About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 20 - பயனில சொல்லாமை

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 20 
பயனில சொல்லாமை

191. திண்ணை

"இந்தத் திண்ணைப் பேச்சு மனிதரிடம் நாம ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி.."

முரசு தொலைக்காட்சியில் ஒலித்த பாடலைக் கேட்ட புவனா, "தாத்தா! திண்ணைன்னா என்ன?" என்றாள்.

"கிராமத்து வீட்டிலெல்லாம் வாசல்ல மேடை மாதிரி கட்டியிருப்பாங்க. அதுதான்  திண்ணை" என்றார் வேதாசலம்.

"ஆமாம். உன் தாத்தாவுக்குத்தான் திண்ணையைப் பத்தி நல்லாத் தெரியும். அவர்தானே அந்தக் காலத்தில வீட்டுத் திண்ணையில உக்காந்துக்கிட்டு, தெருவில போறவங்களையெல்லாம் கூப்பிட்டு ஒக்கார வச்சு, வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டிருப்பாரு" என்றாள் அவர் மனைவி கௌரி.

வேதாசலம் பழைய நினைவுகளில் மூழ்கினார்.

வேதாசலத்துக்கு கிராமத்தில் நிலபுலன்கள் இருந்தன. அவற்றிலிருந்து வந்த வருமானம் போதுமானதாக இருந்ததால், அவர் வேறு வேலைக்குச் செல்லவில்லை. வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். தெருவில் போகிறவர்களைக் கூப்பிட்டு வைத்துப் பேசுவார்.

பேச்சு பெரும்பாலும் அவருடைய பெருமைகளைப் பற்றித்தான் இருக்கும். அவர் அப்பா வாய்க்காலில் பாலம் கட்டியது, அவர் குடும்பத்தால் நடத்தப்படும் கோவில் திருவிழாக்கள், அவருடைய இளம் வயது "சாதனைகள்" என்று பேசிக் கொண்டிருப்பார்.

பல சமயம், முன்பு சொன்னவற்றையே முதல் முறையாகச் சொல்வது போல் விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருப்பார். வேதாசலத்தின் வெற்றிலைப் பெட்டியிலிருந்து வெற்றிலை, சீவல், புகையிலை எல்லாவற்றையும் எடுத்து மென்று கொண்டே, அவர் பக்கத்தில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, சிலர் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வெற்றிலை, சீவல், புகையிலை ஏதாவது தீர்ந்து விட்டால், தெருவில் போகும் யாராவது ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, கடையிலிருந்து வாங்கி வரச் சொல்லுவார். சில சமயம், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பவர்களில் ஒருவரே கூட இதைச் செய்வார்!

"டேய், ராவுத்தர் கடையிலேந்து ரெண்டு கவுளி வெத்தல, ரெண்டு பாக்கெட் கும்பகோணம் சீவல், ரெண்டு பாக்கெட் பன்னீர்ப் புகையிலை வாங்கிட்டு வா. பெரிய பாக்கெட்டா இருக்கட்டும். ஐயா கிட்ட காசு வாங்கிக்கிட்டுப் போ" என்பார் வேதாசலத்தின் பேச்சுத் துணைவர் உரிமையுடன்.

அநேகமாக, வேதாசலம் பேச்சு சுவாரஸ்யத்தில் ஒன்றும் சொல்லாமல், பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவார். சில சமயம், வாங்கி வரச் சொன்னவரை முறைப்பார். அவர் அசட்டுச் சிரிப்பு சிரித்ததும், பேசாமல் காசை எடுத்துக் கொடுத்து விடுவார்.

கௌரி எத்தனையோ முறை சொல்லிப் பார்த்திருக்கிறாள், "வேலை இல்லன்னா, வீட்டுக்குள்ள படுத்துத் தூங்குங்க. இல்ல, வயக்காட்டு, தோப்பு, துரவுன்னு எங்கியாவது போய் சுத்திட்டு வாங்க. இப்படி வெட்டியா அரட்டை அடிச்சுக்கிட்டு வெத்தலை சீவல்னு பணத்தைச் செலவழிக்கிறீங்களே!" என்று.

ஆனால், வேதாசலம் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

ருநாள், அவர்களுடைய தூரத்து உறவினன் செல்வராஜ் கௌரியிடம் சொன்னான். "அண்ணி! அண்ணன் எல்லாரும் அவர் பேச்சைக் கேட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டிருக்காங்கன்னு நெனச்சுக்கிட்டிருக்காரு. ஓசியில கிடைக்கற புகையிலை, வெத்தலைக்கு அலையறவங்கதான் அண்ணன் பேச்சைக் கேக்கற மாதிரி, திண்ணையில கொஞ்ச நேரம் வெத்தலையை மென்னுக்கிட்டு உக்காந்திருக்காங்க.

"அவங்க கூட, அண்ணன் முதுகுக்குப் பின்னால அவரை ஏளனமாத்தான் பேசறாங்க. 'நாலு வெத்தலைக்காக வெட்டிப் பேச்செல்லாம் கேக்க வேண்டியிருக்கு பாரு'ன்னு ஒத்தன் சொல்லிக்கிட்டிருந்ததை நானே கேட்டேன். மத்தவங்களும், அண்ணனை இளக்காரமாத்தான் பேசறாங்க. 'ஆளும் வெட்டி, பேச்சும் வெட்டி'ன்னு ஒரு பெரிய மனுஷன் என் காது படப்  பேசினாரு. அண்ணனுக்கு ஏன் அண்ணி இந்த வேலை?"

"நான் சொல்லி அவர் கேக்கறது எங்கே? எங்கேயோ போயிருக்காரு. வந்தவுடனே நான் மறுபடி சொல்லிப் பாக்கறேன்" என்றாள் கௌரி.

வேதாசலம் எங்கேயும் போகவில்லை. அறைக்குள் இரும்புப் பெட்டியைத்  திறந்து, பழைய பத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். செல்வராஜ் சொன்னது அவர் காதில் விழுந்தது.

அடுத்த நாள், வேதாசலம் திண்ணையில் அமர்ந்தபோது, வெற்றிலைப் பெட்டியை வைத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக வரும் சிலர் திண்ணையில் வந்து உட்கார்ந்து, சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

"என்னங்க? வெத்திலைப் பெட்டியைக் காணோம்?" என்று ஒருவர் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.

"வெத்தல போடறதையே நிறுத்திடலாம்னு பாக்கறேன்ப்பா!" என்றார் வேதாசலம்.

அதற்குப் பிறகு, அவர் திண்ணை மாநாட்டுக்கு ஆட்கள் வருவது குறைந்து, பிறகு நின்றே போய் விட்டது. முன்பு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தெருவில் போனால், வேகமாக அவர் வீட்டைத் தாண்டிப் போனார்கள். சிலர், யாரோ கூப்பிட்டது போல "இதோ வந்துட்டேன்" என்று கூவிக் கொண்டே ஒடினார்கள். வேதாசலம் யாரையாவது அழைத்தால் கூட, "இல்லீங்க. அவசரமா ஒரு வேலை இருக்கு. போயிட்டு வந்துடறேன்" என்று நழுவினார்கள்.

கேட்க ஆள் இல்லாததால், வேதாசலத்தின் பேச்சும் குறைந்து விட்டது.

"என்ன, பழசெல்லாம் நினைச்சுப் பாக்கறீங்களா?" என்றாள் கௌரி.

"ஊர்ல அன்னிக்கு என்னை இளக்காரமாப் பேசினாங்க. நீ இத்தனை வருஷம் கழிச்சு, இப்பவும் என்னைக் குத்திக் காட்டற."

"அவங்கள்ளாம் வெத்தலை சீவலுக்காகத்தான் உங்களோட இருந்தாங்க! நான் உங்ககிட்ட எதையாவது எதிர்பாத்தா உங்களோட இத்தனை வருஷமாக் குடித்தனம் நடத்திக்கிட்டிருக்கேன்?"

தொலைக்காட்சியில் இப்போது வேறொரு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

"......பானையிலே சோறிருந்தா
பூனைகளும் சொந்தமடா!!"

"சேனலை மாத்தும்மா. பழைய பாட்டெல்லாம் கேட்டா, ஆறின புண்ணைக் கிளறி விடற மாதிரி இருக்கு" என்றார் வேதாசலம்..

குறள் 191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும்

பொருள்:  
கேட்பவர் வெறுக்கும்படிப் பயனற்ற சொற்களைப் பேசுபவன் எல்லோராலும் இகழப்படுவான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


192. பதவி உயர்வு!

கஜபதிக்கு அந்த அலுவலகத்தில் என்ன வேலை என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவருக்கு வேலையே இல்லை.

அவர் அந்த நிறுவனத்தில் நீண்ட நாட்களாகப் பணியாற்றுபவர். நிறுவனத்தைத் தொடங்கிய சுந்தரமூர்த்தியின் நண்பர். நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இருப்பவர்.

சுந்தரமூர்த்தியை 'வாடா, போடா' என்று பேசும் உரிமை பெற்றவர். முதலாளி-ஊழியர் என்ற நிலையைத் தாண்டி இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தனர்.

அரசுக்குப் பல்வகைப் பொருட்களை விற்பனை செய்யும் ஏஜென்ஸி நிறுவனம் அது. ஆரம்பத்தில் பேப்பர், ஃபைல்கள் என்று தொடங்கி, பிறகு, ஃபர்னிச்சர், ஃபிட்டிங்ஸ் என்று பல்வேறு பொருட்களை சப்ளை செய்யும்
அளவுக்குக் குறுகிய காலத்திலேயே வளர்ந்து விட்டது அந்த நிறுவனம்.

ஆரம்ப காலத்தில், கஜபதி சுந்தரமூர்த்தியுடன் சேர்ந்து வியாபாரத்தைப் பெருக்கக் கடுமையாக உழைத்தவர்தான். ஆயினும், நிறுவனம் வளர்ந்ததும், ஒரு புறம் வியாபாரம் நிலை பெற்று விட்டதாலும், மறு புறம் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாலும், கஜபதிக்கு வேலை குறைந்து விட்டது.

அந்த நிறுவனத்தில் யாருக்கும் பதவிப் பெயர்கள் இல்லை. துவக்கத்தில் ஒரு பொது மேலாளர் போல் செயல்பட்ட கஜபதி, நாளடைவில் தாமே தம் பொறுப்புகளைக் குறைத்துக் கொண்டார். 

மற்ற ஊழியர்களும் அவரை அணுகுவதைக் குறைத்துக் கொண்டு, நேரே முதலாளியிடம் பேசும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டனர்.

கஜபதிக்கு இது வசதியாகவே இருந்தது. ஒய்வு பெற இன்னும் சில வருடங்களே இருந்த நிலையில், தம் இருக்கையில் அமர்ந்தபடி, மற்ற ஊழியர்களிடம் அரட்டை அடித்து நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தார்.

அவர்கள் அலுவலகம் கீழ்ப்பகுதியிலும், மாடியிலும் என்று இரண்டு தளங்களில் இருந்தது. சுந்தரமூர்த்தியின் அறை மாடியில் கடைசியில் இருந்தது. ஊழியர்கள் யாருக்கும் தனி அறை இல்லை - கஜபதி உட்பட. 

கஜபதியின் இருக்கை மாடிப்படியின் அருகில் இருந்தது. கீழிருந்து மேலே வருபவர்கள், மேலிருந்து கீழே வருபவர்கள் என்று எல்லோரையும் நிறுத்தி வைத்துப் பேசுவார். யாராயிருந்தாலும், சில நிமிடங்கள் அவர் இருக்கை அருகில் நின்று பேசி விட்டுத்தான் போக வேண்டி இருக்கும்.

பேச்சு அவர்கள் குடும்ப விஷயம், அவர்கள் பகுதியில் நடந்த குற்றங்கள், விபத்துகள், சினிமா, அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கும். 

சில ஊழியர்கள் இதை ரசித்தாலும், சிலர் - குறிப்பாக, பெண்கள் - இதை விரும்பவில்லை. இயல்பாகவே, கஜபதிக்குச் சற்று உரத்த குரல். அதனால் அவர் பேசும்போது, அவர் அருகில் உட்கார்ந்திருக்கும் சிலர், தங்கள் வேலையிலிருந்து கவனத்தைத் திருப்பி, அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கஜபதி ஒரு மூத்த ஊழியர் என்பதாலும், முதலாளியின் நண்பர் என்பதாலும், யாரும் இது பற்றிப் புகார் செய்யவில்லை. சுந்தரமூர்த்தியும் இதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

ருநாள் சுந்தரமூர்த்தி தன் அறையை மாடியிலிருந்து கீழ்ப்பகுதிக்கு மாற்றிக் கொண்டார். "ஏம்ப்பா ரூமை மாத்தற?" என்று கஜபதி கேட்டதற்கு, "சும்மா ஒரு மாறுதலுக்காகத்தான்" என்றார் சுந்தரமூர்த்தி.

புதிய அறைக்கு மாறி இரண்டு நாட்கள் கழித்து, கஜபதியைத் தன் அறைக்கு அழைத்தார் சுந்தரமூர்த்தி.

"கஜபதி! மேல என் ரூமை எதுக்குக் காலி பண்ணினேன் தெரியுமா?"

"கேட்டேன். சும்மாதான்னு சொன்னியே!" என்றார் கஜபதி.

"நீ ஆரம்பத்திலேந்து என்னோட இருக்க. உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். நம்ம கம்பெனியில டெஸிக்னேஷன் எதுவும் கூடாதுங்கறது என் பாலிசின்னு உனக்குத் தெரியும். இல்லேன்னா, உன்னை ஜெனரல் மானேஜர்னு டெஸிக்னெட் பண்ணி இருப்பேன். என்னோட அறையை உனக்காகத்தான் காலி பண்ணினேன். இதை விட அது பெரிசு. இனிமே, உன் சீட் அங்கதான். சில முக்கியமான ஃபைல்களை உனக்கு அனுப்பறேன். நிதானமாப் பாரு. உனக்கு ஒர்க் பிரஷர் எதுவும் இருக்காது."

கஜபதி கொஞ்சம் மகிழ்ச்சியுடனும், கொஞ்சம் குழப்பத்துடனும் தலையாட்டினார்.

"ஆஃபீஸ்ல, என் ரூமை கஜபதிக்குக் கொடுத்துட்டு நான் கீழ வந்துட்டேன்" என்றார் சுந்தரமூர்த்தி, தன் மனைவியிடம்.

"ஏன் திடீர்னு?"

"அவன் கம்பெனிக்கு நிறையப் பண்ணியிருக்கான். கம்பெனி பெரிசானதும், அவனுக்கு ஏதாவது பொறுப்பு கொடுத்திருக்கணும். சரி, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கட்டும்னு விட்டுட்டேன். அவன் என்னடான்னா, எல்லாரையும் இழுத்து வச்சுக் கதை பேசிக்கிட்டு, ஆஃபீசையே கெடுத்துக்கிட்டிருந்தான். என்ன செய்யறதுன்னு தெரியல. நேரடியா சொன்னா, அவன் வருத்தப்படுவான். புரிஞ்சுக்காம போனாலும் போகலாம். அதுதான் இப்படிப் பண்ணினேன்."

"இப்ப எப்படி இருக்காரு?"

மாடியில அவன் ரூம் கடைசியில இருக்கு. அதனால, அந்தப் பக்கம் யாரும் அதிகம் போக மாட்டாங்க. அவனே வெளியில வந்துதான் யார்கிட்டயாவது பேசணும். அது மாதிரி அடிக்கடி செய்ய முடியாது. ரூம்லேந்து ஒண்ணு ரெண்டு பேரைக் கண்ணாடி வழியாப் பாத்து, கையை ஆட்டிக் கூப்பிட்டுப் பாக்கறான். ஆனா, யாரும் உள்ள போறதில்ல. வேலை இருக்குன்னு சைகையாலேயே பதில் சொல்லிட்டுப் போய்க்கிட்டிருக்காங்க."

"பாவங்க அவரு!"

"இத்தனை நாளா, ஆஃபீஸ் இல்ல பாவமா இருந்தது? பழகிடும். அதோட, அவனுக்குக் கொஞ்சம் வேலையும் கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். சொல்றதுக்கில்ல. கொஞ்ச நாள்ள, ஆரம்பத்தில இருந்த மாதிரி கடுமையா வேலை செய்ய ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவான்" என்று சிரித்தார் சுந்தரமூர்த்தி.

குறள் 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது.

பொருள்:  
பலர் முன் பயனற்ற சொற்களைப் பேசுவது, நண்பர்களிடம் அறத்துக்கு மாறாக நடந்து கொள்வதை விடத் தீயதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


193. ஹலோ டாக்டர்

அந்த மருத்துவமனையில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பொதுவாக, அந்த டாக்டருக்குக் கைராசி உண்டு என்ற கருத்தினாலும், அவரிடம் மருத்துவக் கட்டணம் குறைவு என்பதாலும், அவருடைய மருத்துவமனையில் எப்போதுமே கூட்டம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். 

குழந்தைகளுடன் இருந்த பெண்கள், முதியவர்கள், உடல் நலக் குறைவால் சோர்வடைந்திருந்தவர்கள் ஆகியோர் தவிப்புடன் அமர்ந்து தங்கள் முறைக்குக் காத்திருந்தனர்.

சுந்தரத்தின் முறை வந்தபோது, அவர் உள்ளே போனார். அவர் டாக்டருக்கு ஓரளவு பரிச்சயமானவர். அவருக்கு இருந்த இலேசான காய்ச்சலுக்கு, டாக்டர் ஒரு நிமிடத்துக்குள் மருந்து எழுதிக் கொடுத்து விட்டார்.

ஆனால், சுந்தரம் உடனே வெளியே செல்லவில்லை. டாக்டரிடம் வேறு சில விஷயங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார். அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடங்கலினால் மருத்துவமனைக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிக் கேட்டார். தங்கள் மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருப்பதால் தங்களுக்குப் பிரச்னை இல்லை என்றார் டாக்டர்.

"நீங்க ஆஸ்பத்திரி நடத்தறீங்க. வருமானம் வருது. ஜெனரேட்டர் வாங்கி வச்சுக்கலாம். என்னைப் போல் குறைஞ்ச வருமானம் உள்ளவங்க என்ன செய்யறது?" என்றார் சுந்தரம்.

"கஷ்டம்தான்" என்றார் டாக்டர், கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி. 'ஏன், உங்க பிள்ளைங்கதான் நிறைய சம்பாதிக்கறாங்களே, நீங்க இன்வர்ட்டர் வாங்கி வச்சுக்கலாமே!' என்று அவர் கேட்க நினைத்தாலும், பேச்சை வளர்த்த விரும்பவில்லை.

பிறகு, சுந்தரம் வேறு சில பிரச்னைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்த டாக்டர், "சார்! வெளியில நிறைய பேர் வெயிட் பண்றாங்க. நாம அப்புறம் பேசலாமே" என்றார்.

"ஆமாம், ஆமாம்" என்று சுந்தரம் நாற்காலியிலிருந்து எழுந்திருக்க யத்தனித்தார். ஆனால் எழுந்திருக்கவில்லை. "நேத்து அம்மன் கோவில் வழியாப் போய்க்கிட்டிருந்தேன். திருவிழாவுக்கு நன்கொடை கொடுத்தவங்க பேரையெல்லாம் மைக்ல சொல்லிக்கிட்டிருந்தாங்க. நீங்க கூட ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கீங்க போலிருக்கே!" என்றார் சுந்தரம்.

"ஆமாம்" என்று டாக்டர் மீண்டும் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.

கோவில் திருவிழா ஏற்பாடுகளைப் பற்றிச் சில நிமிடங்கள் பேசி விட்டுத்தான் எழுந்தார் சுந்தரம். அறைக்கதவை அடையும் வரை பேசிக் கொண்டே சென்றவர், கதவைப் பாதி திறந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பேசினார்.

அடுத்தாற்போல் உள்ளே செல்ல வேண்டியவர் எழுந்து வந்து அறைக்கதவருகே நின்றார். சுந்தரம் அவருக்கு வழி விடாமல் மேலும், ஓரிரு நிமிடங்கள் டாக்டரிடம் பேசி விட்டுத்தான் வெளியே போனார்.

வரிசையில் அமர்ந்திருந்த ஒரு இளைஞன் சுந்தரத்தைப் பார்த்து, "சார்! ஒரு நிமிஷம்" என்று அழைத்தான். அவர் அருகில் வந்துதும் அவரிடம், "ஏன் சார், இவ்வளவு பேர் உடம்பு சரியில்லாதவங்க, வயசானவங்க, பொம்பளைங்க, குழந்தைங்கன்னு இங்க மணிக்கணக்கா உக்காந்துக்கிட்டிருக்கோம். உங்களுக்கு முன்னால போனவங்கள்ளாம் ரெண்டு மூணு நிமிஷத்துல வெளியில வந்துட்டாங்க. நீங்க பத்துப் பதினைஞ்சு நிமிஷம் உள்ள உக்காந்து பேசிட்டு வந்திருக்கீங்க. உங்க உடம்பு கூட நல்லாத்தான் இருக்கு. நீங்க டாக்டர்கிட்ட அரட்டை அடிக்கறதுக்காக, இத்தனை பேரையும் இப்படிக் கஷ்டப்படுத்தியிருக்கீங்களே, இது நியாயமா?" என்றான்.

சுந்தரம் அவனை முறைத்து விட்டு வெளியேறினார்.

அவர் காத்திருந்தவர்களைக் கடந்து வெளியே சென்றபோது, டாக்ட்ரைப் பார்க்கப் பொறுமையுடன், அசௌகரியத்தைப் பொறுத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்களின் கண்கள் அவரைக் கோபத்துடன் பார்த்தன. சில குழந்தைகள் தங்கள் அழுகையால் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன.

குறள் 193
நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை.

பொருள்:  
ஒருவன் பயனற்ற சொற்களைப் பேசுவது அவன் அறம் இல்லாதவன் என்பதைக் காட்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


194. ஊர் அறிந்த ரகசியம் 

வீட்டுக்குள் நுழையும்போதே, "அம்மா எங்கே?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் விநாயகம்.

"வெளியே போயிருக்காங்க" என்றாள்  சுமதி.

"பேத்திக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. இப்ப கூடவா வீட்டில இருக்க மாட்டாங்க?"

"ஏங்க, அவங்க என்ன கல்யாண வேலையா பாக்கப் போறாங்க? அவங்களுக்குப் பொழுது போக வேண்டாமா? யார்கிட்டயாவது போய்ப் பேசிட்டு வருவாங்க."

"இந்த வயசான காலத்துல, அம்மா வீடு வீடாப் போய் அரட்டை அடிச்சுட்டு வரது எனக்குப் பிடிக்கல."

"ஏங்க, வயசானவங்களுக்குப் பொழுது போக இப்படி ஏதாவது செய்யணும்? உங்களுக்கு என்ன இடைஞ்சல் இதில?"

"மாமியாரை விட்டுக் கொடுக்காம பேசற மருமக நீ ஒருத்தியாத்தான் இருப்பே!" என்றான் விநாயகம், சிரித்தபடியே.

அப்போது, பர்வதம் உள்ளே நுழைந்தாள்.

"எங்கம்மா போயிட்டு வரே?" என்றான் விநாயகம், சாதாரணமாக.

"வாசல்ல உக்காந்திருந்தேன். தெருக்கோடியில, ருக்மிணி அவ வீட்டுத் திண்ணையில உக்காந்திருந்தா. அவ வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நேரம் பேசிட்டு வந்தேன்" என்றாள் பர்வதம்.

அதற்குப் பிறகு விநாயகம் எதுவும் பேசவில்லை.

விநாயகம் சோர்வுடன் வீட்டுக்கு வந்தான்.

"ஏண்டா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூப்பிட்டாங்கன்னு போயிட்டு வந்தியே, என்ன விஷயம்? சீர் பத்தி ஏதாவது கேட்டாங்களா?" என்றாள் பர்வதம்.

"அது இருக்கட்டும். சுமதி அம்மாவைப் பத்தி யார்கிட்டயாவது சொன்னியா?" என்றான் விநாயகம்.

"சம்பந்தி அம்மாவைப் பத்தி நான் என்ன சொல்லப் போறேன்? அவங்க தங்கமானவங்களாச்சே! அப்படியே சொல்லணும்னாலும், உன்கிட்டத்தான் சொல்லப் போறேன்."

"இல்லேம்மா. நீ தினம் வீடு வீடாப் போய், பல பேர் கிட்ட பேசிட்டு வர. நீ என்ன பேசறேன்னு எனக்குத் தெரியாது."

"என்னடா நீ?  நான் ஏதோ பொழுது போக்கறதுக்காக, என்னை மாதிரி உள்ள வயசானவங்க கிட்ட போய், ஏதோ பழங்கதை பேசிட்டு வருவேன். இதுல உனக்கென்ன வந்தது?"

"ஆமாம்மா. பழங்கதை. சுமதியோட அம்மா நம்ம ஜாதி இல்ல. அந்தக் காலத்திலேயே, சுமதியோட அப்பா அவங்களைக் காதலிச்சுக் கல்யாணம் கட்டிக்கிட்டிருக்காரு. இதெல்லாம் பழங்கதைதானே?"

"ஆமாண்டா. அதுக்காகவே, அவங்க வீட்டில பெண் எடுக்கப் பல பேரு தயங்கினாங்க. நான் பழங்காலத்து மனுஷியா இருந்தாலும், அதைப்  பொருட்படுத்தாம, சுமதியை உனக்குக் கட்டி வச்சேன்."

"அதெல்லாம் சரிதாம்மா. உன்னோட இந்த மனசைப் பாத்து நானே ஆச்சரியப்பட்டிருக்கேன். ஆனா, சுமதி அம்மா வேற ஜாதிங்கறது நம்ம ஊர்ல யாருக்கும் தெரியாது. இப்ப நிறைய பேருக்குத் தெரிஞ்சிருக்கு. நீ யார்கிட்டயாவது சொன்னியா?"

"நான் ஏண்டா சொல்லப் போறேன்?" என்று ஆரம்பித்த பர்வதம், சட்டென்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.

"சொல்லும்மா. யார் கிட்ட சொன்ன?" என்றான் விநாயகம்.

"ரெண்டு நாள் முன்ன, பேச்சுவாக்கில, குஞ்சம்மா கிட்ட சொன்னேன். ஏதோ பேசும்போது, டக்னு என் வாயிலேந்து வந்துடுச்சு. அதனால என்ன இப்ப?"

"இப்ப என்னவா? குஞ்சம்மாவோட வாயைப் பத்தித்தான் ஊருக்கே தெரியுமே. அவங்க இதை பல பேர் கிட்ட சொல்லி, விஷயம் பக்கத்து ஊர்ல இருக்கற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரைக்கும் போயிடுச்சு."

"அடப்பாவமே!" என்றாள் பர்வதம். "அதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டாங்களா?  அவங்களுக்கு விளக்கம் சொல்லி சமாதானப்படுத்திட்டே இல்ல?"

"சமாதானப்படுத்தறதா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஜாதி விசுவாசம் அதிகம் உள்ளவங்க. அவங்களுக்கு ஜாதிதான் முக்கியமாம். நாம கலப்பு ஜாதின்னு சொல்லி கல்யாணத்தையே நிறுத்திட்டாங்க!" என்றான் விநாயகம், குரல் கம்மியபடி.

பர்வதம், சுமதி இருவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர். ஆனால் சுமதி, உடனே சமாளித்துக் கொண்டு, "விடுங்க. கல்யாணத்துக்கப்புறம் இது அவங்களுக்குத் தெரிஞ்சிருந்தா, அப்பவும் பிரச்னை பண்ணியிருப்பாங்க. நம்ம பொண்ணுக்கு வேற நல்ல இடம் கிடைக்கும்!" என்றாள்.

ஆனால், பர்வதத்துக்கு மனம் சமாதானமாகவில்லை. "தவளை தன் வாயாலேயே கெடற மாதிரி, வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம, நானே என் பேத்தி கல்யாணம் நின்னு போகக் காரணமா இருந்துட்டேனே!" என்று புலம்ப ஆரம்பித்தாள் அவள்.

குறள் 194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பொருள்:  
பயனற்ற, பண்பில்லாத சொற்களைப் பலரிடம் பேசுவது அறத்துக்குப் பொருந்தாமல் போய், நன்மைகளை அழிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


195. மனதை மாற்றிய பேச்சு 

"நம்ப சபாவில குருமூர்த்தி பேசப் போறாராமே!" என்றாள் கிரிஜா.

"அப்படியா?" என்றான் அவள் கணவன் பரசுராம். "டிவியில கதை பண்ணிக்கிட்டிருந்தவரு, இப்ப மேடையில கதை பண்ணப் போறாரா?"

"உங்களுக்கு அவரைப் பிடிக்காது! டி வியில் அவர் நல்லாதானே பேசறாரு?"

"குருமூர்த்தி ஒரு சைக்கியாட்ரிஸ்ட். அவர் எந்த அளவுக்குத் திறமையானவர், எத்தனை பேரை குணமாக்கியிருக்கார்னு எனக்குத் தெரியாது. ஆனா, ஒரு டி வி சேனல்ல, ஒரு நிகழ்ச்சியில, ஃபோன்ல பேசறவங்க கேள்விக்கு அவர் பதில் சொல்றாரு. நான் பார்த்த வரையிலே, அவர் உருப்படியா எதுவும் சொல்றதாத் தெரியல. 

"உண்மையில, ஒரு சைக்கியாட்ரிஸ்ட், பிரச்னை உள்ளவங்களை நிறையப் பேசச் சொல்லி, பிரச்னையை ஆழமாப் புரிஞ்சுக்கிட்டுதான், தீர்வு கொடுக்க முடியும். ஆனா, குருமூர்த்தி பொதுவான ஆலோசனைகள் கூடக் கொடுக்கறதில்ல. நகைச்சுவையா ஏதோ சொல்றாரு. 

"மத்தவங்க வெளிப்படையாப் பேசத் தயங்கற பாலியல் தொடர்பான விஷயங்களைக் கொஞ்சம் பச்சையாவே பேசறாரு. இதனாலேயே, அவருக்குக் கொஞ்சம் பாப்புலாரிட்டி வந்திருக்கு!"  

"நீங்க நிகழ்ச்சிக்கு வரப் போறீங்களா, இல்லையா?"

"இல்ல. என்னால அர்த்தமில்லாத பேச்சை, ரெண்டு மணி நேரம் கேக்க முடியாது. சரி, அவர் எதைப் பத்திப் பேசப் போறாராம்?" என்றான் பரசுராம்.

"மனித இயல்புகள்."

"பாத்தியா? மழுப்பலான தலைப்பு. என்ன வேணும்னா பேசிட்டுத் தப்பிச்சுக்கலாம். ஒரு மனோதத்துவ நிபுணர், ஒரு நல்ல தலைப்பில, உருப்படியா சில விஷயங்களைச் சொல்லலாமே!"

"அவர் பேசறதுக்கு முன்னாடியே, அவர் பேச்சு உருப்படியா இருக்காதுன்னு முடிவு பண்ணிட்டீங்களே! நான் போகப் போறேன்" என்றாள் கிரிஜா. 

"போயிட்டு வா. நல்ல ஜோக்கா சொன்னார்னா, எனக்கு சொல்லு!"

நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கிரிஜா கேட்டாள்: "என்னங்க, குருமூர்த்தி பேச்சு எப்படி இருந்ததுன்னு நீங்க கேக்கவேயில்லையே?"

"நீ என்ன சொல்லுவேன்னு தெரியும். அதனாலதான் கேக்கல. சரி, இப்ப கேக்கறேன், சொல்லு. பேச்சு, எப்படி இருந்தது?"

"பரவாயில்லை" என்றாள் கிரிஜா.

"பரவாயில்லையா? பிரமாதமா இருந்ததுன்னு சொல்லுவேன்னு நெனச்சேன். ஏன் ஜோக்கெல்லாம் சொல்லலியா?"

"சொன்னாரு. ஜோக் மட்டும்தான் சொன்னாரு!"

"என்ன, நீயே இப்படிச் சொல்றே?"

"நீங்க சொன்னது சரின்னுதான் தோணுது. ரெண்டு மணி நேரப் பேச்சிலே உருப்படியான விஷயம் எதுவும் இல்ல. சும்மா ஏதோ சொல்லிப் பொழுது போக்கிட்டிருந்தாரு."

"பரவாயில்ல. அவரோட ரசிகையான உனக்கே இப்படித் தோணியிருக்கே! ஆனா, ஜோக் சொல்லிப் பொழுதைக் கழிச்சா, நிறைய பேர் அதை நல்ல பேச்சுன்னுதான் நினைப்பாங்க."

"இல்ல. எல்லோருக்குமே ஏமாற்றமாத்தான் இருந்ததுன்னு நினைக்கிறேன். வெளியில வரச்சே, நிறைய பேரு அது மாதிரிதான் பேசிக்கிட்டாங்க. 'இது மாதிரி பொதுவா பேசறதுன்னா, நான் கூடப் பேசுவேனே, ஒரு நிபுணர் பேசற மாதிரியே இல்லையே'ன்னு ஒத்தர் சொன்னாரு. 'டிவியில ஏதோ சொல்லிச் சமாளிச்சுடறாரு. இங்க தலைப்பு பத்திப் பேசவே இல்லியே, மனித இயல்புகளைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல மனுஷன்'ன்னு ரெண்டு பேரு பேசிக்கிட்டுப் போனாங்க" என்றாள் கிரிஜா.  

"உண்மையில, நேத்திக்கே நான் சபா செயலாளர்கிட்ட இது பத்திக் கேட்டேன். நிறைய பேர் அவர்கிட்ட ஏமாற்றத்தைத் தெரிவிச்சிருக்காங்க. குருமூர்த்தியைக் கூப்பிட்டதே தப்புன்னு அவரு எங்கிட்ட வருத்தப்பட்டு சொன்னாரு. சரி, நீ என்ன சொல்றேன்னு பாக்கலாம்னுதான் பேசாம இருந்தேன்."

"நல்லா இருந்திருந்தா, நானே சொல்லியிருப்பேன். எனக்கே ஏமாத்தமா இருந்ததாலதான், நீங்க கேட்டா சொல்லிக்கலாம்னுட்டுப் பேசாம இருந்தேன்."

"எனக்கு ஆரம்பத்திலேந்தே அவர் மேல நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் கூட, ஒத்தர் விஷயம் இல்லாமப் பேசினா, அவருக்கு இருக்கிற நல்ல பேரு போயி, மதிப்பும் குறைஞ்சுடும்னு, இப்பதான் கண்கூடாப் பாக்கறேன்" என்றான் பரசுராம்.       

குறள் 195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின்.

பொருள்:  
பண்புடையவர் பயனற்ற சொற்களைப் பேசினால், அவருடைய பெருமை, புகழ் இரண்டும் அவரை விட்டு நீங்கி விடும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


196. வயலும் வாழ்வும்

களத்து மேட்டில் வையாபுரி நின்று கொண்டிருந்தபோது, அங்கே சிவா வந்தான்.

"என்னங்க, அறுவடை நடக்குதா?" என்றான் சிவா.

"ஆமாம். உனக்கென்னப்பா? இதையெல்லாம் பத்தி உனக்குக் கவலை இல்லை. நெல்லு நேரா வீட்டுக்கு வந்துடும்!" என்றார் வையாபுரி.

"நான் குத்தகைக்கு விட்டிருக்கேன்னு குத்திக் காட்டறீங்க. குத்தகைக்காரங்க எடுத்துக்கிட்டது போக மீதிதானே வரும்?"

"ஆமாம்ப்பா. அவங்கதானே வேலை செய்யறாங்க? நீ வீட்டில உக்காந்துக்கிட்டு வர நெல்லை வாங்கிப் போட்டுக்கறவன்தானே?"

"என்னங்க, கம்யூனிஸ்டு ஆளுங்க மாதிரி பேசறீங்க?"

"நான் கம்யூனிஸ்டு இல்லப்பா. கம்யூனிஸ்ட்கள் என்னை நிலப்பிரபும்பாங்க. ஆனா பாரு, இப்படி வெய்யிலில் வந்து நின்னுக்கிட்டிருக்கேன்."

"எங்கப்பாவும் இப்படி இருந்தவர்தானே!"

"ஆமாம். அவரு பாவம், வயல் வயல்ன்னு எப்பவும் வயக்காட்டிலேயே நின்னுக்கிட்டிருப்பாரு. அவரு கஷ்டப்பட்டு வேலை செஞ்சு, உன்னைப் படிக்க வச்சாரு. ஆனா, நீ வேலைக்கும் போகல. வயலையும் பாத்துக்கல. பாதி நிலத்தை வித்துப் பணத்தை பாங்க்கில போட்டுட்டு, மீதி நிலத்தைக் குத்தகைக்கு விட்டுட்டு, ஹாய்யா வீட்டில உக்காந்திருக்க."

"நான் ஒவ்வொரு தடவை உங்களைப் பார்க்கும்போதும், இப்படியே சொல்றீங்க. பாருங்க, நானும் உங்களை மாதிரி வயக்காட்டுக்கு வந்து வெய்யில்ல நிக்கறேன்!" என்றான் சிவா.

"என்னப்பா, தமாஷ் பண்றியா? உங்கப்பா இப்படித்தான் வேடிக்கையாப் பேசுவாரு. அவர்கிட்ட இருந்த இந்த குணம் மட்டும் உங்கிட்ட வந்திருக்கு! ஆமாம், வீட்டில குழந்தைங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கற வேலையாவது செய்யறியா?" என்றார் வையாபுரி.

"அதையெல்லாம் என் பொண்டாட்டி பாத்துப்பா. அதுக்குத்தானே, படிச்ச பொண்ணாப் பாத்து கட்டிக்கிட்டேன்!"

"கெட்டிக்காரன்தாம்ப்பா நீ! அப்ப, வீட்டில என்னதான் செய்யறே?"

"நான் வீட்டில எங்கேங்க இருக்கேன்? இங்க உங்களோட வயல்லதானே நிக்கறேன்!"

"பெரிய ஆளுதாம்ப்பா நீ! உன்னோட பேசி என்னால ஜெயிக்க முடியாது" என்ற வையாபுரி, வேறு புறம் திரும்பி, "யாருப்பா அங்க பேசிக்கிட்டு நிக்கறது? இன்னிக்குள்ள வயலை அறுத்து முடிக்கணும்" என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.

சிவா அங்கிருந்து நடந்தான்.

சில நிமிடங்கள் கழித்துத் திரும்பவும் பழைய இடத்துக்கு வந்த வையாபுரி, தன் அருகிலிருந்த ஆளிடம், "எங்கய்யா அவன், போயிட்டானா?" என்றார்.

"அவரு அப்பவே போயிட்டாருங்க" என்றான் அந்த ஆள்.

"இங்கேந்து வேற எங்கியாவது போவான். அங்க நின்னு கொஞ்ச நேரம் வெட்டிப் பேச்சுப் பேசுவான். அப்புறம் யார் வீட்டுக்காவது போய் உக்காந்து பேசிட்டு வருவான். வெட்டிப் பேச்சுப் பேசி, மத்தவங்க வேலையைக் கெடுக்கறதுதான் இவன் தொழில்" என்றார் வையாபுரி, எரிச்சலுடன்.

"இவர் ஏங்க இப்படி இருக்காரு?" என்றான் அவருடைய ஆள்.

"ம். என்னத்தைச் சொல்றது? வயல்ல எல்லாப் பயிரையும் அறுக்கறோம். எல்லாமா கதிரா இருக்கு? சில பயிர்கள் பதராப் போயிடுது இல்ல? அது மாதிரி, மனுஷங்களிலேயும் சில பேரு இருக்காங்க. என்ன செய்ய?" என்றார் வையாபுரி.

குறள் 196
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பொருள்:  
பயனற்ற சொற்களைப் பலமுறை சொல்பவனை மனிதன் என்று சொல்லக் கூடாது. மனிதர்களுக்குள் பதர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



197. கற்றது தமிழ்!

புதிதாகப் பள்ளியில் சேர்ந்த தமிழாசிரியர் கந்தனுக்கு மாணவர்களிடையே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று தலைமையாசிரியர் சுப்பிரமணியன் எதிர்பார்க்கவில்லை.

புதிதாகப் படித்து விட்டு வந்திருப்பவர் என்பதால் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுக்கும் வகையில் அவருக்கு வேலைப் பணி ஒதுக்கி இருந்தாலும், சோதனைமுறையில் ஆறாம் வகுப்பு 'பி' பிரிவுக்கு மட்டும் அவரை வகுப்பெடுக்கச் சொன்னார்தலைமையாசிரியர். .

ஆறாம் வகுப்பு மாணவர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு. அவர் வகுப்பு கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதாக 'பி' பிரிவு மாணவர்கள் வெளியே சொல்ல, 'ஏ' பிரிவில் இருந்த சில மாணவர்கள் 'பி' பிரிவுக்கு வர விரும்பித் தங்கள் பெற்றோர் மூலம் தலைமை ஆசிரியரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், சுப்பிரமணியன் இவற்றை நிராகரித்து விட்டார். 'ஏ' பிரிவு ஆசிரியர் சாமிநாதன் அனுபவமுள்ள நல்ல ஆசிரியர் என்பதைப் பெற்றோர்களுக்கு அவர் எடுத்துச் சொன்னார்.

ஒருமுறை, சுப்பிரமணியன் கந்தனின் வகுப்புக்கு வெளியே நின்று கவனித்தபோது, மாணவர்களும் ஆசிரியரும் சிரித்து உரையாடிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. 

கந்தன் வகுப்பு எடுக்கிறாரா, அல்லது மாணவர்களிடம் அரட்டை அடிக்கிறாரா என்ற சந்தேகம் சுப்பிரமணியன் மனதில் எழுந்தது. ஆயினும், மாணவர்கள் திருப்தியாக இருப்பதுதான் முக்கியம் என்று நினைத்துத் தனது சந்தேகத்தைப் புறம் தள்ளினார் அவர்.

அந்தப் பள்ளியின் வழக்கப்படி, ஆறாம் வகுப்பு அதற்கு மேலும் உள்ள வகுப்புகளுக்கு அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாள்கள் வேறொரு பள்ளி ஆசிரியரால் அமைக்கப்பட்டு, அவராலேயே திருத்தப்படும் .

அந்த ஆண்டுக்கான அரை ஆண்டுத் தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வந்தன. மதிப்பெண்கள் பட்டியலைப் பார்த்த சுப்பிரமணியனுக்கு அதிர்ச்சி.

ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில், பெரும்பாலான மாணவர்கள் தமிழில் மிகக் குறைந்த மதிப்பெண்களே வாங்கி இருந்தனர். நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களில் சீலர் கூட ஃபெயில் மார்க் வாங்கியிருந்தனர்.

சுப்பிரமணியன் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்.

"சார், பரீட்சையில் கேட்ட கேள்வி எல்லாம் எங்களுக்குப் புதுசா இருந்தது. சார் வகுப்பில அந்தப் பாடமெல்லாம் நடத்தவே இல்லை" என்று  பல மாணவர்களும் சொன்னார்கள்.

"பாடம் நடத்தலையா? அவர் ரொம்ப நல்லா நடத்தறார்னு சொன்னீங்களே."

"சார்! அவர் பொதுவா ஏதாவது சொல்லுவாரு. அது நல்லா இருக்கும்னு எல்லாரும் கேட்டுக்கிட்டிருப்பாங்க. ஆனா, அவர் பாடம் கொஞ்சம்தான் நடத்தினார். மீதியையெல்லாம் எங்களையே படிச்சுக்கச் சொல்லிட்டாரு" என்றான் ஒரு மாணவன் சற்று தைரியமாக. இதுவரை எல்லாத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி வந்த தான், இந்தத் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கும்படி ஆகி விட்டதே என்ற வருத்தம் அவனுக்கு.

சுப்பிரமணியன் கந்தனைக் கூப்பிட்டுப் பேசினார். "ஏன் கந்தன், நீங்க புத்தகத்தில் இருக்கற பாடங்கள் எல்லாத்தையும் நடத்தலியா?" என்றார்.

கந்தன் தயங்கியபடியே, "இல்லை சார். சில பாடங்கள் நடத்தினேன். சிலவற்றை அவங்களையே படிச்சுக்கச் சொல்லிச் சொன்னேன். அப்பதான் சார் அவங்களுக்கு நல்லா மனசில பதியும்" என்றார்.

"கந்தன், நீங்க வகுப்பு எடுக்கறது ஆறாம் வகுப்புக்கு. ஏதோ பி எச் டி. மாணவர்களுக்கு கைடா இருக்கிற மாதிரி பேசறீங்க! வகுப்பில என்னதான் செய்யறீங்க?"

"இல்ல சார். பையன்களுக்குத் தமிழ் ஆர்வம் வரணும்கறதுக்காகப் பொதுவா பல விஷயங்களை சொல்லுவேன்."

"பையன்கள்கிட்ட பேசிட்டேன். நீங்க உருப்படியான விஷயங்கள் எதுவும் சொன்ன மாதிரி தெரியல. சும்மா பையன்களோட அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க. அவங்களும் ஜாலியா இருந்திருக்காங்க. இப்ப பரீட்சை எழுதினப்பறம்தான், நீங்க பாடங்களை சரியா சொல்லித் தரலைங்கறது அவங்களுக்குப் புரிஞ்சிருக்கு. நிறைய பேர் எங்கிட்ட வந்து 'என்னை 'ஏ' செக்‌ஷனுக்கு மாத்திடுங்க'ன்னு சொல்றாங்க."

"சார், சாமிநாதன் சார்கிட்ட எவ்வளவோ தப்பு இருக்கு. அவர் குறுக்கு வழியெல்லாம் சொல்லித் தராரு. உதாரணமா, திருக்குறளுக்குப் பொருள் எழுத வேண்டிய கேள்விக்கு பதில் தெரியாட்டா, கேள்வித்தாளைப் பார்த்து திருக்குறளை அப்படியே எழுதிடுங்க, அதுக்கு ரெண்டு மார்க் கிடைக்கும்'னு சொல்லியிருக்காரு."

"அது தப்பா இருக்கலாம். ஆனா, அவர் பாடம் நடத்தறாரு. உங்களை மாதிரி அரட்டை அடிக்கல. வகுப்புல உக்காந்து மாணவர்கள்கிட்ட வெட்டி அரட்டை அடிக்கிறது பெரிய குத்தம். உங்களை நான் வேலையை விட்டே தூக்கணும். ஆனா, உங்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்கறேன். இனிமேயாவது ஒழுங்காப் பாடம் நடத்தி, ஆண்டுத் தேர்வில. பையங்க நல்ல மார்க் வாங்கும்படி செய்யுங்க. போங்க!" என்றார் சுப்பிரமணியன்.

கந்தன் தலை குனிந்தபடி வெளியேறினார்.

குறள் 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று.

பொருள்:  
சான்றோர்கள் அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனற்ற விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


198. கடைசி வகுப்பு 

குருகுலக் கல்வி முடிந்து, அன்று கடைசி வகுப்பு.

சில ஆண்டுகள் குருவின் இல்லத்தில் தங்கிப் படித்துப் பல பாடங்களைக் கற்று, குரு வைத்த சோதனையிலும் தேர்ச்சி பெற்று, சீடர்கள் வீடு திரும்பத் தயாராயிருந்தனர்.

அவர்கள் கிளம்பிச் செல்லுமுன், கடைசியாக ஒரு வகுப்பு எடுக்க குரு விரும்பினார்.

கடைசி வகுப்பில் குரு சிறப்பாக எதோ சொல்வார் என்ற எதிர்பார்ப்புடன் சீடர்கள் காத்திருந்தனர்.

"நான் இன்று புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை!" என்று துவங்கினார் குரு.

தொடர்ந்து, "நீங்கள் ஒவ்வொருவரும், நீங்கள் பார்த்த ஏதாவது ஒரு காட்சியை விவரியுங்கள். ஒவ்வொருவரும் ஐந்து நிமிடங்களுக்காவது பேச வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளையும் விவரிக்கலாம்" என்றார்.

முதலில், அனைவருமே சற்றுத் தயங்கினர். பின், ஒவ்வொருவராக ஒரு காட்சியை விவரித்தனர்.

அனைவரும் சொல்லி முடித்ததும், குரு தான் பார்த்த ஒரு காட்சியை விவரித்தார்.

"ஒரு தடவை மழை பெய்து கொண்டிருந்தது. சிறிய அளவு மழைதான். நான் ஆசிரமத்தில் அமர்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு குருவி மழையில் நனைந்தபடியே, ஒரு தகரக் குவளையை மழையில் வைத்து விட்டு வந்தது. சற்று நேரம் கழித்து, அதுவும் இன்னொரு குருவியும் சேர்ந்து, மிகவும் சிரமத்துடன், மழை நீரால் நிரம்பிய குவளையைத் தங்கள் அலகுகளால் பிடித்துத் தூக்கிச் சென்று, மரத்தடியில் சற்று மறைவான ஓரிடத்தில் வைத்தன. ஒரு நாய் சாலையோரத்தில் நின்றபடி தன் கால்களால் ஒரு குறுகிய வாய்க்கால் போல் பள்ளம் தோண்டியது. அந்தப் பள்ளம் வழியே மழைத் தண்ணீர் சாலையிலிருந்து வழிந்து சற்றுத் தள்ளியிருந்த செடிகளுக்குப் பாய்ந்தது. நாய் தெரிந்து செய்ததா தெரியாமல் செய்ததா என்று எனக்குத் தெரியாது."

இது போல் இன்னும் சில சம்பவங்களை விவரித்த பின், "உங்களுக்கு ஒரு சிறிய பரிசு கொடுக்கிறேன்" என்று சொல்லி, ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய பனை ஓலைக்கட்டும், ஒரு எழுத்தாணியும் கொடுத்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார் குரு.

குருகுல வாசம் முடிந்து வீட்டுக்கு வந்த சிரவணனிடம், அவன் தந்தை அவனுடைய குருகுல அனுபவம் பற்றி விசாரித்தார்.

"நிறையக் கற்றுக் கொண்டேன். ஆனால், கடைசி வகுப்பு என்று ஒரு வகுப்பு வைத்து, பயனில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார் குரு. அது ஏனென்று எனக்குப் புரியவில்லை" என்றான் சிரவணன்.

"உன் குருவைப் போன்ற ஒரு ஞானி பயனற்ற விஷயங்களைப் பேசவும் மாட்டார், செய்யவும் மாட்டார். அவர் சொன்னவற்றுக்கு ஏதாவது ஒரு பொருள் இருக்கும். யோசித்துப் பார்த்தால் உனக்கே விளங்கும். நீங்கள் யோசிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கும். நீயே யோசித்துப் பார்த்து என்னிடம் சொல்" என்றார் அவன் தந்தை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிரவணன் தன் தந்தையிடம் சொன்னான். "அப்பா! நீங்கள் சொன்னபடி யோசித்துப் பார்த்ததில், எனக்குச் சில விஷயங்கள் தோன்றின. அவை சரியா என்று சொல்லுங்கள்."

"சரி, சொல்லு."

"இத்தனை ஆண்டுகளாக, நாங்கள் குருகுலத்தில், குரு சொல்வதைக் கேட்டுக் கொண்டு மட்டும்தான் இருந்தோம். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதைத் தவிர, நாங்கள் எதுவும் பேசியதில்லை. பேசுவதற்கு எங்களை ஊக்குவிக்கத்தான், எங்களை ஏதாவது ஒரு காட்சியை விவரிக்கச் சொன்னார் என்று நினைக்கிறேன். ஐந்து நிமிடம் பேசுவது சவாலாக இருந்தது. பேசி முடித்தும் திருப்தியாகவும் இருந்தது."

"சரி. அப்புறம்?"

"எங்களைப் பேசச் சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், குரு அவர் கண்ட சில காட்சிகளையும் விவரித்தார். அவை பொருள் பொதிந்தவை என்று நினைக்கிறேன். மழை பெய்யும்போது தண்ணீர் பெருகுகிறது. ஆனால் மழை நின்றதும், நீர்வரத்து நின்று விடும். மழை நீரை ஒரு குருவி கஷ்டப்பட்டு சேமித்து வைக்கிறது. அது போல், நாங்கள் கற்ற கல்வி மறக்காமல் இருக்க, நாங்கள் கற்றவற்றை மனதில் இருத்தி வைக்க வேண்டும். மறக்காமல் இருக்க, சில விஷயங்களைக் குறித்தும் வைக்க வேண்டும். அதற்காகத்தான் புதிய ஓலைச் சுவடிகளும் எழுத்தாணிகளும் கொடுத்தார் என்று நினைக்கிறேன். நாய் பள்ளம் தோண்டி மழைத் தண்ணீரைச் செடிகளுக்குப் பாயச் செய்தது போல், நாங்களும் கற்ற  கல்வி பயன் தரும் வகையில் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது போல், அவர் கூறிய இன்னும் சில நிகழ்ச்சிகளுக்கும் உட்பொருள் இருக்கும். அவை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் சிரவணன்.

"நன்று. உன் குருவின் எதிர்பார்ப்புகளை நீ பெருமளவு நிறைவேற்றி விட்டாய் என்று நினைக்கிறேன். உன் குரு உங்களுக்குப் புதிய ஓலைச் சுவடிகளைக் கொடுத்ததற்கு இன்னொரு பொருள் கூட இருக்கலாம். 'கல்வி இதோடு முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள், இனியும் நீங்கள் பல விஷயங்களைக் கற்க வேண்டியிருக்கும். அவற்றைக்  குறித்துக் கொள்ளத்தான் இந்த ஓலைச்சுவடிகள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்" என்றார் சிரவணனின் தந்தை.

"பயனில்லாமல் பேசிக் கழித்தது என்று நான் நினைத்த வகுப்பில் எத்தனை விஷயங்களை எங்களுக்குக் கற்றுக் கொடுக்க முயன்றிருக்கிறார் எங்கள் குரு!" என்றான் சிரவணன், வியப்புடன்.

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள்:  
நற்பயன்களை ஆராயும் அறிவு படைத்தவர்கள் பெரும் பயனை விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



199. பேச்சுக் கச்சேரி 

வெளியூரில் நடந்த அந்தத் திருமணத்துக்கு, எங்கள் குடும்பத்திலிருந்து நான் மட்டும்தான் போயிருந்தேன். திருமண மண்டபத்தில் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள்.

எனக்கும், இன்னும் நான்கு இளைஞர்களுக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டது. நாங்கள் தனியே வந்தவர்கள் என்பதால் இந்த ஏற்பாடு.

எங்களுக்குள் இதற்கு முன் பரிச்சயம் இல்லை. பெண் வீட்டுக்காரர்கள் எனக்கு தூரத்து சொந்தம்தான். ஆயினும், எங்கள் குடும்பத்திலிருந்து ஒருவராவது திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பி, என்னை அனுப்பி வைத்தார் என் அப்பா.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களில், என் மாமா மட்டும்தான் எனக்கு நெருக்கமானவர். அவர் தன் மனைவியுடன் வேறொரு அறையில் தங்கியிருந்தார்.

ஒரே அறை ஒதுக்கப்பட்ட நாங்கள் ஐவரும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். சற்று நேரத்தில் நெருக்கம் ஏற்பட்டுப் பழக ஆரம்பித்தோம்.

மறுநாள் காலையில்தான் திருமணம். இரவு உணவு முடிந்து அறைக்கு வந்ததும், நாங்கள் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம். அப்போதுதான் அறிமுகம் ஆகியிருந்தாலும், சினிமா நடிகைகள் பற்றிய கிளுகிளுப்புச் செய்திகள், அரசியல் அக்கப்போர், சமூக வலைத்தளப் பரபரப்புகள் என்று பேச ஆரம்பித்ததும், நெருங்கிய நண்பர்கள் போல் பேசிக் கொள்ள ஆரம்பித்து விட்டோம்.

எங்கள் ஐவரில், முகுந்தன் என்பவன் மட்டும் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சில நிமிடங்கள் கழித்து, "எக்ஸ்க்யூஸ் மீ! நான் கொஞ்சம் வெளியில போய் உக்காந்துட்டு வரேன். இங்க ஒரே புழுக்கமா இருக்கு" என்று சொல்லி விட்டு எழுந்து போனான். போகும்போது, கையில் செல்ஃபோனைத் தவிர, ஒரு நோட்டு போன்ற ஓரிரு பொருட்களையும் எடுத்துச் சென்றான்.

நாங்கள் சற்று நேரம் பேசி விட்டுத் தூங்கி விட்டோம். முகுந்தன் எப்போது உள்ளே வந்தான் என்று.தெரியவில்லை.

மறுநாள் காலை முகூர்த்தம் முடிந்த பிறகு, எங்கள் கச்சேரி மீண்டும் துவங்கியது. முகுந்தன் எங்களைப் பார்த்துச் சிரித்ததோடு சரி. பிறகு ஒரு மூலையில் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.

என்னைப் பார்க்க என் அறைக்கு என் மாமா வந்தார். என்னிடம் சற்று நேரம் பேசி விட்டு, "ஏன் அவர்  மட்டும் தனியே உட்கார்ந்திருக்காரு?" என்றார் முகுந்தனைப் பார்த்து.

"தெரியல. அவருக்கு நாங்க பேசற விஷயம் பிடிக்கல போலருக்கு" என்றேன் நான்.

மாமா எழுந்து சென்று, முகுந்தன் அருகில் அமர்ந்து, அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

மாலை ரிசப்ஷனுக்கு ஒரு கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். பாடகருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்று தகவல் வந்தது.

ரிசப்ஷன் துவங்கியதும், மாமா மேடைக்குச் சென்று, "பாட்டுக் கச்சேரி இல்லையென்பதால், பேச்சுக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது, 'திருமண வாழ்க்கையின் அற்புதங்கள்' என்ற தலைப்பில், திரு முகுந்தன் பேசுவார்" என்று அறிவித்தார். சில வினாடிகள் மௌனத்துக்குப் பின், அவர், "முகுந்தன் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது!" என்றதும், அவையில் இலேசான சிரிப்பொலி எழுந்தது.

பேசப் போவது என் அறையில் இருக்கும் முகுந்தனா, அல்லது வேறு யாராவதா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே, என் அறையில் தங்கியிருக்கும் முகுந்தன் மேடையேறினான்.

அடுத்த ஒரு மணி நேரம், அனைவரையும் தன் பேச்சினால் கட்டிப் போட்டு விட்டான் முகுந்தன். 'திருமண வாழ்க்கை' என்ற ஒரு சாதாரண தலைப்பில், இவ்வளவு சுவாரசியமாகப் பேச முடியுமா என்று வியப்பாக இருந்தது. மனோதத்துவ உண்மைகள், உண்மைச் சம்பவங்கள், நகைச்சுவை என்று எல்லாம் கலந்து அவன் படைத்த பல்சுவை விருந்தை ரசிக்காதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.

அவன் பேசி முடித்ததும், நீண்ட கரவொலி எழுந்தது. நான் மேடைக்குச் சென்று, அவனைக் கைகுலுக்கிப் பாராட்டினேன்.

என் மாமா தனிமையில் இருந்தபோது, அவரிடம் கேட்டேன். "எப்படி மாமா இவன்கிட்ட இப்படி ஒரு திறமை இருக்கிறதைக் கண்டு பிடிச்சீங்க?"

"அவன் தனியா உக்காந்துக்கிட்டிருக்கறப்ப, அவன்கிட்ட போய்ப் பேசினேன். 'நீ ஏன் அவங்களோட உக்காந்து பேசாம தனியா உக்காந்துக்கிட்டிருக்கே'ன்னு கேட்டேன். அவன் பதில் சொல்லாம சிரிச்சான். அவன் என்ன செய்யறான்னு பாத்தேன். ஒரு நோட்டில நிறைய விஷயங்கள் குறிச்சு வச்சிருந்தான். இலக்கியம், ஆன்மிகம், சமூக விஷயங்கள்னு பல விஷயங்களைப் பத்தி. இதையெல்லாம் எங்கேந்து சேகரிச்சேன்னு கேட்டேன். அவன் சொன்னான். 'பொதுவா எனக்கு சும்மா அரட்டை அடிக்கறதெல்லாம் பிடிக்காது. நான் படிச்சதில, கேட்டதில நல்ல விஷயங்களை இந்த நோட்டில குறிச்சு வைப்பேன். எனக்குத் தோணற விஷயங்களையும் குறிச்சு வைப்பேன். வெளியில எங்கேயாவது இருக்கறப்ப, எனக்கு ஏதாவது தோணினா, என் மொபைல்ல ரிக்கார்டு பண்ணி, வீட்டுக்குப் போனதும், அதை நோட்டில எழுதி வைப்பேன்'னு சொன்னான்.

"பாடகர் வர மாட்டார்னு மத்தியானமே தெரிஞ்சு போச்சு. 'நீ பேசறியா?'ன்னு முகுந்தன்கிட்ட கேட்டேன். முதல்ல தயங்கினான். அப்புறம் ஒத்துக்கிட்டான். நான் நெனச்ச மாதிரியே, அற்புதமாப் பேசிட்டான். நீ என்ன நெனைக்கறே?" என்றார் மாமா.

"முகுந்தனும் கிரேட், நீங்களும் கிரேட்!" என்றேன் நான்.

குறள் 199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் 
மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.

பொருள்:  
மயக்கம் இல்லாத மாசற்ற அறிவுடையவர்கள், பயனற்ற சொற்களைக் கூற மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


200. நேரம் நல்ல நேரம் 

பட்ஜெட் தயாரிப்பு அந்த நிறுவனத்தில் ஒரு வருடாந்தரச் சடங்கு. பிப்ரவரி மாத இறுதியில், டிபார்ட்மென்ட்டல் மானேஜர்கள் எல்லாரும் கூடிப் பேசி, அடுத்த ஆண்டு இலக்குகளையும், வரவு செலவுகளையும் முடிவு செய்வார்கள்.

வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்காக, மூன்று நாட்கள் நேரம் ஒதுக்கப்பட்டது.

அலுவலகத்தின் மாநாட்டு அறையில், ஜெனரல் மானேஜர் தலைமையில், எல்லா மானேஜர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்புகள் எடுத்துக் கொள்வதற்காக, ஜெனரல் மானேஜர் பிரபாகரின் உதவியாளர் ஷாலினியும் அங்கே இருந்தாள். அவள் அந்த நிறுவனத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.

"இங்கே எல்லாரும் ஆண்களாக இருக்கோம். ஒரு பெண்ணும் இருக்கறது கொஞ்சம் பாலன்ஸ்டா இருக்கு" என்றார் ஒருவர். இதை சிலர் ரசித்துச் சிரித்தனர். ஷாலினி மௌனமாக இருந்தாள்.

அதற்குப் பிறகும், சிறிது நேரம், எல்லோரும் நாட்டில் நடக்கும் போராட்டங்கள், வரவிருக்கும் பொதுத் தேர்தல், கமலின் அரசியல் பிரவேசம், ரஜினியின் அடுத்த படம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். "ஜென்ட்டில்மென், நம்ம வேலையைப் பாக்கலாம்" என்று பிரபாகர் சொன்ன பிறகுதான் பட்ஜெட் பற்றி அலசத் தொடங்கினர்.

மூன்று நாள் பட்ஜெட் தயாரிப்பு முடிந்ததும், நான்காம் நாள் பட்ஜெட் விவாதங்கள் பற்றிய அறிக்கையை கம்ப்யூட்டரில் தயார் செய்து, பிரபாகருக்கு அனுப்பி வைத்தாள் ஷாலினி.

சற்று நேரம் கழித்து, பிரபாகர் ஷாலினியை அழைத்தான். அவள் தயாரித்திருந்த அறிக்கையில் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, "இந்த விஷயத்தில வேற மாதிரி முடிவெடுத்தோம் போலருக்கே" என்றான்.

"இல்ல சார். நான் எல்லா டிஸ்கஷனையும் விவரமா நோட் பண்ணியிருக்கேன்" என்றாள் ஷாலினி.

"நோட்ஸைக் காட்டு, பாக்கலாம்" என்றான் பிரபாகர்.

ஷாலினி தன் குறிப்புப் புத்தகத்தை எடுத்து வந்து, குறிப்பிட்ட விஷயம் பற்றிய விவாதங்களைக் காட்டினாள்.

அதைப் படித்து விட்டு, "ஓகே. நீட் ஜாப்" என்ற பிரபாகர், "ஒரு நிமிஷம். அந்த நோட்டைக் காட்டு... ஆமாம், இதில என்னவோ டைம் எல்லாம் குறிச்சு வச்சிருக்கியே, அது என்ன?" என்றான்.

"அது ஒண்ணும் இல்ல சார். என்னோட ரெஃபரன்சுக்கு" என்றாள் ஷாலினி.

"இல்லியே. உனக்கு எதுக்கு டைம் எல்லாம்? ஐ ஆம் க்யுரியஸ். என்னன்னு சொல்லு" என்றான்.

"இல்ல சார். தப்பா நினைக்காதீங்க. நான் ஈவினிங் காலேஜில் எம் பி ஏ படிக்கறேன். அதில டைம் அண்ட் மோஷன் ஸ்டடி பத்திப் படிச்சேன். அதான் இது மாதிரி மீட்டிங்கில் எல்லாம் நேரத்தை எப்படிப் பயன்படுத்தறாங்கன்னு பாக்கலாம்னு சும்மா..."

"இன்ட்ரஸ்டிங். ஆமாம். இதில நிறைய டைம் கேப் இருக்கே. உதாரணமா, 11.20 க்கு அப்பறம் 11.55 தான் இருக்கு. ஏன் 11.20 க்கும் 11.55 க்கும் நடுவில நடந்த டிஸ்கஷன் உன் நோட்ஸ்ல இல்ல."

"அப்ப டிஸ்கஷன் நடக்கவே இல்ல சார்!"

"ஏன், அப்ப பிரேக் எதுவும் இல்லியே? எதுக்காகாகவாவது எழுந்து வெளியில போயிட்டாங்களா?"

"இல்ல சார். ஐ மீன், எல்லாரும் உள்ளதான் இருந்தாங்க. சாரி சார்.. அப்ப வேற எதையோ பத்திப் பேசிக்கிட்டிருந்தாங்க..."

"ஓ, ஐ கெட் இட். எப்பப்ப பட்ஜெட் பத்தி டிஸ்கஷன் நடந்ததோ, அந்த
டயத்தை நோட் பண்ணியிருக்க. பொதுவா டைம் ஸ்டடிங்கறது மானேஜர் பயன்படுத்தற டூல். நீ அதை மானேஜர்கள்கிட்டயே பயன்படுத்தி இருக்க!"

"சார்! தெரியாம...  நான் எனக்காக சும்மா செஞ்சு பாத்தேன் சார்... நீங்க நோட்புக் கேட்டதால, உங்ககிட்ட காட்டினேன். தப்பா எடுத்துக்காதீங்க சார்..."

"இல்ல ஷாலினி. ஐ அப்ரிஷியேட் இட். நீ எனக்கு ஒண்ணு பண்ணணும். மொத்தமா எவ்வளவு நேரம் டிஸ்கஷன் நடந்திருக்குன்னு டோடல் பண்ணி சொல்லு."

"ஏற்கெனவே பண்ணிட்டேன் சார். மொத்தம் அஞ்சு மணி 35 நிமிஷம் வருது."

"மை குட்னெஸ்! மூணு நாள்ள, மொத்தம் பதினெட்டு மணி நேரம் மீட்டிங் நடந்திருக்கு. அதுல, மூணுல ரெண்டு பங்கு வெட்டிப் பேச்சுப் பேசியே  செலவழிச்சிருக்கோம். 12 மணி நேரம் வெட்டிப் பேச்சுப் பேசிப் பொழுது போக்கியிருக்கோம். இத்தனை மானேஜர்களோட எக்சிக்யூடிவ் டயத்தை கால்குலேட் பண்ணினா, கம்பெனிக்கு ஆயிரக் கணக்கில நஷ்டம். இதை எப்படி நான் ரியலைஸ் பண்ணாம போனேன்! ஸ்மால் டாக்னாலே கம்பெனிக்கு இவ்வளவு நஷ்டம்னா, இதுவும் ஒருவிதமான இர்ரெகுலாரிஇர்ரெகுலாரிடிதான். ப்கம்பெனிக்கு பண்ற பெரிய அநீதி. திஸ் ஐஸ் ஆன் ஐ ஓபனர் டு  மீ. இனிமே, மீட்டிங்குக்கெல்லாம் டயத்தைக் குறைச்சு, ரெகுலேட் பண்றேன். தாங்க் யூ  ஷாலினி" என்றான் பிரபாகர்.

குறள் 200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்.

பொருள்:  
பேசினால் பயனுள்ள சொற்களையே பேசவும். பயனற்ற சொற்களைப் பேச வேண்டாம்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment