About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, December 29, 2019

305. மருத்துவரின் ஆலோசனை

வெளியே போய் விட்டு வந்த சிவாவிடம் ஒரு களைப்பு தெரிந்தது.

"என்னங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள் அவன் மனைவி சாரதா.

"ஒண்ணுமில்ல!" என்றான் சிவா. 

மறுநாள் காலை எழுந்ததும் குளித்து விட்டு, "டாக்டரிடம் போயிட்டு வரேன்" என்று கிளம்பினான் சிவா. 

"என்னங்க உடம்புக்கு? நேத்திக்கே கவனிச்சேன். ஒரு மாதிரி சோர்வா இருந்தீங்களே!" என்றாள் அவன் மனைவி சாரதா பற்றத்துடன்.

"ஒண்ணுமில்ல. நேத்திலேந்து கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்கு. ராத்திரி சரியா தூங்க முடியல. அதனாலதான் டாக்டர்கிட்ட போகலாம்னு பாத்தேன்."

"இருங்க. நானும் கூட வரேன்!" என்று கிளம்பினாள் சாரதா.

"உங்களுக்கு பிளட் பிரஷர் அதிகமா இருக்கு. 180 இருக்கு" என்றார் மருத்துவர்.

"எவ்வளவு இருக்கணும்?" என்றாள் சாரதா.

"120 இருக்கணும். 140க்கு மேல போனா அதிகம்னு சொல்லுவோம். கவலைப்படாதீங்க. ரத்த அழுத்தம் இந்தக் காலத்தில நிறைய பேருக்கு இருக்கு. மாத்திரை எழுதிக் கொடுக்கறேன். சாப்பிட்டுக்கிட்டிருந்தா சரியாயிடும். சிகரெட், மது பழக்கம் ஏதாவது இருந்தா குறைச்சுக்கணும்."

"இவருக்கு அதெல்லாம் எதுவும் கிடையாதுங்க. காப்பி கூடக் குடிக்கிறதில்ல இவரு" என்றாள் சாரதா.

"அப்ப கவலைப்பட எதுவும் இல்ல. சீக்கிரமே கட்டுப்படுத்திடலாம். சாப்பாட்டில உப்பைக் குறைச்சுக்கங்க. நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செஞ்சா இன்னும் நல்லா குறையும்" என்றார் டாக்டர் சிரித்தபடி.

"வயசாயிடுச்சுல்ல? இது மாதிரி ஏதாவது வரும்தான். நீ ஒண்ணும் கவலைப்படாதே!" என்றான் சிவா, மனைவியிடம், வீட்டுக்கு வந்ததும்.

"ஏங்க, நாப்பது வயசு ஒரு வயசா? பொதுவா, நீங்க ரொம்ப உற்சாகமா இருக்கறவரு. அஞ்சாறு மாசமாதான் நீங்க வருத்தத்தோடயும், கோபத்தோடயும் இருக்கீங்க. வீட்டில குழந்தைங்க கிட்ட கூட எரிஞ்சு விழறீங்க. அதுக்கு முன்னால நீங்க இப்படி இல்லையே! குழந்தைங்க எங்கிட்ட வந்து அப்பாவுக்கு இப்பல்லாம் ஏன் ரொம்பக் கோபம் வருதுன்னு கேக்கறாங்க! உங்க கோபம்தான் உங்க ரத்த அழுத்தத்துக்குக் காரணமோ என்னவோ!" என்றாள் சாரதா.

சிவா மௌனமாக இருந்தான்.

"பிஸினஸ்ல உங்களை உங்க பார்ட்னர் ஏமாத்திட்டுப் போயிட்டார்ங்கறதனால  உங்களுக்கு ஏமாற்றம், கோபம் எல்லாம் இருக்கறது நியாயம்தான். ஆனா நீங்க அதிலேந்து வெளியே வரணும்ல? நீங்கதான் சமாளிச்சு மறுபடி பிசினஸை ஓரளவுக்கு சரி பண்ணிட்டீங்களே! அப்புறம் ஏன் இந்தக் கோபம் எல்லாம்?"

"என்னதான் நான் நிலைமையை சமாளிச்சுட்டாலும் அவன் ஏமாத்தினதை நினைச்சா எனக்கு வர கோபம் போக மாட்டேங்குதே!" என்றான் சிவா.

"சரி. அந்தக் கோபத்தை நீங்க யார் கிட்ட காட்டறீங்க? வீட்டில என்கிட்டேயும், குழந்தைங்க கிட்டேயும் காட்டறீங்க. உங்ககிட்ட வேலை செய்யறவங்க கிட்டேயும் காட்டறீங்களோ என்னவோ தெரியாது. அதனால இப்ப உங்க ஆரோக்கியமே பாதிக்கப்பட்டிருக்கு."

"டாக்டர் உப்பைக் குறைச்சுக்கச் சொன்னார் இல்ல?" என்றான் சிவா.

"ஆமாம். அதுக்கென்ன இப்ப?" என்றாள் சாரதா, கணவன் ஏன் சம்பந்தமில்லாமல் இதைச் சொல்கிறான் என்று புரியாமல். 

"கோபத்தைக் குறைச்சுக்கச் சொல்லியும் அவர் சொல்லி இருக்கணுமில்ல?" என்றான் சிவா சிரித்தபடி.

"அதான் வீட்டு டாக்டர் நான் சொல்றேனே!" என்றாள் சாரதா, அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டு.

"சமையல்ல உப்பை நீ குறைச்சுடுவ. மனசில கோபத்தை நான் குறைச்சுக்கறேன்" என்றான் சிவா. 

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

பொருள்:
ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள நினைத்தால் கோபத்தை அடக்க வேண்டும். அப்படி அடக்காவிட்டால், கோபம் தன்னையே அழித்து விடும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்

















Thursday, December 19, 2019

304. திருமணப் புகைப்படங்கள்!

"கல்யாணத்துக்குப் போகலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்!" என்றாள் மீனாட்சி. 

"உன் அண்ணன் பெண்ணுக்குக் கல்யாணம். உன் அண்ணனும் அண்ணியும் நேர்ல வந்து கூப்பிட்டிருக்காங்க. போகாம இருக்கப் போறியா என்ன?" என்றான் அவள் கணவன் நடராஜன். 

"கல்யாண வயசில ஒரு தங்கை இருக்கான்னு கூட கவலைப்படாம காதல்தான் முக்கியம்னுட்டு எங்க அப்பா அம்மா பேச்சை மீறித் தான் காதலிச்ச பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு எங்க உறவே வேண்டாம்னு போனவன் இத்தனை வருஷம் கழிச்சு, தன் பெண்ணுக்குக் கல்யாணம்னதும் என்னை வந்து கூப்பிட்டிருக்கான். அதை மதிச்சு நான் போகணுமா?"

"இங்க பாரு. எப்பவோ நடந்த விஷயம். உங்க அப்பா அம்மாவே சமாதானம் ஆகி உங்க அண்ணியை ஏத்துக்கிட்டு உங்க அண்ணன் குடும்பத்தோட நல்ல உறவு வச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. இப்ப அவங்களும் உயிரோட இல்ல. ஆனா நீ மட்டும்தான் பிடிவாதமா உன் அண்ணனோட பேச்சு வச்சுக்காம இருந்திருக்க. இப்ப அவரே வந்து உன்னைத் தன் பெண் கல்யாணத்துக்கு கூப்பிட்டப்ப, நீ போகாம இருக்கறது சரியா இருக்குமா?"

"எங்க அப்பா அம்மா அவனை மன்னிச்சிருக்கலாம். ஆனா நான் அவனை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்!" என்றாள் மீனாட்சி.

"அப்ப, நாம கல்யாணத்துக்குப் போகப் போறதில்லையா?" என்றான் நடராஜன். 

"போகலாம். முகூர்த்தத்துக்கு மட்டும் போய்த் தலையைக் காட்டிட்டு, மொய் எழுதிட்டு உடனே கிளம்பி வந்துடலாம். சாப்பிடக் கூட வேண்டாம்" என்றாள்  மீனாட்சி.

ஆயினும், இருவரும் இரண்டு நாட்கள் இருந்து கல்யாண நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு விட்டுத்தான் வந்தார்கள். ஆனால் மீனாட்சி தன் கோபத்தைக் காட்டும் விதமாக யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருந்தாள்.

"ன் அண்ணன் கல்யாண ஃபோட்டோல்லாம் அனுப்பி இருக்காரு. பாக்கறியா?" என்றான் நடராஜன்.

"அதுக்குள்ளே ஃபோட்டோல்லாம் வந்துடுச்சா என்ன? எப்படி அனுப்பினான்?" என்றாள் மீனாட்சி.

"இப்பதான் வாட்ஸ் ஆப் இருக்கே! முக்கியமான கல்யாண நிகழ்ச்சிகளோட ஃபோட்டோக்களையும், நீயும் நானும் இருக்கற வேற ஃபோட்டோக்களையும் எனக்கு வாட்ஸ் ஆப்ல அனுப்பி இருக்காரு உன் அண்ணன்" என்றான் நடராஜன். 

அருகில் வந்து நடராஜனின் ஃபோனில் புகைப்படங்களைப் பார்த்ததும் மீனாட்சியின் முகம் மாறியது.

"என்னங்க இது? ஒரு ஃபோட்டோல கூட என் மூஞ்சி நல்லாவே விழலையே!" என்றாள் மீனாட்சி. 

"எப்படி விழும்? நீதான் மூஞ்சியைக் கடுகடுன்னு வச்சுக்கிட்டிருந்தியே! சில பேர் எங்கிட்ட 'உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லையா, ஏன் ஒரு மாதிரி இருக்காங்க?'ன்னு கூடக் கேட்டாங்க. ரெண்டு நாளும் கடுகடுன்னு கல்யாணத்தில உக்காந்துக்கிட்டிருந்ததில உனக்கும் சந்தோஷம் இல்ல, உன் மூஞ்சியும் களை இல்லாம இருந்தது. அதைத்தான் இந்த ஃபோட்டோல்லாம் காட்டுது!" என்றான் நடராஜன். 

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

பொருள்:
முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தை விடப் பெரிய பகை வேறு என்ன இருக்க முடியும்?
பொருட்பால்                                                                             காமத்துப்பால்












Wednesday, December 18, 2019

303. சதீஷின் முடிவு

"அப்பா! ரொம்ப சந்தோஷமா இருக்கு! ரொம்ப நாளா மனசில இருந்த கோபம் இன்னிக்குத்தான் போச்சு!" என்றான் சதீஷ்.

"என்ன கோபம்? எப்படிப் போச்சு?" என்றாள் அவன் மனைவி வசந்தா.

"எங்க கம்பெனிக்காக காம்பஸ் ரெக்ரூட்மெண்ட்டுக்காக இன்னிக்கு ஒரு காலேஜுக்குப் போயிருந்தேன். ஆப்டிட்யூட் டெஸ்ட்ல பாஸ் பண்ணினவங்களை இன்டர்வியூ பண்ணி செலக்ட் பண்றதுக்காக. அதில ஒரு பையன் டெஸ்ட்ல நிறைய மார்க் வாங்கி இருந்தான். இன்டர்வியூவும் நல்லாத்தான் பண்ணினான். இன்டர்வியூ கமிட்டில இருந்த மத்த ரெண்டு பேரும் அவனை செலக்ட் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா அவனுக்கு கம்யூனிகேஷன் ஸ்கில் போதாதுன்னு சொல்லி நான் அவனை ரிஜெக்ட் பண்ணிட்டேன். மத்த ரெண்டு பேரும் அவனுக்காக ரொம்ப வாதாடினாங்க. ஆனா நான்தானே சீனியர்? அதனால நான் சொன்னதை அவங்க ஒத்துக்க வேண்டியதாயிடுச்சு!"

"ஏன் அப்படிப் பண்ணினீங்க? அவனோட கம்யூனிகேஷன் ஸ்கில் அவ்வளவு மோசமா இருந்ததா என்ன?"

"இல்லை. ஓரளவுக்கு நல்லாவே இருந்தது. ஆனா அவனை நான் வேண்டாம்னு சொன்னதுக்கு வேற ஒரு காரணம் இருக்கு."

"என்ன காரணம்?"

"நம்ப கல்யாணத்துக்கு முன்னால, எங்க குடும்பம் ஒரு வீட்டில வாடகைக்குக் குடியிருந்தப்ப, வீட்டுக்காரர் பக்கத்து போர்ஷன்ல இருந்துக்கிட்டு எங்களுக்கு தினம் தொந்தரவு கொடுத்துக்கிட்டிருந்தார்னு சொல்லி இருக்கேன்ல?"

"ஆமாம். எப்பவோ நடந்தது அது. நமக்குக் கல்யாணம் ஆகியே இருபது வருஷத்துக்கு மேல ஆயிடுச்சே!"

"ஆமாம். ஆனா அவர் அப்ப எங்களுக்குக் கொடுத்த டார்ச்சரை நான் இன்னும் மறக்கல. அவர் மேல எனக்கு இருந்த கோபமும் போகல. அதனாலதான் இப்ப பழி தீர்த்துக்கிட்டேன்!"

"பழி தீர்த்துக்கிட்டீங்களா? என்ன செஞ்சீங்க?" என்றாள் வசந்தா பதட்டத்துடன்.

"இன்னிக்கு நான் ரிஜெக்ட் பண்ணினதாச் சொன்னேனே, அவன் அவரோட பையன்தான்!"

வசந்தா சட்டென்று சிரித்து விட்டாள்.

"ஏன் சிரிக்கிற?"என்றான் சதீஷ்.

"சாரி! நீங்க செஞ்சது எவ்வளவு சில்லியான காரியம்னு தெரிஞ்சதும் சிரிப்பு வந்துடுச்சு. நியாயமாப் பாத்தா உங்க மேல கோபம்தான் வந்திருக்கணும்!"

"இதில நீ கோபப்படறதுக்கு என்ன வந்தது?"

"ஏங்க, நீங்க ஒரு கம்பெனியில பெரிய பதவியில் இருக்கீங்க. உங்ககிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க. அதை நீங்க சரியா நிறைவேத்த வேண்டாமா? ஏதோ ஒரு பழைய கோபத்தைத் தீர்த்துக்கறதுக்காக உங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி தகுதியுள்ள ஒரு பையனோட வாய்ப்பைக் கெடுத்திருக்கீங்களே, இது தப்புன்னு உங்களுக்குத் தோணலியா?"

"பெரிய தப்பு ஒண்ணுமில்ல. அவனுக்கு பதிலா தகுதியுள்ள இன்னொருத்தனுக்கு அந்த வேலை கிடைக்கப் போகுது. அவனுக்கும் வேற கம்பெனியில வேலை கிடைச்சுடும்."

"அப்ப, நீங்க சாதிச்சது என்ன? உங்க பழைய கோபத்தைத் தீர்த்துக்க நியாயம் இல்லாம நடந்துக்கிட்டு நீங்களே உங்களுக்கு ஒரு சறுக்கலை ஏற்படுத்திகிட்டிருக்கீங்க. உங்க கூட இருந்த ரெண்டு ஜுனியர் அதிகாரிகளும் உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க? இதனால அவங்க மதிப்பில நீங்க தாழ்ந்து போயிருப்பீங்களே, அது ஒரு பெரிய இழப்பு இல்லையா உங்களுக்கு?"

சதீஷ் மௌனமாக இருந்தான்.

"இங்க பாருங்க, உங்க அலுவலக சம்பந்தமான விஷயங்கள்ள நான் எப்பவுமே தலையிட்டதில்ல. இப்ப நீங்களே எங்கிட்ட இதைச் சொன்னதால என் மனசில தோணினதைச் சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க" என்றாள் வசந்தா.

"இல்லை வசந்தா. நீ சொன்னப்பறம் நானும் யோசிச்சுப் பாக்கிறேன். செலக்ட் ஆனவங்க பட்டியலை நாங்க இன்னும் வெளியிடல. நாளைக்குத்தான் வெளியிடப் போறோம். அந்தப் பையனை செலக்ட் பண்ணிடலாம்னு சொல்லி லிஸ்ட்ல சேக்கச் சொல்லிடறேன். நீ சொன்னபடி என் சக ஊழியர்கள் என்னைப் பத்தி இன்னிக்கு தப்பா நினைச்சிருந்தாலும், நான் மனசை மாத்திக்கிட்டதும், இன்னிக்கு நான் ஏதோ ஒரு மூட்ல அப்படிச் சொல்லிட்டேன்னு நினைச்சு, என்னைப் பத்தின அவங்களோட தப்பான மதிப்பீட்டை மாத்திப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் சதீஷ். 

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

பொருள்:
யார் மீதும் கோபப்படாமல், கோபம் வருவதற்குக் காரணமான செயலை மறந்து (மன்னித்து) விட வேண்டும். கோபத்தினால் பல தீய விளைவுகள் தோன்றும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்

























Saturday, December 14, 2019

302. சான்றிதழ் கிடைக்கவில்லை!

"இந்த வண்டிதானே?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"கையில ஆர் சி புக் இருக்கு. அதில வண்டி நம்பர் இருக்கு. அந்த நம்பர்தான் வண்டில இருக்கான்னு பாக்க வேண்டியதுதானே?" என்ற பதில் பரந்தாமனின் மனதுக்குள் தோன்றியது. 

ஆனால், அவன் எதுவும் சொல்வதற்குள் உடன் வந்திருந்த அவன் நண்பன் அசோக் "ஆமாம் சார்!" என்றான்.

"ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் புதுப்பிக்க வரச்சே வண்டியை வாட்டர் வாஷ் பண்ணி சுத்தமாக் கொண்டு வரதில்ல? இவ்வளவு அழுக்கா இருக்கு!" என்றார் இன்ஸ்பெக்டர். 

"சார்! ரொம்ப தூரம் ஓட்டிக்கிட்டு வரோம். வழியில மண் ரோடு வேற. அதனால தூசு பட்டு அழுக்காத் தெரியுது" என்றான் அசோக்.

"ஏன் சார், ஃபிட்னெஸ்ன்னா, வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கான்னு பாக்கணும். அதை விட்டுட்டு வண்டி அழுக்கா இருக்குன்னு சொல்றீங்க! அதுக்கும் ஃபிட்னெஸுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் பரந்தாமன்.

அசோக் அவனைக் கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்க்க, இன்ஸ்பெக்டர் முறைத்தார். "வண்டி சுத்தமாயிருக்கறதும் முக்கியம். மத்த வண்டியெல்லாம் எப்படி இருக்குன்னு பாருங்க!" என்றார். 

"நீங்க சொல்றது சரிதான்!" என்று அசோக் சமாதானமாகப் பேச ஆரம்பித்தான். அவனை இடைமறித்த பரந்தாமன், "சரியில்லாத வண்டியை நல்லா வாஷ் பண்ணித் துடைச்சுக் கொண்டு வந்தா உடனே ஃபிட்னெஸ் சர்ட்டிபிகேட் கொடுத்துடுவீங்களா?" என்றான்.

"டேய், கொஞ்சம் சும்மா இரு!" என்றான் அசோக் வெளிப்படையாகவே.

"சரி! உங்க வண்டியோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு பாத்துடலாம்!" என்ற இன்ஸ்பெக்டர், "வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க" என்றார்.

பரந்தாமன் வண்டியை உதைத்தான். முதல் உதையில் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. இரண்டாவது உதையில்தான் ஸ்டார்ட் ஆயிற்று.

"வண்டியில ஸ்டார்ட்டிங் டிரபிள் இருக்கும் போலருக்கே!" என்றார் இன்ஸ்பெக்டர்.

"அதான் ரெண்டாவது உதையில ஸ்டார்ட் ஆயிடுச்சே! நான் முதல் தடவை சரியா உதைக்காம இருந்திருக்கலாம். முதல் உதையிலேயே ஸ்டார்ட் ஆனாத்தான் ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் கொடுக்கலாம்னு சட்டம் இருக்கா என்ன?" என்றான் பரந்தாமன்.

அசோக் அவன் கையை அழுத்திப் பேச வேண்டாம் என்று சைகை செய்தான்.

"வண்டி கண்டிஷன்லதான் சார் இருக்கு. ரெண்டு நாள் முன்னேதான் சர்வீ ஸ் பண்ணினோம். நீங்க வேணும்னா ஓட்டிப் பாருங்க" என்றான் அசோக் இன்ஸ்பெக்டரிடம்.

"வேண்டாம். நீங்களே வண்டியை ஓட்டிக் காட்டுங்க, பாக்கறேன்!" என்றார் இன்ஸ்பெக்டர் பரந்தாமனிடம்.

பரந்தாமன் வண்டியைச் சற்று தூரம் ஓட்டி விட்டுத் திரும்ப வந்தான்.

இன்ஸ்பெக்டர் தன் கையிலிருந்த விண்ணப்பத்தில் ஏதோ எழுதினார். பிறகு, "கியர் மாத்தறப்ப கிளட்ச் பிளேட்ல சத்தம் வருது. புகை வேற அதிகமா வர மாதிரி இருக்கு!" என்றார்.

"அதான் பொல்யூஷன் கண்ட்ரோல் சர்ட்டிஃபிகேட் வாங்கி இருக்கேனே! அப்புறம் எப்படிப் புகை அதிகமா வருதுன்னு சொல்லுவீங்க?" என்றான் பரந்தாமன் சற்றே உரத்த குரலில். இப்போது அருகில் நின்றிருந்த சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.

"அது ஒரு மாசம் முன்னால வாங்கினது!" என்றார் இன்ஸ்பெக்டர்.

"அதுக்கு ஆறு மாசம் வேலிடிட்டி இருக்கே!"

"இருக்கலாம். ஆனா புகை நிறைய வரதை நான் கண்ணால பாக்கறேனே!" என்ற இன்ஸ்பெக்டர். "நீங்க என்ன செய்யறீங்க, வண்டியை நல்லா சர்வீஸ் பண்ணி, க்ளட்ச் பிளேட்டெல்லாம் சரி பண்ணுங்க. அநேகமா க்ளட்ச் பிளேட் புதுசா மாத்த வேண்டி இருக்கலாம்! அதிகம் புகை வரதை சரி பண்ணி, புதுசா ஒரு எமிஷன் கண்ட்ரோல் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கிட்டு வாங்க" என்றவர், பிரேக்கைக் காலால் அழுத்திப் பார்த்து, "பிரேக் கூட லூசா இருக்கற மாதிரி இருக்கு, முன் சக்கரத்தில வாப்ளிங் இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணிட்டுக் கொண்டாங்க!" என்று சொல்லி விட்டுத் திரும்பினார்.

"சார்! நீங்க ஃபிட்னெஸ் சர்ட்டிபிகேட் கொடுத்துடுங்க சார்! இந்தச் சின்ன விஷயங்களை நாங்க சரி பண்ணிடறோம்" என்றான் அசோக் கெஞ்சும் குரலில்.

"நீங்க சொல்றீங்க! ஆனா, வண்டியோட சொந்தக்காரர் எல்லாம் சரியா இருக்குன்னு பிடிவாதமா சொல்றாரே! நான் என்ன செய்யறது! அதோட, அப்ளிகேஷன்ல இந்தக் குறைகளையெல்லாம் எழுதிட்டேன். இனிமே அதை மாத்த முடியாது!" என்ற இன்ஸ்பெக்டர் பரந்தாமனை ஏளனத்துடன் பார்த்து விட்டுப் போனார்.

"என்னடா இப்படிப் பண்ணிட்டே! கொஞ்சம் பொறுமையாப் பேசியிருந்தா வேலை முடிஞ்சிருக்கும்!" என்றான் அசோக் பரந்தாமனிடம்.

"அவரு வேணும்னுட்டு இல்லாத குறையை எல்லாம் சொல்லிக்கிட்டிருக்காரு. நான் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கணுமா? அதான் சூடா கேட்டு விட்டேன்!" என்றான் பரந்தாமன்.

"டேய் முட்டாள்! அவரு என்ன உனக்குக் கீழே வேலை செய்யறவரா? அவர் கிட்ட அதிகாரம் இருக்கு. அதை அவர் தப்பாவும் பயன்படுத்தலாம். கொஞ்சம் பொறுமையா இருந்தாத்தான் காரியம் நடக்கும். அவரு சொன்னது தப்பா இருந்தாலும் அவர்கிட்ட முறைச்சுக்கிட்டா நமக்குத்தான் நஷ்டம். உனக்கு உதவி செய்யத்தான் நான் கூட வந்தேன். நீ சும்மா இருந்திருந்தா வேலை முடிஞ்சிருக்கும். நீ அவர்கிட்ட கோபமாப் பேசிக் காரியத்தைக் கெடுத்துட்ட! இப்ப நீ வண்டியை மறுபடி சர்வீஸ் பண்ணி அவர் சொன்ன விஷயங்களைச் சரி பாக்கணும். அதுக்குக்  கூடுதல் செலவு. அதோட இன்னொரு நாளைக்கு வேற வரணும். டயம் வேற வேஸ்ட். அடுத்த தடவையாவது நீ பேசாம இரு. நான் பொறுமையாப் பேசிச் சமாளிச்சுக்கறேன்" என்றான் அசோக். 

"நீ கூட எங்கிட்ட இப்ப கோபமாத்தான் பேசற!" என்றான் பரந்தாமன். 

"ஆமாம். நீ என் நண்பன். அதனால உரிமையோடு பேசறேன். அது மாதிரி எல்லார்கிட்டயும் பேச முடியுமா?" என்ற அசோக், "ஆனா, இதிலேயும் ஒரு ஆபத்து இருக்கு! நான் கோபமாப்  பேசினதால நீ அப்செட் ஆகி  'உன்னோட நட்பே வேண்டாம்'னுட்டுப் போயிட்டா அதுவும் ஒரு மோசமான விளைவுதானே! அதனால நமக்கு நெருக்கமானவங்க கிட்ட கூடக் கோபமாப் பேசறதைத் தவிர்க்கறது நல்லதுன்னு இப்ப எனக்குத் தோணுது!" என்றான் அசோக்.

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

பொருள்:
தன் கோபம் செல்லுபடியாகாத இடத்தில் தன் கோபத்தைக் காட்டுவது தீங்கு விளைவிக்கும். செல்லும் இடத்தில் கோபத்தைக் காட்டினாலும், அதை விடத்  தீதானது வேறு எதுவும் இல்லை.
       பொருட்பால்                                                                             காமத்துப்பால்















Tuesday, December 10, 2019

301. சுந்தரமூர்த்தி என்கிற ருத்ரமூர்த்தி

"உங்களுக்கு சுந்தரமூர்த்தின்னு பேர் வச்சதுக்கு பதிலா ருத்ரமூர்த்தின்னு பேர் வச்சிருக்கலாம்" என்றாள் சியாமளா. "இவ்வளவு கோபம் வருது உங்களுக்கு!"   

"தப்புப் பண்ணினா கோபம் வராம என்ன செய்யும்?" என்றார் சுந்தரமூர்த்தி. அப்போது அவர் கோபமாக இல்லை. கோபமாக இருந்திருந்தால் அவர் மனைவி அவரிடம் அப்படிப் பேசி இருக்கவே மாட்டாளே!

"என்ன பெரிசா தப்பு பண்றேன்? நீங்க சொன்ன எதையாவது செய்யாம விட்டிருப்பேன். அதுக்கு ஒரு கோபம்! என்னை விடுங்க. நம்ம பையன் உங்க முன்னால வரவே பயப்படறான். படிக்கிற பையனை இப்படியா பயமுறுத்தி வச்சிருப்பீங்க?"

"பயமுறுத்தறேனா? ஒழுங்கா படின்னு சொல்லுவேன். படிக்காம எங்கேயாவது வெளியில போய் சுத்திட்டு வந்தா ரெண்டு வார்த்தை சொல்லுவேன். இதெல்லாம் ஒரு தப்பா?"

"இங்க பாருங்க. டியூஷன் போயிட்டு வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சவன் உங்க குரலைக் கேட்டதும் ரூமுக்குள்ள போய்க் கதவைச் சாத்திக்கிட்டான்!" என்றாள் சியாமளா.

ன்று அலுவலகத்திலிருந்து வரும்போதே சோர்வுடன் வந்தார் சுந்தரமூர்த்தி.

அவர் முகபாவத்தைப் பார்த்ததும் இன்று மனிதர் வெடிக்கப் போகிறார் என்று நினைத்து அவசர அவசரமாக காப்பியைப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள் சியாமளா. அவர் பையன் கணேஷ் சந்தடியின்றி ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு நழுவினான்.

சுந்தரமூர்த்தி காப்பியைக் குடிக்காமல் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க, காப்பி ஆறிடப் போகுது!" என்றாள் சியாமளா, காப்பி ஆறி விட்டால் அதற்கு வேறு கத்தப் போகிறாரே என்று பயந்து!

சுந்தரமூர்த்தி அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. அதற்குக் காரணம் அவருடைய மேலதிகாரி. ஆனால் அந்த மேலதிகாரி சுந்தரமூர்த்தியின் இருக்கைக்கு வந்து சுந்தரமூர்த்திதான் அந்தத் தவறுக்குக் காரணம் என்று கூறி அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் அவரைக் கடுமையாக ஏசி விட்டார்.

சுந்தரமூர்த்திக்கு, "சார்! அது என்னோட தப்பு இல்ல, உங்களோட தப்பு. என்னை ஏன் குத்தம் சொல்றீங்க?" என்று கூவ வேண்டும் போல் இருந்தது. ஆனால் மேலதிகாரியை எதிர்த்துப் பேச தைரியமின்றி வாய் மூடி மௌனமாக அவருடைய ஏச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சுந்தரமூர்த்தி நிமிர்ந்து மனைவியின் முகத்தைப் பார்த்தார். அவர் காப்பி குடிக்காமல் காலம் கடத்தி அதனால் காப்பி ஆறி விட்டால் கூடத் தன்னைக் கோபித்துக் கொள்வாரோ என்ற பயத்துடன் அவள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

மனைவியிடமும் மகனிடமும் சிறிய விஷயங்களுக்குக் கூட இவ்வளவு கோபம் காட்டும் தன்னால், அநியாயமாகத் தன்னைக் குற்றம் சொன்ன மேலதிகாரியிடம் தன் நியாயமான கோபத்தை ஏன் காட்ட முடியவில்லை என்று அவர் யோசித்துப் பார்த்தார்.

"கணேஷ் எங்கே?"

"படிக்கறதுக்கு மாடிக்குப் போயிருக்கான். காப்பியைக் குடிங்க. ஆறிடும்" என்றாள் மனைவி. 

சுந்தரமூர்த்தி மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

திருமணமான புதிதில் அவர் முகத்தில் இருந்த கனிவும், பரிவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தெரிந்ததாக சியாமளாவுக்குத் தோன்றியது.

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.

பொருள்:
எந்த இடத்தில் தன் கோபம் செல்லுபடியாகுமோ, அந்த இடத்தில் தன் கோபத்தைக் காட்டாமல் அடக்கிக் கொள்பவன்தான் உண்மையிலேயே கோபத்தைக் கட்டுப்படுத்துபவன். தன் கோபம் செல்லுபடியாகாத இடத்தில் கோபத்தை அடக்கினால் என்ன, அடக்காவிட்டால் என்ன?
பொருட்பால்                                                                             காமத்துப்பால்
























Thursday, December 5, 2019

300. உலகத்தில் சிறந்தது எது?

"எங்கள் நிறுவனத்தில் மானேஜ்மென்ட் ட்ரெய்னியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் எட்டு பேருக்கும் பாராட்டுக்கள். 

"ஆப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், இன்டர்வியூ என்று பல படிகளை நீங்கள் ஏற்கெனவே தாண்டி வந்திருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு இன்னொரு க்ரூப் டிஸ்கஷன் இருக்கிறது. 

"பயப்படாதீர்கள். இது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை பாதிக்காது. ஒரு நோக்கத்துக்காக நாங்கள் இதை வைத்திருக்கிறோம். இந்த க்ரூப் டிஸ்கஷனை நீங்கள் உங்களுக்குள் நடத்திக் கொள்வீர்கள். நாங்கள் யாரும் உங்களை கவனித்து மதிப்பெண் கொடுக்கப் போவதில்லை. 

"அரை மணி நேரம் கழித்து நான் வருவேன். நீங்கள் என்ன முடிவுக்கு வந்தீர்கள் என்று சொன்னால் மட்டும் போதும். மறுபடியும் சொல்கிறேன். உங்கள் செலக்‌ஷன் ஃபைனல். அதனால் கவலைப்படாமல் இதைச் செய்யுங்கள். நீங்கள் விவாதிக்க வேண்டிய தலைப்பு 'உலகத்தில் சிறந்தது எது?'" என்றார் பர்சனல் ஆஃபீஸர். 

சொல்லி விட்டு அவர் போய் விட்டார். 

வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரும் கொஞ்சம் கவலையுடனும், கொஞ்சம் குழப்பத்துடனும் வட்டமாக அமர்ந்தனர்.

"இது நம்ம செலக்‌ஷனை பாதிக்காதுன்னு சொன்னாலும், கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. ஏதாவது டிராப் இருக்குமான்னு சந்தேகமா இருக்கு!" என்று ஒருவன் ஆரம்பிக்க, மற்றவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

"பர்சனல் ஆஃபீஸர்தான் கவலைப்பட வேண்டாம்னு சொல்லி இருக்காரே! அதனால நாம கொஞ்சம் ரிலாக்ஸ்டாவே இருப்போம். முதல்ல இந்த டாபிக் கொஞ்சம் விசித்திரமா இருக்கு! நாம பாக்கப் போற மானேஜ்மென்ட் வேலைக்கும், இந்தத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?"

"உலகத்தில் சிறந்தது எதுன்னு ஒரு பழைய சினிமாப் பாட்டு இருக்கு. அதில கதாநாயகி உலகத்தில சிறந்தது காதல்னு சொல்லுவா, கதாநாயகன் தாய்மைன்னு சொல்லுவான். இதிலேந்து நாம ஆரம்பிக்கலாம்."

"அப்படிப் பாத்தா காதல், தாய்மை இரண்டுக்கும் அடிப்படை அன்புதான். அதனால உலகத்தில சிறந்தது அன்புன்னு சொல்லலாமா?"

"நாம இப்ப வேலையில சேந்திருக்கறதால கடமைதான் முக்கியம்னு சொல்லலாமே."

"கடமை, அன்பு, காதல், பாசம்னு சினிமா மாதிரி போய்க்கிட்டிருக்கு! தேசபக்தின்னு சொல்லலாமே!"

"அதுவும் சினிமா சென்டிமென்ட்தான்!"

"தர்மம்?"

"தர்மம்னா அறமா அல்லது தர்மம் செய்யறதா அதாவது கொடையா?"

"தர்மம், அன்பு, பாசம் இதெல்லாம் பழைமையான விஷயங்கள். நாம இருக்கறது ஒரு விஞ்ஞான யுகத்தில. அதனால உலகத்தில சிறந்தது விஞ்ஞான அறிவு அதாவது, சுருக்கமா அறிவுன்னு சொல்லலாமே!"

"ஆமாம். அறிவுன்னா அது விஞ்ஞான அறிவாகவும் இருக்கலாம், மெய்ஞ்ஞான அறிவாகவும் இருக்கலாம். பழமை, புதுமை இரண்டுக்குமே அறிவுங்கற கருத்து பொதுவா இருக்கு. அதனால அறிவுதான் உலகத்தில சிறந்த விஷயம்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்."

"என்ன? எல்லாரும் ஒத்துக்கறீங்களா? அறிவுன்னு முடிவு செஞ்சுடலாமா?"

"இருங்க. எனக்கு இன்னொண்ணு தோணுது. அறிவுங்கறது உயர்ந்த விஷயம்தான். ஆனா அறிவுங்கறது எதைக் குறிக்குது? அதாவது விஞ்ஞான அறிவுன்னு சொல்றமே, அது என்ன?"

"விஞ்ஞான அறிவுன்னா விஞ்ஞானத்தால் நாம அறிஞ்ச உண்மை."

"ஆங், அதுதான்! உண்மை! எனவே உலகத்தில சிறந்தது உண்மைன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்."

மற்றவர்கள் இதை ஒப்புக் கொள்வதா என்ற யோசனையில் இருந்தார்கள்.

"இப்படிப் பாருங்க. உண்மைங்கறது நாம இங்கே விவாதிச்ச எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். பாசம், அன்பு, தேசபக்தின்னு எதை எடுத்துக்கிட்டாலும் அவற்றோட தன்மையைப் பத்தி நாம என்ன சொல்றோம்? உண்மையான அன்பு, உண்மையான பாசம் அப்படியெல்லாம் சொல்றோம் இல்ல? அதனால உண்மைங்கறது சிறந்தது மட்டும் இல்ல, எல்லா விஷயங்களையும் சிறந்ததாக ஆக்குவது. எனவே உலகத்தில் எல்லாவற்றையும் விடச் சிறந்தது உண்மைன்னு சொல்லலாம் இல்ல?"

மற்ற ஏழு பேரும் கை தட்டி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். 

"என்ன உலகத்தில் சிறந்தது எதுன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா?'" என்றார் பர்சனல் ஆஃபீசர் 

"ஆமாம் சார்!"

"என்ன அது?"

"உண்மை!" 

"பிரமாதம்.ஒரு விஷயம் சொல்றேன். ஆச்சரியப்படுவீங்க! நம்ம கம்பெனியோட மோட்டோ என்ன தெரியுமா? 'உண்மை'. இங்க பாருங்க. நம் கம்பெனியோட லோகோ. அதில உண்மைன்னு எழுதி இருக்கா?" 

"இல்லையே சார்!"

"அது கண்ணுக்குத் தெரியாது. லோகோவோட நடுவில ஒரு சின்ன வட்டம் இருக்கா?"

"ஆமாம்."

"அந்த வட்டத்துக்குள்ள இந்தியாவில் இருக்கிற மொழிகள் மற்றும் உலகத்தின் முக்கியமான மொழிகள் உட்பட 36 மொழிகள்ள  உண்மைன்னு ரொம்ப சின்னதா செதுக்கியிருக்கு. லென்ஸ் வச்சுப் பாத்தாத்தான் தெரியும். உண்மையை நாம தேடணும்கற கருத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி இப்படி உருவாக்கி இருக்காரு நம் கம்பெனியோட நிறுவனர்" என்றார் பர்சனல் ஆஃபீஸர்.

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

பொருள்:
நான் உண்மையாகக் கற்றறிந்த நூல்கள் எதிலும் வாய்மையை விடச் சிறந்த அறம் வேறு எதுவும் இல்லை.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்


















Tuesday, December 3, 2019

299. அணையா விளக்கு

"எங்க அழைப்பை ஏற்று எங்க ஊருக்கு வந்தது பத்தி ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு" என்றார் தாமோதரன்.

"ஆன்மீகச் சொற்பொழிவு செய்யறது என்னோட பணி. எங்க கூப்பிடறாங்களோ அங்க போறேன். எனக்குத் தெரிஞ்ச விஷயங்களை சொல்லிட்டு வரேன்" என்றார் ஆன்மீகச் சொற்பொழிவாளர் அருட்செல்வம்.

"சாயந்திரம் மண்டபத்திலே உங்க சொற்பொழிவு. அதுக்கு முன்னால எங்க ஊர் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்."

"நான் இந்த ஊருக்கு வந்துட்டேன். சொற்பொழிவு முடிஞ்சு ஊருக்குத் திரும்பற வரையிலே என் நிகழ்ச்சிகளை நீங்கதான் தீர்மானிக்கணும். ஆங்கிலத்தில சொன்னா ஐ ஆம் அட் யுவர் டிஸ்போஸல்!" என்றார் அருட்செல்வம் சிரித்தபடி.

மாலை கோவிலுக்குள் நுழையுமுன், "இந்தக் கோவில்ல ஒரு விசேஷம் உண்டு. இங்க அணையா விளக்குன்னு ஒரு தீபம் இருக்கு. பல நூறு வருஷங்களா - இந்தக் கோவில் நிறுவப்பட்டதிலேந்தேன்னு நினைக்கறேன் - இந்த தீபம் எரிஞ்சுக்கிட்டே இருக்கு. எந்த ஒரு புயல் மழை வந்து ஊரே அடங்கிக் கிடந்தாலும், எப்படியோ கோவிலுக்கு வந்து தீபத்துக்கு எண்ணெய் போட்டு அதைத் தொடர்ந்து எரிய வச்சுக்கிட்டிருக்காங்க!" என்றார் தாமோதரன்.

"எரிய வச்சுக்கிட்டிருக்காங்கன்னு ஏன் சொல்றீங்க? எரிய வச்சுக்கிட்டிருக்கோம்னு சொல்லுங்க! நீங்களும் இந்த ஊர்க்காரர்தானே! இது பெரிய விஷயம். இது மாதிரி காரியங்களைத் தொடர்ந்து செய்யறதுங்கறது சாதாரண விஷயம் இல்ல. நான் வேற ஊர்கள்ள பேசறப்ப இந்தக் கோவிலைப் பத்தி சொல்றேன். வெளியூர்க்காரங்க பல பேர் கூட இந்த அணையா விளக்குக்கு எண்ணெய் வாங்க உதவி செய்ய முன் வருவாங்க" என்றார் அருட்செல்வம்.

தாமோதரன் நன்றி தெரிவிக்கும் விதமாகக் கை கூப்பினார் 

கோவிலில் வழிபாடு முடிந்து வெளியே வருவதற்கு முன், அருட்செல்வம் கோவில் அர்ச்சகரை அழைத்து "உங்களை எங்கேயோ பாத்திருக்கேனே!" என்றார். 

"ஆமாம். மலையூர்ப்பட்டிங்கற ஊர்ல இருக்கற கோவில்ல இருந்தேன். அங்கே நீங்க வந்திருக்கேள். நீங்க ஞாபகம் வச்சுண்டிருக்கறது ரொம்பப் பெருமையா இருக்கு!" என்றார் அர்ச்சகர்.

"எங்கே ஞாபகம் வச்சுக்கிட்டேன்? உங்க முகம் நினைவிலே இருந்ததே தவிர, எங்கே பாத்தேன்னு ஞாபகம் வரலியே!" என்று சிரித்துக் கொண்டே கூறிய அருட்செல்வம், "சந்தோஷம், வரேன்" என்று அவரிடம் விடைபெற்றார்.

வெளியில் வந்ததும் தாமோதரனிடம், "மலையூர்ப்பட்டி கோவில் பெரிசு. அங்கே அவருக்கு எல்லாம் வசதியா இருந்திருக்கும். வருமானமும் நிறைய இருக்கும். ஏன் அதை விட்டு விட்டு வந்தார்னு தெரியல" என்ற அருட்செல்வம், "உங்க கோவிலைக் குறைச்சுச் சொல்றேன்னு நினைக்காதீங்க. அது இன்னும் பெரிய கோவில். அதான் சொன்னேன்" என்றார்.

"நீங்க சொன்னது சரிதான். அது பெரிய கோவில்தான். அதோட ஒப்பிடச்சே இது சின்னக் கோவில்தான். அந்தக் கோவில்ல அர்ச்சகரா இருக்கறது பெரிய அந்தஸ்துதான். நல்ல சம்பளம், வீடு எல்லாம் உண்டு. அதையெல்லாம் விட்டுட்டுத்தான் இங்க வந்திருக்காரு அவரு."

"ஏன் அப்படி?" என்றார் அருட்செல்வம் வியப்புடன்.

"அந்தக் கோவில் தனிப்பட்ட ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானது. வருமானத்தைக் குறைச்சுக் காட்டணும்னு அந்தக் கோவிலோட சொந்தக்காரங்க இவரை வற்புறுத்தி இருக்காங்க. அர்ச்சனை, அபிஷேகம் இதுக்கெல்லாம் முறையா ரசீது கொடுக்காம பணத்தை வாங்கி அவங்ககிட்ட கொடுக்கணும்னு சொல்லி இருக்காங்க. அவரு அதுக்கு ஒத்துக்கல. அதனால அவரால அங்கே தொடர்ந்து வேலை பாக்க முடியல. இந்த ஊர்க் கோவில்ல அர்ச்சகர் வேலை காலி இருக்குன்னு தெரிஞ்சு எங்ககிட்ட வந்து கேட்டாரு. ஒரு உண்மையானவர்தான் எங்களுக்கு வேணும்னு நாங்க அவரை இங்க வச்சுக்கிட்டிருக்கோம்" என்றார் தாமோதரன்.

அருட்செல்வம் மௌனமாக ஏதோ யோசித்தபடி வந்தார்.

ன்று இரவு மண்டபத்தில் சொற்பொழிவாற்றும்போது அருட்செல்வம் சொன்னார். "இந்த ஊர்க் கோவில்ல இருக்கற அணையா விளக்கைப் பத்தி எங்கிட்ட சொன்னாங்க. ரொம்பப் பெரிய விஷயம் இது. இதைப் பத்தி நான் போற இடத்திலெல்லாம் சொல்றேன்னு சொன்னேன். நான் சொல்றதைக் கேட்டு வேற சில கோவில்ல கூட இது மாதிரி அணையா தீபம் அமைக்கலாமான்னு கூட நினைப்பாங்க. ஆனா இந்த ஊர்ல, இந்த ஊர்க் கோவிலிலேயே இன்னொரு அணையா தீபம் இருக்கு. உண்மைங்கற விளக்கா இருக்கற கோவில் அர்ச்சகர்தான் அந்த அணையா தீபம். நீங்க ஒவ்வொத்தருமே அந்த அணையா தீபம் மாதிரி ஒரு உண்மை விளக்கா இருக்கணும்கறது என்னோட வேண்டுகோள். அந்த அணையா தீபம் பத்தியும் நான் எல்லா இடங்களிலேயும் சொல்லப் போறேன். அவர் மாதிரி இன்னும் பல அணையா தீபங்கள் ஒளி விட்டால், அது எல்லோருக்குமே நல்லது."

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 299
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

பொருள்:
வெளியில் உள்ள இருளைப் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆக மாட்டா. நல்லவர்களுக்கு அவர்கள் மனதில் ஒளிரும் பொய்யாமை என்ற விளக்கே உண்மையான விளக்காகும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்

Saturday, November 30, 2019

298. அரிசி ஆலை

தன் ஊருக்கு அருகில் ஒரு அரிசி ஆலை விலைக்கு வருகிறது என்று அறிந்து அதை வாங்குவதில் ஆர்வம் கொண்ட சண்முகம், தன் நண்பர் ஒருவர் மூலம் அரிசி ஆலை உரிமையாளரின் தரகருடன் தொடர்பு கொண்டார். 

உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு பேசிய பின் அவரிடம் சண்முகத்தை அழைத்துச் சென்றார் தரகர் கன்னையா. 

"பார்ட்டி ரொம்ப சுத்தமானவர்!" என்றார் கன்னையா, போகும் வழியில். 

"எப்பவும் குளிச்சுட்டு சுத்தமா இருப்பாரா?" என்றார் சண்முகம் சிரித்தபடி.

"அதுவும்தான்! ஒரு நாளைக்கு ரெண்டு வேளை கண்டிப்பா குளிச்சுடுவாரு. ஆனா நான் சொன்னது அவரோட தொழில் சுத்தம், வார்த்தை சுத்தம் பத்தி!" என்றார் கன்னையா.

"இந்த ஊர்ல இவ்வளவு தண்ணி கஷ்டம் இருக்கே! எப்படி ரெண்டு வேளை  குளிக்கிறாரு?" என்றார் சண்முகம் விடாமல். 

இதற்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று கன்னையா யோசித்துக் கொண்டிருந்தபோதே, சண்முகம், "சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்!" என்றார். 

பார்ட்டி என்று குறிப்பிடப்பட்ட முருகனின் வீட்டுக்கு இருவரும் சென்றபோது, முருகன் குளித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். 

அப்போது மாலை வேளை. சண்முகம் கன்னையாவைப் பார்த்து, 'நீங்கள் சொன்னது சரிதான்!' என்பது போல் சிரித்தார். 

முருகன் குளித்து விட்டு வந்ததும் அவருடைய அரிசி ஆலையை விலைக்கு வாங்குவது பற்றி அவரிடம் பேசினார் சண்முகம். அரிசி ஆலை பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல் தாளை சண்முகத்திடம் கொடுத்த முருகன், அவரிடம் மேலும் சில விவரங்களைத் தெரிவித்த பிறகு, தான் எதிர்பார்க்கும் விலையையும் குறிப்பிட்டார். வரும் வியாழனன்று சண்முகம் வந்து அரிசி ஆலையை நேரில் பார்த்தபின் விலையை இறுதி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

புதன்கிழமை இரவு சண்முகத்துக்கு கன்னையாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

"சார்! நாளைக்கு மில்லைப் பார்க்கணும்னு முடிவு செஞ்சோம் இல்ல?" என்றார் கன்னையா.

"ஆமாம். காலையில 8 மணிக்கு கார்ல கிளம்பி வரேன். வரப்ப  உங்க வீட்டுக்கு வந்து உங்களையும் அழைச்சுக்கறேன்" என்றார் சண்முகம்.

"இல்ல சார். அதுக்கு முன்ன உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். நானே உங்க வீட்டுக்கு வரேன்" என்றார் கன்னையா.

"எதுக்கு கன்னையா நீங்க இவ்வளவு தூரம் வரணும்? நான் உங்க ஊரைத் தாண்டித்தானே முருகன் ஊருக்குப் போகணும்? போகும்போது உங்களை காரிலேயே அழைச்சுக்கிட்டுப் போறேன். கார்ல போய்க்கிட்டே பேசலாமே!"

"இல்ல சார். நான் வரேன். நேர்ல பேசலாம்" என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டார் கன்னையா. 

'எதுக்கு இங்கே வரேங்கறாரு? முருகன்கிட்ட எப்படியும் கமிஷன் வாங்கப் போறாரு. என்கிட்டயும் கமிஷன் கேக்கறதுக்காக வராரோ?' என்று யோசித்தார் சண்முகம்.

சொன்னபடி காலையில் வந்து விட்டார் கன்னையா. 

"எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு காலையில பஸ்ல வரீங்க? நான்தான் சொன்னேனே..." என்று ஆரம்பித்தார் சண்முகம்.

"சார்! உங்களுக்கு அந்த ரைஸ் மில் வேண்டாம்" என்றார் கன்னையா குறுக்கிட்டு.

"என்னது? ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் சண்முகம் சற்று அதிர்ச்சியுடன்.

"சார்! நேத்துதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. ரைஸ் மில்ல வேலை செஞ்ச பழைய அக்கவுண்டண்ட்டைத் தற்செயலாய் பாத்தேன். அவர் எனக்குத் தெரிஞ்சவரு. பாங்க்ல கடன் வாங்கித்தான் முருகன் ரைஸ் மில் ஆரம்பிச்சாரு. ஆனா தரக்குறைவான மெஷின்களை வாங்கிட்டு போலியா பில் தயாரிச்சு பாங்குக்குக் காட்டி அதிகமா கடன் வாங்கி இருக்காரு. அதிகப்படியா வாங்கின பணத்தை வேற எங்கேயோ முதலீடு செஞ்சிருக்காரு. தரமில்லாத மெஷின்கள்ங்கறதால அதெல்லாம் அடிக்கடி பழுதாகி மில்லை சரியா ஓட்ட முடியல. பாங்குக்குக் கட்ட வேண்டிய தவணைத் தொகையை ஒழுங்காக் கட்ட முடியல. அதனாலதான் மில்லை விக்கப் பாக்கறாரு. உங்களுக்கு இது வேண்டாம்னு சொல்லத்தான் நேர்ல வந்தேன்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கன்னையா.

சண்முகம் கன்னையாவை வியப்புடன் பார்த்தார். "நீங்க முருகனுக்குத்தானே தரகர்? எங்கிட்ட ஏன் இதைச் சொல்றீங்க?" என்றார்.

"சார்! எனக்கு முருகனைப் பத்தி இதுக்கு முன்னே தெரியாது. நான் அவரோட ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரன். என்னைப் பத்திக் கேள்விப்பட்டு என்னைக் கூப்பிட்டு அவர் ரைஸ் மில்லை வித்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாரு. என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினவரு எங்கிட்ட அவரைப் பத்தி நல்லபடியாத்தான் சொன்னாரு. ஆனா அவர்கிட்ட தப்பு இருக்கறது தெரிஞ்சப்பறம் உங்ககிட்ட உண்மையைச் சொல்லி உங்களை எச்சரிக்கை வேண்டியது என் கடமை. அதான் சொன்னேன். இனிமே வேற யார்கிட்டயும் இந்த ரைஸ் மில்லை விக்க முயற்சி செய்யவும் மாட்டேன், முருகன்கிட்ட வேற வியாபாரத் தொடர்பு வச்சுக்கவும் மாட்டேன்."

சண்முகம் அடங்காத வியப்புடன் கன்னையாவைப் பார்த்தார். சற்றே அழுக்கான உடை அவர் பஸ்ஸில் வந்ததால் கசங்கி இருந்தது. காலையில் சீக்கிரமே வீட்டை வீட்டுக் கிளம்பி விட்டதால் குளித்திருக்க மாட்டார் என்று தோன்றியது.

ஆனால் முருகன் இந்நேரம் குளித்து விட்டு 'சுத்தமாக' இருப்பார் என்று நினைத்துக் கொண்டார் சண்முகம்.

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

பொருள்:
உடல் நீரினால் தூய்மை அடையும்.  மனம் தூய்மை பெறுவது உண்மையினால்தான். 
பொருட்பால்                                                                             காமத்துப்பால்














Sunday, November 17, 2019

297. பயிற்சியின் முதல் நாள்

"இவ்வளவு நேரம் இந்த ஆன்மிகப் பயிற்சி பற்றி விளக்கிச் சொன்னேன்.  இது மனத்தை அடக்கிச் செய்ய வேண்டிய பயிற்சி. இதற்கு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். நாளைக் காலை ஏழு மணிக்கு இந்தப் பயிற்சி தொடங்கும். இந்தப் பயிற்சிக்கு வரும்போது நீங்கள் எல்லோரும் குளித்து விட்டு வர வேண்டும். அதோடு வெறும் வயிற்றுடன் வர வேண்டும். இப்போது நீங்கள் போகலாம்."

சுவாமிஜி எழுந்து செல்ல, கூட்டம் கலைந்தது.   

றுநாள் காலை பயிற்சியில் பங்கேற்பவர்கள் வந்து அமர்ந்திருந்தனர். சரியாக ஏழு மணிக்கு சுவாமிஜி அங்கே வந்தார்.

"இப்போது பயிற்சியைத் தொடங்கப் போகிறோம்!" என்றவர், அனைவரையும் ஒருமுறை பார்த்து விட்டு, "எல்லோரும் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டீங்க இல்ல?" என்றார் சிரித்துக் கொண்டே. 

அனைவரும் மௌனமாக இருந்தனர். சிலர் மட்டும் இல்லையென்று தலையாட்டினர்.  

"நல்லது. சாப்பிட்டிருக்க மாட்டீங்கன்னு தெரியும். யாராவது காப்பி மட்டுமாவது சாப்பிட்டீங்களா?"

ஒரு சில வினாடிகளுக்குப் பின் ஒருவர் மட்டும் தயக்கத்துடன் கையைத் தூக்கினார். 

"காப்பி சாப்பிட்டீங்களா?" என்றார் சுவாமிஜி.

"எதுவும் சாப்பிடாமத்தான் வீட்டிலேந்து கிளம்பினேன். வழியில ஒரு காஃபி ஷாப் திறந்திருந்தது. காப்பி மட்டும் சாப்பிட்டா பரவாயில்லேன்னு நினைச்சு சாப்பிட்டோம்...சாப்பிட்டேன்!" என்றார் அவர்.

"சாப்பிட்டோம்னு சொல்லிட்டு,  உங்களோட சேர்ந்து காப்பி சாப்பிட்ட மத்தவங்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்னுட்டு சாப்பிட்டேன்னு சொல்றீங்க. நல்லது. இவரோட சேர்ந்து காஃபி ஷாப்ல காப்பி சாப்பிட்டவங்க யாரு?" என்றார் சுவாமி புன்னகை மாறாமல்.

தயக்கத்துடன் இன்னும் மூன்று பேர் எழுந்தனர்.

"நல்லது. எதுவுமே சாப்பிடக் கூடாதுன்னு நேத்திக்கு நான் சொன்னேன். ஆனாலும் காஃபி ஷாப்பைப் பாத்ததும், காப்பி மட்டும் சாப்பிட்டா பரவாயில்லேன்னு நினைச்சு நாலு பேர் காப்பி சாப்பிட்டுட்டு வந்திருக்கீங்க. நீங்க மூணு பேரும் போயிட்டு நாளைக்கு வாங்க. உங்க பயிற்சியை நாளைக்கு ஆரம்பிக்கலாம்" என்றார் சுவாமிஜி.

மூன்று பேர் அங்கிருந்து நகர முயல, காப்பி குடித்ததாக முதலில் ஒப்புக் கொண்டவர் போவதா, இருப்பதா என்ற குழப்பத்துடன் நின்றார்.

"ஒரு நிமிஷம்" என்றார் சுவாமிஜி, கிளம்பத் தொடங்கிய மூவரையும் பார்த்து. அவர்கள் நின்றனர். 

"இது உங்களை தண்டிக்கறதுக்காக இல்ல. இந்தப் பயிற்சிக்கு உணவுக் கட்டுப்பாடு முக்கியம்தான். ஆனா மனசைக் கட்டுப்படுத்தறது சுலபம் இல்ல. மனசைக் கட்டுப்படறதைத் தெரிஞ்சுக்கறதும் இந்தப் பயிற்சியோட நோக்கங்கள்ள ஒண்ணு. அதை நீங்க கொஞ்சம் கொஞ்சமாத்தான் பழக்கிக்க முடியும். ஆனா யாராவது காப்பி குடிச்சீங்களான்னு நான் கேட்டப்ப, அவரு மட்டும்தான் குடிச்சேன்னு உண்மையைச் சொன்னாரு. ஆனா நீங்க மூணு பேரும் அப்புறமாத்தான் சொன்னீங்க. எல்லா அறங்கள்ளேயும் முக்கியமான அறம் உண்மை பேசறது. இந்த ஒரு அறத்தைக் கடைப்பிடிக்கறவங்களால மற்ற எல்லா அறங்களையும் கடைப்பிடிக்க முடியும். இந்த அறத்தைக் கடைப் பிடிக்காதவங்களால வேற எந்த அறத்தையும் பின்பற்ற முடியாது. இப்ப இந்த நாலு பேரைத் தவிர வேற யாராவது காப்பி, டீ மாதிரி பானங்கள் குடிச்சுட்டு வந்திருந்தா எழுந்து நிக்கலாம்."

ஒருவர் எழுந்து நிற்க அவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும் எழுந்து நின்றனர். 

"நல்லது. இன்னிக்கு பயிற்சி முடிஞ்சு போச்சு! உண்மையைச் சொல்லணும்கறதுதான் இன்றைய பயிற்சி. இதை எல்லோருமே அழுத்தமாப் புரிஞ்சுக்கிட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இனிமே பயிற்சியை நாளைக்குத் தொடரலாம். யாராவது காப்பி குடிச்சுட்டு வந்தீங்களான்னு நாளைக்கு நான் கேட்க மாட்டேன். அதுக்கு அவசியம் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். ஏன்னா உண்மை பேசணும்கற அறத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சதுமே, கட்டுப்பாடா இருக்க முதல் படியை எடுத்து வச்சு, கட்டுப்பாடு என்ற இன்னொரு அறத்தையும் நீங்க எல்லாருமே பின்பற்ற ஆரம்பிச்சிருப்பீங்க!" என்று சொல்லி எழுந்து கொண்டார் சுவாமிஜி. 

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 297
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

பொருள்:
பொய்யாமை என்ற அறத்தை ஒருவன் தவறாமல் கடைப் பிடித்தால், பிற அறங்களை அவன் செய்வதும் நன்மை விளைவிக்கும். (பிற அறங்களைச் செய்யும்போது, உண்மைத் தன்மையுடன் செயல்படாவிட்டால் அத்தகைய அறங்களைச் செய்வது தீமை விளைவிக்கக் கூடும். பொய்யாமையைக் கடைப் பிடிப்பவன் பிற அறங்களைச் செய்யும்போது உண்மையாக நடந்து கொள்வான் என்பதால் அந்த அறங்களை அவன் சரியாகச் செய்து அவற்றின் நற்பலன்களைப் பெறுவான்.)
பொருட்பால்                                                                             காமத்துப்பால்















Friday, November 15, 2019

296. பேசியது தவறா?

"கம்பெனி நிர்வாகம் விஷயமா ஒரு முக்கியமான முடிவை எடுக்க நினைக்கிறேன். அது விஷயமா உங்களையெல்லாம் கலந்து ஆலோசிக்கத்தான் இந்தக் கூட்டம். நீங்கள்ளாம் இந்த கம்பெனியில பல வருஷமா வேலை செய்யறீங்க. உங்க அனுபவத்தோட அடிப்படையிலேயும், உங்களோட சிந்தனை அடிப்படையிலும் உங்க கருத்துக்களை நீங்க சொல்லலாம்" என்ற பீடிகையுடன் தொடங்கினார் பொது மேலாளர் விஜயராகவன்.

தன் யோசனையை அவர் விவரித்தததும், பலத்த கரகோஷம் எழுந்தது. 

"பிரமாதம் சார்!"  

"புது விதமான அணுகுமுறை. இது பிரமாதமா செயல்படும்."

"அற்புதம் சார். இது மாதிரி யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க." 

இது போன்ற பல பாராட்டுக் கலந்த ஆமோதிப்புகள் வெளிப்பட்டன.

"அப்ப, நான் இதை உடனே அமல் படுத்தலாமா?" என்றார் விஜயராகவன்.

"நிச்சயமா சார்!" என்றனர் பலரும்.

சில வினாடிகள் மௌனத்துக்குப் பின், "சார்! நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா ஒண்ணு சொல்லலாமா?" என்ற ஒரு குரல் பலவீனமாக ஒலித்தது.

எல்லோரும் ஒரு சேரத் திரும்பி குரல் வந்த பக்கம் பார்த்தனர்.

உதவி மானேஜர் சதாசிவம்!

"சொல்லுங்க சதாசிவம்!" என்றார் விஜயராகவன்.

"சார், இதில சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்னு நினைக்கிறேன்" என்று ஆரம்பித்தார் சதாசிவம்.

"சொல்லுங்க!" என்றார் விஜயராகவன். அவருடைய உற்சாகம் சட்டென்று வடிந்து விட்டாற் போல் இருந்தது. 

சதாசிவம் தன் கருத்தைச் சொன்னார். 

அவர் பேசி முடித்ததும் ஒரு நிமிடம் அமைதி நிலவியது.

"சார்! இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லைன்னு நான் நினைக்கிறேன்..." என்று ஆரம்பித்த ஒரு மூத்த அதிகாரியைக் கையமர்த்திய விஜயராகவன், "இதைப் பத்தி நாம அப்புறம் பேசலாம். இப்போ இந்த மீட்டிங்கை முடிச்சுக்கலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தார்.

"என்ன சதாசிவம், உங்களுக்கு முன்னேறணும்னு ஆசை இல்லையா?" என்றார் சதாசிவத்தின் மேலதிகாரி கார்த்திகேயன்.

"ஏன் சார்!"

"நம்ம ஜி.எம்முக்கு அவர் கருத்தை யாரும் மறுத்துப் பேசினாலே பிடிக்காது. அவரு ரொம்ப உற்சாகமா ஒரு ஐடியாவை யோசிச்சு அதைப் பத்தி நம்மகிட்ட ஆலோசனை கேட்டாரு. மூத்த அதிகாரிகள் எல்லாரும் ஆஹா, பிரமாதம்னு தலையாட்டினாங்க. நீங்களும் சேந்து தலையாட்டாட்டாலும் வாயை மூடிக்கிட்டாவது இருந்திருக்கலாம். அவர் சொன்னதில தப்பு கண்டு பிடிச்சு பேரைக் கெடுத்துக்கிட்டீங்களே! இப்ப ப்ரமோஷன் வர நேரம். உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும்னு எல்லாரும் எதிர்பாத்துக்கிட்டிருக்காங்க. இந்த நேரம் பாத்து தேவையில்லாம பேசி வாய்ப்பைக் கெடுத்துக்கிட்டீங்களே!" என்றார் கார்த்திகேயன். 

"சார்! அவர் நம்ம கருத்தைக் கேட்டார். எனக்கு உண்மைன்னு பட்டதைச் சொன்னேன். அதை அவர் தப்பா எடுத்துப்பார்னா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார் சதாசிவம்.

"சார்! உங்களை ஜி.எம் கூப்பிடறாரு!" என்றான் பியூன். 

'நேரில் கூப்பிட்டுத் திட்டப் போறாரா? அது நடந்துதான் கொஞ்ச நாள் ஆயிடுச்சே!' என்று நினைத்துக் கொண்டே பொது மேலாளரின் அறைக்குச் சென்றார் சதாசிவம்.

பொது மேலாளரின் அறையில், துணைப் பொது மேலாளரும் அமர்ந்திருந்தார். 

"வாங்க சதாசிவம்! உக்காருங்க" என்றார் விஜயராகவன். 

"சார், நான் அன்னிக்குப் பேசினது அதிகப் பிரசங்கித்தனமா இருந்தா..." என்று ஆரம்பித்தார் சதாசிவம்.

"நோ, நோ! நீங்க அன்னிக்குச் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. மத்த சிலருக்கும் அதெல்லாம் தோணியிருக்கலாம். ஆனா எனக்குப் பிடிக்காதேன்னு நினைச்சு அவங்க அதை வெளியில சொல்லாம இருந்தப்ப நீங்க தைரியமா உங்க கருத்தைச் சொன்னதை நான் பாராட்டறேன். நீங்க சொன்ன கருத்துக்கள் அடிப்படையில, நாங்க கலந்து பேசி என்னோட யோசனையில் சில மாறுதல்கள் செஞ்சிருக்கோம். இன்னொரு மீட்டிங் போட்டு அதை விவாதிக்கப் போறோம். நீங்க தைரியமா உண்மையைப் பேசினத்துக்காக உங்களைப் பாராட்டத்தான் உங்களைக் கூப்பிட்டேன்" என்றபடி தன் கையை நீட்டினார் விஜயராகவன்.

சதாசிவம் நம்ப முடியாத மகிழ்ச்சியுடன் தன் கையை நீட்டினார்.

அவர் கைகளைப் பிடித்துக் குலுக்கிய விஜயராகவன், "பாராட்டுக்கள் சதாசிவம். நீங்க இனிமே அசிஸ்டன்ட் மானேஜர் இல்லை. உங்களை மானேஜரா ப்ரமோட் பண்ணி இருக்கோம்" என்று சொல்லி விட்டு, அருகில் இருந்த துணைப் பொது மேலாளரிடம் திரும்பி, "ப்ரோமோஷன் ஆர்டரை  அவர்கிட்ட கொடுங்க " என்றார். 

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 296
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

பொருள்:
பொய் இல்லாமல் வாழ்வதை விடப் புகழான நிலை ஒருவனுக்கு வேறு எதுவும் இல்லை. அது அவன் கேட்காமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் தரும்.

பொருட்பால்                                                                             காமத்துப்பால்












Thursday, November 14, 2019

295. வாய்மையே வெல்லும்

"பரதா! அங்கம், வங்கம், மகதம், விதேகம், பாஞ்சாலம் என்ற வரிசையில் வரும் 59 நாடுகளையும்  வென்று 60 நாடுகளுக்கும் அதிபதியாகி விட்டாய். இந்த 60 நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக ஆக்கியும் விட்டாய். இந்த நாடு இனி உன் பெயரிலேயே பாரத வர்ஷம் என்று வழங்கப்படும்" என்றார் முனிவர்.

"தங்கள் ஆசீர்வாதம் குருவே!" என்றான் பரதன் பணிவுடன். "என் நாட்டை  விரிவாக்க வேண்டும் என்ற பேராசையால் நான் இதைச் செய்யவில்லை. இந்த நாடுகளின் அரசர்கள் அனைவரும் பெரும்பாலான சமயங்களில் ஒருவருடன் ஒருவர் போர் செய்து கொண்டு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், சாதாரண மக்கள் போரினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாக வகை செய்து கொண்டும் இருந்தார்கள். அத்துடன் தொலைதேசங்களிலிருந்து யாரும் பெரும் படையுடன் வந்து நம்மைத் தாக்க முயன்றால், அத்தகைய தாக்குதல்களை முறியடித்து, அந்தப் படைகளை  அடித்து விரட்ட ஒரு வலுவான நாடு இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான், பல சிறு நாடுகளை ஒன்றிணைத்து ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினேன். நம் மன்னர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இதற்குத் தேவையே ஏற்பட்டிருக்காது."

"உன் நோக்கம் உயர்ந்ததுதான். அதனால்தான் ஒரு துறவியாக இருந்தாலும் உன் போர் வெற்றியை நான் பாராட்டினேன். உன்னுடைய இந்த ஒருங்கிணைப்பு, வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நின்று உனக்குப் புகழைத் தேடித் தரும். பல நூறு அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கூட, இந்த நாட்டின் அமைப்பிலும், எல்லைகளிலும் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டாலும் இந்த நாடு உன் பெயராலேயே அழைக்கப்படும்" என்று வாழ்த்தினார் முனிவர்.

"உங்கள் நல்லாசிகள் எனக்கு என்றும் வேண்டும் முனிவர் பெருமானே!" என்று கூறி அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான் பரதன். 

பிறகு, "முனிவரே! நம் நாட்டின் இலச்சினையில் ஒரு உயர்ந்த கருத்தைப் பொறிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது நம் நாட்டின், நம் மக்களின் அடிப்படைக் கோட்பாடாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். தாங்கள் ஒரு பொருத்தமான கருத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்றான் பரதன்.

முனிவர் சிரித்தபடி, "பரதா! நான் ஒரு முனிவன். என்னைப் பொருத்தவரை தவம்தான் உயர்ந்தது. தவத்தின் உயர்வை வெளிப்படுத்தும்படியான ஒரு வாசகத்தை அமைத்துக் கொள் என்பதுதான் என் யோசனையாக இருக்கும். ஆனால் இது குறித்து, நீ பலரையும் கலந்தாலோசிக்க வேண்டும். என் கருத்துதான் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. முதலில் உன் அமைச்சரைக் கேள்!" என்றபடி அருகிலிருந்த அமைச்சரைப் பார்த்தார். 

"முனிவர் கருத்துக்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?" என்றார் அமைச்சர்.

"நீங்கள் இப்படிச் சொல்வதே உங்களிடம் வேறொரு கருத்து இருக்கிறது என்பதை வெளிக் காட்டுகிறது! 'சிறந்த எண்ணங்கள் எல்லாத்  திசைகளிலிருந்தும் நம்மை வந்தடையட்டும்' என்பது உபநிஷத் வாக்கியம். சிறந்த கருத்தைப் பெறுவதுதான் முக்கியம். அது யாரிடமிருந்து வருகிறது என்பது முக்கியமில்லை. சொல்லுங்கள்!" என்று அமைச்சரை ஊக்குவித்தார் முனிவர்.

அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன், "தவம் மிக உயர்ந்ததுதான். ஆனால் அது எல்லோருக்குமே கை கூடுவதில்லை. சாதாரண மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் உயர்ந்தது தானம்தான் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

"அமைச்சரே! உங்கள் கருத்தும் மிக உயர்ந்ததுதான். தானத்தை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதும் ஏற்கக் கூடியதுதான்" என்றார் முனிவர். 

"நீங்கள் இருவரும் கூறியதும் மிக உயர்ந்த கருப்பொருட்கள்தான். ஆனால் நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கூறியபோது எனக்கு வேறொரு எண்ணம் தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான் பரதன்.

"சொல் பரதா!" என்றார் முனிவர். 

"என் தந்தை துஷ்யந்தர், காட்டுக்கு வேட்டையாட வந்தபோது, கண்வ முனிவர் ஆசிரமத்தில் வளர்ந்த என் தாய் சகுந்தலையைச் சந்தித்து, அவரை காந்தர்வ மணம் புரிந்து கொண்டார். பிறகு நான் பிறந்ததும், என்னை எடுத்துக் கொண்டு என் தாய் துஷ்யந்த மன்னரின் அரண்மனைக்குச் சென்றார்."

"ஆமாம். நான் கண்வ முனிவரின் சீடனாக அப்போது அவர் ஆசிரமத்தில் இருந்தேனே. இதெல்லாம் எனக்குத் தெரியும்" என்றார் முனிவர்.

"ஆனால் என் தாய்க்கு துர்வாசர் கொடுத்த சாபத்தால் துஷ்யந்தர் என் தாயை மறந்து விட்டார். அதனால் என் தாயையும் என்னையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். ஆனால் என் தாய் தான் சொல்வது உண்மை என்று என் தந்தையிடம் போராடினார்."

"ஆமாம். அப்புறம் சகுந்தலை சொல்வது உண்மைதான் என்று அசரீரி வாக்கு கூறியது. அதன் பிறகு உன் தந்தை துஷ்யந்தர் உன் தாயையும் உன்னையும் ஏற்றுக் கொண்டார். அதனால்தானே நீ இளவரசனாகி, உன் தந்தைக்குப் பின் அரசனாகி, இன்று உன் முயற்சியால் ஒரு பேரரரசனாகவும் ஆகி இருக்கிறாய்!"

"ஆமாம். அன்று என் தாய் உண்மைக்காகப் போராடினார். உண்மை வென்றது. நான் தவத்தைப் பற்றிக் குறைத்துச் சொல்வதாக நினைக்காதீர்கள். துர்வாசர் தன் தவ வலிமையால்தானே சாபம் கொடுக்கும் சக்தியைப் பெற்றார்? அவர் என் தாய்க்குக் கொடுத்த சாபத்தை உண்மைதானே வென்றது?" என்றான் பரதன்.

"உண்மைதான்!" என்றார் முனிவர் சிரித்தபடி.

முனிவரின் சிலேடையை பரதனும், அமைச்சரும் புன்முறுவலுடன் ரசித்தனர்.

"அது மட்டுமில்லை முனிவரே! என் தாத்தா விசுவாமித்திரர் ஒரு பெரிய முனிவர். அரசராக இருந்த அவர் கடும் தவம் செய்து பிரம்மரிஷி ஆனார். அவர் அரசராக இருந்தபோது தானங்களில் அதிகம் ஈடுபட்டவர். உண்மையில் தன் நாட்டு மக்களுக்குப் பஞ்சமின்றி உணவு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவை வசிஷ்டரிடம் கேட்டார். வசிஷ்டர் கொடுக்காததால் அவருடன் போரிட்டுத் தோற்றார். பிறகு வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்து அவரைப் போலவே பிரம்மரிஷி ஆக விரும்பி அரச வாழ்க்கையை விட்டு விட்டுத் தவம் செய்து பெரிய முனிவரானார். ஆனால் தானத்திலும், தவத்திலும் உயர்ந்திருந்த விசுவாமித்திரர் ஒருவரிடம் தோற்று விட்டார்!" 

"நீ சொல்ல வருவது எனக்குப் புரிகிறது" என்றார் முனிவர் சிந்தனையுடன்.

"விசுவாமித்திரர் யாரிடம் தோற்றார் அரசே!"என்றார் அமைச்சர்.

"அரிச்சந்திரனிடம். சரியாகச் சொல்வதானால் அவர் தோற்றது உண்மையிடம், ஏனெனில் அரிச்சந்திரன் அவரை வெற்றி கொண்டது உண்மையின் மூலம்தானே?"

"அப்படியானால் தாங்கள் சொல்வது..." என்றார் அமைச்சர்.

"தவத்தையும் தானத்தையும் விட வாய்மையே உயர்ந்தது என்று நான் கருதுகிறேன். எனவே வாய்மையே வெல்லும் என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தாங்கள் என்ன சொல்கிறீர்கள், குருவே!"

"வாய்மையே வெல்லும் என்று நீ சொன்னது மிகப் பொருத்தமானது. 'சத்யமேவ ஜயதே' என்று முண்டகோபநிஷத் கூறுகிறது."

"சத்யமேவ ஜயதே! அதுவே நம் நாட்டின் தாரக மந்திரமாக இருக்கட்டும்!"

"பரதா! உன் முடிவு மிகப் பொருத்தமானது. உன் பெயர் எப்படி இந்த நாட்டுடன் எப்போதும் இணைந்திருக்குமோ, அது போல் 'சத்யமேவ ஜயதே' என்ற இந்தத் தாரக மந்திரமும் இந்த நாட்டுடன் என்றென்றும் இணைந்திருக்கும்" என்றார் முனிவர்.

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

பொருள்:
தன் உள்ளம் அறிய உண்மை பேசுபவன் தவம், தானங்கள் செய்பவர்களை விடவும் உயர்ந்தவன்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்