருக்கிறோம். இப்போது இன்னொரு போருக்கு நாம் தயாராக வேண்டும். அதற்குத்தான் உங்களை அழைத்தேன்."
படைத்தலைவர் வல்லபர் மௌனமாக இருந்தார்.
"என்ன வல்லபரே! போர் என்றாலே உற்சாகம் ஆகி விடுவீர்களே! இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்?" என்றார் அரசர், வியப்புடன்.
"ஒரு விண்ணப்பம், அரசே! தாங்களே குறிப்பிட்டபடி, நான் பல போர்களில் பங்கேற்று விட்டேன். இனி நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். துணைப் படைத்தலைவர் காரியைப் படைத்தலைவராக நியமித்து, எனக்குப் பணி ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார் வல்லபர்.
"ஓய்வெடுக்க வேண்டிய வயதில்லையே உங்களுக்கு? இப்போதுதான் பிராயம் நாற்பதைத் தாண்டி இருக்கிறீர்கள். அறுபதைத் தொடும் நானே இன்னும் ஓய்வு பற்றிச் சிந்திக்கவில்லை! ஏன் இந்த திடீர் முடிவு?" என்றார் அரசர், வியப்புடன்.
"திடீர் முடிவு இல்லை, மன்னவா! சில ஆண்டுகளாகவே, போர்கள் விளைவிக்கும் துன்பங்களைப் பார்த்து எனக்கு மன வருத்தமும், குற்ற உணர்வும் ஏற்பட்டு வருகிறது. எனவேதான், இனி அமைதியான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்."
"ஓய்வு பெற்ற பின் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களால் இல்லத்தில் சோம்பி அமர்ந்திருக்க முடியாதே!"
"நான் போருக்காகப் பல இடங்களுக்குச் சென்றபோது, சில அற்புதமான ஆலயங்களைக் காணும் பேறு கிடைத்தது. அங்கெல்லாம் சென்று வழிபட்டபோது, எனக்குள் ஒரு புத்துணர்வும் அமைதியும் ஏற்பட்டன. அதற்குப் பிறகுதான், ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. என் மனைவிக்கும் ஆலயங்களுக்குச் செல்வதில் அதிக ஆர்வம் உண்டு. இத்தனை காலமும் அவள் விருப்பத்தை நான் பெரிதாக நினைக்கவில்லை. இனி அவளுடன் பல ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அத்துடன்..."
"அத்துடன்?"
"ஒரு அரசராக மக்களுக்குத் தாங்கள் எத்தனையோ நன்மைகள் செய்து வருகிறீர்கள். ஆயினும், நோய்வாய்ப்பட்டவர்கள், உறவுகள் யாரும் இன்றி, கவனித்துக் கொள்ள யாருமின்றித் தனிமையில் வாடும் முதியவர்கள் போன்ற பல மனிதர்களுக்குத் தனிப்பட்ட உதவிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய மனிதர்களுக்கும் என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்."
"நீங்களும் உங்கள் மனைவியும் ஆலய தரிசனம், ஆதரவற்றோர்க்கு உதவி என்று கிளம்பி விட்டால், உங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்?" என்றார் அரசர்.
வல்லபர் சிரித்து, "அரசே! நானும் என் மனைவியும் துறவறம் மேற்கொள்ளப் போவதில்லை. மற்ற எல்லோரையும் போல், எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு இல்லறம்தான் நடத்தப் போகிறோம். இது போன்ற பணிகளால் எங்கள் குடும்ப வாழ்க்கைக்கு எந்தக் குந்தகமும் வராது" என்றார்.
மன்னர் சற்று நேரம் மௌனமாக இருந்தார்.
"என்ன யோசனை மன்னரே!" என்றர் வல்லபர்.
"ஒன்றுமில்லை. உங்களுடன் சேர்ந்து நானும் இந்தப் பணிகளில் ஈடுபடலாமா என்று யோசித்தேன். ஆனால், அதற்கான மன முதிர்ச்சி எனக்கு இன்னும் ஏற்படவில்லை. அப்படி ஏற்படும்போது, இளவரசனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, நானும் உங்களுடன் சேர்ந்து கொள்வேன்!" என்றார் அரசர், சிரித்தபடி.
"அப்படியானல், என்னைப் பணியிலிருந்து விடுவிக்கத் தங்களுக்குச் சம்மதம்தானே, அரசே?"
"ஒரு நிபந்தனையுடன்!" என்றார் அரசர்.
"என்ன நிபந்தனை, அரசே?" என்றார் வல்லபர், கவலையுடன்.
"ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய முனையும்போது, அரசின் உதவி தேவை என்றால் தயங்காமல் என்னை அணுக வேண்டும். அது கூட வேண்டாம். நீங்கள் என்ன உதவி கேட்டாலும் செய்ய வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிடச் சொல்லி அமைச்சரிடம் சொல்லி விடுகிறேன்."
"மிக்க நன்றி, அரசே!" என்றார் வல்லபர்
குறள் 359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
பொருள்:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.
No comments:
Post a Comment