"ஏண்டா, இப்ப எதுக்கு அந்தப் பண்ணை நிலத்தை விக்கணும்னு பாக்கற?" என்றார் வைத்திலிங்கம்.
"நிலத்தை வாங்கறப்ப, அந்த கம்பெனியில வருஷத்துக்கு இருபது பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறேன்னு சொன்னாங்க. ஆனா, மூணு வருஷமா பத்து பர்சன்ட்தான் கொடுக்கறாங்க. கேட்டா, 'விளைச்சல் கம்மி, காய்கறிகள், பழங்களோட விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, நாங்க எதிர்பாத்த வருமானம் வரலைன்னு சாக்கு சொல்றாங்க!" என்றான் அவர் மகன் ராமு.
'நீ அந்த நிலத்தை வாங்கறப்பவே சொன்னேனே, அவங்க சொல்றபடியெல்லாம் வருமானம் வரும்னு எதிர்பார்க்க முடியாது, இதிலெல்லாம் முதலீடு செய்யாதேன்னு' என்று வைத்திலிங்கம் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
"பத்து பர்சன்ட் ரிடர்ன் கூடப் பரவாயில்லையே! எதுக்கு இப்ப அதை விக்கற?"
"இல்லப்பா. நான் இந்த நிலத்தை வாங்கறப்ப, இதே மாதிரி ஸ்கீம் இன்னொரு கம்பெனியிலேயும் இருந்தது. அவங்க பன்னிரண்டு பர்சன்ட் ரிடர்ன்தான் கொடுப்பேன்னு சொன்னாங்க. முதலீடு கூட இதை விடக் குறைச்சல்தான். அதிக ரிடர்ன் வரும்னு இதை வாங்கினேன். இப்ப அவங்க பதினைஞ்சு பர்சன்ட் ரிடர்ன் கொடுக்கறாங்க! இவங்க என்னை ஏமாத்திட்டாங்க. அதனாலதான் விக்கணும்னு நினைக்கறேன்" என்றான்.
"இப்ப இதை வித்துட்டு, அதை வாங்கப் போறியா?" என்றார் வைத்திலிங்கம்.
"இன்னும் முடிவு பண்ணல. முதல்ல இதை விக்க முடியுமான்னு தெரியல. இப்ப மார்க்கட் டல், விலையெல்லாம் குறைஞ்சு போச்சு, வாங்கறத்துக்கே ஆள் இல்லேன்னு சொல்றாங்க. ஏற்கெனவே ஸ்டாக் மார்க்கெட்ல போட்ட பணமெல்லாம் முடங்கி இருக்கு. அஞ்ச லட்ச ரூபா முதலீடு பண்ணினேன். இப்ப என் பங்குகளோட மதிப்பு 3 லட்ச ரூபாயாக் குறைஞ்சுடுச்சு. ஏன் எல்லாமே இப்படி நஷ்டமாப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியல! இதையெல்லாம் நினைச்சுப் பாத்தா, ஒரே விரக்தியா இருக்கு!" என்று சலித்துக் கொண்டான் ராமு.
'உனக்கு நல்ல வேலை, சம்பளம், அமைதியான குடும்பம் எல்லாம் இருந்தும், உன்னோட அதிகமான ஆசைதான் உன் விரக்திக்குக் காரணம்கறதை நீ எப்ப புரிஞ்சிக்கப் போறியோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்தியலிங்கம்.
ஏற்கெனவே மகனிடம் இது பற்றி அவர் பல முறை பேசி மனக்கசப்பில் முடிந்ததில்தான் மிச்சம். அதனால் இப்போதெல்லாம் வைத்திலிங்கம் மகனிடம் எந்தக் கருத்தும் கூறுவதில்லை.
"உங்க காலம் வேறப்பா! நீங்க கிடைச்சது போதும்னு இருந்திட்டீங்க. என்னால அப்படி இருக்க முடியாது" என்றான் ராமு, தந்தை எதுவும் சொல்லி விடுவாரோ என்று நினைத்து, முன்னெச்சரிக்கையாக.
'அதிகமாக ஆசைப்படாமல், குடும்பத்தை நன்கு பார்த்துக் கொண்டால் போதும் என்று நினைத்து நான் செயல்பட்டதால்தான், உன் அக்காவையும், உன்னையும் நன்றாகப் படிக்க வைத்து, உன் அக்காவுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து, நீ நல்ல நிலைக்கு வந்த பிறகும் உன்னை எதிர்பார்க்காமல் நானும் உன் அம்மாவும் கடைசி வரை நல்லபடியாகக் குடும்பம் நடத்தும் அளவுக்குக் கையில் சேமிப்பு வைத்துக் கொண்டு என்னால் நிம்மதியாக வாழ முடிகிறது. இதை நீ எப்போது புரிந்து கொள்ளப் போகிறாயோ!' என்று நினைத்துக் கொண்டார் வைத்திலிங்கம்.
குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
No comments:
Post a Comment