About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

அதிகாரம் 19 - புறங்கூறாமை

திருக்குறள் 
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 19 
புறங்கூறாமை

181. சந்திரன் செய்த தவறு

தான் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தின் விளைவு இப்படி இருக்கும் என்று சந்திரன் நினைக்கவில்லை.

ஒரு அரசு நிறுவனத்தில் இளநிலை அதிகாரியாகப் பணி செய்து வந்த அவன், தன் அலுவலகத்தில் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் அதிர்ச்சியுடனும், வேதனையுடனும், இயலாமையுடனும் பார்த்து வந்தான்.

தன் கவனத்துக்கு வந்த முறைகேடுகளைக் கிளை மேலாளர் சுந்தரவதனத்திடம் அவன் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறான். ஆனால், அவர் அவற்றைக் கண்டும் காணாதவராக இருந்து வந்தார். முறைகேடுகளில் அவருக்கும் பங்கும் பயனும் உண்டு என்பதை நாளடைவில் சந்திரன் புரிந்து கொண்டான்.

வாடகை இடத்தில் இருந்த அவர்கள் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு, தலைமை அலுவலகத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் வாங்கிப் போட்டிருந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன.

அந்த அலுவலகத்தின் பணி ஒதுக்கீட்டின்படி, இது தொடர்பான கோப்புகள் சந்திரனுக்கு வந்தன. குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்டிருந்த ஒரு தரமான கட்டுமான நிறுவனத்தின் டெண்டரை ஏற்க வேண்டும் என்று சிபாரிசு செய்து, சந்திரன் கோப்பை கிளை மேலாளருக்கு அனுப்பி வைத்தான்.

கோப்பு அவனுக்குத் திரும்பி வரவில்லை. அந்தக் கோப்பு வேறொரு அதிகாரிக்கு மாற்றப்பட்டு விட்டதாகச் சில நாட்கள் கழித்து அவனுக்குத் தெரிய வந்தது. அத்துடன், அதிகத் தொகை கேட்டிருந்த வேறொரு நிறுவனத்துக்கு கட்டிடப் பணி வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிந்து கொண்டான்.

தன் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து, தலைமை அலுவலகத்துக்கு இது பற்றி விவரமாக ஒரு கடிதம் அனுப்பினான் சந்திரன்.

அவன் கடிதம் அனுப்பிய சில நாட்களில், நிறுவனத்தின் விதிமுறைகளை  மீறியதற்காக சந்திரன் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தலைமை அலுவலகத்தில் இருந்து அவனுக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் வந்தது!

அதிர்ச்சியுடனும், கோபத்துடனும், சந்திரன் கிளை மேலாளரின் அறைக்குப் போனான்.

"என்ன சார் இது? என்ன தப்பு பண்ணினேன்னு என்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்கீங்க?" என்றான்.

"நான் பண்ணல. ஹெட் ஆஃபீஸ்ல பண்ணியிருக்காங்க" என்றார் சுந்தரவதனம்.

"சரி. என்ன காரணம்னு கேக்கறேன்."

"சந்திரன்! நீங்க ஹெட் ஆஃபீஸுக்கு எழுதினீங்க. அவங்ககிட்டேயிருந்து உங்களுக்கு பதில் வந்திருக்கு. என்னை ஏன் கேக்கறீங்க?"

"நான் ஹெட் ஆஃபீஸுக்கு எழுதினது உங்களுக்கு எப்படி சார் தெரியும்? அவங்க சொல்லித்தானே!"

"நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்கறீங்க?"

"ஒரு முறைகேடு நடந்திருக்குன்னு நான் முழு விவரத்தோட எழுதியிருக்கேன். அதைப் பத்தி விசாரிக்கறதுக்கு நடவடிக்கை எடுக்காம, என்னை சஸ்பெண்ட் பண்ணியிருக்காங்களே, என்ன சார் இது?"

"மிஸ்டர்! நீங்க பண்ணினது தப்புன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கணும். இது ஒரு அரசாங்க நிறுவனம். இங்கே சில சட்ட திட்டங்கள் உண்டு. நீங்க ஹெட் ஆஃபீஸுக்கு நேரடியா எழுதினது ஒரு விதி மீறல். நீங்க உங்க கடிதத்தை இந்த ஆஃபீஸ் மூலமாத்தான் அனுப்பி இருக்கணும்."

"அதாவது உங்க மூலமா! உங்க பேர்லதானே சார் நான் கம்ப்ளெயின் பண்ணினேன்! அதை எப்படி உங்க மூலமே அனுப்ப முடியும்?"

"அப்படின்னா, நம்ம ஆஃபீஸ்ல விஜிலென்ஸ் ஆஃபீசர்னு ஒத்தர் இருக்காரே அவர்கிட்ட புகார் கொடுத்திருக்கணும்!"

"அவரு உங்களுக்குக் கீழ வேலை செய்யறவரு. அதோட அவரு உங்க கூட்டாளின்னு இந்த ஆஃபீசுக்கே தெரியும்!" என்றான் சந்திரன்.

"கூட்டாளிங்கறதெல்லாம் தவறான வார்த்தை. கொஞ்சம் பொறுப்பாப் பேசுங்க" என்றார் சுந்தரவதனம், கோபத்துடன்.

"சரி சார். அடுத்தது என்ன?"

"பொதுவா, சஸ்பெண்ட் ஆனவரை ஒரு விசாரணை கமிட்டி போட்டு விசாரிப்பாங்க. விசாரணை முடிய மாசக் கணக்கா ஆகும். ஆனா உங்க அதிர்ஷ்டம், திங்கட்கிழமை அன்னிக்கு ஜி எம் வராரு. அவரே உங்களை விசாரிச்சு முடிவு பண்றதா சொல்லியிருக்காரு" என்றார் சுந்தரவதனம்.

"என்னை சஸ்பெண்ட் பண்ணினதே அவர்தான்! அவர் என்னத்தை விசாரணை பண்ணப் போறாரு! நடக்கறதைப் பார்த்தா, அவருக்குத் தெரிஞ்சுதான் எல்லா மோசடியும் நடக்கற மாதிரி இருக்கு. அவரும் உங்க கூட்டாளியாத்தான் இருப்பாரு!" என்று பொரிந்து தள்ளினான் சந்திரன்.

"நீங்க மறுபடி மறுபடி தப்பு பண்ணிக்கிட்டே இருக்கீங்க. எங்கிட்ட ஜி எம்மைப் பத்தி மோசமாப் பேசினீங்கன்னு நான் பதிவு செஞ்சு, அதுக்காகக் கூட உங்க மேல நடவடிக்கை எடுக்கலாம்."

"நீங்க என்ன வேணும்னா செய்வீங்க!" என்று சொல்லி விட்டுக் கோபமாக வெளியே வந்தான் சந்திரன்.

'கோபத்தில் ஜி எம்மைப் பற்றி சுந்தரவதனத்திடம் தப்பாகப் பேசி விட்டோமே! அவர் அதை ஜி எம்மிடம் சொன்னால், ஜி எம் என் மேல் கோபப்பட்டு, எனக்கு எதிராக முடிவு எடுத்து விடுவாரோ? கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்' என்று சற்று நேரம் கழித்து அவனுக்குத் தோன்றியது.

செவ்வாய்க்கிழமையன்று, சந்திரன் சுந்தரவதனத்தின் அறைக்குச் சென்றான்.

"நேத்திக்கு ஜி எம்மைப் பாத்தீங்களா? என்ன சொன்னாரு?" என்றார் சுந்தரவதனம்.

"ஏன் சார், அன்னிக்கு உங்ககிட்ட பேசச்சே, கோபத்தில ஜி எம்மைப் பத்தித் தப்பாப் பேசிட்டேன். அதை நீங்க அவர்கிட்ட சொன்னீங்களா?" என்றான் சந்திரன்.

"ஏன், அவர் இதைப்பத்தி ஏதாவது கேட்டாரா?"

"இல்லை."

"நான் சொல்லியிருந்தாத்தானே, அவர் கேட்டிருக்கப் போறாரு!"

"என்ன சார் சொல்றீங்க? நீங்க அவர்கிட்ட எதுவும் சொல்லலியா?"

"இங்க பாருங்க சந்திரன்! உங்க மேல எனக்குக் கோபம் இருக்கலாம். அதுக்காக நீங்க மத்தவங்களைப் பத்தி, எங்கிட்ட சொன்னதையெல்லாம் நான் அவங்ககிட்ட போய்ச் சொல்லுவேன்னு நெனச்சீங்களா? நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல. நான் அப்படிச் சொல்லியிருந்தா, அவருக்கு உங்க மேல ஒரு தப்பான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும். அது அவரோட விசாரணை முடிவை பாதிக்காதா?"

முதன்முறையாக, சந்திரனுக்கு சுந்தரவதனத்தின் மீது மரியாதை ஏற்பட்டது.

"ஜி எம்மோட முடிவு எப்ப சார் தெரியும்?" என்றான் சந்திரன்.

"நீங்க மெயில் செக் பண்ணலியா? உங்களுக்கு வார்னிங் கொடுத்துட்டு, உங்க சஸ்பென்ஷனை ரத்து பண்ணிட்டாரு ஜி எம். போய் சீட்டில் உக்காருங்க!" என்றார் சுந்தரவதனம்.   

குறள் 181
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
புறங்கூறான் என்றல் இனிது.

பொருள்:  
ஒருவன் அறவழியில் நடக்காதவனாயிருந்தாலும், மற்றவர் பற்றிப் புறம் கூறாமலிருந்தால் நன்று.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


182. பிரியாவுக்குப் புரியாத விஷயம்

பிரியா வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்தபோது. அவள் அம்மா வள்ளியைப் பார்க்க சாரதா வந்தாள்.

வழக்கம் போல், இருவரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். அவற்றில் சில பிரியாவின் காதில் விழுந்தன. 

அவள் வீட்டுப்பாடத்தில் கவனமாக இருந்தாலும், காதில் விழுந்த உரையாடல்களில் சில அவள் கவனத்தை ஈர்த்தன.

முதலில் தங்கள் இருவரின் குடும்ப விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்கள், பிறகு அக்கம்பக்கத்தில் இருந்த வேறு சிலர் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

"இந்தத் தங்கம் இருக்காளே, அவளை மாதிரி ஒரு பொம்பளையை நான் பார்த்ததில்லை" என்றாள் பிரியாவின் அம்மா வள்ளி.

"எனக்கு அவங்களை அவ்வளவாப் பழக்கம் கிடையாது. ஆனா கொஞ்சம் திமிர் பிடிச்சவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்" என்றாள் சாரதா.

"திமிர்னா சாதாரணத் திமிரா? அடேங்கப்பா! இத்தனைக்கும், அவ ஒரு சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவதான். அவ அப்பா இப்பவும் ஒரு கடையில கணக்கு எழுதித்தான் பொழப்பு நடத்திக்கிட்டிருக்காரு. அவ புருஷனும் சாதாரணமா இருந்தவர்தான். திடீர்னு ஏதோ யோகம் அடிச்சு, அவரு வியாபாரம் பெரிசா வளந்துடுச்சு. இவளைப் புடிக்கவே முடியல. ஏதோ பிறவிப் பணக்காரி மாதிரி அவ போடற ஆட்டம் இருக்கே..." என்றாள் வள்ளி.

"உன் வீட்டுக்கு அப்பப்ப வருவாங்க போலருக்கே!" என்றாள் சாரதா.

"ஆமாம் வருவா. தன் பெருமையை யார் கிட்டயாவது அளக்கணுமே அவளுக்கு!"

"அப்ப என்னை மாதிரி அவங்களும் உனக்கு ஒரு சிநேகிதின்னு சொல்லு" என்றாள் சாரதா.

"அப்படி ஒண்ணும் இல்ல. பிரியாவோட அப்பா அவ புருஷனுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு..."

தன் பெயர் அடிபட்டதும், பிரியா பாடத்திலிருந்து கவனத்தைத் திருப்பி அம்மாவின் பேச்சை கவனித்தாள். அப்பாவைப் பற்றிக் குறிப்பிடத்தான் அம்மா தன் பெயரைப் பயன்படுத்தியிருக்கிறாள் என்று தெரிந்தது. தொடர்ந்து வீட்டுப்பாடம், அம்மாவின் பேச்சு என்று மாறி மாறி அவள் கவனம் சென்று கொண்டிருந்தது.

"...தங்கத்தோட புருஷனுக்கு இவர் கிட்ட நிறைய நன்றி உண்டு. அதனாலதான் தங்கமும் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் என்னை மதிச்சுப் பேசிக்கிட்டிருக்கா! அவளுக்கு ஜால்ரா போடறத்துக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு. எப்பவும் அந்தக் கூட்டத்திலதான் இருப்பா. என்னோட பழகறதெல்லாம் அவ புருஷனுக்காகத்தான்."

"ஆமாம், அவங்களுக்கு மாமனார் மாமியார் இருக்காங்க போலருக்கே!"

"அந்தக் கொடுமையை ஏன் கேக்கற? அவங்களைப் பெட்டிப் பாம்பா அடக்கி வச்சிருக்கா. அவங்க ரெண்டு பேரும் அவ போடற சோத்தைத் தின்னுட்டு கப்சிப்னு வீட்டோட அடங்கிக் கிடக்காங்க."

பிரியாவுக்கு இந்தப் பேச்சு தொந்தரவாக இருந்தது. ஆனால் அது காதில் விழாமல் போய் உட்கார அவர்கள் வீட்டில் தனியான இடம் இல்லை. பாடத்திலிருந்து அவ்வப்போது விலகியிருப்பது மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது!

சற்று நேரம் பேசி விட்டு சாரதா போய் விட்டாள்.

சாரதா போய் சற்று நேரம் கழித்து, வாசல் கதவு தட்டப்பட்டது. பிரியாதான் போய்க் கதவைத் திறந்தாள்.

தங்கம் ஆன்ட்டி!

'இவர்களைப் பற்றித்தானே, அம்மா இத்தனை நேரம் சாரதா ஆன்ட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்!'

"வாங்க ஆன்ட்டி" என்றாள் பிரியா. இதற்குள் வள்ளி உள்ளிருந்து வந்து விட்டாள்.

"அடேடே, தங்கமா! வா வா, இதென்ன அத்தி பூத்த மாதிரி!" என்று அவளை  வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள் வள்ளி.

வீட்டுப்பாடத்தைத் தொடர முடியாமல், மறுபடியும் வள்ளி-தங்கம் உரையாடல் பிரியாவின் கவனத்தைத் திசை திருப்பியது.

தங்கம் மெல்லிய குரலில் பேசியதால், அவள் பேசியதில் பெரும் பகுதி பிரியாவுக்குக் கேட்கவில்லை. வள்ளியை அடிக்கொரு முறை 'அக்கா அக்கா' என்று அவள் அழைத்தது மட்டும் கேட்டது.

வள்ளி பேசியது மட்டும் தெளிவாகக் கேட்டது.

"...இப்பதான் சாரதாகிட்ட உன்னைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். தங்கம் மாதிரி அடக்கமான பெண்ணைப் பார்க்க முடியுமான்னு. உன்னைக் கட்டிக்கிட்ட அதிர்ஷ்டம், உன் புருஷன் வியாபாரம் ஓகோன்னு வளர்ந்து ஊர்லயே பெரிய ஆளாயிட்டாரு. ஆனாலும், புருஷனும் பொண்டாட்டியும் ஊர்ல எல்லாரையும் மதிச்சு, எப்படி அடக்கமா, அன்பா, பண்பா நடந்துக்கறாங்க பாருன்னு சொல்லிக் கிட்டிருந்தேன்."

"எப்பவும் இருக்கற மாதிரி இருக்கோம் அக்கா. இதில என்ன இருக்கு?" என்றாள் தங்கம், மெல்லிய குரலில். அவள் பேசியதில் சில வார்த்தைகளை பிரியா ஊகிக்க வேண்டியிருந்தது.

"அதோட, மாமனார் மாமியாரை வீட்டோட வச்சு அலுங்காம நலுங்காம கவனிச்சுக்கிட்டிருக்கே! இந்தக் காலத்தில, அரைகுறையாப் படிச்ச பெண்களே ஆட்டம் போடறாங்க. நீ காலேஜில படிச்சும் கூட, கிராமத்துப் பொண்ணு மாதிரி பதவிசா இருக்கே!"

சற்று நேரம் பேசி விட்டுத் தங்கம் விடைபெற்றாள்.

தங்கம் சென்றதும், பிரியா வள்ளியிடம், "ஏம்மா! இப்பதான் சாரதா ஆன்ட்டிகிட்ட இவங்களைப் பத்தி குறை சொல்லிக்கிட்டிருந்தே. அவங்க நேர்ல வந்ததும், இப்படிப் புகழற!" என்றாள்.

"பின்னே? ஒருத்தர் மூஞ்சிக்கு நேரா, அவங்களைப்  பத்தித் தப்பா சொல்ல முடியுமா? உயர்த்திப் பேசறதுதான் முறை!" என்றாள் வள்ளி.

"அப்ப எதுக்கு அவங்க இல்லாதபோது அவங்களைப் பத்தி தப்பாப் பேசணும்?அப்படிப் பேசாம இருந்திருக்கலாமே! இத்தனைக்கும் அவங்களோட உனக்கு சண்டை எதுவும் இல்லியே! நல்லாத்தானே பழகிக்கிட்டிருக்கே! அவங்களைப் பத்தி, மத்தவங்க கிட்ட இப்படி யெல்லாம் பேசறது தப்பு இல்ல?" என்றாள் பிரியா.

"போடி! இதெல்லாம் உனக்குப் புரியாது. போய் உன் ஹோம்வொர்க்கை முடிக்கிற வழியைப் பாரு!" என்றாள் வள்ளி.

குறள் 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே 
புறனழீஇப் பொய்த்து நகை.

பொருள்:  
அறம் என்று எதுவும் இல்லை என்று கூறி, அறத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்வதை விட, ஒருவர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசி, அவர் முகத்துக்கு நேரே பொய்யாகச் சிரித்துப் பேசுவது கொடியது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


183. ஆள்காட்டி!

அது ஒரு சிறிய தொழிற்சாலை, மொத்தமே இருபது தொழிலாளிகள்தான். அவர்களில் ஐந்து பேர் தற்காலிகப் பணியில் இருந்தவர்கள். பல மாதங்களாக  அவர்களை நிரந்தரமாக்காமல் நிர்வாகம் காலம் கடத்தி வந்தது.

அன்று மதிய உணவு இடைவேளையில், நான்கு தொழிலாளிகள் தொழிற்சாலைக்கு வெளியே, சாலையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில், மணி மட்டும் நிரந்தரமாக்கப்படாதவன்.

"இந்த மாசக் கடைசியில எல்லாரையும் பர்மனண்ட் பண்ணிடுவாங்கன்னு மானேஜர் சொல்லியிருக்காரே!" என்றான் செல்வம்.

"எனக்கு நம்பிக்கை இல்ல. அந்த மானேஜர் ஒரு ஏமாத்துப் பேர்வழி. முதலாளி சரின்னு சொன்னா கூட, அவன் எதையாவது சொல்லிக் கெடுத்துடுவான்" என்றான் மணி.

"நம்மளால என்ன பண்ண முடியும்? இது ஒரு சின்ன ஃபேக்டரி. நமக்கு யூனியன் கூடக் கிடையாது. இங்கே அவங்க வச்சதுதான் சட்டம்" என்றான் முருகன்.

"எனக்கு இந்த மானேஜர் சரவணன் மேலதான் கடுப்பு. சரவணன்ங்கற பேருக்கு பதிலா, ராவணன்னு பேரு வச்சிருக்கலாம். இந்த மாசம் மட்டும் எங்களை பர்மனண்ட் பண்ணாம இருக்கட்டும். நேரா லேபர் ஆஃபீசுக்குப் போய், இங்கே நடக்கற அக்கிரமத்தையெல்லாம் சொல்லத்தான் போறேன்!" என்றான் மணி.

அதன் பிறகு, சற்று நேரம், ஒவ்வொருவராக மாற்றி மாற்றி மானேஜர் சரவணனின் அக்கிரமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து எழுந்தபோதுதான், அவர்கள் உட்கார்ந்திருந்த மரத்தடிக்குப் பின்புறத்திலிருந்து சூப்பர்வைசர்கள் சங்கரும், மூர்த்தியும் வேகமாகப் போய்க் கொண்டிருந்ததை கவனித்தனர்.

"இவங்க ரெண்டு பேரும் மரத்துக்குப் பின்னால நின்னுக்கிட்டு, சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்திருக்காங்க போலிருக்கு. நாம பேசறதைக் கேட்டிருப்பாங்களோ? மானேஜர் கிட்ட போய் வத்தி வச்சிடுவாங்களோ?" என்றான் மணி.

"பார்க்கலாம். இப்ப நாம என்ன பண்ண முடியும்?" என்றான் முருகன்.

ந்த மாத இறுதியில், தற்காலிக ஊழியர்கள் ஐந்து பேரில் நான்கு பேர் நிரந்தரமாக்கப் பட்டனர். மணி மட்டும் நிரந்தரமாக்கப்படவில்லை.

"என்னண்ணே, இப்படிப் பண்ணிட்டாங்க? என்னை மட்டும் ஒதுக்கிட்டாங்களே!" என்றான் மணி, அதிர்ச்சியுடன்.

"அன்னிக்கு நாம பேசினதைக் கேட்ட சூப்பர்வைசர் ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தன் மானேஜர்கிட்ட போட்டுக் கொடுத்திருக்கான். நாங்க மூணு பேரும் பர்மனன்ட்டுங்கறதால, எங்களை ஒண்ணும் பண்ண முடியல. உன்னை மட்டும் பழி வாங்கிட்டான் மானேஜர் சரவணன்" என்றான் முருகன்.

"ரெண்டு பேர்ல யார் சொல்லியிருப்பாங்க? ரெண்டு பேருமே சொல்லியிருப்பாங்களோ?" என்றான் மணி.

"சங்கர் நம்மகிட்டல்லாம் நல்லா பழகறவரு. ஜாலியான ஆளு. அவரு சொல்லியிருக்க மாட்டாரு. மூர்த்திதான் பெரிய ஆஃபீசர் மாதிரி ராங்கியா இருப்பான். நம்பளை மதிச்சுப் பேச மாட்டான். வேலையில குத்தம் இருந்தா மட்டும்தான் கேப்பான். அவன்தான் ஆள்காட்டியா இருந்திருப்பான்."

"அவனை நான் சும்மா விடப் போறதில்ல" என்றான் மணி ஆத்திரத்துடன்.

"அவசரப்பட்டு எதையாவது பண்ணி மாட்டிக்காதே. மூர்த்திக்கு ஏதாவது ஆனா, முதல்ல உன் மேலதான் சந்தேகம் வரும். எனக்குத் தெரிஞ்ச ஒரு வெளி ஆளை வச்சு, நான் அவனை ரெண்டு தட்டு தட்டச் சொல்றேன்" என்றான் முருகன்.

"வேணாம் விடுங்கண்ணே!" என்றான் மணி.

"பாத்தியா, பயந்துட்டியே? ரெண்டு நாள் லீவு போட்டுட்டு, நீ ஊருக்குப் போயிட்டு வா. அந்த சமயத்தில மூர்த்தியை 'கவனிக்க' நான் ஏற்பாடு பண்றேன். நீ ஊர்ல இல்லாததால, உன் மேல சந்தேகம் வராது" என்றான் முருகன்.

ரவு பத்து மணி ஷிஃப்ட் முடிந்து, மூர்த்தி ஸ்கூட்டரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தபோது, இருவர் அவனை வழி மறித்துக் கீழே தள்ளி, உருட்டுக் கட்டைகளால் அடித்துப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

மூர்த்தி குணமாகி, மீண்டும் வேலைக்கு வர இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. அவனை அடித்தது யார் என்று போலீசால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

முதலில் தொழிலாளர்கள் மீது போலீசுக்கு சந்தேகம் வந்தது. ஆனால், மூர்த்திக்கு நினைவு திரும்பியதும், தொழிலாளிகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்காது என்று சொல்லி விட்டான். 

மூர்த்தியைத் தாக்க யாருக்கும் எந்த நோக்கமும் இல்லாததால், போலீஸ் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

சில மாதங்கள் கழித்து, முருகன் மணியிடம் சொன்னான். "தப்புப் பண்ணிட்டோம்னு தோணுதுடா."

"என்னண்ணே சொல்றீங்க?"

"மூர்த்திதான் நாம பேசினதை மானேஜர் கிட்ட சொல்லியிருப்பாருன்னு நெனச்சு, அவரை ஆள் வச்சு அடிச்சோம். ஆனா, இப்ப சங்கருக்கு அசிஸ்டன்ட் மேனேஜரா புரொமோஷன் கொடுத்திருக்காங்க. மூர்த்திதான் சீனியர். அவருக்குத்தான் முதல்ல புரொமோஷன் கொடுத்திருக்கணும். சங்கர் ஆள்காட்டி வேலை செஞ்சதாலதான், மானேஜர் சரவணன் சிபாரிசு பண்ணி, அவனுக்கு புரொமோஷன் வாங்கிக் கொடுத்திருப்பான்னு நினைக்கறேன்."

"இப்ப என்ன செய்யறது?" என்றான் மணி.

"உண்மை என்னன்னு மூர்த்திகிட்டயே கேட்டுட வேண்டியதுதான்."

ரவு ஷிஃப்டில் மூர்த்தி தனியாக இருந்தபோது, அவனிடம் முருகனும், மணியும் வந்தனர்.

"சார் உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்" என்றான் முருகன்.

"கேளு" என்றான் மூர்த்தி.

"நாலஞ்சு மாசம் முன்னே, லஞ்ச் டயத்தில, நானும் இவனும், இன்னும் ரெண்டு பேரும் மரத்தடியில உட்கார்ந்து, டெம்பரரி ஒர்க்கர்ஸை பர்மனண்ட் ஆக்காம இழுத்தடிக்கிறாருன்னு மானேஜரைக் குறை சொல்லிப் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப, நீங்களும், சங்கர் சாரும் மரத்தடிக்குப் பின்னால நின்னு சிகரெட் பிடிச்சுக்கிட்டிருந்தீங்க. நாங்க பேசினது கண்டிப்பா உங்க காதில விழுந்திருக்கும்."

"அதுக்கென்ன இப்ப?"

"அதை நீங்க மானேஜர்கிட்ட போய் சொன்னீங்களா?"

"சே, சே! நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கறவன் நான். உங்ககிட்டல்லாம் கூட வேலை சம்பந்தமா பேசறதைத் தவிர, வேற எதுவும் பேசறதில்லைங்கறது உங்களுக்குத் தெரியும். நான் ஏன் இப்படிப்பட்ட கேவலான காரியங்கள் எல்லாம் செய்யப் போறேன்? அதுவும், பாவம், பர்மனன்ட் ஆகலேங்கற வருத்தத்தில, இவன் ஏதோ சொல்லி இருப்பான். அதைப் போய், கோள் சொல்ற மாதிரி சொல்றது கொடுமை இல்ல? என்னைப் பத்தி இவ்வளவு மோசமாவா நெனைச்சுட்டீங்க?" என்று பொரிந்து தள்ளினான் மூர்த்தி.

மணிக்கு அழுகை வரும் போல் இருந்தது. முருகன் என்ன சொல்வதென்று தெரியாமல், சற்று யோசித்து விட்டு, "சரி. நீங்க சொல்லலேன்னா, சங்கர்தானே சொல்லியிருக்கணும்?" என்றான்.

"அது எனக்குத் தெரியாது" என்றான் மூர்த்தி.

"தெரியாதா, இல்ல சொல்ல மாட்டீங்களா?" என்றான் முருகன், விடாமல்.

மூர்த்தி உடனே பதில் சொல்லவில்லை.

"சொல்லுங்க சார். நான் பாதிக்கப்பட்டிருக்கேன். என்னைக் கெடுத்துட்டு, அவர் புரொமோஷன் வாங்கிட்டு சந்தோஷமா இருக்காரு!" என்றான் மணி.

"இங்க பாருங்கப்பா. நீங்க பேசினதை நான் போய் மானேஜர் கிட்ட சொல்லல. அது மாதிரி, மானேஜர்கிட்ட சங்கரோ, வேற யாரோ ஏதாவது சொல்லி, அது எனக்குத் தெரிஞ்சிருந்தா, அதை உங்ககிட்ட சொல்றதும் தப்புதானே? அவ்வளவுதான் சொல்ல முடியும். கவலைப்படாதே மணி. அநேகமா, அடுத்த மாசம் உன்னையும் பர்மனண்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன்" என்றான் மூர்த்தி.

ஒரு நல்ல மனிதனை ஆள் வைத்து அடித்து விட்டோமே என்று நினைத்து வருந்திய முருகன், "உங்க உடம்பு எப்படி சார் இருக்கு?" என்றான்.

"காயமெல்லாம் ஆறிடுச்சு. இருந்தாலும், அப்பப்ப அங்கங்க வலிக்குது. யாரு, எதுக்காக என்னை அடிச்சாங்கன்னே தெரியல" என்ற மூர்த்தி, "அப்பா!" என்று வலியில் முனகியபடியே, உடலை வளைத்துக் கொண்டான்.

குறள் 183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் 
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

பொருள்:  
புறம் கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்வதை விட, இறந்து போவது, அற நூல்கள் காட்டும் உயர்ந்த நிலையை அளிக்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


184. லஞ்ச் ரூம் 

சி ஈ ஓ ராஜாமணி அலுவலகத்துக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே, மூத்த அதிகாரிகள், மற்ற ஊழியர்கள் என்று சிறு சிறு குழுக்களாக அவர் அறைக்குள் நுழைந்து அவரைப் பாராட்டி விட்டு வந்தனர்.

முந்தைய நாள் இரவு, அவரது பேட்டி ஒரு பிசினஸ் தொலைக்காட்சி சேனலில் வெளியாகியிருந்தது. அதற்குத்தான் பாராட்டுக்கள்.

"பிரமாதம் சார்."

"நம்ப கம்பெனியோட இமேஜை நல்லா ப்ரொஜெக்ட் பண்ணினீங்க."

"இன்டர்வியூ பண்ணின லேடி கேட்ட கேள்விக்கெல்லாம் கையில் ஒரு பேப்பர் கூட வச்சுக்காம சரளமா பதில் சொன்னீங்க."

"அந்த லேடி உங்களை கார்னர் பண்ண ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினாங்க. ஆனா, நீங்க சளைக்காம பதில் சொல்லி அவங்களைத் திணற அடிச்சுட்டீங்க."

இது போன்ற பல பாராட்டுக்களை அலுவலகத்தில் அவரவர் நிலைக்கும், அறிவுக்கும் ஏற்ற விதத்தில் வழங்கி விட்டுப் போனார்கள்.

கண்ணன் மட்டும் போகவில்லை.

சிறிது நேரம் கழித்து, கண்ணன் அலுவல் தொடர்பாக சி ஈ ஓ வின் அறைக்குப் போனான். அப்போது அறையில் வேறு யாரும் இல்லை.

அலுவல் முடிந்ததும், சீட்டிலிருந்து எழுந்தபடியே, "சார்! நேத்து உங்க இன்டர்வியூ பாத்தேன், நல்லா இருந்தது" என்றான் கண்ணன்.

"உக்காருங்க" என்றார் ராஜாமணி. "உங்களோட மனம் திறந்த கருத்து எனக்கு வேணும்!"

தயக்கத்துடன் அமர்ந்த கண்ணன், "நல்லாத்தான் சார் இருந்தது" என்றான்.

"இல்ல. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க ஒப்புக்காகப் பேசறவர் இல்ல. சொல்லுங்க!" என்றார் ராஜாமணி, விடாமல்.

"ஒண்ணுமில்ல. நீங்க இன்னும் கூட நல்லா பண்ணியிருக்கலாம்கறது என்னோட அபிப்பிராயம்."

"அப்படின்னா?"

"தப்பா நெனச்சுக்காதீங்க. நீங்க இன்டர்வியூவுக்கு உங்களைத் தயார் செஞ்சுக்கலைன்னு எனக்குத் தோணிச்சு. உங்களுக்கு நேரம் இல்லாம இருந்திருக்கும். வேற யாரையாவது விவரங்களைத் தயாரிச்சுக் கொடுக்கச் சொல்லி,  அதை நீங்க எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம். இன்டர்வியூ பண்ணின லேடி நல்லா தயார் பண்ணிக்கிட்டு வந்தாங்க. புள்ளி விவரங்களோடு, ரொம்ப ஆழமான கேள்விகள் எல்லாம் கேட்டாங்க. நீங்க பல கேள்விகளுக்குப் பொதுப்படையாத்தான் பதில் சொன்னீங்க. உங்ககிட்டயும் புள்ளி விவரங்கள் இருந்திருந்தா, உங்க பதில்கள் இன்னும் ஆழமா இருந்திருக்கும்னு எனக்குத் தோணிச்சு. சாரி எகெய்ன்" என்றான் கண்ணன். தான் கொஞ்சம் அதிகமாகப் பேசி விட்டோமோ என்று அவனுக்குத் தோன்றியது.

"இல்ல, இல்ல. நான் நினச்சதைத்தான் நீங்க சொல்லியிருக்கீங்க. நீங்க சொன்னபடி புள்ளி விவரங்களோடு போகாதது தப்புதான். ஏதோ ஒரு நம்பிக்கையில போயிட்டேன். தாங்க்ஸ் ஃபார் யுவர் ஃபீட்பேக்" என்றார் ராஜாமணி.

ன்று பிற்பகல், உணவருந்த, கண்ணன் லஞ்ச் ரூமுக்குப் போனபோது, அவனுடைய சக ஊழியர்கள் சிலர் அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

"நேத்து நம்ம சி ஈ ஓ இன்டர்வியூ எப்படி இருந்தது?" என்று ஆரம்பித்தார் ஒருவர்.

"அதுதான் காலையில எல்லோரும் போய் அவரைப் பார்த்துப் பாராட்டிட்டு வந்துட்டமே!" என்றார் இன்னொருவர்.

"அது ஒரு ஃபார்மாலிட்டிக்காகத்தானே? உண்மையாவே எப்படி இருந்தது?"

"எனக்கென்னவோ அவ்வளவு திருப்திகரமாக இல்ல."

"கையில ஒரு பேப்பர் கூட இல்லாம, அரசியல் கட்சிக் கூட்டத்தில பேசப் போற மாதிரி, கையை வீசிக்கிட்டுப் போயிருக்காரு. அந்த லேடி எல்லா விவரங்களையும் கலெக்ட் பண்ணி வச்சுக்கிட்டு, கேள்வி மேல கேள்வி கேட்டுத் திணற வச்சுட்டாங்க."

"அதான் ஒரு அளவுக்கு சமாளிச்சுட்டாரே!"

"அவர் செஞ்சது சமாளிப்புதான். டிவி பாத்தவங்களுக்கே தெரிஞ்சிருக்கும், இவர்கிட்ட பதில் இல்ல, ஏதோ சொல்லி மழுப்பறார்னு."

"அந்த லேடி விடாக்கண்டன் மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. இவரும் பதில் சொல்லாம மழுப்பிக்கிட்டே இருக்காரு, நல்ல தமாஷ்தான். பிசினஸ் டிவியில என்டர்டெயின்மென்ட் ப்ரோக்ராம் மாதிரி இருந்தது!"

"மொத்தத்தில் சொதப்பல் இன்டர்வியூ. நம்ப கம்பெனி மட்டும் லிஸ்டட் கம்பெனியா இருந்தா, இந்த மாதிரி இன்டர்வியூவுக்கப்பறம் மார்க்கெட்ல ஷேர் விலை இன்னிக்குக் குறைஞ்சிருக்கும்."

"என்ன கண்ணன், நீங்க எதுவுமே சொல்லல?"

"காலையில சி ஈ ஒவைப் பார்த்தபோது, இதையெல்லாம் அவர்கிட்ட யாராவது சொன்னீங்களா?" என்றான் கண்ணன், சாதாரணமாகக் கேட்பது போல்.

"அது எப்படிச் சொல்ல முடியும்?"

'நான் சொல்லியிருக்கேனே!' என்று நினைத்துக் கொண்டான் கண்ணன்.

குறள் 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க 
முன்னின்று பின்நோக்காச் சொல்.

பொருள்:  
ஒருவரது குறைகளை அவர் முகத்துக்கு நேரே சொன்னாலும் சொல்லலாம். ஆனால் பின்விளைவுகளைச் சிந்திக்காமல் ஒருவர் இல்லாதபோது அவரைக் குறை கூறக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


185. உதவும் கரங்கள்

சேகர் தன் புதிய தொழிலில் முதலீடு செய்யப் பொருத்தமான ஒரு நபரைத் தேடிக் கொண்டிருந்தபோது, சங்கரலிங்கத்தின் பெயர் அவனுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.

அவரை நேரில் சந்திக்கும் முன், தன் நண்பன் ரகுவிடம் கலந்தாலோசித்தான் சேகர்.

"உனக்கு சங்கரலிங்கத்தைப் பத்தி என்ன தெரியும்?" என்றான் ரகு.

"அவர் நாலஞ்சு கம்பெனிகள்ள பார்ட்னரா இருக்காரு. நல்ல தொழிலா இருந்தா, அதில பங்குதாரரா சேருவாரு. பிசினஸ் எப்படி நடக்குதுன்னு கவனிப்பாரு. ஆனா நிர்வாகத்தில தலையிட மாட்டாரு. தர்ம சிந்தனை உள்ளவர். நிறைய நல்ல காரியங்களுக்கு உதவி செஞ்சிருக்காரு. பணம் இல்லாத சில பேருக்குத் தொழில் தொடங்க உதவி இருக்காரு" என்றான் சேகர்.

"இவ்வளவு நல்லவர் உன்னோட பார்ட்னரா இருக்க ஒத்துக்கணுமேடா!" என்றான் ரகு.

"கிண்டல் இருக்கட்டும். உங்கிட்ட கலந்து பேசாம நான் எதுவுமே செய்யறதில்லன்னு உனக்குத் தெரியும். நீ சில விஷயங்களைக் கூர்ந்து கவனிப்ப. சங்கரலிங்கத்தைப் பாத்துப் பேசலாம்னு இருக்கேன். நீயும் என் கூட வரணும்."

"முன்பின் தெரியாத உன்னைச் சந்திக்க அவர் ஒத்துக்கணுமே?"

"சங்கரலிங்கத்தை எனக்கு சிபாரிசு செஞ்சவரே, நான் அவரைச் சந்திக்கறதுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கார்."

"அப்புறம் என்ன? அவர் வீட்டுக்குப் போய், ஒரு காப்பி குடிச்சுட்டு வந்துடலாம். காப்பி கொடுப்பார் இல்ல?" என்றான் ரகு.

"காப்பி கொடுக்காட்டாப் பரவாயில்ல. பணம் கொடுக்க ஒத்துக்கிட்டாப் போதும்!"

"எவ்வளவு தாராள மனசுடா உனக்கு!"

ண்பர்கள் இருவரும் சங்கரலிங்கத்தை சந்திக்கச் சென்றனர். சங்கரலிங்கம் மிகவும் எளிமையானவராகத் தெரிந்தார். சேகர் சொன்ன விவரங்களைக் கேட்டுக் கொண்டார். அவனுடைய ப்ராஜக்ட் ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு, தன் ஆலோசகரிடம் கலந்தாலோசித்து ஒரு வாரத்தில் தன் முடிவைச் சொல்வதாகச் சொன்னார்.

அவர்கள் கிளம்ப யத்தனித்தபோது, "என்ன அவசரம்? வேலை முடிஞ்சதும் கிளம்பிடணுமா? கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டுப் போகலாமே" என்றார்.

"உங்க நேரத்தை வீணாக்க வேணாம்னுட்டுதான்..." என்றான் சேகர்.
.
"வீணாக்கப்படறதுக்குன்னே படைக்கப்பட்ட ஒரு விஷயம் நேரம்தான்!" என்ற சங்கரலிங்கம், தொடர்ந்து, அவர்களிடம் அரசியல், சினிமா, ஆன்மீகம் என்று பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். சில பெரிய மனிதர்களின் அந்தரங்கங்களைப் பற்றியும் பேசினார்.

தன்னுடன் பங்குதாரராகச் சேருவது என்று முடிவு செய்து விட்டாரோ என்று தோன்றியது சேகருக்கு.

"உங்களை எங்கிட்ட அனுப்பினானே ஜெகதீசன், அவனை உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார் சங்கரலிங்கம்.

"அவரை ஒரு மீட்டிங்கில் பாத்தேன். சும்மா பேசிக்கிட்டிருக்கச்சே, என்னோட திட்டத்தைப் பத்திச் சொன்னேன். அப்ப அவர் உங்களைப் பத்திச் சொன்னாரு. நான் உங்களைச் சந்திக்கணும்னு சொன்னேன். அப்புறம்தான், அவர் உங்ககிட்ட பேசி அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தாரு. மத்தபடி, அதிகப் பழக்கமில்லை" என்றான் சேகர். 

சொன்ன பிறகுதான், ஜெகதீசனுக்கு நெருக்கமில்லாதவன் என்றபோது தனக்கு ஏன் உதவ வேண்டும் என்று சங்கரலிங்கம் நினைப்பாரோ என்று தோன்றியது.

"அவனைப் பத்தின உண்மைகளைச் சொன்னா, தப்பா நெனச்சுப்பீங்களோன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். அவன் எனக்கு ரொம்ப வேண்டியவன்தான். பாக்கறதுக்குப் பரம யோக்கியன் மாதிரி இருப்பான். ஆனா, தினமும் தண்ணி போடணும் அவனுக்கு. இல்லாட்டா, தூக்கம் வராது. சின்ன வீடு வேற வச்சிருக்கான். ஒரு நாளைக்கு 'இவதான் என் நம்பர் டூ'ன்னு அவளை எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கறான்!"

சேகர் மௌனமாக இருந்தான். "நீங்க அவனுக்கு நெருக்கமானவங்க  இல்லேங்கறதாலதான், இதை உங்ககிட்ட சொன்னேன். நான் சொன்னேன்னு அவன்கிட்ட சொல்லிடாதீங்க!" என்றார் சங்கரலிங்கம்.

"சேச்சே! நான் ஏன் சார் அவர்கிட்ட இதைப் போய் சொல்லப் போறேன்?" என்றான் சேகர்.

சற்று நேரம் கழித்து, இருவரும் விடைபெற்றனர்.

"ரொம்ப எளிமையானவரா இருக்காரு இல்ல? அவர் ஒத்துக்கிட்டா, எனக்கு அதிர்ஷ்டம்தான்!" என்றான் சேகர்.

ரகு மௌனமாக இருந்தான்.

"என்னடா யோசிக்கிறே?"

"இல்ல. அவர் எந்த அளவுக்கு நல்லவரா இருப்பார்னு யோசிக்கிறேன்."

"ஏன் உனக்கு இந்த சந்தேகம்? அவரைப் பத்தி வெளியில நல்லபடியாதானே  சொல்றாங்க?"

"அவர் தன்னை ரொம்ப நேர்மையானவரா காமிச்சுக்கறாரு. ஆனா, உண்மையிலே அப்படி இருப்பாரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு."

"அதான் ஏன்னு கேட்டேன்."

"தேவையில்லாம, மத்தவங்களைப் பத்தி அவதூறு பேசினாரு! அதுவும், உன்னை அவர்கிட்ட அனுப்பின ஜெகதீசனைப் பத்தி உன்கிட்டயே தப்பாப் பேசினாரு. அதுக்கு என்ன அவசியம்? இப்படியெல்லாம் மத்தவங்களைப் பத்தி அவங்க முதுகுக்குப் பின்னால அவதூறாப் பேசறவங்க நேர்மையா நடந்துப்பாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு!"

"நான் அப்படி நினைக்கல. இது மாதிரி அக்கப்போர் பேசறதெல்லாம் மனித இயல்பு. இதை வச்சு ஒத்தரோட நேர்மையை எடைபோட முடியுமா?" என்றான் சேகர்.

"சரி. முதல்ல, அவர் தன்னோட முடிவைச் சொல்லட்டும். ஆனா நீ அவசரப்பட்டு முடிவு பண்ணிடாதே!" என்றான் ரகு.

த்து நாட்கள் கழித்து, சேகர் ரகுவுக்கு ஃபோன் செய்தான். "டேய்! சங்கரலிங்கம் என் பிசினஸில் முதலீடு பண்ண ஒத்துக்கிட்டாரு" என்றான்.

"ம்" என்றான் ரகு.

"ஆனா, நான் அவரோட சேர்ந்து தொழில் பண்ணப் போறதில்ல."

"ஏன், நான் சொன்னதுக்காகவா?"

"நீ சொன்னபோது, அதை நான் ஏத்துக்கல. ஆனா, ரெண்டு நாள் முன்னாடி, தற்செயலா நான் ஒத்தரை சந்திச்சேன். அவர் மாடுலர் கிச்சன் எல்லாம் டிசைன் பண்ணி, உருவாக்கறதில அனுபவம் உள்ளவர். அவர் சங்கரலிங்கத்துக்கிட்ட உதவி கேட்டு, அவரும் முதலீடு பண்ண ஒத்துக்கிட்டிருக்காரு. ஆர்டர் பிடிக்கறதிலிருந்து, டிசைன் பண்ணி, ஃபேப்ரிகேட் பண்ணி, இன்ஸ்டால் பண்றது வரை எல்லாம் அவர்தான் செஞ்சிருக்கார். லாபத்தில் பாதின்னு பேச்சு. ஆனா, வரவு செலவெல்லாம் சங்கரலிங்கத்தோட பாங்க் அக்கவுண்ட் மூலமாத்தான் நடந்திருக்கு. சங்கரலிங்கம் பொய்க் கணக்கெல்லாம் காட்டி, இவரை நிறைய ஏமாத்திட்டாராம். ஒரு வருஷம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாம, இவரு விலகி வந்துட்டாராம். அவர் சொன்னதைக் கேட்டதும்,  நான் போய் மாட்டிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்."

"கங்கிராசுலேஷன்ஸ்! நல்ல வேளை நீ தப்பிப் பிழைச்சுட்டே!"

"மத்தவங்க முதுகுக்குப் பின்னால, அவங்களைப் பத்தி மட்டமாப் பேசறவங்க நேர்மையானவங்களா இருக்க மாட்டாங்கங்கற உன்னோட தியரி சரின்னு நிரூபணம் ஆயிடுச்சு" என்றான் சேகர்.

"இது என்னோட தியரி இல்ல. திருவள்ளுவரோட தியரி!" என்றான் ரகு.

குறள் 185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
புன்மையாற் காணப் படும்

பொருள்:  
ஒருவன் புறம் சொல்லும் இயல்பு உடையவனாக இருந்தால், அவன் அறத்தைப் பற்றிப் பேசினாலும், அவன் அறவழியில் நடப்பவனாக இருக்க மாட்டான்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


                                       186. செண்பகமே, செண்பகமே! 
  
செண்பகமும், ஜகதுவும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு உரையாடலும் அரை மணி நேரமாவது நடக்கும்.

கைபேசி நிறுவனங்கள் வழங்கும் 'எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்' திட்டங்களை இருவரும் அதிக அளவு பயன்படுத்திக் கொண்டனர்.

பேச்சு, பெரும்பாலும், அவர்கள் இருவருக்கும் தெரிந்தவர்களைப் பற்றித்தான் இருக்கும். 

மற்றவர்களின் பிரச்னைகள், அவர்கள் செய்த தவறுகள், முட்டாள்தனமான செயல்கள், அவர்கள் பட்ட அவமானங்கள், அவர்களது நியாயமற்ற செயல்பாடுகள் ஆகியவை பற்றித்தான் இருக்கும்.

சில சமயம், ஒருவருக்குத் தெரிந்த விஷயத்தை இன்னொருவரிடம் சொல்வார்கள். சில சமயம், இருவருக்குமே தெரிந்த விஷயத்தை அலசுவார்கள்.

தினசரி தொலைபேசி உரையாடல் தவிர, வாரம் ஒருமுறை கோவிலில் சந்தித்துக் கொள்வார்கள். கோவிலில் தரிசனம் முடிந்ததும், ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒரு மணி நேரமாவது பேசுவார்கள். 

அந்த வாரம் தொலைபேசியில் பேசிக்கொண்ட விஷயங்களை அசை போடுவது தவிர, புதிய நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் அலசுவார்கள்.

மற்றவர்களின் குறைகளைப் பற்றிப் பேசி மகிழ்வதே இவர்கள் நட்பைப் பெரும் அளவில் வளப்படுத்தி வந்தது என்று சொல்லலாம்.

"அப்புறம்?" என்றாள் ஜகது.

"புதுசா என்ன இருக்கு? எல்லாம் பழைய கதைதான்" என்று அலுத்துக் கொண்டாள் செண்பகம்.

"ஜானகி வாசல்ல வந்த புடவைக்காரர்கிட்ட ஒரு மட்டமான புடவையைப் பட்டுப் புடவைன்னு நெனச்சு, ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வாங்கி ஏமாந்தாளே, அது அவ புருஷனுக்குத் தெரியுமா?" என்று எடுத்துக் கொடுத்தாள் ஜகது.

"ஆம்பிளைங்களுக்கு இதெல்லாம் என்ன தெரியும்? ஏதோ பொண்டாட்டி சீப்பா புடவை வாங்கிட்டான்னு நெனச்சுக்கிட்டிருப்பாரு. நாளைக்கு, வேற ஏதாவது பட்டுப்புடவையைக் காட்டி, இதுதான் நான் குறைஞ்ச விலைக்கு வாங்கினதுன்னு சொன்னா கூட, அவரால கண்டு பிடிக்க முடியாது."

"நல்ல வேளை, அவ வீட்டில மாமியார், நாத்தனார் யாரும் இல்ல. இருந்திருந்தா, அவ சாயம் வெளுத்திருக்கும்!"

"சாயம் வெளுத்தித்திருக்கும்னு நீ சொன்னதும், ஞாபகம் வருது. சுகுணாவோட புருஷன் ரெண்டு மாசமா வேலைக்குப் போகாம, வீட்டிலே உக்காந்துக்கிட்டிருக்காரு இல்ல?"

"ஆமாம். அவ கூட, அவரு ஏதோ பரீட்சை எழுதறதுக்காக, லீவ் போட்டுட்டுப் படிச்சுக்கிட்டிருக்காருன்னு சொன்னாளே!"

"அதெல்லாம் பொய்யின்னு இப்ப தெரிஞ்சு போச்சு. அவரு ஏதோ தில்லுமுல்லு பண்ணிட்டார்னு அவர் கம்பெனியில அவரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாம். திரும்ப எடுத்துப்பாங்களான்னு தெரியல. இதை மறைக்கத்தான், படிக்கிறாரு, பரீட்சை எழுதப் போறாருன்னு கதை விட்டிருக்கா அவ!"

"எப்படிப் புளுகியிருக்கா பாரேன்! நமக்கெல்லாம் இப்படிப் பொய் சொல்ல வருமா?"

இந்த ரீதியில். உரையாடல். இன்னும் சில நிமிடங்கள், இன்னும் சில பெண்களைப் பற்றித் தொடர்ந்தது.

செண்பகத்துக்கு நீண்ட நேரம் ஜகதுவின் கைபேசித் தொடர்பு கிடைக்கவில்லை. 

'வாடிக்கையாளர் வேறொருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்' என்ற அறிவிப்புதான் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.

ஒருவேளை, ஜகதுவின் கைபேசியில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்று நினைத்து, செண்பகம் ஜகதுவின் லேண்ட்லைனுக்கு ஃபோன் செய்தாள்.

ஜகதுவின் பெண்தான் ஃபோனை எடுத்தாள். "அம்மா செல்ஃபோன்ல பேசிக்கிட்டிருக்காங்களே. கூப்பிடறேன் இருங்க" என்று சொல்லி விட்டு, ரிசீவரை எடுத்து வைத்து விட்டு, "அம்மா, ஃபோன்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள்.

தொலைபேசிக்குச் சற்றுத் தொலைவிலிருந்து, ஜகது செல்ஃபோனில் யாரிடமோ பேசுவது செண்பகத்துக்குக் கேட்டது. 

முதலில் அசிரத்தையாகக் காத்திருந்த செண்பகம், ஜகது தன் பெயரைக் குறிப்பிட்டது காதில் விழுந்ததும், கூர்ந்து கவனித்தாள். ஜகது பேசிக் கொண்டே தொலைபேசியை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்ததால், அவள் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் கேட்டது.

"....ஆமாம். நம்ம செண்பகம்தான்! நம்ப முடியல இல்ல? அதான், அவ புருஷனுக்குத் தெரியாம, பணத்தை அங்கே இங்கேன்னு நிறைய ஒளிச்சு வச்சிருக்கா. பழைய 500, 1000 ரூபா நோட்டு செல்லாம போனதும், ஒவ்வொரு டப்பாவாத் தேடி, ஒளிச்சு வச்சிருந்த பணம் இருபதாயிரம் ரூபாயை மாத்திட்டா...அவ புருஷன்கிட்ட சொல்லிட்டுத்தான். அத்தனை பணத்தை அக்கவுன்ட்லதான போடணும்! அவருக்குத் தெரியாம போகுமா?...பின்ன? திட்டாம இருப்பாரா? 'நான் ஆயிரம், ரெண்டாயிரம் ரூபா இல்லாம, எத்தனையோ தடவை கஷ்டப்பட்டிருக்கேன். நீ இருபதாயிரம் ரூபாயைப் பதுக்கி வச்சுக்கிட்டு, எனக்கு நெருக்கடியான நேரங்கள்ள கூட உதவி செய்யாம இருந்திருக்கே!'ன்னு சொல்லி, காச்சு மூச்சுன்னு கத்தி இருக்காரு. எங்கிட்ட சொல்லி அழுதா....வேடிக்கை என்னன்னா, அவளுக்குத் தெரியாம, ஐயாயிரம் ரூபாய்க்கு பழைய நோட்டு வேற ஒரு டப்பால இருந்திருக்கு! அது காலி டப்பா, ரெண்டு நாள் முன்னாலதான் எதேச்சையாத் திறந்து பாத்திருக்கா. அவளுக்கு ரொம்ப ஷாக் ஆயிடுச்சு....இப்ப ஒண்ணுமே பண்ண முடியாதே!.....புருஷன்கிட்ட எப்படிச் சொல்லுவா? சொன்னா, கிழி கிழின்னு கிழிச்சுட மாட்டாரு?.....இப்படியா ஒத்தி இருப்பா?....நாமெல்லாம் செண்பகம் ரொம்ப கெட்டிக்காரின்னு நெனச்சுக்கிட்டிருக்கோம்....இப்படி அசட்டையா இருந்திருக்கா! என்ன பண்றது?...சரி. லேண்ட்லைன்ல யாரோ கூப்பிடறாங்க. நான் அப்புறம் பேசறேன். ...ஹலோ. யாரு?"

செண்பகம் எதுவும் பேசாமல் இணைப்பைத் துண்டித்தாள்.

குறள் 186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் 
திறன்தெரிந்து கூறப் படும்.
 
பொருள்:
மற்றவர்கள் மீது புறம் கூறுபவனின் குற்றங்களை மற்றவர்கள் அவன் முதுகுக்குப் பின்னால் பேசும் நிலை ஏற்படும். 

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


187. நண்பனிடம் ஒரு குறை!

"தீபக் எங்கடா?"
"முகேஷோடதான் சுத்திக்கிட்டிருப்பான். கழுதை கெட்டா குட்டிச்சுவரு."

"தீபக்கைக் கழுதைன்னு சொல்லு. முகேஷை ஏன் குட்டிச்சுவருன்னு சொல்ற? அவன் அரண்மனை மாதிரி வீட்டிலல்ல இருக்கான்!"

நண்பர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தபோது, தீபக் முகேஷின் அரண்மனை போன்ற வீட்டில்தான் இருந்தான்.

"நாளைக்கு என்னடா ப்ரொக்ராம்?" என்றான் முகேஷ்.

"திங்கட்கிழமை செமினார் இருக்கே. அதுக்குத் தயார் பண்ணணும்."

"ஆமாம் சொன்னியே! மதுராந்தகம் பக்கத்தில இருக்கே அந்த காலேஜ், அங்கதானே?"

"ஆமாம்."

"நம்ப கார்லியே போயிடு. டிரைவரை அனுப்பறேன்."

"எதுக்குடா? நாங்க மூணு பேரு சேர்ந்து போறோம். பஸ்லியே போய்க்கறோம்."

"பரவாயில்ல. காரும் சும்மாதான் இருக்கப் போகுது. டிரைவரும் சும்மாதான் இருக்கப் போறாரு" என்றான் முகேஷ். "நானும் உங்களோட வரலாம், ஆனா, அன்னிக்கு ஒரு டெஸ்ட் இருக்கு."

"நீ வராதபோது, எதுக்குடா காரு? நாங்க போய்க்கறோம்" என்றான் தீபக்.

"ரெண்டு பஸ் மாறிப் போகணும். நீங்க போய்ச் சேர்ரதுக்குள்ள, செமினார் முடிஞ்சுடும். என் கார் உனக்குப் பயன்படக் கூடாதா என்ன?"

'இவனுக்கு என் மேல் ஏன் இத்தனை அன்பு?' என்று நினைத்துக் கொண்டான் தீபக்.

தீபக்கின் அப்பா ஒரு கட்டிட ஒப்பந்தக்காரரிடம் சூப்பர்வைசராகப் பணிபுரிபவர். அவர்கள் குடும்பம் அவ்வளவு வசதியான குடும்பம் அல்ல. கல்லூரியில் தீபக்குக்கு முகேஷின் நட்புக் கிடைத்து, அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமானபோது, தீபக்கின் அப்பா, "முகேஷோட அப்பா பெரிய பிசினஸ்மேன். அவன்கிட்ட ஜாக்கிரதையாப் பழகு. ரொம்ப வச்சுக்காதே. பணக்காரங்களோட சிநேகம் எப்பவுமே ஆபத்தானது" என்று எச்சரித்தார்.

ஆனால், முகேஷ் எந்த வித்தியாசமும் பாராட்டவில்லை. தீபக்கின் பெற்றோர்களிடம் மரியாதையுடனும், அக்கறையுடனும்தான் நடந்து கொண்டான். தீபக்கின் வீட்டுக்கு வரும்போது, தன் வீடு போல் உரிமையுடன் நடந்து கொண்டான்.

தீபக்கின் அம்மாவிடம், "ஆன்ட்டி, அன்னிக்கு தீபக்குக்கு லஞ்சுக்கு சப்பாத்தியும், ஒரு அருமையான கூட்டும் செஞ்சு கொடுத்திருந்தீங்களே, அது மாதிரி இன்னிக்கு எனக்கு செஞ்சு கொடுங்களேன்!" என்பான்.

தீபக்கின் அப்பாவே மனம் மாறி, "இவ்வளவு நல்லவனா இருக்கானே! அவன் பணத்தை விடு. இவ்வளவு அருமையான குணமுள்ளவன் உனக்கு நண்பனாக் கிடைக்கறதுக்கு நீ ரொம்பக் கொடுத்து வச்சிருக்கணும்" என்றார்.

முகேஷின் காரில் செமினாருக்குச் சென்று விட்டு வந்த சில நாட்களுக்குப் பிறகு, ராஜு என்ற நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தான் தீபக்.

"முகேஷ் ரொம்ப நல்லவன்தான். ஆனா அவன்கிட்ட பணக்காரத் திமிர் கொஞ்சம் இருக்கு" என்றான் தீபக்.

"என்னடா இப்படிச் சொல்ற? அவன் உன்னோட பெஸ்ட் ஃபிரண்ட் ஆச்சே!" என்றான் ராஜு.

"நம்மளைப் பொறுத்தவரையிலே, அவன் ரொம்ப நல்லவன்தான். ஆனா அவங்க வீட்டில, வேலைக்காங்க கிட்ட கொஞ்சம் கூட மனிதாபிமானம்  இல்லாம நடந்துக்கறாங்க."

"அவங்க அப்பா அம்மா அப்படி இருந்தா, அதுக்கு முகேஷ் என்ன செய்வான்? ஆமாம், இது உனக்கு எப்படித் தெரியும்?" என்றான் ராஜு.

"அன்னிக்கு மதுராந்தகத்துக்கு அவன் கார்லதானே போனோம்? அப்ப டிரைவர் எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டார். அவரையே ரொம்ப வாட்டி வதைக்கறாங்களாம். வேலை இல்லாட்டா கூட, சீக்கிரம் வீட்டுக்குப் போகவோ, லீவு எடுக்கவோ, அனுமதிக்க மாட்டாங்களாம். முகேஷ் கூடக்  கடுமையாத்தான் நடந்துப்பான்னு அவர் சொன்னாரே! நம்ப முகேஷ் இப்படி இருக்கறது எனக்கு வருத்தமா இருக்கு" என்றான் தீபக்.

சில நாட்களில், முகேஷிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. தீபக்கிடம் பேசுவதைத் தவிர்த்தான். மற்ற நண்பர்களிடம் அதிகம் பேசினான். தீபக் தானே சென்று பேசியபோதெல்லாம் கூட, வேலை இருப்பதாகச் சொல்லி ஒதுங்கிக் கொண்டான்.

தீபக்குக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ஒருவேளை, தான் ராஜுவிடம் பேசியதை, அவன் முகேஷிடம் சொல்லியிருப்பானோ?

ராஜுவிடமே கேட்டான். முதலில் மறுத்த ராஜு, தீபக் திரும்பத் திரும்பக் கேட்டதும் தான் சொன்னதாக ஒப்புக் கொண்டான்.

"ஏண்டா சொன்ன?" என்றான் தீபக், கோபத்துடன்.

"பேச்சுவாக்கில, வாய் தவறிச் சொல்லிட்டேன். முகேஷ் குடைஞ்சு கேட்டதும், எல்லாத்தையும் சொல்ல வேண்டியதாயிடுச்சு" என்றான் ராஜு.

"ஏண்டா, உன்னை நம்பி நான் ஒரு விஷயம் சொன்னா, அதைப் போய் முகேஷ் கிட்ட சொல்லி இருக்கியே?  இது தப்புன்னு தோணல உனக்கு?"

"நிறுத்துடா! உன்னோட பெஸ்ட் ஃபிரண்டைப் பத்தி, நீ எங்கிட்ட குறை சொல்லிப் பேசியிருக்கே. அது உனக்குத் தப்பாத் தெரியல. நான் அதை அவன்கிட்ட சொன்னதுதான் தப்பாத் தெரியுதா?" என்றான் ராஜு.

தீபக் பதில் சொல்லவில்லை.

குறள் 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி 
நட்பாடல் தேற்றா தவர்.

பொருள்:  
இனிமையாகப் பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர்கள். நண்பர்களைப்  பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசி, நண்பர்களை இழந்து விடுவார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


188. ஊரு விட்டு ஊரு வந்து...

பக்கத்து ஃபிளாட்டில் புதிதாகக் குடி வந்திருந்தவரை ஒரு வாரம் கழித்துத்தான் சந்தித்தான் கண்ணன். அதுவரை, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை.  

தன் பெயர் விஸ்வநாதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், டெல்லியில் ஒரு நிறுவனத்திலிருந்து ஒய்வு பெற்று, சென்னைக்கு வந்திருப்பதாகச் சொன்னார்.

அடுத்து நிகழ்ந்த சில சந்திப்புகளில், இருவரும் தங்களைப் பற்றி மேலும் விவரங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

விஸ்வநாதன் பணி செய்த நிறுவனத்தில் கண்ணனின் நண்பன் ஒருவனின் உறவினர் உயர் பதவியில் இருப்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

"உங்களுக்கு பாலகிருஷ்ணனைத் தெரியுமா?" என்றான் கண்ணன்.

"தெரியாம என்ன? அவனோட சேர்ந்துதானே இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்கேன்?" என்ற விஸ்வநாதன், "உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும்? சொந்தமா?" என்றார் எச்சரிக்கை உணர்வுடன்.

"எனக்கு சொந்தம் இல்லை. என் நண்பர் ஒத்தருக்கு தூரத்து சொந்தம். ஒரு நிகழ்ச்சியில என் நண்பர் அவரை அறிமுகப்படுத்தி வச்சார். அப்ப பாத்ததுதான். உங்க கம்பெனி பேர் சொன்னதும், அவர் ஞாபகம் வந்தது. அதான் கேட்டேன்" என்றான் கண்ணன்.

"உங்களுக்கு நெருக்கமானவனா இருப்பானோன்னு நெனச்சுதான் கேட்டேன்" என்ற விஸ்வநாதன், "அவன் என்னை விட வயசிலும் அனுபவத்திலும் சின்னவன். நான் வேற ஒரு கம்பெனியிலிருந்து எங்க கம்பெனிக்கு வந்து சேர்ந்தேன். அதனால, கம்பெனியில அவன் எனக்கு சீனியராயிட்டான். வேலையெல்லாம் அவ்வளவாத் தெரியாது. பல சமயம் என்கிட்டத்தான் சந்தேகம் கேட்டுப்பான். ஆனா, மேல இருக்கறவங்களுக்கு நல்லா ஜால்ரா போடுவான். இந்தியில சம்சாகிரின்னு சொல்லுவாங்க. அவனுக்கே ஆஃபீஸ்ல சம்சான்னு ஒரு பேரு உண்டு. அதனால, மள மளன்னு பிரமோஷன் வாங்கிக்கிட்டு மேல போயிட்டான். இப்ப ஜெனரல் மானேஜரா இருக்கான். என்னால அசிஸ்டன்ட் ஜெனரல் மானேஜருக்கு மேல உயர முடியல. படிப்பு, அறிவு, திறமை, கடின உழைப்பு இதுக்கெல்லாம் எங்க மதிப்பு இருக்கு?" என்றார்.

சில வாரங்கள் கழித்து, சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்த பாலகிருஷ்ணன் விஸ்வநாதனைப் பார்க்க அவர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது, விஸ்வநாதன் பாலகிருஷ்ணனைக் கண்ணன் வீட்டுக்கு அழைத்து வந்தார். "கண்ணன் சார்! பாலகிருஷ்ணனை உங்களுக்குத் தெரியும்னு சொன்னீங்களே, அதான் அழைச்சுக்கிட்டு வந்தேன்" என்று சொல்லி விட்டு, "நீங்க பேசிக்கிட்டிருங்க" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

"எப்பவோ ஒரு தடவை பாத்ததை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே! விஸ்வநாதன் சொன்னதும், எனக்கு ரொம்ப ஆச்சரியம். உண்மையில, உங்களை எனக்கு சட்னு ஞாபகம் வரல. அப்புறம்தான், நீங்க ரவிச்சந்திரனோட நண்பர்னு நினைவு வந்தது" என்றார் பாலகிருஷ்ணன்.

சற்று நேரம் கழித்து, பேச்சு விஸ்வநாதன் பற்றித் திரும்பியது.

"விஸ்வநாதனை உங்களுக்கு ரொம்ப நாளாத் தெரியுமா?" என்றான் கண்ணன், ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக.

"அவன் எங்க கம்பெனியில சேர்ந்ததிலிருந்தே தெரியும். விஸ்வநாதனும், நானும் கொலீக்ஸ். ரெண்டு பேரும் ஒரே லெவல்லதான் இருந்தோம். அவன் சென்னையிலிருந்து டெல்லிக்கு வந்து எங்க கம்பெனியில சேந்தப்ப, கொஞ்ச நாள் வீடு கிடைக்காம கஷ்டப்பட்டான். சென்னையில வேற வீட்டைக் காலி பண்ணிட்டான். அப்ப என் வீட்ல ஒரு எக்ஸ்டரா பெட்ரூம் இருந்தது. அதனால அவனுக்கு வீடு கிடைக்கிற வரை, குடும்பத்தோட என் வீட்ல இருக்கச் சொன்னேன். ரெண்டு மாசம் அவன் குடும்பம் என் வீட்டுலதான் இருந்தது. அதனால, முதலிலிருந்தே எங்க ரெண்டு குடும்பத்துக்கிடையில நல்ல நட்பு ஏற்பட்டுப் போச்சு. அவனுக்கு பிரமோஷன் எல்லாம் கொஞ்சம் லேட்டாகக் கிடைச்சது. அது அவனுக்கு ஒரு குறைதான். எனக்குக் கொஞ்சம்  அதிர்ஷ்டம். இருந்தது. அதனால நான் கொஞ்சம் சீக்கிரம் மேல போயிட்டேன்!" என்றார் பாலகிருஷ்ணன், சிரித்தபடி.

பாலகிருஷ்ணன் விடைபெற்றுச் சென்றதும், கண்ணனின் மனைவி புஷ்பா கண்ணனிடம், "ஏங்க, முன்பின் தெரியாதவரைக் குடும்பத்தோட தன் வீட்டில தங்க வச்சிருக்காரு இவரு. ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில நிறைய வருஷம் வேலை செஞ்சுக்கிட்டு நண்பர்களா இருந்திருக்காங்க. இவரைப் பத்தியே உங்ககிட்ட குறை சொல்லிப் பேசி இருக்காரு விஸ்வநாதன். நாளைக்கு நம்பளைப் பத்தி, யார்கிட்ட என்ன பேசுவாரா தெரியாது. அவர்கிட்ட அதிகம் பழக்கம் வச்சுக்காதீங்க!" என்றாள்.
    
குறள் 188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் 
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

பொருள்:  
நெருங்கிப் பழகியவர்களின் குற்றம் குறைகளைக் கூடப் புறம் கூறித் தூற்றும் இயல்பு உடையவர்கள், மற்றவர்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்வார்களோ!

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


189. துணைத் தலைவர் 

"ஐயா, இவருதான் நம்ப கட்சியோட சமூக ஊடகப்  பொறுப்பாளர்  அருண்மொழி!" என்று அறிமுகம் செய்தார் முத்து. அவர் கட்சியின் ஒரு மூத்த தலைவர்.

"வணக்கம் ஐயா!" என்றான் அருண். அவனுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுக்கும்போதே, அருண் என்ற அவன் பெயரை, அருண்மொழி என்று நீட்டி விட்டார் கட்சித் தலைவர் வெற்றிவேந்தன்.

"சமூக ஊடகப் பொறுப்பாளரா? அப்படீன்னா?" என்றார் கட்சியின் துணைத் தலைவர் வையாபுரி, அவன் வணக்கத்தைப் பொருட்படுத்தாமல்.

"அதாங்க இந்த ஃபேஸ்புக், ட்விட்டர்னு எல்லாம் சொல்றாங்களே, அது மாதிரி சமூக வலைத்தளங்கள்ள நம்ப கட்சிக் கொள்கைகளைப் பரப்புவது, மத்த கட்சிகள், ஊடகங்களோட விமரிசனங்களுக்கு பதில் சொல்றது இந்த மாதிரி வேலை. இப்பதான் தலைவர் இவரை நியமிச்சாரு. நியமிச்ச உடனேயே, உங்ககிட்ட அழைச்சுக்கிட்டுப் போய் அறிமுகப்படுத்தச் சொன்னாரு" என்று விளக்கினார் முத்து.

துணைத்தலைவர் என்ற முறையில் வையாபுரியை எந்த விஷயத்திலும் கலந்தாலோசிக்காவிட்டாலும், இது போன்ற மரியாதைகளைத் தரத்  தவறுவதில்லை கட்சித் தலைவர் வெற்றிவேந்தன்.

"நல்லா வேலை பாரு தம்பி!" என்று சொல்லி, அருணை அனுப்பி வைத்தார் வையாபுரி.

அருண் சென்றதும், "எதுக்குய்யா இதெல்லாம்? எல்லா விமரிசனங்களுக்கும் சரியானபடி பதில் கொடுக்க, அதிர்வேட்டு அய்யாக்கண்ணு மாதிரி பேச்சாளர்கள் எல்லாம் இருக்காங்களே!" என்றார் வையாபுரி.

"இப்பல்லாம், இந்த சமூக வலைத்தளங்கள் ரொம்ப முக்கியமாயிடுச்சு ஐயா. இதோட முக்கியத்துவம் தெரிஞ்சுதான், தலைவர், ஒரு பெரிய ஐடி கம்பெனியில நல்ல வேலையில் இருந்த இந்தப் பையனை, நிறைய சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்திருக்காரு" என்றார் முத்து. 

'தலைவர் ஏன் உங்களைக் கலந்து ஆலோசிக்கறதில்லைன்னு இப்பத்தான் தெரியுது!' என்று  மனதுக்குள் நினைத்துக் கொண்டார் .

ருண்மொழி வேலைக்குச் சேர்ந்து சில வாரங்களில், அவனுடைய செயல்பாடுகளால், கட்சியின் சமூக வலைத்தளப் பிரசாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. 

தன் தொழில் நுட்ப அறிவையும், கட்சியில் இருந்த கற்பனை வளம் மிகுந்த சில இளைஞர்களின் படைப்பாற்றலையும் இணைத்து, சிறப்பாகப் பணியாற்றி வந்தான்அருண்.

இரண்டு முறை தலைவரைச் சந்தித்தான். அவர் அவனுடைய பணியைப் பாராட்டினார். அவனுடைய சில நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதிலிருந்து, அவர் அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார் என்று புரிந்து கொண்டான் அருண்.

துணைத்தலைவர் வையாபுரியையும் இரண்டு மூன்று முறை சந்தித்தான். அவர் அவனிடம் அதிகம் பேசவில்லை. "என்ன தம்பி, நல்லா வேலை செய்யறதா சொல்றாங்க. வாழ்த்துக்கள்!" என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.

ஆனால், சில தலைவர்களிடம் அவர் அவனைப் பற்றிக் கடுமையாக விமரிசித்து வருவது அவன் காதுக்கு எட்டியது. 

"என்னய்யா செய்யறான் அவன்? தெண்டச் சம்பளம். தலைவர் எங்கிட்ட ஆலோசனை கேட்டா, இந்த மாதிரி வேலையெல்லாம் கட்சிக்குத் தேவையில்லன்னு சொல்லுவேன். தொண்டர்கள் எல்லாம் எங்கிட்ட வந்து புலம்பறாங்க" என்று சொன்னாராம்.

நேரில் சந்திக்கும்போது அவர் தன்னைக் குறை கூறினால், தான் செய்வதை அவருக்கு விளக்கலாம் என்று நினைத்தான் அருண். அதற்காகவே, அவரை சிலமுறை நேரில் சந்தித்தான். ஆனால், அப்போதெல்லாம் அவர் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. 

ஒருமுறை, "ஐயா, குறை ஏதாவது இருந்தா சொல்லுங்க" என்று கூடச் சொன்னான்.

ஆனால் அவர், "எனக்கு இதுபத்தியெல்லாம் எதுவும் தெரியாதுப்பா, நான் பழைய ஆளு. கட்சிப் பத்திரிகையைப் படிச்சுட்டு, அதில ஏதாவது குறை இருந்தா சொல்லுவேனே தவிர, இந்த க்விட்டர் எல்லாம் படிக்கிறதில்லை" என்று சொல்லி விட்டார்.

தலைவர் தன்னைப் பாராட்டும்போது, துணைத்தலைவர் சொல்வதை, அதுவும் யாரிடமோ சொல்வதை, ஏன் பொருட்படுத்த வேண்டும் என்று சில சமயம் நினைப்பான் அருண். 

ஆயினும், அவர் தன்னைக் குறை கூறி வந்தது அவனுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்து வந்தது.

ஆயினும் அவர் தன்னைக் குறை கூறி வந்தது அவனுக்கு உறுத்தலாகவே இருந்து வந்தது.

ஒருமுறை கட்சித் தலைவரிடம் தனியாகப் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது அவரிடம், "ஐயா! தப்பா நினைச்சுக்காதீங்க. துணைத்தலைவருக்கு என் மேல ஏதோ குறை இருக்கிற மாதிரி இருக்கு. எங்கிட்ட ஒண்ணும் சொல்லல. ஆனா, மத்தவங்ககிட்ட சொல்றாரு. நீங்க பாராட்டறீங்க. ஆனா, அவரு இப்படிப் பேசறதைக் கேள்விப்படும்போது வருத்தமா இருக்கு. என்ன தப்பு பண்றேன்னே தெரியல" என்றான்.

தலைவர் உடனே பதில் சொல்லவில்லை. சற்று நேரம் கழித்து, "பாக்கலாம். நீ கவலைப்படாதே!" என்றார்.

ரண்டு நாட்கள் கழித்து, தலைவருக்கு நெருக்கமானவர் என்று கருதப்பட்ட செங்கை சிங்கம் என்ற மூத்த தலைவரிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அவன் அலுவலகம் இருக்கும் கட்சியின்  தலைமை அலுவலகத்திலேயே, ஒரு தனி அறையில் இருந்த செங்கை சிங்கத்தைச் சந்தித்தான் அருண்.

"தலைவர்கிட்ட ஏதோ குறைப்பட்டுக்கிட்டீங்களாமே!" என்றார் சிங்கம்.

"தப்பா ஒண்ணும் இல்லீங்க. துணைத்தலைவர்..." என்று ஆரம்பித்தான் அருண். தான் துணைத்தலைவர் மீது குற்றம் சொன்னதாகக் கருதப்பட்டு, விஷயம் பெரிதாகி விட்டதோ என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது.

"இருங்க" என்று  குறுக்கிட்டார் சிங்கம். "உங்ககிட்ட விளக்கம் கேக்க உங்களைக் கூப்பிடல. உங்களுக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்தத்தான் கூப்பிட்டேன்" என்று ஆரம்பித்தார்.

"வையாபுரி அண்ணனைப் பத்தி, நம்ப கட்சியில எல்லாருக்கும் தெரியும். நீங்க புதுசா வந்ததால, உங்களுக்குத் தெரியல. அவரு எல்லாரைப் பத்தியும் குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாரு. அதுதான் அவரோட வேலை. அதுவும், நேரா சொல்ல மாட்டாரு. மத்தவங்ககிட்டதான் சொல்லுவாரு. ஏன், தலைவரைப் பத்தியே சில பேர்கிட்ட குறை சொல்லிக்கிட்டிருப்பாரு. தலைவருக்கும் இது தெரியும். 

"வையாபுரி அண்ணன் கட்சியில ஒரு மூத்த தலைவர்ங்கறதுக்காக, துணைத்தலைவர்ங்கற, அதிகாரம் இல்லாத ஒரு பதவியைத் தலைவர் அவருக்குக் கொடுத்திருக்காரு! அவரால கட்சிக்கு ஒரு பயனும் கிடையாது. சொல்லப் போனா, அவரு ஒரு பாரம்தான். ஒரு கடமை உணர்வோடு, தலைவர் இந்த பாரத்தை சுமந்துக்கிட்டிருக்காரு. அது தலைவரோட பெருந்தன்மை!

"அதனால, நீங்க வையாபுரி அண்ணன் சொல்றதைப் பத்தியெல்லாம் கவலைப்பட வேண்டாம். தலைவருக்கு உங்க செயல்பாடு ரொம்பப் பிடிச்சிருக்கு. 

"துணைத்தலைவர் பத்தின இந்த விஷயங்களையெல்லாம் தலைவரே உங்ககிட்ட சொல்ல முடியாது. அதனாலதான், எங்கிட்ட சொல்லி சொல்லச் சொன்னாரு. போய் சந்தோஷமா வேலையைப் பாருங்க!"

குறள் 189
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் 
புன்சொல் உரைப்பான் பொறை.

பொருள்:  
ஒருவன் இல்லாதபோது அவனைப் பழித்துப் பேசுபவரின் உடல் பாரத்தைச் சுமப்பதும் அறம் (கடன்) என்று கருதித்தான் பூமி சுமக்கிறதோ!

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



190. கல்கத்தா சித்தப்பா!

மாலதியைக் கல்யாணம் செய்து கொண்டபோது, அவள் குடும்பம் பெரியது என்று குமாருக்குத் தெரியும். தாய் வழியிலும், தந்தை வழியிலும் பல உறவுகள். மாலதிக்கே இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கை உண்டு.

குமாரின் குடும்பம் அந்த அளவுக்கு இல்லை. அவன் பெற்றோருக்கு உறவினர்கள் மிகக் குறைவு. அவர்களுடன் அதிகத் தொடர்பும் இல்லை. எப்போதாவது திருமண நிகழ்ச்சிகளில் பார்த்துக் கொண்டு 'சௌக்கியமா?' என்று கேட்பதோடு, அவர்கள் உறவாடல் முடிந்து விடும்.

இதற்கு மாறாக, மாலதியின் உறவினர்களிடையே உறவாடல் மிக அதிகம். உறவினர்கள் அதிகம் இருந்ததாலேயே, அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. இது தவிர, உறவினர் வீடுகளுக்குச் செல்வது, கடிதப் போக்குவரத்து (முன்பு), தொலைபேசி உரையாடல் (இப்போது) என்று தொடர்புகள் அதிகம் உண்டு.

திருமணமான புதிதில், இத்தனை உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது குமாருக்கு ஒரு சுவாரசியமான அனுபவமாக இருந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அவன் புரிந்து கொண்ட ஒரு விஷயம் அவனுக்கு வியப்பாகவும், உறுத்தலாகவும் இருந்தது.

என்னதான் நெருக்கமாகப் பழகினாலும், மாலதியின் உறவினர்களுக்கிடையே குற்றம் கண்டு பிடிக்கும் பழக்கம் அதிகம் இருந்தது. அவர்கள் பல குழுக்களாக இருந்து, ஒவ்வொரு குழுவுக்குள்ளும், தங்கள் குழுவில் இல்லாதவர்களைப்  பற்றிக் குறை கூறிப் பேசிக் கொள்ளும் பழக்கம் இருந்ததை அவன் கவனித்தான். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் இருக்கும் சிலர் மூலம் இந்தப் பேச்சுக்கள் வெளியே கசிந்து மேலும் மனக்கசப்புக்கு வழி வகுத்தன.

சில சந்திப்புகளின்போது, சில உறவினர்களிடையே கடுமையான வாக்குவாதமும், வாய்ச்சண்டையும் நடப்பதை குமார் கவனித்திருக்கிறான். ஒருவர் 'நீ இப்படிச் செய்தாய்' என்பதும், மற்றவர் 'அந்த சந்தர்ப்பத்தில் நீ இப்படிச் செய்யவில்லையா?' என்று பதில் கூறுவதும், ஒரு பொதுவான வாக்குவாதமாக இருந்தது.

மாலதியே தன் சகோதரரிகளிடம் தொலைபேசியில் பேசும்போது, தன் அண்ணன், அண்ணிகளைக் குறை கூறிப் பேசுவதை குமார் கவனித்திருக்கிறான்.

"ஏன் இப்படிப் பேசற?" என்று ஒருமுறை அவன் கேட்டபோது, "எங்களுக்கு இருக்கிற குறையையும், மனவருத்தத்தையும் நாங்க இப்படித்தான் பேசிப்போம். உங்களுக்கு என்ன அதைப் பத்தி?" என்றாள் அவள்.

"அப்படீன்னா, என்னைப் பத்திக் கூட இப்படிக் குறை கூறிப் பேசுவியா?" என்றான் குமார்.

"பேசினாலும் பேசுவேன். அதை உங்ககிட்ட சொல்ல முடியுமா?" என்றாள் மாலதி.

"உங்க குடும்பத்தில இப்படி எல்லாரும் ஒத்தர் மேல ஒத்தர் குத்தம் கண்டுபிடிச்சுப் பேசிக்கிட்டே இருக்கீங்க. ஒவ்வொருத்தருக்கும் யார்கிட்டயாவது மனஸ்தாபம். இது மாதிரி மனஸ்தாபம் இல்லாதவங்க உங்க குடும்பத்தில யாராவது இருக்காங்களா?"

"இருக்காரே! கல்கத்தா சித்தப்பா" என்றாள் மாலதி.

"அவரு உங்க சொந்த சித்தப்பா இல்லையே, ஒண்ணு விட்ட சித்தப்பாதானே? ரொம்ப தூரத்தில வேற இருக்காரு. அதனால, அதிகத் தொடர்பும் இருக்காது, அதனாலதான் சண்டையும் இல்லை, அப்படித்தானே?'

"அப்படி இல்ல. அவர் எங்களுக்கு ரொம்ப நெருக்கம்தான். கல்கத்தாவில் இருந்தாலும், அடிக்கடி இந்தப் பக்கம் வருவாரே. அடுத்த மாசம் ப்ரியா கல்யாணத்துக்குக் கூட வருவாரு" என்றாள் மாலதி.

ப்ரியா எந்த உறவினரின் பெண் என்று குமார் யோசிக்க ஆரம்பித்தான்.

ப்ரியாவின் திருமணத்தின்போது, 'கல்கத்தா சித்தப்பா' நாகராஜனை சந்தித்துப் பேச குமாருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

இருவரும் தனியாக இருந்தபோது, குமார் அவரிடம் கேட்டான். "சார்! நான் உங்க குடும்பத்தில பெண் எடுத்தவன். அதனால, உங்க குடும்ப விஷயங்களைப் பத்திப் பேச எனக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்குன்னு தெரியல. ஆனா, உங்க குடும்பத்துக்குள்ள குற்றம் கண்டுபிடிக்கிறது, அதனால ஏற்படற மனஸ்தாபம், கோபதாபம் எல்லாம் கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்களுக்கு மட்டும்தான் யாரோடயும் எந்த மனஸ்தாபமும் இல்லைன்னு மாலதி சொன்னா. உங்களை நினைச்சாப் பெருமையா இருக்கு!" என்றான்.

"ஓ! அது ஒண்ணுமில்ல. நான் ரொம்ப வருஷம் முன்னால ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். அது எனக்கு உதவியா இருந்திருக்கு" என்றார் நாகராஜன்.

"என்ன சார் தெரிஞ்சுக்கிட்டீங்க?"

"எங்க ஆஃபீஸ்ல ஒரு மானேஜர் இருந்தாரு. அவரு மேஜையில, 'தி பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்'னு ஒரு பலகை வச்சிருப்பாரு. அவர் சொன்னதை யாரும் மறுத்துப் பேசக் கூடாது. பேசினா, அந்தப் பலகையைக் காட்டுவாரு! ஒரு நாள், அவர் மேஜையில் அந்தப் பலகை இல்லை. 'ஏன் சார் பலகையை எடுத்துட்டீங்க?'ன்னேன். 'இன்னிக்கு ஹெட் ஆஃபீஸ்லேந்து என்னோட பாஸ் வராரு. அவர் வரும்போது இந்தப் பலகை இருந்தா, அவர் சொல்றதை நான் மறுத்துப் பேச முடியாதே! அதான் எடுத்துட்டேன்'ன்னாரு.

"அப்பதான் எனக்கு ஒண்ணு தோணிச்சு. அநேகமா, எல்லோருமே நாம நினைக்கறது, நாம செய்யறதுதான் சரின்னு நினைக்கறோம். மத்தவங்க நம்மளை மறுத்துப் பேசினா, நமக்குக் கோபம் வருது. அதோட, நமக்கு ஒரு நியாயம், மத்தவங்களுக்கு ஒரு நியாயம்னு நடந்துக்கறோம். எங்க மானேஜருக்கு, நாங்க அவரை மறுத்துப் பேசக் கூடாதுன்னு எண்ணம். ஆனா, அவரோட பாஸ் சொல்றதையெல்லாம் அப்படியே ஏத்துக்க அவரு தயாராயில்லை!"

"இன்ட்டரஸ்டிங்" என்றான் குமார்.

"இதையே எல்லா விஷயங்களுக்கும் பொருத்திப் பாத்தேன். யாராவது தப்பு பண்ணினா, அதை சுட்டிக் காட்டறோம். ஆனா, நாமளும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கமான்னு யோசிக்கிறதில்லை. குடும்பத்தில இந்த மாதிரி நிறைய சூழ்நிலைகள் வரும். ஒரு கல்யாணத்தில, என்னை அவங்க சரியா மதிக்கலன்னு தோணும். அப்ப என் குடும்பத்தில நடந்த கல்யாணத்துல, நான் எல்லாரையும் மதிச்சு நடந்திருக்கேனான்னு யோசிச்சுப் பாப்பேன். அந்தக் கல்யாணத்தைப் பத்தி நெனச்சுப் பாத்தா, நான் என்ன செஞ்சேங்கறதே எனக்கு நினைவுக்கு வராது! அந்த அளவுக்குக் கல்யாண வேலையில மூழ்கியிருந்திருந்தேன்னு புரிஞ்சுப்பேன். அந்த சூழ்நிலையில, வந்தவர்களை சரியா கவனிக்காம இருந்திருக்கலாமே! மத்தவங்களும் அப்படித்தானே இருந்திருப்பாங்க? இதை வாழ்க்கையில எல்லா விஷயங்களுக்கும் பொருத்திப் பாக்கலாம். அடுத்தவங்ககிட்ட ஒரு குறையோ, குற்றமோ நான் கண்டு பிடிக்கச்சே, முக்கால்வாசி சமயங்கள்ள என்கிட்டேயும் அந்தக்
குற்றம் இருக்குன்னு புரிஞ்சுப்பேன். இது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதனால, நான் யாரையுமே, குறை சொல்றதையோ, குற்றம் சொல்றதையோ நிறுத்திட்டேன். அதனால, யாரோடயும் எனக்கு மனஸ்தாபம் இல்லேன்னு நினைக்கிறேன்."

"இதனால, ஒரு விஷயத்தை நீங்க இழந்துட்டிங்களே சார்!" என்றான் குமார்.

"எதை இழந்துட்டேன்?" என்றார் நாகராஜன், சற்றே அதிர்ச்சியுடன்.

"குற்றம் கண்டு பிடிக்கிற திறமையே உங்களை விட்டுப் போயிருக்குமே சார்!" என்றான், குமார் சிரித்தபடி.

நாகராஜன் அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.

குறள் 190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பொருள்:  
மற்றவர்கள் குற்றத்தைக் காண்பது போல், தங்கள் குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பவர்களால் உலகில் உள்ள உயிர்களுக்கு எந்தத் தீங்கும் வராது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



                             அதிகாரம் 18 - வெஃகாமை                              
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



No comments:

Post a Comment