About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, October 30, 2017

104. கூடுதல் வட்டி

கைலாசம் வீட்டுக்கு அவரது உறவினர் சம்பந்தம் வந்தபோது கைலாசத்தின் அருகில் அமர்ந்து ஒரு இளைஞன் பேசிக் கொண்டிருந்தான்.

"யார் இவரு? நான் பார்த்ததில்லையே?" என்றார் சம்பந்தம்.

"எனக்குத் தெரிஞ்சவர்" என்றார் கைலாசம்.

உடனே அந்த இளைஞன், "சார்தான் எனக்கு வழிகாட்டி. அவர் எனக்கு செஞ்ச உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்" என்றான் சம்பந்தத்திடம்.

"அப்படியா? என்ன உதவி செஞ்சாரு?" என்றார் சம்பந்தம்.

"அதைப் பத்தி இப்ப என்ன? சுகுமார், இவரு என் சொந்தக்காரரு. நாம அப்பறம் பாக்கலாம்" என்று அந்த இளைஞனை வழியனுப்பி வைத்தார் கைலாசம்.

சுகுமார் விடைபெற்றுப் போனதும், "யாருப்பா இந்தப் பையன்? அப்படி என்ன உதவி செஞ்ச அவனுக்கு?" என்று கேட்டார் சம்பந்தம்.

"அது ஒண்ணுமில்ல" என்று ஆரம்பித்தார் கைலாசம்.

சில வருடங்களுக்கு முன் கைலாசம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு நிதி நிறுவனத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தார். மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று வட்டிப்  பணத்தை வாங்கி கொள்ள வேண்டும். (நேரில் வர முடியாதவர்களுக்கும், வெளியூர்க்காரர்களுக்கும் தபால் மூலம் செக் அனுப்பும் முறை இருந்தது.)

இரண்டு மாதங்களுக்கு, சொன்ன தேதியில் வட்டித் தொகையைக் கொடுத்தார்கள். மூன்றாம் மாதத்திலிருந்து இன்னொரு நாள் வரச்  சொல்வது, அன்று போனால், வேறொரு நாள் வரச்சொல்வது என்று ஆரம்பித்தார்கள்.

ஒன்பது மாத முடிவில், ஆறு மாதங்களுக்குத்தான் வட்டி கொடுத்திருந்தார்கள். ஒரு மாத வட்டித்தொகையை வாங்க ஐந்தாறு முறை போக வேண்டியிருந்தது. கிடைக்கிற வட்டிப்பணத்தில் பெருந்தொகை போக்குவரத்துச் செலவுக்கே செலவழிந்து கொண்டிருந்தது.

ஒருமுறை வட்டித்தொகையை வாங்க அந்த அலுவலகத்துக்குப் போய்க் காத்திருந்தபோது, சுகுமாரைப் பார்த்தார் கைலாசம். அவன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவன் அங்கே பணம் டெபாசிட் செய்யத்தான் வந்திருக்கிறான் என்று ஊகித்த கைலாசம் அவனைத் தனியே வெளியில் அழைத்துப் போய்ப் பேசினார்.

"தம்பி, நான் இங்க அம்பதாயிரம் ரூபாய் பணம் போட்டுட்டுட்டு வட்டி வாங்கறத்துக்காக அலைஞ்சுக்கிக்கிட்டிருக்கேன். இங்க பணம் போடாதீங்க. பாங்க்கில போடுங்க. அதான் பாதுகாப்பு. நான் பண்ணின தப்பை நீங்களும் பண்ணாதீங்க" என்றார் கைலாசம்.

"பாங்க்கை விட இங்க அஞ்சு சதவீதம் வட்டி அதிகம் கொடுக்கறாங்களே!" என்றான் சுகுமார்.

"அது மாதிரி நெனைச்சுத்தான் நானும் இங்க பணத்தைப் போட்டுட்டுக் கஷ்டப்படறேன்" என்றார் கைலாசம்.

"பத்தாயிரம் ரூபாதான் சார் போடப் போறேன்? ரிஸ்க் எடுத்துத்தான் பாக்கறேனே!" என்றான் சுகுமார்.

"இப்படி நெனச்சுப் பாருங்களேன். பத்தாயிரம் ரூபாய்க்கு அஞ்சு பர்சன்ட் வீ தம் பாத்தா வருஷத்துக்கு ஐநூறு ரூபா ஜாஸ்தி கிடைக்கும். ஐநூறு ரூபாய்க்காக பத்தாயிரம் ரூபாயைப் பணயம் வெக்கணுமா?" என்றார் கைலாசம்.

சுகுமார் யோசித்தான். ஆயினும் பணத்தை அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்யும் எண்ணத்தில் அவன் வலுவாக இருந்ததாகத் தோன்றியது.

"சரி. ஒண்ணு பண்ணுங்க. ஒரு மாசம் கழிச்சு வந்து போடுங்க. அதுக்குள்ளே யோசிக்கறதுக்கு உங்களுக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்" என்றார் கைலாசம்.

"ஒரு மாசம் பணத்தை வீட்டிலே வச்சிருந்தா வட்டி நஷ்டம் ஆகுமே!" என்ற சுகுமார் "சரி சார். நீங்க சொல்றதுக்காக ஒரு வாரம் கழிச்சு வரேன்" என்று கிளம்பியவன், "உங்க ஃபோன் நம்பர் கொடுங்க" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போனான்.

"ப்புறம் என்ன ஆச்சு?" என்றார் சம்பந்தம் சுவாரசியமாக.

"அதுக்கப்பறம் ரெண்டு மூணு நாள்ள அந்த நிறுவனத்தை மூடிட்டாங்க. பணம் டெபாசிட் பண்ணினவங்களுக்கெல்லாம் பணம் போச்சு."

"உனக்கும் போச்சா? எங்கிட்ட சொல்லவேயில்லையே!"

"அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முட்டாள்தனமா நடந்துக்கிட்டதை எல்லார்கிட்டயும் சொல்லிப் பெருமை அடிச்சுக்க முடியுமா என்ன? இப்ப இந்த சுகுமாரைப் பத்தி நீ கேட்டதால இதைச் சொன்னேன்."

"பாத்தியா? சுகுமாரைப் பத்திப் பேச ஆரம்பிச்சு ஒங்கிட்ட வந்து நின்னுட்டோம்! அவனைப் பத்தி சொல்லு."

"கம்பெனி மூடினது தெரிஞ்சதும் எனக்கு ஃபோன் பண்ணி அவனோட அனுதாபத்தைத் தெரிவிச்சான். நான் சொன்னதுக்காக ஒரு வாரம் தள்ளிப் போட்டதால அவனோட பணம் போகாம தப்பிச்சதுல அவனுக்கு எங்கிட்ட ஒரு பெரிய நன்றி உணர்ச்சி ஏற்பட்டுடுச்சு. என் வீட்டுக்கு வந்தான். அப்புறம் அடிக்கடி வருவான். அதுக்கப்புறம் அவனுக்கு நான் எந்த யோசனையும் சொன்னதில்ல. ஆனா என்னை ஒரு வழிகாட்டின்னே சொல்லிக் கிட்டிருக்கான். ஏன்னா, அதுக்கப்புறம் எந்த முடிவு எடுத்தாலும் நல்லா யோசிச்சுத்தான் செய்யணும்ங்கிற பழக்கம் அவனுக்கு வந்துடுச்சாம்!"

"நீ அவனுக்குச் செஞ்ச உதவி சின்னதா இருந்தாலும் அதோட மதிப்பை அவன் புரிஞ்சுக்கிட்டதாலதான் உன்கிட்ட விசுவாசமா இருக்கான்" என்றார் சம்பந்தம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

பொருள்:  
ஒருவர் செய்த உதவி மிகச் சிறியதாக இருந்தாலும், அந்த உதவியைப் பெற்றவர் அதன் பயனை உணர்ந்தவராக இருந்தால் அதை மிகப் பெரிதாகக் கருதிப் போற்றுவார்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















"

Sunday, October 29, 2017

103. நகைக்கடன்

"இது மாதிரி நிறுவனங்கள்ளல்லாம் கடனே வாங்கக் கூடாது. எங்கிட்ட சொல்லியிருந்தா ஏதாவது பாங்க்கில வாங்கச் சொல்லி யோசனை சொல்லி இருப்பேன். இப்ப வந்து சொல்றீங்களே!" என்றான் மணி.

"ஏதோ அவசரத்துக்கு வாங்கிட்டேன். பாங்க்கில எல்லாம் அலைக்கழிப்பாங்கன்னு நெனச்சேன். இந்த கம்பெனி சமீபத்திலதான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில பிராஞ்ச் ஓபன் பண்ணியிருந்தாங்க. 

"சும்மா விசாரிக்கலாம்னுதான் உள்ள போனேன். எங்கிட்ட ரொம்ப இனிமையாப் பேசினாங்க. நகையை எடுத்துக்கிட்டு வாங்க, இப்பவே கேஷ் கொடுத்துடறோம்னு சொன்னாங்க. 

"அவங்க சொன்ன வட்டி கூட அதிகமாத் தெரியல. ஆனா ரெண்டு மாசம் வட்டி கட்டலைங்கறதுக்காக நகையை ஏலம் போடப் போறோம்னு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. வட்டி வேற அதிகமாப் போட்டிருக்காங்க. 

"போய்க் கேட்டதுக்கு என்னென்னவோ கணக்கு சொல்றாங்க. டைம் கொடுக்கவும் மாட்டாங்களாம். நாளைக்குள்ள பணம் கட்டலைன்னா நகையை ஏலம் போட்டுடுவோம்னு திட்டவட்டமாச் சொல்லிட்டாங்க" என்றான் சபாபதி.

"எவ்வளவு கட்டணும்?"

"கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூவா வருது."

"அவ்வளவு பணத்தை உடனே புரட்ட முடியாதே!"

"நிறைய பேர்கிட்டக் கேட்டுப் பாத்துட்டேன். எல்லாரும் கை விரிச்சுட்டாங்க."

"சரி. நான் முயற்சி பண்ணிப் பாக்கறேன். சாயந்திரம் ஃபோன் பண்றேன்."

சபாபதி மணிக்கு உறவு முறைதான் என்றாலும், எப்போதாவது கல்யாணங்களில் சந்தித்துக்கொள்வதைத் தவிர, இருவரும் நெருங்கிப் பழகியது கிடையாது.

அன்று மாலை சபாபதிக்கு ஃபோன் செய்து "சாரி சார். பணம் கிடைக்கல" என்று சொல்லி விட்டான் மணி.

டுத்த நாள் காலை பயந்து கொண்டே அந்த நிதி நிறுவனத்துக்குப் போனான் சபாபதி- கடைசியாக ஒருமுறை கெஞ்சிக் கேட்டுப் பார்க்கலாம் என்று.

"உங்க நகையெல்லாம் ஏலம் போடறத்துக்கு எடுத்து வச்சாச்சு சார். 12 மணிக்கு ஏலம். ரெண்டு மணிக்கு வந்தீங்கன்னா உங்க நகைகள் எவ்வளவுக்குப் போச்சு, உங்க கடன் வட்டியெல்லாம் போக உங்களுக்கு மீதிப் பணம் ஏதாவது கிடைக்குமான்னு சொல்றோம்" என்றார்கள். கடைசி நம்பிக்கையும் போய் விட்டது.

அவர்கள் சொன்னபடி மதியம் 2 மணிக்குப் போனான் .

"ஏன் சார்? நேத்திக்கே பணம் கட்டியிருக்கலாம் இல்ல? நகையை எல்லாம் ஏலம் போடறத்துக்காக எடுத்து வச்சப்பறம் 11 மணிக்கு வந்து பணம் கட்டச் சொல்லியிருக்கீங்களே! நல்ல வேளை. இன்னும் 10 நிமிஷம் லேட்டாயிருந்தாக் கூட ஏலத்துக்குப் போக வேண்டியதைத் தடுத்திருக்க முடியாது" என்றார் நிறுவன ஊழியர்.

"யார் சார் பணம் கட்டினாங்க?" என்றான் சபாபதி நம்ப முடியாத வியப்புடன்.

"நீங்க அனுப்பின ஆளு இல்லியா அவரு? இருங்க. வவுச்சரைப் பாத்துச் சொல்றேன்" என்றவர் "கையெழுத்துல மணின்னு இருக்கு. உங்களுக்குத் தெரிஞ்சவர்தானே?" என்றார்.

"ஆமாம்." என்றான் சபாபதி. உணர்ச்சிப் பெருக்கில் அவனுக்குக் குரலே எழும்பவில்லை.

"கொஞ்சம் இருங்க. நகையை எடுத்துக்கிட்டு வரேன். வாங்கிட்டுப் போயிடுங்க" என்று உள்ளே எழுந்து போனார் ஊழியர்.

பாபதி மணிக்கு ஃபோன் செய்தான். "சார்! இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்ன சொல்றதுன்னே தெரியல" என்றான்.

"காலையிலிருந்து உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கேன், நீங்க எடுக்கவே இல்லையே?" என்றான் மணி.

"ஆமாம், தவறுதலா ஃபோன் ரிங் வால்யூமைக் குறைச்சுட்டேன் போலிருக்கு. இப்பதான் பாக்கறேன்" என்ற சபாபதி, "நேரத்துக்கு உதவி பண்ணியிருக்கீங்க சார். இதை நான் மறக்கவே மாட்டேன்" என்றான்.

"நேத்திக்கு நீங்க வந்துட்டுப் போனப்பறம் விஷயத்தை என் மனைவிகிட்ட சொன்னேன். அவதான் சொன்னா 'நம்பகிட்ட பணம் இல்லாட்டா என்ன? என்னோட நகைகளை பாங்க்கில வச்சுக் கடன் வாங்கி அவங்களுக்கு உதவி செய்யாலாமே'ன்னு. 

"பணம் கிடைச்சப்புறம் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். காலையில என் பாங்குக்குப் போய் நகைகளை வச்சுப் பணம் வாங்கிக்கிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். நீங்க ஃபோனை எடுக்கவேயில்லை. 

"நேத்திக்கு நீங்க என் வீட்டுக்கு வந்திருந்தப்ப உங்களுக்கு வந்த நோட்டீஸை இங்கியே விட்டுட்டுப் போயிட்டீங்க. அதை எடுத்துக்கிட்டுப் போய் உங்க பாங்க்கில பணம் கட்டிட்டு வந்துட்டேன். நகைகளை வாங்கிட்டீங்களா?" என்றான் மணி.

"சார்! என்னோட நகையை மீட்கறதுக்காக உங்க மனைவி அவங்க நகையைக் கொடுத்திருக்காங்க. அதை அடகு வச்சுப் பணம் வாங்கி, நீங்க என் கடனை அடைச்சிருக்கீங்க. நீங்க எனக்கு செஞ்சிருக்கிற உதவி ரொம்பப் பெரிசு. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள உங்க கடனை வட்டியோடு அடைச்சுடறேன் சார்" என்றான் சபாபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

பொருள்:  
தனக்கு என்ன பயன் கிடைக்கும் என்று யோசிக்காமல் ஒருவர் செய்த உதவியை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















102. கல்லூரிக் கட்டணம்

"என்னடா இப்ப வந்து சொல்றே?" என்றார் ராமமூர்த்தி.

"காலேஜ் நோட்டீஸ் போர்டில போட்டிருக்காங்களாம். இன்னிக்குத்தான் ரவி பாத்துட்டு வந்து சொன்னான்" என்றான் மணி.

"நம்மகிட்ட அட்மிஷன் லெட்டர் கூடக் கிடையாது. அப்ளிகேஷன் ஃபார்ம்ல கரெஸ்பாண்டண்ட் கையெழுத்துப் போட்டதோட சரி. அதையும் ஆஃபீஸ்ல வாங்கி வச்சுக்கிட்டு, நாங்க சொல்ற அன்னிக்கு ஃபீஸ் கட்டிடுங்கன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் அவங்ககிட்டேருந்து லெட்டர் கூட வரலை."

"அதெல்லாம் போட மாட்டாங்கப்பா. அப்ளிகேஷன் நம்பரைச் சொல்லி ஃபீஸ் கட்ட வேண்டியதுதான்."

"இப்ப என்ன செய்யறது? இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் ரிஜிஸ்ட்ரேஷன். அன்னிக்குத்தான் மீதிப்பணம் கொடுக்கறதாச் சொல்லி இருக்கார் மாணிக்கம். இப்ப அவர்கிட்ட போய்ப் பணம் கேட்க முடியாதே!" என்று கவலைப்பட்டார் ராமமூர்த்தி.

"அப்பா! நீ கஷ்டப்பட்டு யார் யார் கிட்டயோ சிபாரிசு புடிச்சு, இந்த சீட்டை வாங்கி இருக்க. என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் உன்னோட மார்க்குக்கு இந்தக் காலேஜில எப்படிடா சீட் கிடைச்சதுன்னு கேக்கறாங்க. நாளைக்குப் பணம் கட்டலேன்னா என்னோட சீட்டை வேற யாருக்காவது கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க."

"காலம் கெட்டுப் போச்சு. இது 1970 ஆச்சே! இதுவே எங்க காலமா இருந்தா..."

"உங்க காலத்தில காலேஜில் படிக்கிற வாய்ப்பே உனக்குக் கிடைக்கலியே அப்பா!" என்றான் மணி.

"இப்ப மட்டும் என்ன? உன்னைக் காலேஜில் படிக்கிற அளவுக்கு நமக்கு வசதியா இருக்கு? பி.யூ.சி வரையிலும் எப்படியோ படிக்க வச்சுட்டேன். பி.எஸ்.சி படிக்க வைக்க, கொஞ்சம் நிலத்தை வித்துத்தானே உன் ஃபீஸுக்கே ஏற்பாடு பண்ணி இருக்கேன்? வர பணத்தை செலவழிக்காம வச்சுக்கிட்டு, மூணு வருஷத்துக்கு ஃபீஸ்  கட்டணும்" என்றார் ராமமூர்த்தி.

"அது சரி. இப்ப ஃபீஸ் கட்ட, பணத்துக்கு என்ன பண்ணப் போறீங்க? மாணிக்கத்தையே கேக்கறீங்களா?" என்றாள் அவர் மனைவி பார்வதி.

"அவரை நமக்குப்  பழக்கம் கிடையாது. நம்ம நிலத்தை வாங்கறவரு அவரு. அவர் கொடுத்த அட்வான்ஸை வாங்கிக் கடனை அடைக்கப் பயன்படுத்தியாச்சு. மீதிப்பணம் ரிஜிஸ்ட்ரேஷன்போதுதான்னு அக்ரிமென்ட்டிலே இருக்கு. இப்ப போய் அவர்கிட்ட எப்படிக் கேக்க முடியும்?"

"பையனை அழைச்சுக்கிட்டுப் போய், கேட்டுத்தான் பாருங்களேன்! நமக்கு வேற வழி என்ன இருக்கு?' என்றாள் பார்வதி.

"சரி. இப்பவே கிளம்பறேன். அவர் இல்லேன்னு சொன்னா அப்புறம் வேற வழி என்னன்னு பாக்கணும்."

ராமமூர்த்தியும், மணியும் மாணிக்கத்தின் வீட்டுக்குப் போனபோது, நல்லவேளையாக அவர் வீட்டில் இருந்தார்.

"வாங்க, வாங்க!" என்று வரவேற்றார் மாணிக்கம்.

"உங்ககிட்ட ஒரு உதவி கேக்கணும்,. நீங்க தப்பா நினைக்கக்கூடாது. இவன் என் பையன். திடீர்னு இவன் காலேஜ் அட்மிஷனுக்கு நாளைக்குள்ள பணம் 
கட்டணும்னு சொல்றாங்க..." என்று ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

"ஓ! ரிஜிஸ்ட்ரேஷன் அன்னிக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை முன்னாடியே கொடுக்க முடியுமான்னு கேக்க வந்தீங்களா?" என்றார் மாணிக்கம்.

"மொத்தப் பணமும் வேண்டாம். ஒரு ஐநூறு ரூபா இருந்தா போதும், இப்போதைக்கு..."

"எங்கிட்ட கையில பணம் இல்லியே. எனக்கு வர வேண்டிய பணம் வர ரெண்டு நாள் ஆகும். யார்கிட்டயாவது கேட்டுப் பாக்கறேன். சாயந்திரம் வர முடியுமா?"

"வரோம் சார். எப்ப வரணும்னு சொல்லுங்க."

"ஆறு மணிக்கு மேல வாங்களேன். நீங்க வர வேண்டியதில்லை. உங்க பையனை அனுப்பிச்சாப் போதும்."

மாலை 7 மணிக்கு ராமமூர்த்தி மாணிக்கத்தின் வீட்டுக்குச் சென்றார்.

"வாங்க. நீங்களே வந்துட்டீங்களா? பையனை அனுப்பிச்சாப் போதும்னு சொன்னேனே. நீங்க ஏன் சிரமப்படறீங்க?"

"நான் எதுலயாவது கையெழுத்துப் போட வேண்டியிருக்குமோன்னு நெனைச்சுத்தான்..."

"கையெழுத்தா? அதுதான் சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல கையெழுத்துப் போடப் போறீங்களே! இந்தாங்க பணம். சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல மீதிப் பணத்தைக் கொடுக்கும்போது இந்த ஐநூறு ரூபாயைக் கழிச்சுக்கறேன்."

"நீங்க செஞ்சது பெரிய உதவி. யார்கிட்ட கேக்கறதுன்னே தெரியாமத் தவிச்சுக்கிட்டிருந்தேன்."

"இதுல என்னங்க இருக்கு? நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடல! ரிஜிஸ்ட்ரேஷன் போது கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு சின்னப் பங்கை நாலு நாள் முன்னாடியே கொடுத்திருக்கேன், அவ்வளவுதானே?"

"உங்களுக்கு வேணும்னா இது சின்ன உதவியா இருக்கலாம். எங்களைப்  பொருத்த வரையிலே நீங்க சரியான நேரத்தில உதவி பண்ணி என் பையனோட படிப்பு  தடைபடாம பண்ணியிருக்கீங்க.  நானும் சரி, என் பையனும் சரி, இந்த உதவியை எப்பவுமே மறக்க மாட்டோம்" என்றார் ராமமூர்த்தி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பொருள்:  
உரிய காலத்தில் செய்யப்படும் உதவி சிறியதாக இருந்தாலும், அது இவ்வுலகை விடப்  பெரியதாகக் கருதப்படும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                   காமத்துப்பால்