கோபி பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பவன். ஒரு நண்பன் கடன் கேட்டால் கூட, அவனால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியுமா என்று யோசித்து விட்டுத்தான் கடன் கொடுப்பான்.
ஒருமுறை, அவன் நெருங்கிய நண்பன் ஒருவன் பெரிய நெருக்கடியில் இருந்தபோது, பல நண்பர்களிடமும் அவர்களால் கொடுக்க முடிந்த தொகையைக் கடனாகப் பெற்று அவன் அந்த நெருக்கடியைச் சமாளித்தான். ஆனால், கோபி அவனுக்குக் கடன் கொடுத்து உதவவில்லை. அன்றைய நிலையில் தன் கையில் நூறு ரூபாய் கூட இல்லை என்று சொல்லிக் கை விரித்து விட்டான்.
"அவர் உங்களோட நெருங்கிய நண்பர். அவருக்கு நீங்க உதவி இருக்கலாமே! ஏன் பணம் இல்லைன்னு பொய் சொன்னீங்க?" என்று அவன் மனைவி ராதிகா கேட்டபோது, "அவன் இத்தனை பேர்கிட்ட கடன் வாங்கறான், யாருக்குன்னு கடனைத் திருப்பிக் கொடுப்பான்? அத்தனை பேருக்கும் கடனைத் திருப்பிக் கொடுக்கப் பல வருஷங்கள் ஆகும். நான் நெருங்கின நண்பன்கற உரிமையில, எனக்கு மெதுவாக் கொடுத்துக்கலாம்னு நினைச்சு, மத்தவங்க கடனையெல்லாம் முதல்ல தீர்த்துட்டுக் கடைசியாத்தான் எனக்குக் கொடுப்பான்! அது கூட அவனால முடியுமோ என்னவோ தெரியாது! அதனாலதான், நான் இதில மாட்டிக்க விரும்பல" என்றான் கோபி.
அலுவலகத்தில் இருந்த ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தபோது, அதில் கடன் வாங்கித் தங்க நகைகளை வாங்கினான் கோபி. மனைவிக்கு நகை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையினால் அல்ல, அப்போது தங்கத்தின் விலை ஏறிக் கொண்டே வந்ததால், அது ஒரு நல்ல முதலீடு என்று கணக்குப் போட்டு!
ஒருமுறை, வெளியூரிலிருந்த கோபியின் ஒன்று விட்ட சகோதரன் ஜகன் கோபியின் வீட்டுக்கு வந்திருந்தான்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, "பல கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்கள்ள பணத்தை முதலீடு செஞ்சு நான் நிறைய ஏமாந்துட்டேன். நிறையப் பணம் போயிடுச்சு" என்றான் ஜகன்.
'"நான் இந்த விஷயத்தில ரொம்ப கவனமா இருப்பேன். நான் நிறைய ஸ்டடி பண்ணிட்டுத்தான் முதலீடு செய்வேன். இதுவரையிலேயும் என் முதலீடு எதுவுமே தப்பாப் போனதில்ல" என்றான் கோபி, பெருமையுடன்.
"நல்ல முதலீடு இருந்தா சொல்லு. இனிமே நான் உன்னோட யோசனைப்படியே முதலீடு செய்யறேன்" என்றான் ஜகன்.
"பொதுவா, நான் யாருக்கும், எதையும் சிபாரிசு செய்யறதில்ல. நீ கேக்கறதால சொல்றேன். ஒரு கோழிப்பண்ணைத் திட்டத்தில நான் முதலீடு செஞ்சிருக்கேன். ஒரு லட்சம் ரூபா முதலீடு. மாசம் அஞ்சாயிரம் ரூபா வருமானம். நாம முதலீடு செஞ்ச தொகையை அஞ்சு வருஷம் கழிச்சுத் திருப்பிக் கொடுத்துடுவாங்க" என்றான் கோபி.
"இது ரொம்ப நல்லா இருக்கே! வருஷத்துக்கு அறுபதாயிரம் ரூபான்னா அறுவது சதவீதத்துக்கு மேல ரிடர்ன் வருதே, இது நம்பகமானதா?" என்றான் ஜகன், வியப்புடன்.
"அதான் சொன்னேனே! நான் நல்லா ஸ்ட்டி பண்ணிட்டுத்தான் முதலீடு செய்வேன்னு. கோழிப்பண்ணையில நல்ல வருமானம். இதை நடத்தறவர் அதிக விளம்பரம் பண்ணாம, தெரிஞ்சவங்க மூலமாக் கொஞ்சம் பேர்கிட்ட மட்டும்தான் முதலீடு வாங்கறாரு. அதனால, இதைப் பத்தி நீ எங்கேயும் படிச்சிருக்க மாட்டே! முதல் மாசப் பணம் எனக்கு வந்துடுச்சு. ரெண்டாவது மாசப் பணம் இன்னும் ரெண்டு நாள்ள என் அக்கவுன்ட்ல கிரடிட் ஆயிடும்!"
"அப்ப நானும் இதில சேந்துக்கறேன்!" என்று ஜகன் ஆர்வமாகக் கூறியதும், கோபி அவனிடம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தைக் கொடுத்தான்.
"இதைப் பூர்த்தி செஞ்சு, ஒரு லட்ச ரூபாய்க்கு செக்கோட கம்பெனி அட்ரசுக்கு அனுப்பிடு. மாசா மாசம் உன் அக்கவுன்ட்டுக்கு அஞ்சாயிரம் வந்துக்கிட்டே இருக்கும்!" என்றான் கோபி.
கோபி ஜகனிடம் சொன்னது போல், இரண்டாவது மாத வருமானம் கோபியின் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. நிறுவனத்துக்கு ஃபோன் செய்து கேட்டபோது, இரண்டு நாட்களில் கிரடிட் ஆகி விடும் என்றார்கள். இரண்டு நாட்கள் ஆகியும் பணம் கிரடிட் ஆகவில்லை. மூன்றாம் நாள் அவன் ஃபோன் செய்தபோது, ஃபோனை யாரும் எடுக்கவில்லை.
பிறகு, சில நண்பர்களிடம் விசாரித்ததில், அந்த நிறுவன உரிமையாளர் கோழிகளையெல்லாம் மொத்தமாக விற்று விட்டுக் குடும்பத்துடன் எங்கோ தலைமறைவாகி விட்டதாக அறிந்தான் ஜகன். அவருக்குச் சொத்து எதுவும் இல்லை, கோழிப் பண்ணையைக் கூட அவர் வாடகைக்கு எடுத்த இடத்தில்தான் நடத்திக் கொண்டிருந்தார் என்பதால், போலீசில் புகார் செய்தாலும் பணம் கிடைக்க வாய்ப்பில்லை என்று அறிந்து கொண்டான்.
"உங்க பேச்சை நம்பி உங்க தம்பி வேற முதலீடு பண்ணி இருப்பாரே, அவருக்கு விஷயத்தைச் சொல்லுங்க!" என்றாள் ராதிகா.
தான் புத்திசாலித்தனமாக முதலீடு செய்பவன் என்பது போல் பேசித் தன் ஒன்று விட்ட சகோதரனுக்குத் தவறான ஆலோசனை சொல்லி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் ஜகனுக்கு ஃபோன் செய்தான் கோபி.
அவன் ஃபோன் பேசி முடித்ததும், "என்ன சொல்றாரு? உங்ககிட்ட கோவிச்சுக்கிட்டாரா?" என்றாள் ராதிகா..
"இல்ல. அவன் தப்பிச்சுட்டான்!"
"எப்படி?"
"இவ்வளவு ரிடர்ன் வருமான்னு அவனுக்கு சந்தேகமாகவே இருந்ததாம். எனக்குத் தொடர்ந்து வருமானம் வருதான்னு ரெண்டு மூணு மாசம் பாத்துட்டு, அப்புறம் முதலீடு பண்ணலாம்னு நினைச்சானாம். அதனால அவன் பணம் தப்பிச்சுது!"
"அவரோட நல்ல நேரம்தான்!" என்றாள் ராதிகா.
குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
No comments:
Post a Comment