தன் பள்ளி ஆசிரியர் தாமோதரன் சென்னையில் வசிப்பதாக அறிந்து அவரைப் பார்க்க விரும்பினான் வேலு. நாற்பது வருடங்களுக்கு முன் படித்த தன்னை அவருக்கு நினைவிருக்குமா என்ற ஐயம் அவனுக்கு இருந்தாலும், அவர் மீது அவனுக்கு இருந்த மரியாதையால் அவரைப் பார்க்கச் சென்றான்.
"சார்! நான் உங்க பழைய மாணவன். என் பேர் வேலு" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் வேலு.
கண்ணாடியை எடுத்துத் துடைத்துப் போட்டுக் கொண்டு அவனை உற்றுப் பார்த்த தாமோதரன், "ம்ம்ம்...வேலு... எந்த வருஷம் படிச்ச?" என்றார்.
சொன்னான்.
"உடனே ஞாபகம் வரல. உக்காரு. கொஞ்ச நேரம் பேசினா ஞாபகம் வரதான்னு பாக்கலாம்" என்றார் தாமோதரன்.
ஓரிரு நிமிடங்கள் வேலு அவரிடம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவனை இடைமறித்த தாமோதரன், "டேய் வேலு! உன்னை எப்படிடா மறந்தேன்! நீ ஒரு ஜீனியஸ்னு சொல்லுவேன் இல்ல?" என்றா,ர் உற்சாகத்துடன்.
"ஆமாம், சார்!" என்றான் வேலு, அடக்கமாக. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை அவர் நினைவு கூர்ந்தது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
"சார்! முப்பது பாட்ச்சுக்கு மேல உங்ககிட்ட படிச்சிருப்பாங்க. நான் உங்ககிட்ட படிச்சு 30 வருஷம் ஆச்சு. என்னை நீங்க ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு சார்!" என்றான் வேலு, உணர்ச்சிப் பெருக்குடன்.
"நான் விஞ்ஞான ஆசிரியர். விஞ்ஞானத்தில உனக்கு இருந்த ஆர்வத்தையும், அறிவுக் கூர்மையையும் பாத்துட்டுத்தான், உன்னை ஒரு ஜீனியஸ்னு வகுப்பில எல்லார் முன்னாலேயும் சொல்லி இருக்கேன். இப்ப என்ன செய்யற?"
எம்.எஸ்.சி படித்து விட்டு ஒரு சாதாரண வேலையில் சுமாரான சம்பளத்தில் இருப்பதை எந்த அளவுக்கு நாசூக்காகச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்குச் சொன்னான் வேலு. அவர் புரிந்து கொண்டார்.
அதற்குப் பிறகு, அவன் வேலை பற்றி எதுவும் கேட்காமல், குடும்பம், மற்ற விஷயங்கள் பற்றிப் பொதுவாகப் பேசினார் அவர்.
சற்று நேரம் கழித்து, அவரிடம் விடை பெற்றான் வேலு.
வேலு விடைபெற்றுச் சென்றதும், "உங்களைப் பார்க்க உங்க பழைய மாணவர்கள் பல பேர் வராங்க. ரொம்ப பேரை உங்களுக்கு நினைவு இருக்கறதில்ல. இவரை நல்லா நினைவு வச்சுக்கிட்டிருக்கீங்களே!" என்றாள் அவர் மனைவி.
"இவனை எப்படி மறக்க முடியும்? இவனோட புத்திசாலித்தனத்தைப் பாத்து நான் அசந்து போயிருக்கேன். பெரிய விஞ்ஞானியா கூட வருவான்னு நினைச்சேன். ஆனா, எம்.எஸ்.சி படிச்சும் கூட அவனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலேன்னு நினைக்கிறேன். சுமாரான ஒரு வேலையிலதான் இருக்கான், பாவம்!" என்றார் தாமோதரன்.
"எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்!" என்றாள் அவர் மனைவி.
"நீ அதிர்ஷ்டம்னு சொன்னதும் ஞாபகம் வருது. கொஞ்ச நாள் முன்னால வெங்கட்ராமன்னு ஒரு பையன் என்னைப் பாக்க வந்தானே, ஞாபகம் இருக்கா? புத்திசாலியா இருக்கற மாணவர்களை எனக்கு ஞாபகம் இருக்கற மாதிரி, ரொம்ப மக்கா இருக்கற மாணவர்களையும் என்னால மறக்க முடியாது! அவன் அப்படிப்பட்ட ஒரு மக்குதான். அவனை நான் எவ்வளவோ திட்டி இருக்கேன். 'நீயெல்லாம் எப்படிடா உருப்படப் போற? உன் பெற்றோர்களை நினைச்சா, எனக்கே பரிதாபமா இருக்கு' அப்படியெல்லாம் சொல்லி இருக்கேன். வேடிக்கை என்னன்னா, இப்ப அவன் ஒரு பெரிய கம்பெனியில ஜெனரல் மானேஜரா இருக்கான். நிறைய சம்பளம், வருஷத்தில பாதி நாள் வெளிநாட்டுப் பயணம்னு உச்சாணிக் கொம்பில இருக்கான். இவனையும் பாரு, அவனையும் பாரு! எல்லாம் நீ சொல்ற மாதிரி அதிர்ஷ்டம்தான் போலருக்கு!" என்றார் தாமோதரன்.
குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
No comments:
Post a Comment