About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, November 28, 2020

376. சாய்வு நாற்காலி

"பாத்துப் பாத்துக் கட்டின வீடு. இப்ப நம்ம கையை விட்டுப் போகப் போகுதே!" என்று புலம்பினான் பிரபாகர்.

"இப்ப புலம்பி என்ன பிரயோசனம்? பிசினஸ் எல்லாம் வேண்டாம், இருக்கற வேலையை விட்டுடாதீங்க, வர சம்பளம் போதும். நான் எப்படியோ குடும்பத்தை சமாளிச்சு நடத்திக்கறேன்னு தலை தலையா அடிச்சுக்கிட்டேன். கேட்டீங்களா?" என்றாள் அவன் மனைவி சாரதா.

"நல்லா நடத்தினியே குடும்பத்தை! நகைச்சீட்டு, புடவைச்சீட்டு, பாத்திரச்சீட்டுன்னு நீ செலவழிக்கற பணத்துக்கு என் சம்பளம் போதாதுன்னுதான் பிசினஸ் ஆரம்பிச்சேன். பாங்க்கில செக்யூரிட்டி கொடுத்தாதான் கடன் கொடுப்பேன்னு சொன்னதால வீட்டை அடமானம் வைக்கும்படி ஆயிடுச்சு. அப்ப கூட நீ உன் நகைகளைக் கொடுத்து உதவி செஞ்சிருந்தா வீட்டை அடமானம் வச்சிருக்க வேண்டி இருந்திருக்காது!"

"சும்மாக்கானும் சொல்லாதீங்க. உங்க அகலக்காலுக்கு என் நகைகள் எப்படிப் போதும்?  நீங்க பார்ட்னரா சேத்துக்கிட்டீங்களே ஒரு நண்பர், அவரு ஒர்க்கிங் பார்ட்னர்னு சொல்லிக்கிட்டு ரொம்ப சாமர்த்தியமா ஒரு பைசா கூட முதலீடு செய்யாம, பிசினஸ்ல பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி, உங்களை நடு ரோட்டில நிறுத்திட்டு தான் ஒரு சேதாரமும் இல்லாம தப்பிச்சுக்கிட்டரு. உங்க ஏமாளித்தனத்துக்கு என்னைக் குத்தம் சொல்லாதீங்க!" என்றாள் சாரதா ஆற்றாமையுடன்.

மனைவியின் பேச்சு பிரபாகருக்கு ஆத்திரமூட்டினாலும் அவள் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்து பேசாமல் இருந்தான். 

நண்பனின் யோசனையை ஏற்றுத் தனக்குத் தெரியாத தொழிலில் இறங்கியது முட்டாள்தனம். ஒர்க்கிங் பார்ட்னர் என்று தன்னுடன் தொழிலில் இணைந்த நண்பன் ஒரு பைசா கூட முதலீடு செய்யாதபோது, தனக்கு இருந்த ஒரே சொத்தான வீட்டை அடமானம் வைத்தது இன்னும் பெரிய முட்டாள்தனம். 

தொழில் சரியாக வரவில்லை என்று தெரிந்ததும் சீக்கிரமே அதை மூடி விட்டு வெளியே வராமல் சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும் என்ற நண்பனின் பேச்சை நம்பித் தொடர்ந்து தொழிலை நடத்தி இழப்பை இன்னும் அதிகரித்து இப்போது வீட்டை விற்றுக் கடனை அடைத்து விட்டு வெளியே வந்தால் போதும் என்ற நிலைமை.

பிரகாகர் வீட்டை விற்றுக் கடனை அடைத்து மீதமிருந்த சிறிதளவு பணத்தைச் சேமிப்பாக வைத்துக் கொண்டு சுமாரான ஒரு வேலையைத் தேடிக் கொண்டு ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினான்.

ழைப்பு மணி அடித்ததும் கதவைத் திறந்தான் பிரபாகர். அவன் வீட்டை விலைக்கு வாங்கியிருந்த மாசிலாமணிதான் வந்திருந்தார்.

"வாங்க சார்!" என்று அவரை வரவேற்று அமர வைத்தான் பிரபாகர்.

"வீடு எப்படி இருக்கு?" என்றான் பிரபாகர்.

"வீடு நல்லாத்தான் இருக்கு. வீட்டை விக்கறப்ப ஒரு பழைய சாய்வு நாற்காலியை விட்டுட்டுப் போனீங்க இல்ல?" என்றார் மாசிலாமணி.

"ஆமாம். அது என் அப்பா பயன்படுத்தியது. அது உங்ககிட்டயே இருக்கட்டும்னு சொன்னேனே!"

"தப்பா நினைச்சுக்காதீங்க. வீட்டை வித்தவங்க பொருள் எதையும் நாங்க வச்சுக்கக் கூடாதுன்னு என் மனைவி சென்ட்டிமென்ட்டலா நினைக்கறாங்க. அதானால அதை உங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துடறேன். வண்டியில ஏத்தி அனுப்பி இருக்கேன், வந்துக்கிட்டு இருக்கு. உங்ககிட்ட நேரில சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன்."

பிரபாகர் மௌனமாக இருந்தான். அவன் அப்பா பயன்படுத்திய அந்தப் பெரிய மரச் சாய்வு நாற்காலியை எப்போதுமே அவன் மனைவிக்குப் பிடித்திதல்லை.

"உக்காந்தா ஆளை உள்ளே அழுத்திடுது. எழுந்திருக்கவே கஷ்டமா இருக்கு. யாராவது தூக்கி விடணும் போல இருக்கு! இதை வித்துடுங்க" என்று அவனிடம் பலமுறை அவள் சொல்லி இருக்கிறாள்.

பிரபாகர்தான் தன் தந்தையின் நினைவாக அது இருக்கட்டும் என்று எண்ணி அதை வைத்திருந்தான். ஆயினும் அதை யாரும் பயன்படுயதில்லை. சாரதா சொன்னது போல் அதில் சாய்ந்து உட்கார்ந்து விட்டு எழுந்திருப்பதே ஒரு கடினமான உடற்பயிற்சிதான்!

வீட்டை விற்றபின் தான் செல்லப் போகும் சிறிய வாடகை வீட்டுக்கு அதை எடுத்துச் சென்றால் அது இடத்தை அடைக்கும் என்பதால் அதை விற்க முயன்றான் பிரபாகர். ஆனால் பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் யாரும் அதை வாங்க ஆர்வம் காட்டவில்லை. எனவே தன் வீட்டை வாங்கிய மாசிலாமணியீடம் அதை அவரே வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வந்தான் பிரபாகர். அதற்காக அவன் அவரிடம் விலை எதுவும் வாங்கவில்லை.

இப்போது அந்தச் சாய்வு நாற்காலி அவனுடைய சிறிய வாடகை வீட்டில் இருக்கும் சிறு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு முன்னறையில் ஜம்மென்று அமரப் போகிறது!

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு கையை விட்டுப் போய் விட்டது. வேண்டாமென்று விட்டு விட்டு வந்த பழைய சாய்வு நாற்காலி அவனிடமே திரும்பி வருகிறது.

வேடிக்கைதான் என்று நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான் பிரபாகர். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 376
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

பொருள்:
ஒரு பொருளை எப்படிக் காப்பாற்றினாலும் விதி இல்லையென்றால் அது நம்மை விட்டுப் போய் விடும். நமக்குச் சேர வேண்டிய ஒரு பொருளை நாம் வேண்டாமென்று அகற்றி விட்டாலும் அது நம்மிடம் வந்து சேரும்.
பொருட்பால்                                                                                     காமத்துப்பால்

Thursday, November 26, 2020

375. வாய்ப்பும் இழப்பும்

அறிவழகனுக்கு அவன் அலுவலக வேலை தொடர்பாக ஜெர்மனிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது அவன் மனைவி குமுதா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்.

"இது ஒரு பெரிய வாய்ப்புதான். ஒரு வருஷம் அங்கே இருக்கணும்னு சொல்றாங்க. நடுவில வர முடியாது. நீ கர்ப்பமா இருக்கறப்ப உன்னை விட்டுட்டுப் போக மனசு வல்ல. அதனால இந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிடப் போறேன்" என்றான் அறிவழகன். 

"அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க. ஒரு வருஷம் ஜெர்மனியில போய் வேலை செஞ்சா பணம் அதிகமா வரும் இல்ல?" என்றாள் குமுதா.

"ரொம்ப நிறைய வரும். அது மட்டும் இல்ல. இந்த அனுபவத்தினால எனக்கு வேலையில சீக்கிரமே ப்ரமோஷன் கிடைச்சு பெரிய அளவுக்கு மேல வர முடியும். வேற வேலைக்குப் போகவும் வாய்ப்புக் கிடைக்கும்."

"அப்ப இதில யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? எதிர்காலம் நல்லா இருக்கும்னா கொஞ்ச நாள் கஷ்டப்படறதில தப்பு இல்லையே! எப்படியும் பிரசவத்துக்கு நான் என் அம்மா வீட்டுக்குப் போகணும். கொஞ்சம் முன்னாலேயே போறதா இருக்கட்டும். நீங்க ஜெர்மனிலேந்து வரப்ப என்னோட நம்ம குழந்தையும் உங்களை வரவேற்கத் தயாரா இருக்கும்!" என்றாள் குமுதா மனத்தை திடப்படுத்திக் கொண்டு.

"உன்னை மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்" என்றான் அறிவழகன். 

சென்னை வீட்டைக் காலி செய்து சாமான்களை கிராமத்தில் இருந்த குமுதாவின் வீட்டுக்கு அனுப்பி விட்டு, குமுதாவையும் அவள் வீட்டில் கொண்டு விட்டு விட்டு அறிவழகன் ஜெர்மனிக்குக் கிளம்பிச் சென்றான்.

ஜெர்மனிக்குச் சென்ற பின் வாரம் ஒருமுறை கடிதம் எழுதினான் அறிவழகன். குமுதா இருந்த கிராமத்தில் தொலைபேசி வசதி இல்லை. 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கிராமத்துக்கு அருகிலிருந்த நகரத்தில் வசித்த அவர்கள் உறவினரின் நண்பர் வீட்டின் தொலைபேசி இருப்பதை அறிந்து அவர்கள் எண்ணைப் பெற்று அதை அறிவழகனுக்கு எழுதி அவன் தொலைபேசியில் அழைக்கும் நேரத்தை முன்பே முடிவு செய்து கொண்டு , குறிப்பிட்ட நாளில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து அவர் நண்பர் வீட்டுக்குச் சென்று சில மணி நேரம் காத்திருந்த பின் அறிவழகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் அவனிடம் சில நிமிஷங்கள் பேசினாள் குமுதா.

ஒரு புறம் கணவனிடம் பேசியது மகிழ்ச்சியை அளித்தாலும், கருவுற்ற நிலையில் அவனைப் பிரிந்திருக்கும் மனவேதனையை அதிகரிப்பதாகவே அமைந்தது அந்தத் தொலைபேசி உரையாடல்.

"உனக்கு எப்ப வேணும்னாலும் இங்க வந்து பேசலாம்மா!" என்று அவள் உறவினரின் நண்பர் பெருந்தன்மையுடன் கூறினாலும், அது நடைமுறைக்கு உகந்தது இல்லை என்பதைக் குமுதா உணர்ந்திருந்தாள்

வாரம் ஒருமுறை கடிதம் எழுதிக் கொண்டிருந்த அறிவழகனிடமிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு சில வாரங்கள் கடிதம் வரவில்லை.

ஒரு மாதம் கழித்து அவன் எழுதிய கடிதத்தில், தனக்கு வேலை அதிகமாக இருந்ததால் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்ததோடு, வாராவாரம் எழுத விஷயம் இல்லையன்பதால் இனி  அவ்வப்போது தனக்கு நேரம் கிடைக்கும்போதும், முக்கியமான விஷயம் இருந்தால் மட்டுமே எழுதுவதாகவும் அவன் எழுதி இருந்தது குமுதாவுக்கு ஏமாற்றமளித்தது.

குமுதா எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தபோது அவளுக்கு வலி ஏற்பட்டு அவளை அருகிலிருந்த நகரத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்தார்கள். குமுதாவுக்குக் குறைப் பிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்து பிறந்தது.

கணவனைப் பிரிந்த நிலையில் குழந்தையும் இறந்து பிறந்தது குமுதாவை மனதளவில் பெரிதும் பாதித்து விட்டது. குழந்தை இறந்து பிறந்ததைக் கணவனுக்கு எழுதினாள். தனக்கு அதிர்ச்சியும் துயரமும் ஏற்பட்டதாக அறிவழகனிடமிருந்து உடனே பதில் வந்தது. 

ஆனால் அதற்குப் பிறகு அறிவழகனிடமிருந்து கடிதம் வருவது இன்னும் குறைந்து விட்டது. வந்த கடிதங்களிலும் இயந்திரத்தனமான விசாரிப்புகள் மட்டும்தான் இருந்தன. குழந்தை இறந்த வருத்தத்தில் இருக்கும் தனக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் கணவன் எதுவும் எழுதவில்லையே என்ற ஏக்கம் குமுதாவுக்கு ஏற்பட்டது.

றிவழகன் ஜெர்மனிக்குச் சென்று ஒரு வருடம் முடிவும் தருவாயில் அவன் திரும்பி வரும் தேதியைக் கேட்டுக் குமுதா அவனுக்கு எழுதினாள். ஆனால் அவனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

றிவழகன் சென்று ஒரு வருடத்த்துக்கு மேல்ஆகி விட்டது. 

"மாப்பிள்ளை இத்தனை நேரம் வந்திருக்கணுமே! அவர்கிட்டேந்து தகவல் வரலை. நான் அவங்க ஆஃபீசுக்குப் போய் விசாரிச்சுட்டு வரேன்" என்று சென்னைக்குக் கிளம்பிச் சென்றார் குமுதாவின் தந்தை.

இரண்டு நாள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்தவர், குமுதாவிடம், "அந்த அயோக்கியன் ஒரு மாசம் முன்னாடியே இந்தியாவுக்கு வந்துட்டானாம்மா!" என்றார் கோபத்துடன்.

தன் கணவனை எப்போதும் மாப்பிள்ளை என்றே குறிப்பிடும் அப்பா இப்போது அவனை அயோக்கியன் என்று குறிப்பிட்டதிலிருந்தே ஏதோ விபரீதம் நடந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்ட குமுதா, "என்னப்பா சொல்றீங்க?" என்றாள் தன்னைத் தாக்கப் போகும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ளத் தன்னைத் தயார் செய்து கொண்டவளாக.

"அவனோட வேலை செய்யற ஒரு பெண்ணும் ஜெர்மனிக்கு அவனோட போயிருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து ஜெர்மனியில இருக்கறப்ப அவங்களுக்குள்ள நெருக்கம் ஏற்பட்டிருக்கு. இந்தியாவுக்குத் திரும்பறத்துக்கு முன்னாலேயே ரெண்டு பேரும் டெல்லி ஆஃபீசுக்கு மாற்றல் வாங்கிக்கிட்டு ஜெர்மனியிலேந்து நேரா டெல்லிக்கு வந்துட்டாங்களாம்" என்றார் அவள் அப்பா குமுறலுடன்.

"உங்களுக்கு யாருப்பா இதையெல்லாம் சொன்னாங்க?" என்றாள் குமுதா அழுகையை அடக்கிக் கொண்டு.

"அவங்க ஆஃபீஸ்ல எல்லாருக்கும் இது தெரிஞ்சிருக்கும்மா. அங்கே வேலை செய்யற அவன் ஃபிரண்ட் மனோகர்ங்கறவர்தான் இதைச் சொன்னாரு. உனக்கு அவரைத் தெரியுமாமே! உங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்காராமே!"

"ஆமாம்ப்பா! அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும். ஜெர்மனிக்குப் போய் ரெண்டு மூணு மாசத்திலேந்தே அவர்கிட்ட ஒரு மாறுதல் இருக்கறதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ நடக்கப் போகுதுன்னு பயந்துகிட்டுத்தான் இருந்தேன்..."

பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் குரல் விம்மியது. அழுகை உடைத்துக்கொண்டு வந்தது.

சற்று நேரம் மௌனமாக மகள் அழுவதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள் அப்பா, "உன் குழந்தை இறந்து பிறந்தப்ப எல்லாருக்குமே அது ஒரு பெரிய சோகமா இருந்துச்சு. இப்ப நடந்த்தைப் பாப்பறப்ப அது கூட ஒரு விதத்தில நல்லதுதான்னு தோணுது!" என்றார்.

"நான் கர்ப்பமா இருக்கறப்ப என்னைத் தனியா விட்டுட்டு ஜெர்மனிக்குப் போகலைன்னுதான் அவர் சொன்னாரு. நான்தான் பணம் கிடைக்கும், அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், எங்க எதிர்காலத்துக்கு நல்லதுன்னெல்லாம் நினைச்சு அவரைப் போகச் சொன்னேன். எங்க நன்மைக்குன்னு நான் நினைச்சு செஞ்ச காரியம் இப்ப எனக்கே கெடுதலா அமைஞ்சுடுச்சே அப்பா!" என்றாள் குமுதா அழுது கொண்டே.

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 375
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

பொருள்:
நாம் செல்வம் ஈட்டும் முயற்சியில், சில சமயம், விதிவசத்தால் நல்லவை தீயவையாகும், தீயவை நல்லவையாகும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Sunday, November 15, 2020

374. பழைய மாணவன்

தன் பள்ளி ஆசிரியர் தாமோதரன் சென்னையில் வசிப்பதாக அறிந்து அவரைப் பார்க்க விரும்பினான் வேலு. நாற்பது வருடங்களுக்கு முன் படித்த தன்னை அவருக்கு நினைவிருக்குமா என்ற ஐயம் அவனுக்கு இருந்தாலும், அவர் மீது அவனுக்கு இருந்த மரியாதையால் அவரைப் பார்க்கச் சென்றான்.

"சார்! நான் உங்க பழைய மாணவன். என் பேர் வேலு" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் வேலு.

கண்ணாடியை எடுத்துத் துடைத்துப் போட்டுக் கொண்டு அவனை உற்றுப் பார்த்த தாமோதரன், "ம்மம்ம்...வேலு... எந்த வருஷம் படிச்ச?" என்றார்.

சொன்னான். 

"உடனே ஞாபகம் வரல. உக்காரு. கொஞ்ச நேரம் பேசினா ஞாபகம் வரதான்னு பாக்கலாம்" என்றார் தாமோதரன்.

ஓரிரு நிமிடங்கள் வேலு அவரிடம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவனை இடைமறித்த தாமோதரன், "டேய் வேலு! உன்னை எப்படிடா மறந்தேன்! நீ ஒரு ஜீனியஸ்னு சொல்லுவேன் இல்ல?" என்றார் உற்சாகத்துடன்.

"ஆமாம் சார்!" என்றான் வேலு அடக்கமாக. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை அவர் நினைவு கூர்ந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

"சார்! முப்பது பாட்ச்சுக்கு மேல உங்ககிட்ட படிச்சிருப்பாங்க. நான் உங்ககிட்ட படிச்சு 30 வருஷம் ஆச்சு. என்னை நீங்க ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு சார்!" என்றான் வேலு உணர்ச்சிப் பெருக்குடன்.

"நான் விஞ்ஞான ஆசிரியர். விஞ்ஞானத்தில உனக்கு இருந்த ஆர்வத்தையும், அறிவுக் கூர்மையையும் பாத்துட்டுத்தான் உன்னை ஒரு ஜீனியஸ்னு வகுப்பில எல்லார் முன்னாலேயும் சொல்லி இருக்கேன். இப்ப என்ன செய்யற?"

எம் எஸ் சி படித்து விட்டு ஒரு சாதாரண வேலையில் சுமாரான சம்பளத்தில் இருப்பதை எந்த அளவுக்கு நாசூக்காகச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்குச் சொன்னான் வேலு. அவர் புரிந்து கொண்டார்.

அதற்குப் பிறகு அவன் வேலை பற்றி எதுவும் கேட்காமல் குடும்பம், மற்ற விஷயங்கள் பற்றிப் பொதுவாகப் பேசினார் அவர்.

சற்று நேரம் கழித்து அவரிடம் விடை பெற்றான் வேலு.

வேலு விடை பெற்றுச் சென்றதும், "உங்களைப் பார்க்க உங்க பழைய மாணவர்கள் பல பேர் வராங்க. ரொம்ப பேரை உங்களுக்கு நினைவு இருக்கறதில்ல. இவரை நல்லா நினைவு வச்சுக்கிட்டிருக்கீங்களே!" என்றாள் அவர் மனைவி.

"இவனை எப்படி மறக்க முடியும்? இவனோட புத்திசாலித்தனத்தைப் பாத்து நான் அசந்து போயிருக்கேன். பெரிய விஞ்ஞானியா கூட வருவான்னு நினைச்சேன். ஆனா எம் எஸ் ஸி படிச்சும் கூட அவனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலேன்னு நினைக்கிறேன். சுமாரான ஒரு வேலையிலதான் இருக்கான், பாவம்!" என்றார் தாமோதரன்.

"எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்!" என்றாள் அவர் மனைவி.

"நீ அதிர்ஷ்டம்னு சொன்னதும் ஞாபகம் வருது. கொஞ்ச நாள் முன்னால வெங்கட்ராமன்னு ஒரு பையன் என்னைப் பாக்க வந்தானே, ஞாபகம் இருக்கா? புத்திசாலியா இருக்கற மாணவர்களை எனக்கு ஞாபகம் இருக்கற மாதிரி, ரொம்ப மக்கா இருக்கற மாணவர்களையும் என்னால மறக்க முடியாது! அவன் அப்படிப்பட்ட ஒரு மக்குதான். அவனை நான் எவ்வளவோ திட்டி இருக்கேன். 'நீயெல்லாம் எப்படிடா உருப்படப் போற? உன் பெற்றோர்களை நினைச்சா எனக்கே பரிதாபமா இருக்கு' அப்படியெல்லாம் சொல்லி இருக்கேன். வேடிக்கை என்னன்னா இப்ப அவன் ஒரு பெரிய கம்பெனியில ஜெனரல் மானேஜரா இருக்கான். நிறைய சம்பளம், வருஷத்தில பாதி நாள் வெளிநாட்டுப் பயணம்னு உச்சாணிக் கொம்பில இருக்கான்.  இவனையும் பாரு, அவனையும் பாரு! எல்லாம் நீ சொல்ற மாதிரி அதிர்ஷ்டம்தான் போலருக்கு!" என்றார் தாமோதரன். 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

பொருள்:
உலகத்தின் இயற்கை இரு வேறு வகையானது. செல்வம் உடையவராக இருப்பது வேறு அறிவு உடையவராக இருப்பது வேறு.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Thursday, November 12, 2020

373. ஏன் இப்படி நடக்கிறது?

வேணுவின் படிப்பு முடிந்ததுமே அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். 

ஆனால் அப்படி நடக்கவில்லை. 

பல நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்ட பிறகும் அவனுக்கு ஒரு வேலை நியமனக் கடிதம் கூட வரவில்லை. சில நிறுவனங்களிலிருந்து 'வருந்துகிறோம்' என்ற செய்தியைத் தாங்கிய கடிதங்கள்தான் வந்தன. மற்ற நிறுவனங்களிலிருந்து அதுவும் வரவில்லை.

அவனுடன் படித்துப் பட்டம் பெற்ற பலருக்கும் வேலை கிடைத்து விட்டது.

"இந்தக் காலத்தில தகுதிக்கு மதிப்பு இல்லை. இன்ஃப்ளூயன்ஸுக்குத்தான் மதிப்பு. நமக்கு அது இல்லையே!" என்றார் அவன் அப்பா.

அவன் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டிய அவன் அம்மா, வேணுவின் ஜாதகத்தில் செவ்வாய் கேடு விளைவிக்கும் இடத்தில் இருப்பதாக அவர் சொன்னதை ஏற்று அவர் யோசனைப்படி ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் முருகனுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கினாள்.

"எப்படிடா? எங்க எல்லாரையும் விட நீ புத்திசாலி. நிறைய மார்க் வாங்கி இருக்கே. நிறைய க்விஸ் நிகழ்ச்சிகள்ள கலந்துக்கிட்டுப் பரிசு வாங்கி இருக்கே. அதனால பொது அறிவுக் கேள்விகளுக்கும் டாண் டாண்ணு பதில் சொல்லிடுவ. நீ ஏன் இன்டர்வியூவில செலக்ட் ஆகலேன்னே எனக்குப் புரியலியே!" என்றான் அவன் நண்பன் பாலு.

நண்பன் சொன்ன 'டாண் டாண்ணு பதில் சொல்லிடுவியே' என்ற கருத்து வேணுவின் சிந்தனையைத் தூண்டியது.

தான் கலந்து கொண்ட இன்டர்வியூக்களை மனதில் நினைத்துப் பார்த்தான் வேணு. இன்டர்வியூ முடிந்து வெளியே வரும்போதெல்லாம் அவனுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டதில்லை. ஒருவித தளர்ச்சியான மனநிலையுடன்தான் வெளியே வருவான் - இந்த வேலை தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தது போல்!

அது ஏன் என்று இத்தனை நாட்களாக அவனுக்குப் புரிந்ததில்லை. இப்போது புரிந்து விட்டது போல் தோன்றியது.

அவன் நண்பன் பாலு சொன்னது போல் இன்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அவன் 'டாண் டாண்' என்று பதில் சொன்னதில்லை. தயங்கித் தயங்கித்தான் பதில் சொல்லி இருக்கிறான்.

நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்கப்படும்போதே பதில் அவன் மனதில் தோன்றி விடும். ஆனால் அவன் உடனே பதில் சொன்னதில்லை. தன் பதில் சரிதானா என்று மனதுக்குள் யோசித்து உறுதி செய்து கொண்டு பதில் சொல்வது போல் சில விநாடிகள் கழித்துத்தான் பதில் சொல்வான்.

அவன் சொன்ன பதில்கள் சரியானவையாக இருந்தாலும் அவனுடைய தயக்கம் நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் மனதில் அவன் தன்னம்பிக்கை இல்லாதவன், அல்லது தனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி உறுதி இல்லாதவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனாலேயே அவர்கள் அவனைத் தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம். இது தனக்கும் உள்ளூரத் தெரிந்ததுதான் நேர்முகத் தேர்வு முடிந்ததும் தனக்கு ஏற்படும் மனச் சோர்வுக்குக் காரணமாக இருக்கும் என்று அவனுக்கு இப்போது தோன்றியது.

நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்றுத் தேறி, கூர்மையான அறிவுள்ளவன் என்று தன் நண்பர்களாலும், ஆசிரியர்களாலும் கருதப்பட்ட தான் ஏன் நேர்முகத் தேர்வுகளில் கேள்விகளுக்குத் தனக்கு பதில் தெரிந்தும் அவற்றை தைரியமாக உடனே சொல்லத் தயங்க வேண்டும்? 

அவனுக்குப் புரியவில்லை.

தன் பிரச்னை என்ன வென்று வேணு உணர்ந்து விட்டதால், ஒருவேளை அடுத்த நேர்முகத் தேர்வின் அவனால் இந்தக் குறையைப் போக்கிக் கொள்ள முடியலாம். அல்லது அப்போதும் இதேபோல்தான் நடந்து கொள்வானா?

அடுத்த நேர்முகத் தேர்விலகலந்து கொள்ளும்போதுதான் தெரியும்! 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

பொருள்:
ஒருவன் நுட்பமான நூல்கள் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள இயல்பான அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

Wednesday, November 11, 2020

372. நம்பகமான முதலீடு!

பொதுவாக கோபி பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையானவன். ஒரு நண்பன் கடன் கேட்டால் கூட அவனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியுமா என்று யோசித்து விட்டுத்தான் கொடுப்பான்.

ஒருமுறை அவன் நெருங்கிய நண்பன் ஒரு பெரிய நெருக்கடியில் இருந்தபோது பல நண்பர்களிடமும் அவர்களால் கொடுக்க முடிந்த தொகையைக் கடனாகப் பெற்று அவன் அந்த நெருக்கடியைச் சமாளித்தான். ஆனால் கோபி அவனுக்குக் கடன் கொடுத்து உதவவில்லை. அன்றைய நிலையில் தன் கையில் நூறு ரூபாய் கூட இல்லை என்று சொல்லிக் கை விரித்து விட்டான்.

"உங்களோட நெருங்கிய நண்பர், அவருக்கு நீங்க உதவி இருக்கலாமே? ஏன் பணம் இல்லைன்னு பொய் சொன்னீங்க?" என்று அவன் மனைவி ராதிகா கேட்டபோது, "அவன் இத்தனை பேர்கிட்ட கடன் வாங்கறான், யாருக்குன்னு கடனைத் திருப்பிக் கொடுப்பான்? அத்தனை பேருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கப் பல வருஷங்கள் ஆகும். நான் நெருங்கின நண்பன்கற உரிமையில எனக்கு மெதுவா கொடுத்துக்கலாம்னு நினைச்சு மத்தவங்க கடனையெல்லாம் முதல்ல தீர்த்துட்டு கடைசியாத்தான் எனக்குக் கொடுப்பான்! அது கூட அவனால முடியுமோ என்னவோ தெரியாது! அதனாலதான் நான் இதில மாட்டிக்க விரும்பல" என்றான் கோபி. 

அலுவலகத்தில் இருந்த ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தபோது, அதில் கடன் வாங்கித் தங்க நகைகளை வாங்கினான் கோபி. மனைவிக்கு நகை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையினால் அல்ல, அப்போது தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே வந்ததால், அது ஒரு நல்ல முதலீடு என்று கணக்குப் போட்டு!

ருமுறை வெளியூரிலிருந்த கோபியின் ஒன்று விட்ட சகோதரன் ஜகன் கோபியின் வீட்டுக்கு வந்திருந்தான்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, "பல கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்கள்ள பணத்தை முதலீடு செஞ்சு நான் நிறைய ஏமாந்துட்டேன். நிறைய பணம் போயிடுச்சு" என்றான் ஜகன்.

'"நான் இந்த விஷயத்தில ரொம்ப கவனமா இருப்பேன். நான் நிறைய ஸ்டடி பண்ணிட்டுத்தான் முதலீடு செய்வேன். இதுவரையிலேயும் என் முதலீடு எதுவுமே தப்பாப் போனதில்ல" என்றான் கோபி பெருமையுடன்.

"நல்ல முதலீடு இருந்தா சொல்லு. இனிமே நான் உன்னோட யோசனைப்படியே முதலீடு செய்யறேன்" என்றான் ஜகன்.

"பொதுவா, நான் யாருக்கும், எதையும் சிபாரிசு செய்யறதில்ல. நீ கேக்கறதால சொல்றேன். ஒரு கோழிப்பண்ணை திட்டத்தில நான் முதலீடு செஞ்சிருக்கேன். ஒரு லட்சம் ரூபா முதலீடு. மாசம் அஞ்சாயிரம் ரூபா வருமானம். அஞ்சு வருஷம் கழிச்சு நம்ம முதலீடு செஞ்ச தொகையைத் திருப்பிக் கொடுத்துடுவாங்க" என்றான் கோபி.

"ரொம்ப நல்லா இருக்கே இது! வருஷத்துக்கு அறுபதாயிரம் ரூபான்னா அறுவது சதவீதத்துக்கு மேல ரிடர்ன் வருதே, இது நம்பகமானதா?" என்றான் ஜகன் வியப்புடன்.

"அதான் சொன்னேனே! நான் நல்லா ஸ்ட்டி பண்ணிட்டுத்தான் முதலீடு செய்வேன்னு. கோழிப்பண்ணையில நல்ல வருமானம். இதை நடத்தறவரு அதிக விளம்பரம் பண்ணாம, தெரிஞ்சவங்க மூலமா கொஞ்சம் பேர் கிட்ட மட்டும்தான் முதலீடு வாங்கறாரு. அதனால இதைப் பத்தி நீ எங்கேயும் படிச்சிருக்க மாட்டே! முதல் மாசப் பணம் எனக்கு வந்துடுச்சு. ரெண்டாவது மாசப் பணம் இன்னும் ரெண்டு நாள்ள என் அக்கவுன்ட்ல கிரடிட் ஆயிடும்"

"அப்ப நானும் இதில சேந்துக்கறேன்!" என்று ஜகன் ஆர்வமாகக் கூறியதும், கோபி அவனிடம்அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்தான்.

"இதைப் பூர்த்தி செஞ்சு, ஒரு லட்ச ரூபாய்க்கு செக்கோட கம்பெனி அட்ரசுக்கு அனுப்பிடு. அப்புறம் மாசா மாசம் உன் அக்கவுன்ட்டுக்கு அஞ்சாயிரம் வந்துக்கிட்டே இருக்கும்!" என்றான் கோபி.

கோபி ஜகனிடம் சொன்னது போல், இரண்டாவது மாத வருமானம் கோபியின் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. நிறுவனத்துக்கு ஃபோன் செய்து கேட்டபோது, இரண்டு நாட்களில் கிரடிட் ஆகி விடும் என்றார்கள். இரண்டு நாட்களிலும் வரவில்லை. மூன்றாம் நாள் அவன் ஃபோன் செய்தபோது ஃபோனை யாரும் எடுக்கவில்லை.

பிறகு நண்பர்களிடம் விசாரித்ததில், அந்த நிறுவன உரிமையாளர் கோழிகளையெல்லாம் மொத்தமாக விற்று விட்டுக் குடும்பத்துடன் எங்கோ தலைமறைவாகி விட்டதாக அறிந்தான். அவருக்குச் சொத்து எதுவும் இல்லை, கோழிப்பண்ணையைக் கூட அவர் வாடகைக்கு எடுத்த இடத்தில்தான் நடத்திக் கொண்டிருந்தார் என்பதால் போலீசில் புகார் செய்தாலும் பணம் கிடைக்க வாய்ப்பில்லை என்று அறிந்து கொண்டான். 

"உங்க பேச்சை நம்பி உங்க தம்பி வேற முதலீடு பண்ணி இருப்பாரே, அவருக்கு விஷயத்தைச் சொல்லுங்க!" என்றாள் ராதிகா.

தான் புத்திசாலித்தனமாக முதலீடு செய்பவன் என்பது போல் பேசித் தன் ஒன்று விட்ட சகோதரனுக்குத் தவறான ஆலோசனை சொல்லி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் ஜகனுக்கு ஃபோன் செய்தான் கோபி.

அவன் ஃபோன் பேசி முடித்ததும்,"என்ன சொல்றாரு? உங்க கிட்ட கோவிச்சுக்கிட்டாரா?" என்றாள் ராதிகா..

"இல்ல. அவன் தப்பிச்சுட்டான்!" 

"எப்படி?"

"இவ்வளவு ரிடர்ன் வருமான்னு என்னவோ அவனுக்கு சந்தேகமாகவே இருந்ததாம். அதனால ரெண்டு மூணு மாசம் கழிச்சு எனக்குத் தொடர்ந்து வருமானம் வருதான்னு தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் முதலீடு பண்ணலாம்னு நினைச்சானாம். அதனால அவன் பணம் தப்பிச்சுது!"

"அவரோட நல்ல நேரம்தான்!" என்றாள் ராதிகா. 

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

பொருள்:
இழப்பை ஏற்படுத்தும் விதி அறியாமையை உண்டாக்கும். பொருளை அளிக்கும் விதி அறிவுடன் செயல்பட வைக்கும்.
பொருட்பால்                                                                                        காமத்துப்பால்

Tuesday, November 3, 2020

371. வேலை பறிபோனதும்...

"ஏங்க நடந்தது நடந்து போச்சு. இப்படியே உக்காந்துக்கிட்டிருந்தா எப்படி? வேற ஏதாவது வேலைக்கு முயற்சி பண்ணுங்க" என்றாள் மீனாட்சி.

"20 வருஷமா இந்த கம்பெனிக்கு உழைச்சிருக்கேன். திடீர்னு ஒருநாள் ஆள்குறைப்புன்னு சொல்லி வெளியில அனுப்பிட்டாங்க. இதை என்னால ஜீரணிக்கவே முடியல!" என்றான் சாமிநாதன். 

"உங்க வருத்தமெல்லாம் சரிதான். ஆனா நீங்க சீக்கிரமே வேற வேலை தேடிக்கலேன்னா நாம சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைமை வந்துடும். அப்புறம் பிள்ளைங்க படிப்பெல்லாம் வேற இருக்கு."

"வேற வேலைக்கு முயற்சி பண்றேன். ஆனா, நீ கவலைப்பட வேண்டாம். செட்டில்மென்ட் பணம் பி எஃப் பணம் எல்லாம்தான் இருக்கே! இப்போதைக்கு பணப் பிரச்னை எதுவும் இருக்காது."

டுத்த சில வாரங்கள் சாமிநாதன் மும்முரமாக வேலைக்கு முயற்சி செய்தான். பெரும்பாலான நிறுவனங்களிலிருந்து பதிலே வரவில்லை. ஒன்றிரண்டு நிறுவனங்களிலிருந்து நேர்முகத்துக்கான அழைப்பு வந்தது. ஆனால் அவனை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.

"எல்லாருமே 20 வருஷமா வேலை செய்யற உங்களை ஏன் வேலையை விட்டு அனுப்பிச்சாங்கன்னுதான் கேக்கறாங்க. ஆட்குறைப்புன்னு சொன்னா, உங்களை மாதிரி அனுபவம் உள்ளவங்களை அனுப்ப மாட்டாங்களேன்னு கேக்கறாங்க. என்னை மாதிரி அனுபவம் உள்ள இன்னும் சில பேரையும் வேலையை விட்டு அனுப்பிட்டாங்கன்னு சொன்னா கூட அவங்க அதை ஏத்துக்கற மாதிரி தெரியல. எங்கிட்ட ஏதோ குறை இருக்கும்னு நினைக்கிறாங்க" என்றான் சாமிநாதன் மனைவியிடம்.

"எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க. உங்க நிலைமையையும், உங்க திறமையையும் புரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு வேலை கொடுக்கறவங்க யாராவது இல்லாம போக மாட்டாங்க" என்றாள் மீனாட்சி.

"பாக்கலாம்" என்றான் சாமிநாதன். ஆனால் அவன் குரலில் நம்பிக்கை தொனிக்கவில்லை.

அதன் பிறகு வேலைக்கு முயற்சி செய்வதில் சாமிநாதன் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மீனாட்சி சில முறை சொல்லிப் பார்த்து விட்டு ஓய்ந்து விட்டாள்.

ரு வருடம் கழித்து, ஒரு நாள் மீனட்சி அவனிடம் கேட்டாள்: "என்னங்க நீங்க வேலைக்கு முயற்சி செய்யறதையே விட்டுட்டீங்க போலருக்கே!"

"முயற்சி செஞ்சு என்ன பிரயோசனம்? எதுவும் நடக்க மாட்டேங்குது. கையில இருக்கற பணத்தை வச்சுக்கிட்டு இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். நீயும் சிக்கனமாத்தானை குடித்தனம் நடத்திக்கிட்டிருக்கே!" என்றான் சாமிநாதன்.

"'ஏங்க? நம்ம குடும்பத்தில எல்லாருக்கும் தேவையான அளவுக்கு விஷம் வாங்க எவ்வளவு பணம் வேணும்?" என்றாள் மீனாட்சி, பொங்கி வந்த அழுகையையும், ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு.

"என்ன மீனாட்சி இது?" என்றான் சாமிநாதன் அதிர்ச்சியுடன்.

"இந்த ஒரு வருஷமா நமக்கு வருமானமே இல்லை. ஆனா வீட்டு வாடகை, மளிகைச் சாமான்கள் விலை, பள்ளிக்கூடக் கட்டணம் எல்லாம் ஏகமா ஏறிப்போச்சு. இனிமேயும் ஏறிக்கிட்டேதான் இருக்கும். நம்ம கையில இருக்கற பணம் இன்னும் எவ்வளவு வருஷத்துக்கு அல்லது மாசத்துக்கு வரும்னு தெரியல. பணம் எல்லாம் தீர்ந்து போனப்பறம் எல்லாரும் விஷம் குடிச்சு செத்துடலாம்னா அப்ப விஷம் வாங்கக் கூட நம்ம கிட்ட காசு இல்லேன்னா என்ன செய்யறது? அதுதான் கேட்டேன்!" என்று சொல்லி விட்டுக் கோபத்துடன் உள்ளே போய் விட்டாள் மீனாட்சி.

சாமிநாதன் யோசிக்க ஆரம்பித்தான்.

ரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய சாமிநாதன், "மீனாட்சி! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. நல்ல கம்பெனி, நல்ல சம்பளம்!" என்றான் உற்சாகத்துடன்.

"எனக்குத்தெரியும், உங்க திறமைக்கும், அனுபவத்துக்கும் நல்ல வேலை கிடைக்காம போகாதுன்னு!" என்றாள் மீனாட்சி உற்சாகத்துடன்.

"நீ அன்னிக்கு விஷம் குடிச்சு சாக வேண்டிய நிலைமைதான் வரும்னு பேசினப்ப எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்த்து. அப்புறம் தீவிரமா முயற்சி செஞ்சேன். அதன் பலனா இந்த நல்ல வேலை கிடைச்சுது. முதலிலேயே சோர்ந்து போகாம முயற்சி செஞ்சிருந்தா இன்னும் முன்னாலேயே கூடக் கிடைச்சிருக்கும்" என்றான் சாமிநாதன்.

"விடுங்க! நம்ம விதி எப்படி இருக்கோ அப்படித்தானே நடக்கும்? எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமில்ல?" என்றாள் மீனாட்சி.

அறத்துப்பால்
ஊழியல்
  அதிகாரம் 38    
  ஊழ்   

குறள் 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

பொருள்:
நன்மையைக் கொடுக்கும் விதி இருந்தால், சோர்வற்ற முயற்சி ஏற்படும். இழப்பை விளைவிக்கும் விதி இருந்தால், சோம்பல் ஏற்படும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

370. தந்தையும் மகனும்

"ஏண்டா, இப்ப எதுக்கு அந்தப பண்ணை நிலத்தை விக்கணும்னு பாக்கற?" என்றார் வைத்திலிங்கம்.

"நிலத்தை வாங்கறப்ப அந்த கம்பெனியில வருஷத்துக்கு இருபது பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா மூணு வருஷமா பத்து பர்சன்ட்தான் கொடுக்கறாங்க. கேட்டா 'விளைச்சல் கம்மி, காய்கறிகள், பழங்களோட விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, நாங்க எதிர்பாத்த வருமானம் வரலைன்னு சாக்கு சொல்றாங்க!" என்றான் அவர் மகன் ராமு.

'நீ வாங்கறப்பவே சொன்னேனே, அவங்க சொல்றபடியெல்லாம் வருமானம் வரும்னு எதிர்பார்க்க முடியாது, இதிலெல்லாம் முதலீடு செய்யாதேன்னு' என்று வைத்திலிங்கம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

"பத்து பர்சன்ட் ரிடர்ன்.கூடப் பரவாயில்லையே! எதுக்கு இப்ப அதை விக்கற?"

"இல்லப்பா. இதை வாங்கறப்ப இதே மாதிரி ஸ்கீம் இன்னொரு கம்பெனியிலேயும் இருந்தது. அவங்க பன்னிரண்டு பர்சன்ட் ரிடர்ன்தான் கொடுப்பேன்னு சொன்னாங்க. முதலீடு கூட இதை விடக் குறைச்சல்தான். அதிக ரிடர்ன் வரும்னு இதை வாங்கினேன். இப்ப அவங்க பதினைஞ்சு பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறாங்க! இவங்க என்னை ஏமாத்திட்டாங்க. அதனாலதான் விக்கணும்னு நினைக்கறேன்" என்றான்.

"இப்ப இதை வித்துட்டு அதை வாங்கப் போறியா?" என்றார் வைத்திலிங்கம்.

"இன்னும் முடிவு பண்ணல. முதல்ல இதை விக்க முடியுமான்னு தெரியல. இப்ப மார்க்கட் டல், விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, வாங்கறத்துக்கே ஆள் இல்லேன்னு சொல்றாங்க. ஏற்கெனவே ஸ்டாக் மார்க்கெட்ல போட்ட பணமெல்லாம் முடங்கி இருக்கு. அஞ்ச லட்ச ரூபா முதலீடு பண்ணினேன். இப்ப என் பங்குகளோட மதிப்பு 3 லட்ச ரூபாயாக் குறைஞ்சுடுச்சு. ஏன் எல்லாமே இப்படி நஷ்டமாப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியல! இதையெல்லாம் நினைச்சுப் பாத்தா ஒரே விரக்தியா இருக்கு!" என்று சலித்துக் கொண்டான் ராமு.

'உனக்கு நல்ல வேலை, சம்பளம், அமைதியான குடும்பம் எல்லாம் இருந்தும், உன்னோட அதிகமான ஆசைதான் உன் விரக்திக்குக் காரணம்கறதை நீ எப்ப புரிஞ்சிக்கப் போறியோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்தியலிங்கம். 

ஏற்கெனவே மகனிடம் இது பற்றி அவர் பல முறை பேசி மனக்கசப்பில் முடிந்ததில்தான் மிச்சம். அதனால் இப்போதெல்லாம் வைத்திலிங்கம் மகனிடம் எந்தக் கருத்தும் கூறுவதில்லை.

"உங்க காலம் வேறப்பா! நீங்க கிடைச்சது போதும்னு இருந்திட்டீங்க. என்னால அப்படி இருக்கமுடியாது" என்றான் ராமு, தந்தை எதுவும் சொல்லி விடுவாரோ என்று நினைத்து முன்னெச்சரிக்கையாக.  

'அதிகமாக ஆசைப்படாமல் குடும்பத்தை நன்கு பார்த்துக் கொண்டால் போதும் என்று நினைத்து நான் செயல்பட்டதால்தான் உன் அக்காவையும், உன்னையும் நன்றாகப் படிக்க வைத்து, உன் அக்காவுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து, நீ நல்ல நிலைக்கு வந்த பிறகும் உன்னை எதிர்பார்க்காமல் நானும் உன் அம்மாவும் கடைசி வரை நல்லபடியாகக் குடும்பம் நடத்தும் அளவுக்குக் கையில் சேமிப்பு வைத்துக் கொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது. இதை நீ எப்போது புரிந்து கொள்ளப் போகிறாயோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்திலிங்கம்.

அறத்துப்பால்
துறவறவியல்
  அதிகாரம் 37    
  அவாவறுத்தல்   

குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

பொருள்:
எப்போதும் நிரம்பாத தன்மையுடைய ஆசையை ஒழித்து விட்டால், அந்த நிலையே எப்போதும் மாறாத இன்ப நிலையைத் தரும்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்