"உன் அண்ணன் பெண்ணுக்குக் கல்யாணம். உன் அண்ணனும் அண்ணியும் நேர்ல வந்து கூப்பிட்டிருக்காங்க. போகாம இருக்கப் போறியா என்ன?" என்றான் அவள் கணவன் நடராஜன்.
"கல்யாண வயசில ஒரு தங்கை இருக்கான்னு கூட கவலைப்படாம, காதல்தான் முக்கியம்னுட்டு எங்க அப்பா அம்மா பேச்சை மீறி, தான் காதலிச்ச பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு எங்க உறவே வேண்டாம்னு போனவன், இத்தனை வருஷம் கழிச்சு, தன் பெண்ணுக்குக் கல்யாணம்னதும் என்னை வந்து கூப்பிட்டிருக்கான். அதை மதிச்சு நான் போகணுமா?"
"இங்க பாரு. எப்பவோ நடந்த விஷயம். உங்க அப்பா அம்மாவே சமாதானம் ஆகி, உங்க அண்ணியை ஏத்துக்கிட்டு, உங்க அண்ணன் குடும்பத்தோட நல்ல உறவு வச்சுக்கிட்டு இருந்திருக்காங்க. இப்ப அவங்களும் உயிரோட இல்ல. ஆனா, நீ மட்டும்தான் பிடிவாதமா உன் அண்ணனோட பேச்சு வச்சுக்காம இருந்திருக்க. இப்ப அவரே வந்து உன்னைத் தன் பெண் கல்யாணத்துக்கு கூப்பிட்டப்ப, நீ போகாம இருக்கறது சரியா இருக்குமா?"
"எங்க அப்பா அம்மா அவனை மன்னிச்சிருக்கலாம். ஆனா, நான் அவனை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்!" என்றாள் மீனாட்சி.
"அப்ப, நாம கல்யாணத்துக்குப் போகப் போறதில்லையா?" என்றான் நடராஜன்.
"போகலாம். முகூர்த்தத்துக்கு மட்டும் போய்த் தலையைக் காட்டிட்டு, மொய் எழுதிட்டு, உடனே கிளம்பி வந்துடலாம். சாப்பிடக் கூட வேண்டாம்" என்றாள் மீனாட்சி.
ஆயினும், இருவரும் இரண்டு நாட்கள் இருந்து, கல்யாண நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு விட்டுத்தான் வந்தார்கள். ஆனால், மீனாட்சி தன் கோபத்தைக் காட்டும் விதமாக, யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருந்தாள்.
"உன் அண்ணன் கல்யாண ஃபோட்டோல்லாம் அனுப்பி இருக்காரு. பாக்கறியா?" என்றான் நடராஜன்.
"அதுக்குள்ளே ஃபோட்டோல்லாம் வந்துடுச்சா என்ன? எப்படி அனுப்பினான்?" என்றாள் மீனாட்சி.
"இப்பதான் வாட்ஸ் ஆப் இருக்கே! முக்கியமான கல்யாண நிகழ்ச்சிகளோட ஃபோட்டோக்களையும், நீயும் நானும் இருக்கற வேற ஃபோட்டோக்களையும் எனக்கு வாட்ஸ் ஆப்ல அனுப்பி இருக்காரு உன் அண்ணன்" என்றான் நடராஜன்.
அருகில் வந்து நடராஜனின் ஃபோனில் புகைப்படங்களைப் பார்த்ததும், மீனாட்சியின் முகம் மாறியது.
"என்னங்க இது? ஒரு ஃபோட்டோல கூட என் மூஞ்சி நல்லாவே விழலையே!" என்றாள் மீனாட்சி.
"எப்படி விழும்? நீதான் மூஞ்சியைக் கடுகடுன்னு வச்சுக்கிட்டிருந்தியே! சில பேர் எங்கிட்ட, 'உங்க மனைவிக்கு உடம்பு சரியில்லையா, ஏன் ஒரு மாதிரி இருக்காங்க?'ன்னு கூடக் கேட்டாங்க. ரெண்டு நாளும் கடுகடுன்னு கல்யாணத்தில உக்காந்துக்கிட்டிருந்ததில உனக்கும் சந்தோஷம் இல்ல, உன் மூஞ்சியும் களை இல்லாம இருந்தது. அதைத்தான் இந்த ஃபோட்டோல்லாம் காட்டுது!" என்றான் நடராஜன்.
துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
குறள் 304நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
பொருள்:
முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும் அழிக்கும் சினத்தை விடப் பெரிய பகை வேறு என்ன இருக்க முடியும்?
Good
ReplyDelete