"ஏங்க நடந்தது நடந்து போச்சு. இப்படியே உக்காந்துக்கிட்டிருந்தா எப்படி? வேற ஏதாவது வேலைக்கு முயற்சி பண்ணுங்க" என்றாள் மீனாட்சி.
"20 வருஷமா இந்த கம்பெனிக்கு உழைச்சிருக்கேன். திடீர்னு ஒருநாள் ஆள்குறைப்புன்னு சொல்லி வெளியில அனுப்பிட்டாங்க. இதை என்னால ஜீரணிக்கவே முடியல!" என்றான் சாமிநாதன்.
"உங்க வருத்தமெல்லாம் சரிதான். ஆனா நீங்க சீக்கிரமே வேற வேலை தேடிக்கலேன்னா, நாம சாப்பாட்டுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைமை வந்துடும். அப்புறம் பிள்ளைங்க படிப்பெல்லாம் வேற இருக்கு."
"வேற வேலைக்கு முயற்சி பண்றேன். ஆனா, நீ கவலைப்பட வேண்டாம். செட்டில்மென்ட் பணம், பி எஃப் பணம் எல்லாம்தான் இருக்கே! இப்போதைக்கு பணப் பிரச்னை எதுவும் இருக்காது."
அடுத்த சில வாரங்கள் சாமிநாதன் மும்முரமாக வேலைக்கு முயற்சி செய்தான். பெரும்பாலான நிறுவனங்களிலிருந்து பதிலே வரவில்லை. ஒன்றிரண்டு நிறுவனங்களிலிருந்து நேர்முகத்துக்கான அழைப்பு வந்தது. ஆனால் அவனை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை.
"எல்லாருமே 20 வருஷமா வேலை செய்யற உங்களை ஏன் வேலையை விட்டு அனுப்பிச்சாங்கன்னுதான் கேக்கறாங்க. ஆட்குறைப்புன்னு சொன்னா, உங்களை மாதிரி அனுபவம் உள்ளவங்களை அனுப்ப மாட்டாங்களேன்னு கேக்கறாங்க. என்னை மாதிரி அனுபவம் உள்ள இன்னும் சில பேரையும் வேலையை விட்டு அனுப்பிட்டாங்கன்னு சொன்னா, அதைஅவங்க அதை ஏத்துக்கற மாதிரி தெரியல. எங்கிட்ட ஏதோ குறை இருக்கும்னு நினைக்கிறாங்க" என்றான் சாமிநாதன், மனைவியிடம்.
"எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க. உங்க நிலைமையையும், உங்க திறமையையும் புரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு வேலை கொடுக்கறவங்க யாராவது இல்லாம போக மாட்டாங்க" என்றாள் மீனாட்சி.
"பாக்கலாம்" என்றான் சாமிநாதன். ஆனால் அவன் குரலில் நம்பிக்கை தொனிக்கவில்லை.
அதன் பிறகு வேலைக்கு முயற்சி செய்வதில் சாமிநாதன் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மீனாட்சி சில முறை சொல்லிப் பார்த்து விட்டு ஓய்ந்து விட்டாள்.
ஒரு வருடம் ஓடி விட்டது.
ஒரு நாள் மீனட்சி அவனிடம் கேட்டாள்: "என்னங்க, நீங்க வேலைக்கு முயற்சி செய்யறதையே விட்டுட்டீங்க போலருக்கே!"
"முயற்சி செஞ்சு என்ன பிரயோசனம்? எதுவும் நடக்க மாட்டேங்குது. கையில இருக்கற பணத்தை வச்சுக்கிட்டு இப்படியே காலத்தை ஓட்ட வேண்டியதுதான். நீயும் சிக்கனமாத்தானே குடித்தனம் நடத்திக்கிட்டிருக்கே!" என்றான் சாமிநாதன்.
"'ஏங்க? நம்ம குடும்பத்தில எல்லாருக்கும் தேவையான அளவுக்கு விஷம் வாங்க எவ்வளவு பணம் வேணும்?" என்றாள் மீனாட்சி, பொங்கி வந்த அழுகையையும், ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு.
"என்ன மீனாட்சி இது?" என்றான் சாமிநாதன், அதிர்ச்சியுடன்.
"இந்த ஒரு வருஷமா நமக்கு வருமானமே இல்லை. ஆனா, வீட்டு வாடகை, மளிகைச் சாமான்கள் விலை, பள்ளிக்கூடக் கட்டணம் எல்லாம் ஏகமா ஏறிப் போச்சு. இனிமேயும் ஏறிக்கிட்டேதான் இருக்கும். நம்ம கையில இருக்கற பணம் இன்னும் எவ்வளவு வருஷத்துக்கு அல்லது மாசத்துக்கு வரும்னு தெரியல. பணம் எல்லாம் தீர்ந்து போனப்பறம் எல்லாரும் விஷம் குடிச்சு செத்துடலாம்னா, அப்ப விஷம் வாங்கக் கூட நம்ம கிட்ட காசு இல்லேன்னா என்ன செய்யறது? அதுதான் கேட்டேன்!" என்று சொல்லி விட்டுக் கோபத்துடன் உள்ளே போய் விட்டாள் மீனாட்சி.
சாமிநாதன் யோசிக்க ஆரம்பித்தான்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய சாமிநாதன், "மீனாட்சி! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு. நல்ல கம்பெனி, நல்ல சம்பளம்!" என்றான், உற்சாகத்துடன்.
"எனக்குத் தெரியும், உங்க திறமைக்கும், அனுபவத்துக்கும் நல்ல வேலை கிடைக்காம போகாதுன்னு!" என்றாள் மீனாட்சி, உற்சாகத்துடன்.
"நீ அன்னிக்கு விஷம் குடிச்சு சாக வேண்டிய நிலைமைதான் வரும்னு பேசினப்ப எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. அப்புறம் தீவிரமா முயற்சி செஞ்சேன். அதன் பலனா இந்த நல்ல வேலை கிடைச்சுது. முதலிலேயே சோர்ந்து போகாம முயற்சி செஞ்சிருந்தா, இன்னும் முன்னாலேயே கூடக் கிடைச்சிருக்கும்" என்றான் சாமிநாதன்.
"விடுங்க! நம்ம விதி எப்படி இருக்கோ அப்படித்தானே நடக்கும்? எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமில்ல?" என்றாள் மீனாட்சி.
குறள் 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
No comments:
Post a Comment