About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 21 - தீவினையச்சம்

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 21 
தீவினையச்சம்
 

201. தலைவனின் கோபம்

"ஏம்ப்பா, கட்சியிலே புதுசா ஒரு ஆளைச் சேத்து விட்டியே சரவணன்னு?" என்றான் பகுதிச் செயலாளர் முத்து. 

"ஆமாம்" என்றான் சண்முகம்.   

"அவன் எங்கே?"

"நான் அவனைப் பாத்து ரெண்டு நாள் ஆச்சே, அண்ணே. ஏன் கேக்கறீங்க?"

"அவன் எப்படி, நம்பகமான ஆளுதானே?"

"ஆமாங்க. ஏன் கேக்கறீங்க?"

"இல்ல. ஒரு வேலை சொன்னேன். அதை முடிச்சானான்னு தெரியல."

"ஏங்க, அவன் புதுசு. அவனை நம்பி ஏன் கொடுத்தீங்க? எங்கிட்ட சொல்லியிருந்தா, நான் செஞ்சிருப்பேனே!" என்றான் சண்முகம்.

"ஏண்டா, அறிவு இருக்காடா உனக்கு?" என்றான் முத்து.

சண்முகம் சற்று அதிர்ச்சியுடன் பகுதிச் செயலாளர் முத்துவைப் பார்த்தான். 

தன் போன்ற சாதாரணத் தொண்டர்கள் முத்து போன்ற குட்டித் தலைவர்களிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது என்பது சண்முகத்துக்குத் தெரிந்ததுதான். ஆயினும், குட்டித் தலைவனின் திடீர்க் கோபம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது.

"என்ன ஆச்சு தலைவரே?"

"ஒரு ஆளோட கையைக் காலை உடைக்கணும், ஆனா, நம்ப கட்சிக்காரங்க செஞ்சாங்கன்னு தெரியக் கூடாதுன்னுட்டுதான் புது ஆளாச்சேன்னு அவன்கிட்ட வேலையைக் கொடுத்தேன். ஒங்கிட்ட கொடுக்கலாம்னு எனக்குத் தெரியாதா?"

"பயந்திருப்பான். நான் போய்ப் பாத்துக் கூட்டிக்கிட்டு வரேன்" என்றான் சண்முகம்.

"வேண்டாம். அவன் செய்ய மாட்டான். விடு. வேற விதமா செஞ்சுக்கலாம்"

"அடிதடியெல்லாம் செய்யணும்னு சொல்லித்தான் கட்சியில சேத்து விட்டேன், தலைவரே, முதல் தடவைங்கறதால கொஞ்சம் தயங்கியிருப்பான். பழகினா, சரியாயிடும்" என்றான் சண்முகம்.

"வேணாம். எனக்குத் தெரியும். எத்தனை பேரைப் பாத்திருக்கேன்! நிறைய பேர் ரௌடி மாதிரி பேசுவாங்க. யாராவது அடிச்சா, திருப்பி அடிப்பாங்க. ஆனா, ஒரு ஆளை அடிக்கச் சொன்னாலோ, போட்டுத் தள்ளச் சொன்னாலோ, யோசனை பண்ணுவாங்க. உன்னை மாதிரி எல்லாத்திலேயும் துணிஞ்சு இறங்கறவங்க சில பேருதான் இருப்பாங்க" என்றான் முத்து.

தலைவன் தன்னைப் பாராட்டுகிறானா, அல்லது, தான் எந்த ஒரு மோசமான செயலையும் செய்யத் தயங்காதவன் என்று சொல்கிறானா என்று சண்முகத்துக்குப் புரியவில்லை.

குறள் 201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு.

பொருள்:  
தீய செயல்களைச் செய்யும் இயல்பு படைத்தவர்கள் தீய செயல்களைச் செய்ய அஞ்ச மாட்டார்கள். ஆனால், நல்ல உள்ளம் படைத்தவர்கள் தீய செயல்களைச் செய்ய அஞ்சுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


202. பாஸ் என்கிற...

விற்பனைப் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பின் கடைசி தினம்.

பயிற்சியாளர் மார்க்கண்டேயன் திருப்தியுடன் பயிற்சி பெற்றவர்களைப் பார்த்தார். 

"நீங்கள் எல்லாம் நல்ல விற்பனைப் பிரதிநிதிகளாக வருவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு விஷயம்..." என்றார்.

"பயிற்சி இடைவேளையின்போது, நீங்க உங்களுக்குள்ள பேசிக்கிறதை கவனிச்சேன். உங்கள்ள சில பேர் சில வசைச் சொற்களைப் பயன்படுத்தறதை கவனிச்சேன்" என்றவர், சற்று நிறுத்தி விட்டு, "உதாரணமா 'பாஸ்...,' 'எஸ் ஓ பி' மாதிரி வார்த்தைகள். இது மாதிரி வார்த்தைகள் தப்பித் தவறி கூட உங்க வாயிலேந்து வராம பாத்துக்கணும்."

"ஏன் சார்?" என்றார் ஒருவர்.

மெல்லிய சிரிப்பொலி எழுந்தது.

"வசைச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாதுன்னு சொன்னா, ஏன் பயன்படுத்தக் கூடாதுன்னு கேக்கற அளவுக்கு இந்த வார்த்தைகள் உங்க வொக்காப்புலரியில இணைஞ்சிருக்கு!" என்றார் மார்க்கண்டேயன், சிரித்தபடி.

"அதில்லை சார். இந்த வார்த்தைகளை எல்லாரும் சகஜமாப் பயன்படுத்தறாங்களேன்னு சொன்னேன்" என்றார் கேள்வி கேட்டவர், மன்னிப்புக் கேட்கும் குரலில்.

"நீங்க வெளிப்படையாக் கேட்டதைப் பாராட்டறேன். நிறைய பேர் பயன்படுத்தறாங்கங்கறதாலயே, வசைச் சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவைன்னு அர்த்தம் இல்ல. முதல்ல, அவற்றோட அர்த்தத்தைப் பாக்கணும். ஒத்தரை 'பாஸ்...,' 'எஸ் ஓ பி'ன்னு சொல்லும்போது, நீங்க அவரோட அம்மா மேல அவதூறு சொல்றீங்க. இது நியாயமா? இதைப் பத்தி நாம யோசிக்கறது கூட இல்ல."

"தட் இஸ் தி பாயிண்ட் சார். இது மாதிரி வாத்தையை காஷுவலா பயன்படுத்தறச்சே, அதோட அர்த்தத்தை மனசில வச்சு நாம பயன்படுத்தல. அதனாலேயே, இதையெல்லாம் ஹாம்லெஸ்னு நாம எடுத்துக்கலாமே!"

"ஹாம்லெஸ்ஸா சில பேரு எடுத்துக்கலாம். உங்க நண்பனைப் பாத்து முட்டாள்னு சொன்னா அவன் கோவிச்சுக்க மாட்டான். ஆனா, வேற ஒத்தரைப் பாத்து அப்படிச் சொல்ல முடியுமா?"

அவர் மேலே சொல்வதைக் கேட்க அனைவரும் ஆவலாக இருந்தனர்.

"தீய சொற்கள், தீய செயல்களை விட அபாயமானவை. ஏன்னா, ஒரு தீய செயலைச் செய்யறப்ப, அதோட விளைவுகளை யோசிப்போம். ஆனா, தீய சொற்களை ரொம்ப காஷுவலா பயன்படுத்தறோம். பல பேருக்கு பிற மொழிகள் தெரியாட்டா கூட, அந்த மொழிகள்ள உள்ள கெட்ட வார்த்தைகள் தெரிஞ்சிருக்கும்! இந்த விஷயத்தில, நமக்கு மொழி வெறுப்பெல்லாம் கிடையாது! இதில அபாயம் என்னன்னா, பலருக்கு வசவுச் சொற்களைப் பயன்படுத்தறதில ஒரு த்ரில் இருக்கு.

"படிச்சவங்க, கண்ணியமானவங்க கூட இது மாதிரி வசைச் சொல்லை பயன்படுத்தறதில ஒரு த்ரில் இருக்கறதா நினைக்கிறாங்க. நெருப்புக் குச்சியையோ, சிகரெட் துண்டையோ அணைக்காம போடக் கூடாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, நிறைய பேரு அணைக்காமத்தான் கீழே போடுவாங்க. அதைக் கீழ போட்டுட்டு, அந்த நெருப்பை ரசிச்சுப் பாக்கறவங்களை நான் பாத்திருக்கேன். ஆனா, எப்பவாவது ஒரு தடவை தீப்பிடிக்கும்போதுதான் அதோட தீவிரம் தெரியும்."

"இந்த விஷயத்தைப் பத்தி ஏன் சார் நீங்க இவ்வளவு ஸ்ட்ராங்கா ஃபீல் பண்றீங்க?" என்றார் ஒருவர்.

"காரணம் இருக்கு" என்றார் மார்க்கண்டேயன். "நான் ஆரம்பத்தில ஒரு சின்ன நிறுவனத்துலவேலை செஞ்சேன். வேலைக்குச் சேந்த புதிசிலே, சில வாடிக்கையாளர்கள் கிட்ட பணம் வசூலிக்க என் பாஸோட போயிருந்தேன். நான் பாஸ்னு சொல்றது என்னோட முதலாளியை. ஒரு கஸ்டமர்கிட்டேந்து பல மாசமா பணம் வரல. அதனால, என்னோட முதலாளி ரொம்பக் கோவமா இருந்தாரு.

"நாங்க போன பல நேரங்கள்ள கஸ்டமர் இருக்கவே மாட்டாரு. அன்னிக்கு, கஸ்டமரோட மனைவி இருந்தாங்க. அவங்க சரியா பதில் சொல்லாம அலட்சியமாப் பேசினாங்க. என் முதலாளிக்கு ரொம்பக் கோவம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டாரு. அப்ப, ஒரு வசவுச் சொல்லை அவரை அறியாம பயன்படுத்திட்டாரு. பொதுவா, ஒரு பெண் முன்னால பயன்படுத்தக் கூடாத வார்த்தை அது. அது என்ன வார்த்தைன்னு கேட்டுடாதீங்க!

"உடனே, அந்தப் பொண்ணு அதைப் புடிச்சுக்கிட்டாங்க. ஒரு பெண்கிட்ட தப்பான வார்த்தை பேசினதா சொல்லி சத்தம் போட்டு, பக்கத்தில இருந்தவங்களையெல்லாம் கூட்டிட்டாங்க. 

"என் முதலாளி வெலவெலத்துப் போயிட்டாரு. தான் அப்படி சொல்லவேயில்லைன்னு சாதிச்சுட்டாரு. நானும் வேற வழியில்லாம, அவருக்கு ஆதரவாப் பேசினேன். 'அவரு அப்படி சொல்லல. நீங்க தப்பாக் கேட்டிருக்கீங்க'ன்னு சொன்னேன். 

"ஒரு வழியா, அங்கேந்து வந்தோம். அதுக்கப்பறம், என் முதலாளி அங்கே போகவே இல்லை. என்னைத்தான் அனுப்பிச்சாரு. நான் எப்ப போனாலும், என் முதலாளி தப்பாப் பேசினதைப் பத்தியே பேசி, பணம் கொடுக்காம இழுத்தடிச்சாங்க.

"அவசரப்பட்டு ஒரு வார்த்தை சொன்னதால, வசூலிக்க வேண்டிய பணத்தையே வசூலிக்க முடியலையேன்னு என் முதலாளி ரொம்ப வருத்தப்பட்டார். அதுக்கப்பறம், இது மாதிரி வசவுச் சொற்களை பயன்படுத்தறதையே அவரு நிறுத்திட்டாரு. 

"எனக்கும் இது ஒரு பாடம். எந்த சந்தர்ப்பத்திலும், தப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதுன்னு அன்னிக்கே முடிவு செஞ்சுட்டேன். இன்னிக்கு இதைப் பத்தி இவ்வளவு தூரம்  பேசறதுக்கு காரணம், தீய சொற்கள் கூட தீய செயல்கள் போல்தான்னு உங்களுக்கு அறிவுறுத்தத்தான். நெருப்புக்கு பயப்படற மாதிரி, தீய சொற்களுக்கும் நாம பயப்படணும்."

"நீங்கதான் சார் உண்மையான பாஸ்!" என்றார் ஒருவர்.

"நல்ல வேளை, 'பாஸ் என்கிற'ன்னு சொல்லாம இருந்தீங்களே!" என்றார் மார்க்கண்டேயன், சிரித்துக் கொண்டே.

குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.

பொருள்:  
தீய செயல்கள்  தீமையை விளைவிக்கும் என்பதால், தீய செயல்களைத் தீயை விடக் கொடியதாகக் கருதி அவற்றுக்கு அஞ்ச வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


203. லட்சுமிக்குத் தெரிந்த நியாயம்

மூர்த்தியின் அண்ணன் செல்வம் இறந்ததும், அண்ணன் சொத்தையும் தான் நிர்வகிக்கலாம் என்று மூர்த்தி நினைத்தான். ஆனால், அவன் அண்ணி லட்சுமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

செல்வம் இருந்தவரை, வீட்டை விட்டு வெளியே வராதவள், கணவன் இறந்ததும், வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து, வெற்றிலையை மென்று கொண்டு, ஆட்களை அதிகாரம் செய்து, வேலை வாங்க ஆரம்பித்தாள்.

"உங்களால நிலத்தையெல்லாம் பாத்துக்க முடியாது அண்ணி. நீங்க வீட்டில இருங்க. நான் பாத்துக்கறேன்" என்றான் மூர்த்தி.

"வேணாம் தம்பி, உங்க நிலத்தை நீங்க பாத்துக்கங்க. என் நிலத்தை நான் பாத்துக்கறேன்" என்றாள் லட்சுமி சுருக்கமாக.

அதற்குப் பிறகு, மூர்த்தி அவளுக்கு இடைஞ்சல்கள் செய்ய ஆரம்பித்தான். லட்சுமி, தன் வீட்டுத் திண்ணையிலிருந்து இறங்காமலேயே, தன் ஆட்கள் மூலம் எல்லாவற்றையும் சமாளித்தாள்.

ஒருமுறை, இரவு நேரத்தில், அவள் வயலிலிருந்து, தண்ணீரைத் தன் வயலுக்குத் திருப்பி விட்டான் மூர்த்தி. ஆட்கள் வந்து சொன்னதும், "தலையாரியைக் கூட்டிக்கிட்டுப் போய்க் காட்டுங்க!" என்றாள் லட்சுமி.

லட்சுமியின் ஆட்கள் தலையாரியை அழைத்துப் போய்க் காட்டியதும், தலையாரி மூர்த்திக்கு நூறு ரூபாய் அபராதம் போட்டான்.

"இதெல்லாம் பத்தாது அம்மா. ஒரு வார்த்தை சொல்லுங்க. அவரு வயலுக்குத் தண்ணியே வராம செஞ்சுடலாம், நாம செஞ்சோம்னு யாராலயும் நிரூபிக்க முடியாது" என்றான் அவளுடைய ஆள். 

"அதெல்லாம் வேணாம். அபராதம் கட்டின அவமானம் போதும். இனிமே, வாலாட்ட மாட்டாரு" என்றாள் லட்சுமி.

ஆனால், மூர்த்தி அடங்கவில்லை. அபராதம் கட்டிய அவமானம் அவன் கோபத்தை இன்னும் கிளறியது. பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தான்.

நிலம் அறுவடைக்குத் தயாராயிருந்தபோது, நள்ளிரவில் லட்சுமியின் வயலில் இருந்த கதிர்களுக்கு மூர்த்தி தீ வைத்தான். யாரோ பார்த்து விட்டு,நெருப்பை அணைத்ததுடன், மூர்த்தியையும் கையும் களவுமாகப் பிடித்து விட்டார்கள்.   

இரவில், லட்சுமியின் வீட்டுக் கதவைத் தட்டி, அவளுக்குத் தகவல் சொன்னார்கள்.

"நெருப்பை அணைச்சுட்டீங்கள்ள? அதோட விடுங்க. நெருப்பை அணைச்சவரைப் பாத்து, நான் நன்றி சொல்லணும்" என்றாள் லட்சுமி.

"இத்தனை நாளா மூர்த்தி உங்களுக்கு செஞ்சதுக்கெல்லாம், இன்னிக்கு வசமா மாட்டிக்கிட்டான். போலீசுக்குத் தகவல் சொல்லப் போறோம். அவனை ஆறு மாசமாவது உள்ள தள்ளிடுவாங்க!" என்றார் ஊர்க்காரர் ஒருவர்.

"போலீஸ் எல்லாம் வேண்டாம். அதான் எதுவும் நடக்கலியே. விட்டுடுங்க" என்றாள் லட்சுமி.

"என்னம்மா, இப்படிச் சொல்றீங்க? தப்புப் பண்ணினவன் தண்டனை அனுபவிக்க வேண்டாமா?"

"அவர் மட்டுமா தண்டனை அனுபவிப்பாரு? அவர் ஜெயிலுக்குப் போனா, அவரோட பொண்டாட்டி புள்ளைங்கல்லாம் கஷ்டப்பட மாட்டாங்க? புருஷன் இல்லாத குடும்பத்தோட கஷ்டம் எனக்குத் தெரியுங்க. வேண்டாம், அவரை விட்டுடுங்க!" 

"நீ பேருக்கேத்தாப்பல மகாலட்சுமி மாதிரியே இருக்கம்மா. படிக்காட்டாலும், இவ்வளவு அறிவோடு இருக்கியே!" என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

"அறிவெல்லாம் ஏதுங்க எனக்கு? நம்பளால மத்தவங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நினைக்கறேன். அதைத்தவிர எனக்கு எதுவும் தெரியாதுங்க" என்றாள் லட்சுமி. 

குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல்.

பொருள்:  
தனக்குத் தீமை செய்தவர்களுக்குத் தீமை செய்யாதிருத்தலே சிறந்த அறிவு என்று கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



204. தவற விட்ட செய்தி

மாத இறுதி நெருங்கி விட்டது. இன்னும் மாத இலக்கில் பெரிய இடைவெளி இருந்தது. 

இரண்டு நாட்களுக்குள் எப்படி இலக்கை எட்டப் போகிறோம் என்று சேகர் யோசித்துக் கொண்டிருந்தபோது, இண்டர்காமில் கிளை நிர்வாகி அழைத்தார்.

இலக்கு எட்டாதது பற்றிப் பேசத்தான் அழைக்கிறார் என்று தெரிந்து, சோர்வுடன் அவர் அறைக்குப் போனான் சேகர்.

அரை மணிக்குப் பிறகு, இன்னும் அதிக சோர்வுடன் கிளை நிர்வாகியின் அறையில் இருந்து வெளியே வந்தான் சேகர். 

ஏதோ புதிதாக வேலைக்குச் சேர்ந்தவனுக்கு சொல்வது போல், உபதேசம் செய்து தீர்த்து விட்டார் கிளை நிர்வாகி.

தன் இருக்கைக்கு வந்ததும்தான், கைபேசியை மேஜையிலேயே வைத்து விட்டுப் போய் விட்டதை கவனித்தான் சேகர். எடுத்துப் பார்த்தான். புதிய செய்தியோ, அழைப்போ வந்ததாகத் தெரியவில்லை.

மதிய உணவுக்குப் பிறகு, பிற்பகல் முழுவதும், அலுவலகத் தொலைபேசியைப்  பயன்படுத்தி, பலருக்கு ஃபோன் செய்து பார்த்தான். இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக் கொள்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

மாலை 5 மணிக்கு, ஏமாற்றத்துடன் இருக்கையில் வந்து உட்கார்ந்தான் சேகர். 

கைபேசி அடித்தது. அவன் நண்பன் சுதர்சன்.

"என்னடா, போய்ப் பாத்தியா?" என்றான் சுதர்சன்.

"யாரை?" என்றான் சேகர்.

"மெஸேஜ் அனுப்பியிருந்தேனே, பாக்கலியா?'

"என்ன மெஸேஜ்? எதுவும் வரலியே? எப்ப அனுப்பின?"

"மத்தியானம் ஒரு மணிக்கு. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கணும்னு சொன்னாரு. மூணு லட்சம் ரூபா பிரிமியம் கட்டுவேன்னு சொன்னாரு. நான் ஒரு மீட்டிங்கில் இருந்ததால உனக்கு அவர் நம்பர் அனுப்பினேன்."

சுதர்சன் பேசிக்கொண்டிருந்தபோதே, சேகர், அவன் அனுப்பிய செய்தி மதியமே வந்திருப்பதைப் பார்த்தான்.

"சரி. நான் பாத்துக்கறேன்" என்று ஃபோனை வைத்தான்.

தான் இல்லாதபோது, மேஜையில் இருந்த தன் கைபேசியில், புதிய செய்தியை யாரோ திறந்து பார்த்திருக்க வேண்டும். அதனால்தான், புதிய செய்தி வந்தது தனக்குத் தெரியாமல் போயிருக்கிறது.

நண்பன் அனுப்பியிருந்த நம்பருக்கு ஃபோன் செய்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"அதான் மத்தியானம் வந்து பேப்பர்லல்லாம் கையெழுத்து வாங்கிக்கிட்டு, செக் வாங்கிட்டுப் போயிட்டீங்களே? மறுபடி எதுக்கு ஃபோன் பண்றீங்க?" என்றார் அவர், சற்று எரிச்சலுடன்.

"என் ஃபிரண்ட் சுதர்சன் நான் வரதாத்தான் சார் சொல்லியிருப்பான். என் பேரு சேகர்."

"ஆமாம். சுதர்சன்கிட்ட சொன்னேன் பாலிசி எடுக்கணும்னு. அவர் உங்க கம்பெனியிலேந்து வருவாங்கன்னு சொன்னாரு. உங்க பேரையும் சொன்னாரு. அது எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, உங்க கம்பெனியிலேந்து வரதா சொல்லி, சுதர்சன் சொன்ன ஆள்னு சொல்லிக்கிட்டு,மத்தியானம் ஒத்தர் வந்தாரு. ஃபோன் பண்ணிட்டுத்தான் வந்தாரு. இருங்க. கார்டு கூடக் கொடுத்தாரே! அவர் பேரு... தணிகாசலம்."

"சரி சார். தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க" என்று சொல்லி, ஃபோனை வைத்தான் சேகர். 

கோபம், ஆத்திரம், வருத்தம், இயலாமை எல்லாம் பொங்கிக் கொண்டு வந்தன. 

சேகர் நிர்வாகியின் அறைக்குப் போன சமயம், தணிகாசலம் பக்கத்து மேஜையில்தான் உட்கார்ந்திருந்தான். தன் கைபேசியில் செய்தி வந்ததும், எடுத்துப் பார்த்திருக்கிறான். 

சுளையாக ஒரு பாலிசி கிடைக்கும் என்பதால், தானே போய் அதை வாங்கியிருக்கிறான். திருட்டுப் பயல்.

தணிகாசலம் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது இது முதல் முறை இல்லை. 

வேறொரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் ஏற்கெனவே சந்தித்துப் பேசிய நபரின் விவரங்களை எப்படியோ தெரிந்து கொண்டு (திருடி), அவன் அவரைப் போய்ப் பார்த்து, ஏதோ ஒரு கவர்ச்சிகரமான பாலிசியை அவரிடம் விற்ற சம்பவங்கள் நடந்து, அவன் மீது புகார்கள் போயிருக்கின்றன.

ஆனால், அவற்றுக்கான ஆதாரம் இல்லை என்று கருதி, அலுவலகத்தில் அவன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சேகர் விஷயத்தில் அவன் விளையாடியது இதுதான் முதல் முறை.

கைபேசியை மேஜை மீது வைத்து விட்டுச் சென்றது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று நொந்து கொண்டான் சேகர். 

இலக்கை எட்டாத நிலையில், தானாக வந்த ஒரு வாய்ப்பையும், தணிகாசலம் தன்னை ஏமாற்றிப் பறித்துக் கொண்டதை நினைத்து, தணிகாசலத்தின் மீது ஆத்திரம் வந்தது.

அவன் தணிகாசலத்தின் மீது புகார் சொன்னால், அலுவலகத்தில் அவனைப் பார்த்துத்தான் அனைவரும் சிரிப்பார்கள்.

தணிகாசலத்தை  என்ன செய்வது? 

என்னால் எதுவும் செய்ய முடியாது. கடவுள்தான் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். 

தணிகாசலம் மோட்டார் சைக்கிளில் போகும்போது, அவன் மீது லாரி மோதி, அவன் கை கால் உடைந்து, மருத்துவமனையில் பல மாதங்கள் கிடந்து அவதிப்பட வேண்டும்!

 'சே! என்ன நினைப்பு இது?' என்று உடனே தோன்றியது.

கைபேசி அடித்தது. மனைவி.

ஃபோனை எடுத்தவுடனேயே, அழுது கொண்டே, "என்னங்க, கழுத்தில போட்டிருந்த 8 பவுன் நகை போயிடுச்சு. ஒத்தன் பைக்கில வந்து அறுத்துக்கிட்டுப் போயிட்டான்!" என்று புலம்பினாள் அவள் .

சேகருக்கு அதிகம் ஏற்பட்டது, அதிர்ச்சியா, வருத்தமா, ஆத்திரமா என்று தெரியவில்லை.

"8 பவுன் நகையை ஏன் கழுத்தில போட்டுக்கிட்டுத் திரிஞ்சே? உனக்கெல்லாம் அறிவே வராதா? சரி. போலீசில் புகார் கொடுத்தியா?" என்றான் சேகர், கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளுடன்.

"இல்லீங்க. இப்பதான் நடந்தது. உடனே உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். நீங்க உடனே வாங்க. உங்களோட போய்தான் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கணும்."

மனைவி பேசி முடிக்கும் முன்பே, சேகர் இணைப்பைத் துண்டித்தான்.

கடவுளே! ஏன் இப்படி நடக்கிறது?

சில நிமிடங்கள் முன்பு, தணிகாசலம் லாரியில் அடிபட வேண்டும் என்று தான் நினைத்தது நினைவுக்கு வந்தது.

இன்னொருவருக்குக் கெடுதல் நினைத்ததால்தான் இப்படி நடந்ததா? இதெல்லாம் என்ன, கை  மேல் பலனா?

தலையில் கை வைத்தபடி, என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தான் சேகர்.

சில நிமிடங்களில், மீண்டும் கைபேசி அடித்தது. மனைவிதான்.

"என்ன? வரேன். அதுக்குள்ளே ஏன் ஃபோன் பண்றே?" என்று அவள் பேசும் முன்பே எரிந்து விழுந்தான் சேகர்.

"நீங்க வர வேண்டாம். நகை கிடைச்சுடுச்சு" என்றாள் மனைவி.

"எப்படி?" என்றான் அவன், நம்ப முடியாமல்.

"அவன் என் கழுத்திலேந்து நகையை அறுத்துக்கிட்டுப் போனதை தெருக்கோடி வீட்டு வாட்ச்மேன் பாத்திருக்காரு. அவரு மிலிட்டரிக்காரரு போலருக்கு. அவன் பைக்ல கிட்ட வரச்சே, குறுக்கே வந்து அவன் பைக்கை நிறுத்தி அவனைப் பிடிச்சுட்டாரு. அவன் நகையைப் போட்டுட்டு ஓடிட்டான். அவரு நகையை எங்கிட்ட கொடுத்துட்டாரு. நல்லவேளை, போலீஸ் ஸ்டேஷன் போய் அலையறதெல்லாம் வேண்டாம். என்ன, அறுந்து போன செயினைப் பத்த வைக்கணும்..."

அதற்கு மேல் மனைவி பேசியது அவன் காதில் ஏறவில்லை.

கடவுளே! சில நிமிடங்களில் என்ன நடந்து விட்டது! ஒருவருக்கு மனதளவில்  கெடுதல் நினைத்ததற்கே, உடனடி தண்டனை போல் நகை தொலைந்ததும், சில நிமிடங்களிலேயே அது திரும்பக் கிடைத்ததும்...

இது என்ன. மற்றவர்கள் நமக்கு எவ்வளவு கெடுதல் செய்திருந்தாலும், நாம் அவர்களுக்குக் கெடுதல் நினைக்கக் கூடாது என்ற எச்சரிக்கையா?

அவனுக்குப் புரியவில்லை. 

குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

பொருள்:  
மறந்து போய்க் கூடப் பிறருக்குக் கேடு நினைக்கக் கூடாது. அவ்வாறு நினைப்பவனுக்குக் கேடு நிகழுமாறு அறம் எண்ணும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


205. கணக்கு பொய்த்தது!

குறைந்த சம்பளம். சலிக்க வைக்கும் அளவுக்கு வேலைச்சுமை. ஆனால், தன் தகுதிக்கும், திறமைக்கும் வேறு நல்ல வேலை கிடைப்பது கடினம் என்று வெங்கடாசலத்துக்குத் தெரியும்.

சம்பளம் குறைவு என்பதால், வீட்டுக்குப் போனாலும் நிம்மதியாக இருக்க முடியாமல் தொந்தரவுகள்.

இந்த நிலையில்தான், எதிர்பாராத விதமாக, வெங்கடாசலத்துக்கு ஆஃபீசில் 'கஜானா' பொறுப்பு கிடைத்தது.

இந்தப் பொறுப்பில் இருந்த முதலாளியின் உறவினன் திடீரென்று வேலையை விட்டு விலகி விட்டதால், வெங்கடாசலத்திடம் பொறுப்பைக் கொடுத்தார் முதலாளி. கொடுக்கும்போதே, "பண விஷயத்தில நெருப்பு மாதிரி இருக்கணும். ஏதாவது தப்பு நடந்தா நான் பொறுத்துக்க மாட்டேன்" என்று எச்சரித்திருந்தார்.

ஆரம்பத்தில், வெங்கடாசலம் பயந்து கொண்டேதான் பணத்தைக் கையாண்டான். ஆனால், சில நாட்களிலேயே, சில விஷயங்கள் அவனுக்குப் புரிந்தன. சில சில்லறைச் செலவுகளைக் கொஞ்சம் அதிகமாகக் காட்டி, சிறிதளவு பணம் 'சம்பாதிக்கலாம்' என்று புரிந்து கொண்டான். 

வவுச்சர் போட முடியாத செலவுகள், அவசரத்துக்கு வெற்று வவுச்சரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, பின்னால் தொகையையும், விவரங்களையும் நிரப்பும் செலவினங்கள் ஆகியவை அவனுக்கு மிக வசதியாக இருந்தன.

மிக கவனமாக, சிறிய அளவு மட்டுமே செலவுகளை அதிகம் காட்டினான். கிடைத்த தொகை சிறிதுதான் என்றாலும், வந்த வரை லாபம் என்று நினைத்துக் கொண்டான். 

வேறு யாரும் கணக்குகளைச் சரி பார்க்கும் வழக்கம் இல்லை. வாரம் ஒரு முறை, ஒரு பகுதி நேர அக்கவுன்டன்ட் வந்து, அவனுடைய கேஷ்புக்கிலிருந்து, முறையாக லெட்ஜர்களில் கணக்கு எழுதுவார். 

அவருக்கு விவரங்கள் ஏதும் தெரியாது. 50 ரூபாயோ, 500 ரூபாயோ, கேஷ்புக்கில் என்ன இருக்கிறதோ, அதை லெட்ஜர்களில் எழுதுவதுதான் தன் வேலை என்பது போல்தான் அவர் நடந்து கொள்வார்.

அவ்வப்போது, முதலாளி திடீரென்று வந்து கேஷ்புக்கைப் பார்ப்பார். ஓரிரு செலவினங்களைக் காட்டி விவரம் கேட்பார். வெங்கடாசலம் விவரம் சொன்னதும் கேட்டுக் கொள்வார். 

தான் கவனமாக இருப்பதாக வெங்கடாசலம் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், சரிபார்ப்பது போல் முதலாளி நடந்து கொள்கிறார் என்று வெங்கடாசலம் புரிந்து கொண்டான்.

சில சமயம், முதலாளி தன் சொந்தச் செலவுக்காக அவனிடம் பணம் வாங்கிக் கொள்வார். 500 அல்லது 1000 ரூபாய் வாங்குவார். இதற்கு வவுச்சர் போட்டு முதலாளியிடம் கையெழுத்து வாங்கும் பழக்கம் இல்லை. கேஷ்புக்கில், முதலாளியின் சொந்தக் கணக்கு என்று எழுதிக் கொள்வான். 

அக்கவுன்டன்ட் வந்து கணக்கு எழுதும்போது, முதலாளி மாதம் முழுவதும் வாங்கிய மொத்தத் தொகைக்கு ஒரு வவுச்சர் போட்டு, அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வார்.

இது போல், வாரம் ஓரிரு முறை, அவர் பணம் வாங்கும் வழக்கம் உண்டு.

வெங்கடாசலம் துணிந்து ஒரு காரியம் செய்தான். ஒரு குறிப்பிட்ட வாரத்தில், அவர் ஒரு முறைதான் 500 ரூபாய் வாங்கினார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பின், இன்னொரு 500 ரூபாய் வாங்கியதாகக் கணக்கு எழுதி விட்டான். 

500 ரூபாயைப் பணப்பெட்டியிலேயே வைத்திருந்தான். ஒருவேளை, முதலாளி கண்டு பிடித்துக் கேட்டால், தவறுதலாக இரண்டு முறை எழுதி விட்டதாகச் சொல்லி, பணம் சரியாக இருப்பதாகச் சொல்லி விடலாம் என்று நினைத்தான். தினமும் பணத்தை எண்ணிச் சரி பார்ப்பது போன்ற வழக்கங்கள் இல்லாததால், வேறு கேள்விகள் வராது.

ஆனால், அது பற்றிப் பேச்சே வரவில்லை. மாத முடிவில், அக்கவுன்டன்ட் மொத்தத் தொகைக்கு வவுச்சர் வாங்கியபோதும், முதலாளி, தான் வாங்கியதை விட 500 ரூபாய் அதிகமான தொகை எழுதப்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டுக் கேட்கவில்லை.

தற்கு ஒரு மாதத்துக்குப் பிறகு, ஒரு நாள் மாலை, முதலாளி வெங்கடாசலத்தைத் தன் அறைக்கு அழைத்தார்.

"நாளையிலேந்து உனக்கு இங்கே வேலை இல்லை. உனக்குச் சேர வேண்டிய சம்பளத்தைக் கணக்குப் பாத்து, இன்னிக்கே கொடுத்துடறேன். வாங்கிட்டுப் போயிடு" என்றார்.

"ஏன் சார், திடீர்னு?" என்றான் வெங்கடாசலம், அதிர்ச்சி அடைந்தவனாக.

"என்னை முட்டாள்னு நெனச்சியா? ஆஃபீஸ்லேந்து நான் வாங்கற பணத்தையெல்லாம் நான் டயரியில் எழுதி வைச்சிருக்கேன். ரெண்டு மாசம் முன்னாடி, நீ என் கணக்கில 500 ரூபா அதிகமா எழுதியதை கவனிச்சேன். அப்பவே உன் மேல சந்தேகம் வந்துடுச்சு. அப்புறம் உன் தினசரிக் கணக்குகளைக் கண்காணிச்சேன். எவ்வளவு கொடுக்கற, எவ்வளவு வவுச்சர் போடறன்னு உனக்குத் தெரியாம கண்காணிச்சேன். நீ அப்பப்ப சில செலவுகளை அதிகமா எழுதிப் பணம் திருடறது தெரிஞ்சது. நீ பணம் திருடறது உறுதியானதால, உன்னை வேலையை விட்டு அனுப்பறேன்."

"சார்! மன்னிச்சுடுங்க சார். பணக் கஷ்டத்தால, தப்புப் பண்ணிட்டேன். இனிமே, அப்படிப் பண்ண மாட்டேன், சார். கேஷ் இல்லாம வேற ஏதாவது வேலை கொடுங்க சார். நீங்க வேலையை விட்டு அனுப்பிட்டா, நான் நடுத்தெருவுக்கு வந்துடுவேன் சார்!" என்று அழ ஆரம்பித்தான் வெங்கடாசலம்.

"பணக்கஷ்டம்னா திருடலாமா? இப்ப உன்னோட பணக்கஷ்டம் இன்னும் அதிகமாத்தானே ஆகப் போகுது? உன் நிலைமையை நினைச்சுப் பரிதாபப்படறேன். ஆனா, என்னால உனக்கு உதவ முடியாது" என்றார் முதலாளி.

குறள் 205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
இலனாகும் மற்றும் பெயர்த்து.

பொருள்:  
வறுமையின் காரணமாகத் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், மீண்டும் வறியவன் ஆக நேரிடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


206. அடி உதவுவது போல்...

"ஏம்ப்பா, மத்தவங்களுக்கு நாம கெட்டது செஞ்சா, நமக்கு கெட்டது நடக்குமா?" என்றான் மகேஷ்.

"ஏன் கேக்கறே?" என்றான் பெரியசாமி.

"ஸ்கூல்ல பாடம் நடத்தச்சே, வாத்தியார் சொன்னாரு."

"இங்க பாரு. புத்தகத்தில் எழுதியிருக்கறதை வாத்தியார் சொல்வாரு. பரீட்சை எழுதறப்ப, புத்தகத்தில என்ன இருக்கோ, வாத்தியார் என்ன சொல்றாரோ, அதையே எழுது. அப்பத்தான் மார்க் போடுவாங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். நான் பள்ளிக்கூடமே போனதில்லை!" என்றான் பெரியசாமி, சிரித்தபடி.

மகேஷ் சற்றுக் குழப்பத்துடன் போனான்.

மகேஷ் போனதும், அருகிலிருந்த பாண்டியன், "என்னங்க, அருணாசலம் சொன்ன வேலையை எப்ப செய்யறது?" என்றான்.

"இன்னிக்குப் போய் அவன் வீட்டில குடியிருக்கறவங்களை மிரட்டிட்டு வா. ரெண்டு வாரம் டைம் கொடுப்போம். அதுக்குள்ளே காலி பண்ணலேன்னா, ஆளுங்களை அனுப்பி, ரெண்டு தட்டு தட்ட வேண்டியதுதான்" என்றான் பெரியசாமி.

சி நாட்கள் கழித்து, மகேஷ் சற்று வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தான்.

"என்னடா ஆச்சு?" என்றான் பெரியசாமி.

"அன்னிக்கு நான் உன்கிட்ட கேட்டேன் இல்ல?"

"என்ன கேட்ட?"

"மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணினா, நமக்குக் கெடுதல் வருமான்னு?"

"ஆமாம். அதுக்கு என்ன இப்ப?"

"என் வகுப்பில ரகுன்னு ஒரு பையன் இருக்கான். அவன் அப்பா யாரையோ கத்தியால குத்திட்டாராம். அவரை இப்ப போலீஸ்காரங்க கைது பண்ணி சிறையில வச்சுட்டாங்களாம். ரகு அழுதுக்கிட்டிருக்கான். இனிமே பள்ளிக்கூடத்துக்கே வர முடியாது போலருக்குன்னு எங்கிட்ட சொல்லி அழுதான்."

"அதுக்கு என்ன செய்யறது? கத்தியால குத்தினா, போலீஸ்ல கைது பண்ணத்தான் பண்ணுவாங்க."

"இதைத்தான் மத்தவங்களுக்கு கெட்டது பண்ணினா, நமக்கும் கெட்டது நடக்கும்னு சொல்றாங்களா?"

"அது எனக்குத் தெரியாது. எத்தனையோ பேரு தப்பு பண்ணிட்டு ஜாலியா சுத்திக்கிட்டிருக்கான். மாட்டறவன் மாட்டிக்கறான்."

"அது இல்லப்பா. நமக்குக் காயம் பட்டா வலிக்குது இல்ல?"

"ஆமாம்."

"நமக்கு வலிக்கக் கூடாதுன்னு நெனைக்கறோம் இல்ல? அது மாதிரிதானே மத்தவங்களுக்கும் வலிக்கும்? ரகுவோட அப்பாவுக்கு ஏன் இது தெரியல?"

"இப்ப என்ன சொல்ற?"

"இல்லப்பா. ரகு என் நண்பன். அவன் ரொம்ப நல்லவன். அவன் அப்பா இப்படி செஞ்சார்ங்கறதை என்னால நம்ப முடியல. இப்ப அவர் கஷ்டப்படறதோட, ரகு, அவன் அம்மா, தங்கச்சி எல்லாரும் இல்ல கஷ்டப்படறாங்க?"

"சரி போ. கொஞ்ச நாள்ள அவரை விட்டுடுவாங்க. எல்லாம் சரியாயிடும்" என்றான் பெரியசாமி.

டுத்த நாள் பாண்டியன் வந்தபோது, "ஏண்டா, அருணாசலம் வீட்டில குடியிருந்தவங்க காலி பண்ணிட்டாங்களா?" என்றான் பெரியசாமி.

"இல்லண்ணே. ரெண்டு தட்டு தட்டினாத்தான் வழிக்கு வருவாங்க போலருக்கு. நாமதான் பாத்திருக்கமே, அடி உதவறது போல அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க!"

"சரி விடு. அவங்களை ஒண்ணும் செய்ய வேண்டாம். அவங்களா காலி பண்ணினா பண்ணட்டும்."

"என்னண்ணே இது? மயிலே மயிலேன்னா மயிலு இறகு போட்டுட்டா, நம்பளை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் என்ன வேலை?"

பெரியசாமி இதற்கு பதில் சொல்லவில்லை.

"சரி. அவங்க காலி பண்ணலேன்னா?"

"அருணாசலத்துக்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடப் போறேன்."

"ஏங்க இப்படி?"

"தெரியல. ஏதோ குழப்பமா இருக்கு."

"ஏங்க, அடிதடியை எல்லாம் விட்டுடப் போறமா?"

"தெரியல. இந்தத் தடவை வேண்டாம். மறுபடி இந்த மாதிரி வேலையெல்லாம் எடுத்துக்கறதான்னு அப்புறம் சொல்றேன்" என்றான் பெரியசாமி.

குறள் 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால 
தன்னை அடல்வேண்டா தான்.

பொருள்:  
துன்பம் விளைவிக்கும் தீவினைகள் தன்னை அணுகக் கூடாது என்று நினைப்பவன் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது.

இந்தக் காணொளியின் காணொளி வடிவம் இதோ:



207. கை நழுவிய வெற்றிக்கனி

கட்சித் தலைவர் கரிகாலன் வயது காரணமாகத் தீவிர அரசியலிலிருந்து ஒய்வு பெறப் போவதாக, சில வாரங்கள் முன்பு அறிவித்திருந்தார். 

கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில், பரந்தாமனுக்கும், குணசீலனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கரிகாலன் இருவரில் ஒருவரையும் ஆதரிக்காமல், நடுநிலையாக இருந்து, தேர்தல் சுமுகமாக நடைபெற வகை செய்தார்.

பரந்தாமன் சுலபமாக வெற்றி பெற்று விட்டான்.

தலைவர் பதவி என்பது பரந்தாமனுக்கு வாழ்க்கையில் ஒரு லட்சியமாகவே இருந்தது. அதனால், இந்த வெற்றி அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.

பரந்தாமன் தலைவர் பதவி ஏற்க, ஒரு வாரம் கழித்து ஒரு நாள் முடிவு செய்யப்பட்டது.

ரந்தாமன் பதவி ஏற்க வேண்டிய நாளுக்கு இரண்டு நாட்கள் முன்பு, ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஆறு மாதங்களுக்கு, முன் பரந்தாமன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கனகா, கட்சித் தலைவரிடம் ஒரு புகார் மனு அளித்தாள். அதை விசாரிப்பதாகவும், அது பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் கரிகாலன் அவளிடம் சொல்லி, அவளை அனுப்பி வைத்தார்.

ஆனால், சில மணி நேரங்களில், அவள் கொடுத்த கடிதத்தின் புகைப்பட நகல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி விட்டது.

"என்ன செய்யலாம். சொல்லுங்க" என்றார் கரிகாலன்.

"இது பொய் ஐயா!" என்றான் பரந்தாமன்.

"இது உண்மையா இருந்தாலும், எனக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்ல. ஆனா, இந்தப் புகார் விஷயம் இப்ப நாடு முழுக்கப் பரவிட்டுதே!" என்றார் கரிகாலன்.

"தலைவர் தேர்தல்ல தோற்ற ஆத்திரத்தில, குணசீலன்தான் இப்படிப் பண்ணி இருப்பாரு."

"இருக்கலாம். இதையெல்லாம் நிரூபிக்க முடியாது. உங்க மேல கொடுக்கப்பட்ட புகாரைக் கூட நிரூபிக்க முடியாது. ஆனா, ஜனங்க இது உண்மைதான்னு நினைப்பாங்க. அதோட, சம்பவம் நடந்ததா அந்தப் பொண்ணு சொல்ற தேதியில, நீங்க கோயமுத்தூர்ல இருந்திருக்கீங்க. உங்களை வரவேற்றவங்கள்ள அந்தப் பொண்ணும் இருக்கா. ஃபோட்டோ, வீடியோ எல்லாம் இருக்கு. கூட்டத்தில நீங்க அந்தப் பொண்ணை மட்டும் தனியா ஒரு பார்வை பாத்தீங்கன்னு கூட சில பேரு கற்பனை செஞ்சு எழுதுவாங்க! உங்ககிட்ட அப்ப கொடுக்கப்பட்ட நிர்வாகிங்க பட்டியல்ல அவ பேரும் இருக்கு. அந்த லிஸ்ட்லேந்து, நீங்க அவ ஃபோன் நம்பரைப் பாத்து, அவளுக்கு ஃபோன் பண்ணி, அவளை உங்க அறைக்குத் தனியா வரச் சொன்னீங்கன்னு அவ சொல்றா."

"அப்படி எதுவும் நடக்கவே இல்லை ஐயா! இதுவரையில் பெண்கள்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதா என் மேல ஒரு புகார் கூட இல்லை, ஏன், வதந்தி கூட இல்ல. நான் தலைவரா வரக்கூடாதுங்கறதுக்காக கட்சியில என் எதிரிகள் செய்யற சதி இது."

"உண்மைதான். ஆனா, அதுதான் நடக்கப் போகுது!"

"என்ன ஐயா சொல்றீங்க?"

"இந்த நிலையில நீங்க எப்படித் தலைவராப் பொறுப்பேற்க முடியும்? கொஞ்ச நாள் எதிலும் கலந்துக்காம ஒதுங்கி இருங்க. மறுபடி உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வரும். காத்திருங்க."

"அப்ப, தலைவர் யாருங்கய்யா?"

"கொஞ்ச நாளைக்கு நானே தொடர வேண்டியதுதான். இப்ப இருக்கற நிலையில, அதைத் தவிர வேறு வழி இல்லை" என்றார் கரிகாலன்.

"என்னண்ணே, இப்படி ஆயிடுச்சு?" என்றான் பரந்தாமனின் ஆதரவாளன் சண்முகம்.

பரந்தாமன் பதில் சொல்லவில்லை.

"குணசீலன் பண்ணின சதி அண்ணே!"

பரந்தாமன் இல்லையென்று மௌனமாகத் தலையாட்டினான். அவனே கரிகாலனிடம் இரண்டு நாட்கள் முன்பு அப்படித்தான் சொன்னான். ஆனால், இந்த இரண்டு நாட்களாக யோசித்ததில் அவனுக்குப் பல்வேறு சிந்தனைகள் தோன்றின. கடைசியில் ஒரு தெளிவு பிறந்தது.

ப்போது பரந்தாமன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு முன்னோட்டம் போல், பள்ளி நாட்களிலேயே ஐந்தாறு மாணவர்களைக் கூடச் சேர்த்துக் கொண்டு, கட்டுப்பாடில்லாமல் நடந்து வந்தான். 

அதனால், அவன் வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

ஒரு முறை, கிருஷ்ணன் அவனைப் பற்றித் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட்டார். 

தலைமை ஆசிரியர் பரந்தாமனை அழைத்துக் கடுமையாகக் கண்டித்து, பள்ளியை விட்டே வெளியேற்றி விடுவேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

இதனால், பரந்தாமன் கொஞ்சம் நிலை குலைந்து போய் விட்டான். வகுப்பு ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ததால்தானே இப்படி நேர்ந்தது என்று அவர் மீது கோபம் வந்தது. அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்று நினைத்தான்.

அவன் வகுப்பில் ராதா என்று ஒரு மாணவி இருந்தாள். அவள் படிப்பில் அதிக ஆர்வம் உள்ளவள், வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் வாங்குபவள் என்பதால், வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணனுக்கு அவள் மீது கொஞ்சம் அதிக அன்பும் அக்கறையும் உண்டு.  அதை அவர் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வார்.

ஒரு நாள் இரவு, பரந்தாமனும், அவன் நண்பர்கள் சிலரும் சுவரேறிக் குதித்து, பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து, பள்ளிச் சுவர்களில் நான்கைந்து இடங்களில், கிருஷ்ணனையும் ராதாவையும் தொடர்பு படுத்தி, அநாகரிகமாக சில வாசகங்களைக் கரிக்கட்டையால் எழுதி விட்டு வந்தார்கள். கிருஷ்ணன், ராதா என்ற பெயர்ப் பொருத்தம் வேறு அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

அடுத்த நாள் பள்ளிக்கு வந்த ராதா, சுவற்றில் எழுதப்பட்டவற்றைப் பார்த்து விட்டு, அழுது கொண்டே வீட்டுக்கு ஓடியவள்தான். அதன் பிறகு, அவள் பள்ளிக்கே வரவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அவள் பெற்றோர் அவளை வெளியூரில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார்கள் என்ற செய்தி வந்தது.

பரந்தாமன் மீது சந்தேகம் இருந்தாலும், ஆதாரம் இல்லாததால் பள்ளி நிர்வாகம் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமை ஆசிரியர் பரந்தாமனை அழைத்து விசாரித்தார். தான் எழுதவில்லை என்று சாதித்து விட்டான். தலைமை ஆசிரியர் எல்லா மாணவர்களையும் பொதுவாக எச்சரிக்கை செய்து, விவகாரத்தை முடித்தார்.

கிருஷ்ணனைப் பழி வாங்க நினைத்து, ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு, தன்னை அறியாமல் கெடுதல் செய்து விட்டோமே என்று பரந்தாமனுக்கு அவ்வப்போது தோன்றும். பாவம்! 

நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பெண். நிறையப் படித்து, நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் உயர்ந்திருக்கலாம்.

அது கிராமம் என்பதால், அவதூறுக்கு பயந்து, அவள் பெற்றோர்கள் அவள் படிப்பை நிறுத்தியதுடன், அவளுக்கு அவசரமாகக் கல்யாணமும் செய்து வைத்து விட்டார்கள். 

அவள் திருமண வாழ்க்கை நன்றாக அமைந்ததா என்பது கூடப் பரந்தாமனுக்குத் தெரியாது.

ப்போது 30 வருடங்களுக்குப் பிறகு, அந்தச் சம்பவம் பரந்தாமன் மனத்தில் திரைப்படம் போல் ஓடியது. 

பரந்தாமனுக்கு எதிராக, குணசீலனோ யாரோ சதி செய்திருக்கலாம். கடந்த காலத்தில், கட்சிக்குள்ளும் வெளியிலும், அவனுடைய அரசியல் எதிரிகள் செய்த எத்தனையோ சதிகளிலிருந்து அவன் மீண்டு வந்திருக்கிறான்.

ஒரு பறவையின் இறக்கை பட்டதால் ஒரு விமானம் கீழே விழுந்தது போல், அவனுடைய வலுவான அரசியல் தளம் ஒரு பொய்யான குற்றச்சாட்டால் சரிந்து விட்டதற்குக் காரணம், தான் ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு இழைத்த அநீதிதான் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை.

"என்னங்க, இப்படி வேகமாத் தலையை ஆட்டறீங்க? அப்ப இது குணசீலன் செஞ்ச சதி இல்லைங்கறீங்களா?" என்றான் சண்முகம்.

பரந்தாமன் நிறுத்தாமல் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டே இருந்தான்.

குறள் 207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

பொருள்:  
ஒருவர் எந்தப் பகையிலிருந்தும் தப்பி வாழ முடியும். ஆனால் அவர் செய்த தீவினை அவரை விடாது பின் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



208. சாமிக்கண்ணுவின் வருத்தம்

"ஏங்க, நியாயமாத் தொழில் பண்றீங்க. ஆனா, வருமானம் வர மாட்டேங்குதே!" என்றாள் சொர்ணம்.

"என்ன செய்யறது? பாக்கலாம்" என்றான் சாமிக்கண்ணு.

மளிகைக்கடை வியாபாரம் சரியாக வராததால், சிறிது காலத்துக்குப் பிறகு, கடையை மூடி விட்டு, கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான் சாமிக்கண்ணு.

கூலி வேலையில் வந்த வருமானம் போதவில்லை. வியாபாரத்துக்காக வாங்கிய கடன்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றுக்கு வட்டியும், அசலும் கட்ட வேண்டி இருந்தது.

சில நாட்கள் வேலை இருக்காது. வேலை இருந்த நாட்களிலும், கூலி என்று பெரிதாகக் கிடைக்கவில்லை.

"நானும் வேலைக்குப் போகலாம். ஆனா, எனக்கு உடம்பில பலம் இல்லையே!" என்றாள் சொர்ணம்.

"ஒண்ணும் வேண்டாம். நீ வீட்டு வேலை பாக்கறதே பெரிய விஷயம். நான் பாத்துக்கறேன். கொஞ்ச நாள்ள எல்லாம்  சரியாயிடும்" என்றான் சாமிக்கண்ணு.

"எங்கே? கொஞ்ச நாள் கொஞ்ச நாள்னு பத்து வருஷமா இப்படியேதான் சொல்லிக்கிட்டிருக்கோம்!"

"பரவாயில்லை. நாம ரெண்டு பேர்தானே? சமாளிச்சுக்கலாம்" என்றான் சாமிக்கண்ணு.

"அதாங்க எனக்கு இன்னும் வருத்தமா இருக்கு. என் உடம்பு பலவீனமா இருக்கறதால, நமக்குக் குழந்தை பிறக்காதுன்னு ஆஸ்பத்திரியில சொல்லிட்டாங்க. கடைசி காலத்தில நம்மளைக் காப்பாத்தக் கூடப் பிள்ளைங்க இருக்க மாட்டாங்களே!" என்றாள் சொர்ணம். சொல்லும்போதே, துக்கத்தில் தொண்டை அடைத்தது.

"ஏங்க நமக்கு மட்டும் இப்படி எல்லாம் கஷ்டமாவே நடந்துக்கிட்டிருக்கு?" என்றாள் சொர்ணம், .

சாமிக்கண்ணுவுக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியும், ஆனால் அவளிடம் சொல்லவில்லை. பத்து ஆண்டுகள் முன்பு வரை, ஒரு பணக்காரனுக்கு அடியாளாக இருந்து, எத்தனையோ பேரை மிரட்டி, அடித்து, கை கால்களை உடைத்து, எத்தனையோ தீங்குகளைச் செய்து விட்டு, சொர்ணத்தைக் கல்யாணம் செய்து கொண்டதும், அவள் பேச்சைக் கேட்டு, அடியாள் வேலையை விட்டு விட்டு நல்லவனாக வாழ்ந்தாலும், முன்பு பலருக்கும் தான் செய்த கெடுதல்களின் பலனைத் தான் அனுபவிக்கத்தானே வேண்டும்?

ஆனா, ஒரு தவறும் செய்யாத சொர்ணமும் தன்னுடன் சேர்ந்து கஷ்டப்படுவதுதான் அவனுக்கு வருத்தமாயிருந்தது.

குறள் 208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடி உறைந் தற்று.

பொருள்:  
ஒருவருடைய நிழல் அவரை விடாது அவர் காலடியிலேயே இருப்பது போல், ஒருவர் செய்த தீவினையால் அவருக்கு நேரும் கெடுதல்களும் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


209. இனிப்பும், கசப்பும் 

"உனக்கு இனிப்பு பிடிக்குமே அம்மா, அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே?" என்று கேட்டாள் சுமதி.

"எனக்கு இனிப்பு பிடிக்கும்தான். ஆனா, அதைவிட எனக்கு என்னை அதிகம் பிடிக்குமே, அதான் சாப்பிடல!" என்றாள் சாரதா.

"அப்படின்னா?"

"உன்னை மாதிரி சின்னப் பொண்ணா  இருந்தப்ப, நான் நிறைய இனிப்பு சாப்பிடுவேன். இப்ப எனக்கு வயசாயிடுச்சு. அதிகமா இனிப்பு சாப்பிட்டா, என் உடம்புக்கு ஒத்துக்காது. அதனாலதான், இனிப்பு சாப்பிடறதைக் குறைச்சுக்கறேன். இனிப்பு சாப்பிட்டா நல்லா இருக்கும்தான். ஆனா, என் உடம்பு நல்லா இருக்கறது எனக்கு முக்கியம் இல்லையா, அதான் அப்படிச் சொன்னேன். புரிஞ்சுதா?"

"புரியற மாதிரி இருக்கு!" என்றாள் சுமதி.

தொலைக்காட்சியில் சாரதா சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது, சுமதி அங்கே வந்தாள்.

தொலைக்காட்சியில் வந்த காட்சிகளைச் சிறிது நேரம் பார்த்து விட்டு, "அந்த ஆன்ட்டி ஏம்மா அழறாங்க?" என்றாள் சுமதி.

"அது பெரிய கதைடி. உனக்குப் புரியாது. பெரியவங்களுக்குத்தான் புரியும். நீ போய்ப் படி!" என்றாள் சாரதா.

"இல்லம்மா. இதை மட்டும் சொல்லேன்."

"அந்தப் பொண்ணு மத்தவங்களுக்கு நிறையக் கெடுதல் பண்ணினா. இப்ப, எல்லாரும் அவளை விட்டுப் போயிட்டாங்க. அவ குழந்தை கூட, 'நீ கெட்ட அம்மா. நான் உன்கிட்ட இருக்க மாட்டேன்'னு சொல்லிட்டுப் போயிடுச்சு. அதான் அவ அழறா"

"அந்த ஆன்ட்டிக்குத் தன்னையே பிடிக்காதா?" என்றாள் சுமதி.

"என்னடி சொல்ற?" என்றாள் சாரதா, மகள் சொல்வது புரியாமல்.

"அன்னிக்கு நீ சொன்ன இல்ல, உனக்கு உன்னைப் பிடிக்கும், அதனாலதான்,  இனிப்பு சாப்பிட்டா உடம்புக்குக் கெடுதல் வரும்னுட்டு சாப்பிடாம இருக்கேன்னு?"

"ஆமாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"அந்த ஆன்ட்டிக்கு தன்னைப் பிடிச்சிருந்தா, தனக்கு கஷ்டம் வரக் கூடாதுன்னு நினைச்சிருப்பாங்க இல்ல? அதனால, மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணாம இருந்திருப்பாங்களே! அப்புறம், அவங்க இப்படி கஷ்டப்பட வேண்டி இருந்திருக்காது இல்ல?" என்றாள் சுமதி.

தான் சாதாரணமாகச் சொன்ன ஒரு விஷயத்தை வேறொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தித் தன் பெண் எத்தனை அருமையாகச் சிந்தித்திருக்கிறாள் என்று பெருமையாக இருந்தது சாரதாவுக்கு.

"இங்க வாடி!" என்று மகளை அருகில் அழைத்து, அவளைத் தழுவிக் கொண்டாள் சாரதா.

குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்.

பொருள்:  
ஒருவன் தன்னை நேசிப்பவனாக இருந்தால், சிறிதளவு கூட மற்றவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


210. அனுபவம் பலவிதம் 

அந்தப் பொழுதுபோக்கு சங்கக் கூட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக, சில உறுப்பினர்கள் தாங்கள் சந்தித்த பிரச்னைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.

சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர், தங்கள் போட்டியாளர்களை ஒழிக்கத் தாங்கள் செய்த சதிகள், குறுக்கு வழிகள், சட்ட விரோதச் செயல்கள் இவற்றையெல்லாம் கூடப் பகிர்ந்து கொண்டனர். 

மற்றவர்கள் தங்கள் அலுவலகங்கள், குடியிருக்கும் பகுதி இங்கெல்லாம் தங்களுக்கு எழுந்த பிரச்னைகளைத் தாங்கள் சமாளித்த விதம் பற்றிப் பேசினர்.

அது நெருக்கமான உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் என்பதால், தாங்கள் சொல்வது வெளியே செல்லாது என்ற நம்பிக்கையில், அனைவரும் மிகவும் வெளிப்படையாகவும், உற்சாகமாகவும் பேசினர். 

அங்கே ஒரு போலீஸ்காரர் இருந்திருந்தால், சிலரின் பேச்சை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொண்டு, அவர்கள் மேல் வழக்குப் போடும் அளவுக்குக் கடுமையான குற்றங்களைப் பற்றிக் கூட பயமில்லாமல் பேசினர்.

ராஜவேலுவின் முறை வந்தது. ராஜவேலு ஒரு பெரிய வியாபாரி. சிறிய ஜவுளிக்கடை வைத்துத் தன் வியாபார வாழ்க்கையைத் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, பல்வகைப் பொருட்களையும் விற்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தார்.

"உங்க பேச்சையெல்லாம் கேக்க பிரமிப்பா இருந்தது. எல்லாரும் எத்தனையோ சவால்களை அருமையா சமாளிச்சு முன்னேறி இருக்கீங்க. ஆனா, நான் ஒரு எளிமையான மனுஷன். எனக்கு பிரச்னைன்னு பெரிசா எதுவும் வந்ததில்லை. 

"சின்னச் சின்ன பிரச்னைகள் நிறைய வந்திருக்கு. ஆனா, அவை வாழ்க்கையில இயல்பா நடக்கற விஷயங்கள்தான். வெற்றிகள், தோல்விகள் ரெண்டையும் நிறைய சந்திச்சிருக்கேன். எது வருதோ அதை ஏத்துக்கிட்டு அடுத்தாப்பல என்ன செய்யறதுன்னு யோசிச்சு செயல்படறதுதான் என் வழக்கம். 

"தொழில்ல போட்டி இருக்கும். ஆனா, நான் அதைப் பெரிசா நினைக்கல. நான் முயற்சி செய்யற மாதிரி மத்தவங்களும் முயற்சி செய்யறாங்கன்னு எடுத்துப்பேன். சில சமயம் நான் ஜெயிப்பேன். சில சமயம் வேற யாராவது ஜெயிப்பாங்க. அதனால, எனக்கு முன்னால பேசினவங்கள்லாம் சொன்ன மாதிரி பெரிசா சொல்லிக்க எங்கிட்ட எதுவும் இல்லை!" என்றார் அவர்.

"நீங்க ஒண்ணும் செய்யாட்டாலும், உங்க போட்டியாளர்கள் உங்களைக் கவிழ்க்க நிறைய சதி பண்ணியிருப்பாங்களே, அதையெல்லாம் எப்படி முறியடிச்சீங்க?" என்று கேட்டார் ஒரு உறுப்பினர்.

"அப்படி யாரும் சதி செஞ்ச மாதிரி எனக்குத் தெரியல. வியாபாரத்தைப் பெருக்க நான் சிலதைச் செய்யற மாதிரி, மத்தவங்க சிலது செய்யறாங்க. அப்படித்தான் நான் அதைப் பாக்கறேன்" என்றார் ராஜவேலு.

கூட்டம் முடிந்ததும், அவர் நண்பர் சிகாமணியின் கார் பழுதடைந்திருந்ததால் அவரை வீட்டில் விட்டு விடுவதாகச் சொல்லித் தன் காரில் அழைத்துச் சென்றார் ராஜவேலு.

"என்ன ராஜவேலு, ஏதாவது சுவாரசியமா சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தா, சப்புன்னு ஆயிடுச்சே!" என்றார் சிகாமணி, காரில் போகும்போது.

"சிகாமணி! நீங்க வியாபாரி இல்ல, வக்கீல். அதனால உங்ககிட்ட இதைச் சொல்றேன். இன்னிக்குப் பேசினவங்கள்ள நிறைய பேரு தாங்க ஜெயிக்கணும்கறதுக்காக அடுத்தவங்களுக்குக் கெடுதல் செஞ்சதா ஒத்துக்கிட்டாங்க. மத்தவங்க இவங்களோட போட்டிக்கு வந்ததால, இவங்க அவங்களுக்கு எதிரா சில வேலைகளைச் செஞ்சதாச் சொன்னாலும், போட்டியாளர்களை விரோதிகளா நினைச்சு, அவங்களை அழிக்கப் பல வேலைகளை செஞ்சிருக்காங்க. அதனால, இவங்களுக்கும் பிரச்னைகள் வந்திருக்கு.

"என்னைப் பொருத்தவரையிலும், நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. நான் வியாபாரம் பண்ற மாதிரி இன்னொத்தரும் பண்றாரு. அவரை ஏன் நான் என் எதிரியா நினைக்கணும்? அவர் என்னை முந்திப் போனாலும், நான் என்ன முயற்சி செய்யலாம்னு பாப்பேனே தவிர, அவங்களைக் கவுக்கறது எப்படின்னு பாக்க மாட்டேன். என்னை வியாபாரத்துக்கு லாயக்கு இல்லாதவன்னு கூட சில பேர் சொல்லி இருக்காங்க.

"நான் என்ன நினைக்கிறேன்னா, நான் யாருக்கும் கெடுதல் செய்யாததால, எனக்கும் கெடுதல் எதுவும் நடக்கலை. இன்னிக்கு மத்தவங்க பேசினதைக் கேட்டப்ப, எனக்கு இது உறுதியாயிடுச்சு. ஏன்னா, அவங்க மத்தவங்களுக்குக் கெடுதல் செஞ்சதை ஒப்புக்கறாங்க. ஆனா, அதனால அவங்களுக்கு இன்னும் அதிகக் கெடுதல் வந்ததே தவிர, அவங்க பிரச்னைகள் தீரல்ல. இது என் பார்வை.  நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றார் ராஜவேலு.

"நீங்க வக்கீல் இல்ல. ஆனா உங்க பேச்சைக் கேக்கறப்ப, நீங்க வக்கீல் தொழிலுக்கு வந்திருந்தா, என்னைத் தொழில்லேந்து விரட்டி இருப்பீங்கன்னு தோணுது!" என்றார் சிகாமணி, சிரித்தபடி.

குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்..

பொருள்:  
ஒருவன் தவறான வழியில் சென்று பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருந்தால், அவனுக்குக் கேடு வராது .

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்
















No comments:

Post a Comment