வேணுவின் படிப்பு முடிந்ததுமே அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விடும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்படி நடக்கவில்லை.
பல நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்ட பிறகும், அவனுக்கு ஒரு வேலை நியமனக் கடிதம் கூட வரவில்லை. சில நிறுவனங்களிலிருந்து 'வருந்துகிறோம்' என்ற செய்தியைத் தாங்கிய கடிதங்கள்தான் வந்தன. மற்ற நிறுவனங்களிலிருந்து அதுவும் வரவில்லை.
அவனுடன் படித்துப் பட்டம் பெற்ற பலருக்கும் வேலை கிடைத்து விட்டது.
"இந்தக் காலத்தில தகுதிக்கு மதிப்பு இல்லை. இன்ஃப்ளூயன்ஸுக்குத்தான் மதிப்பு. நமக்கு அது இல்லையே!" என்றார் அவன் அப்பா.
அவன் ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டிய அவன் அம்மா, வேணுவின் ஜாதகத்தில் செவ்வாய் கேடு விளைவிக்கும் இடத்தில் இருப்பதாக அவர் சொன்னதை ஏற்று, அவர் யோசனைப்படி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகனுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கினாள்.
"எப்படிடா? எங்க எல்லாரையும் விட நீ புத்திசாலி. நிறைய மார்க் வாங்கி இருக்கே. நிறைய க்விஸ் நிகழ்ச்சிகள்ள கலந்துக்கிட்டுப் பரிசு வாங்கி இருக்கே. அதனால, பொது அறிவுக் கேள்விகளுக்கும் டாண் டாண்ணு பதில் சொல்லிடுவ. நீ ஏன் இன்டர்வியூவில செலக்ட் ஆகலேன்னே எனக்குப் புரியலியே!" என்றான் அவன் நண்பன் பாலு.
நண்பன் சொன்ன 'டாண் டாண்ணு பதில் சொல்லிடுவியே' என்ற கருத்து வேணுவின் சிந்தனையைத் தூண்டியது.
தான் கலந்து கொண்ட இன்டர்வியூக்களை மனதில் நினைத்துப் பார்த்தான் வேணு. இன்டர்வியூ முடிந்து வெளியே வரும்போதெல்லாம் அவனுக்கே ஒரு நம்பிக்கை ஏற்பட்டதில்லை. ஒருவகைத் தளர்ச்சியான மனநிலையுடன்தான் வெளியே வருவான் - இந்த வேலை தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தது போல்!
அது ஏன் என்று இத்தனை நாட்களாக அவனுக்குப் புரிந்ததில்லை. இப்போது புரிந்து விட்டது போல் தோன்றியது.
அவன் நண்பன் பாலு சொன்னது போல், இன்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் அவன் 'டாண் டாண்' என்று பதில் சொன்னதில்லை. தயங்கித் தயங்கித்தான் பதில் சொல்லி இருக்கிறான்.
நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்கப்படும்போதே பதில் அவன் மனதில் தோன்றி விடும். ஆனால், அவன் உடனே பதில் சொன்னதில்லை. தன் பதில் சரிதானா என்று மனதுக்குள் யோசித்து உறுதி செய்து கொண்டு பதில் சொல்வது போல், சில விநாடிகள் கழித்துத்தான் பதில் சொல்வான்.
அவன் சொன்ன பதில்கள் சரியானவையாக இருந்தாலும், அவனுடைய தயக்கம் நேர்முகத் தேர்வு நடத்துபவர்கள் மனதில் அவன் தன்னம்பிக்கை இல்லாதவன், அல்லது தனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி உறுதி இல்லாதவன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனாலேயே, அவர்கள் அவனைத் தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம். இது தனக்கும் உள்ளூரத் தெரிந்ததுதான் நேர்முகத் தேர்வு முடிந்ததும் தனக்கு ஏற்படும் மனச் சோர்வுக்குக் காரணமாக இருக்கும் என்று அவனுக்கு இப்போது தோன்றியது.
நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்றுத் தேறி, கூர்மையான அறிவுள்ளவன் என்று தன் நண்பர்களாலும், ஆசிரியர்களாலும் கருதப்பட்ட தான் ஏன் நேர்முகத் தேர்வுகளில் கேள்விகளுக்குத் தனக்கு பதில் தெரிந்தும் அவற்றை தைரியமாக உடனே சொல்லத் தயங்க வேண்டும்?
அவனுக்குப் புரியவில்லை.
தன் பிரச்னை என்னவென்று வேணு உணர்ந்து விட்டதால், ஒருவேளை அடுத்த நேர்முகத் தேர்வின்போது அவனால் இந்தக் குறையைப் போக்கிக் கொள்ள முடியலாம். அல்லது, அப்போதும் இதேபோல்தான் நடந்து கொள்வானா?
அவன் அடுத்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும்போதுதான் தெரியும்!
குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
No comments:
Post a Comment