"கையில ஆர்.சி புக் இருக்கு. அதில வண்டி நம்பர் இருக்கு. அந்த நம்பர்தான் வண்டியில இருக்கான்னு பாக்க வேண்டியதுதானே?" என்ற பதில் பரந்தாமனின் மனதுக்குள் தோன்றியது.
ஆனால் அவன் எதுவும் சொல்வதற்குள், உடன் வந்திருந்த அவன் நண்பன் அசோக், "ஆமாம் சார்!" என்றான்.
"ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் புதுப்பிக்க வரச்சே, வண்டியை வாட்டர் வாஷ் பண்ணி சுத்தமாக் கொண்டு வரதில்ல? இவ்வளவு அழுக்கா இருக்கு!" என்றார் இன்ஸ்பெக்டர்.
"சார்! ரொம்ப தூரம் ஓட்டிக்கிட்டு வரோம். வழியில மண் ரோடு வேற. அதனால, தூசு பட்டு அழுக்காத் தெரியுது" என்றான் அசோக்.
"ஏன் சார், ஃபிட்னெஸ்ன்னா, வண்டி நல்ல கண்டிஷன்ல இருக்கான்னு பாக்கணும். அதை விட்டுட்டு வண்டி அழுக்கா இருக்குன்னு சொல்றீங்க! அதுக்கும் ஃபிட்னெஸுக்கும் என்ன சம்பந்தம்?" என்றான் பரந்தாமன்.
அசோக் அவனைக் கொஞ்சம் அதிர்ச்சியுடன் பார்க்க, இன்ஸ்பெக்டர் முறைத்தார். "வண்டி சுத்தமாயிருக்கறதும் முக்கியம். மத்த வண்டியெல்லாம் எப்படி இருக்குன்னு பாருங்க!" என்றார்.
"நீங்க சொல்றது சரிதான்!" என்று அசோக் சமாதானமாகப் பேச ஆரம்பித்தான். அவனை இடைமறித்த பரந்தாமன், "சரியில்லாத வண்டியை நல்லா வாஷ் பண்ணித் துடைச்சுக் கொண்டு வந்தா, உடனே ஃபிட்னெஸ் சர்ட்டிபிகேட் கொடுத்துடுவீங்களா?" என்றான்.
"டேய், கொஞ்சம் சும்மா இரு!" என்றான் அசோக், வெளிப்படையாகவே.
"சரி! உங்க வண்டியோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு பாத்துடலாம்!" என்ற இன்ஸ்பெக்டர், "வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க" என்றார்.
பரந்தாமன் வண்டியை உதைத்தான். முதல் உதையில் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. இரண்டாவது உதையில்தான் ஸ்டார்ட் ஆயிற்று.
"வண்டியில ஸ்டார்ட்டிங் டிரபிள் இருக்கும் போலருக்கே!" என்றார் இன்ஸ்பெக்டர்.
"அதான் ரெண்டாவது உதையில ஸ்டார்ட் ஆயிடுச்சே! நான் முதல் தடவை சரியா உதைக்காம இருந்திருக்கலாம். முதல் உதையிலேயே ஸ்டார்ட் ஆனாத்தான் ஃபிட்னெஸ் சர்ட்டிஃபிகேட் கொடுக்கலாம்னு சட்டம் இருக்கா என்ன?" என்றான் பரந்தாமன்.
அசோக் அவன் கையை அழுத்திப் பேச வேண்டாம் என்று சைகை செய்தான்.
"வண்டி கண்டிஷன்லதான் சார் இருக்கு. ரெண்டு நாள் முன்னேதான் சர்வீஸ் பண்ணினோம். நீங்க வேணும்னா ஓட்டிப் பாருங்க" என்றான் அசோக், இன்ஸ்பெக்டரிடம்.
"வேண்டாம். நீங்களே வண்டியை ஓட்டிக் காட்டுங்க, பாக்கறேன்!" என்றார் இன்ஸ்பெக்டர், பரந்தாமனிடம்.
பரந்தாமன் வண்டியைச் சற்று தூரம் ஓட்டி விட்டுத் திரும்ப வந்தான்.
இன்ஸ்பெக்டர் தன் கையிலிருந்த விண்ணப்பத்தில் ஏதோ எழுதினார். பிறகு, "கியர் மாத்தறப்ப, கிளட்ச் பிளேட்ல சத்தம் வருது. புகை வேற அதிகமா வர மாதிரி இருக்கு!" என்றார்.
"அதான் பொல்யூஷன் கண்ட்ரோல் சர்ட்டிஃபிகேட் வாங்கி இருக்கேனே! அப்புறம் எப்படிப் புகை அதிகமா வருதுன்னு சொல்லுவீங்க?" என்றான் பரந்தாமன், சற்றே உரத்த குரலில். இப்போது அருகில் நின்றிருந்த சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.
"அது ஒரு மாசம் முன்னால வாங்கினது!" என்றார் இன்ஸ்பெக்டர்.
"அதுக்கு ஆறு மாசம் வேலிடிட்டி இருக்கே!"
"இருக்கலாம். ஆனா, புகை நிறைய வரதை நான் கண்ணால பாக்கறேனே!" என்ற இன்ஸ்பெக்டர். "நீங்க என்ன செய்யறீங்க, வண்டியை நல்லா சர்வீஸ் பண்ணி, க்ளட்ச் பிளேட்டெல்லாம் சரி பண்ணுங்க. அநேகமா, க்ளட்ச் பிளேட் புதுசா மாத்த வேண்டி இருக்கலாம்! அதிகம் புகை வரதை சரி பண்ணி, புதுசா ஒரு எமிஷன் கண்ட்ரோல் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கிட்டு வாங்க" என்றவர், பிரேக்கைக் காலால் அழுத்திப் பார்த்து, "பிரேக் கூட லூசா இருக்கற மாதிரி இருக்கு, முன் சக்கரத்தில வாப்ளிங் இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணிட்டுக் கொண்டாங்க!" என்று சொல்லி விட்டுத் திரும்பினார்.
"சார்! நீங்க ஃபிட்னெஸ் சர்ட்டிபிகேட் கொடுத்துடுங்க சார்! இந்தச் சின்ன விஷயங்களை நாங்க சரி பண்ணிடறோம்" என்றான் அசோக், கெஞ்சும் குரலில்.
"நீங்க சொல்றீங்க! ஆனா, வண்டியோட சொந்தக்காரர் எல்லாம் சரியா இருக்குன்னு பிடிவாதமா சொல்றாரே! நான் என்ன செய்யறது! அதோட, அப்ளிகேஷன்ல இந்தக் குறைகளையெல்லாம் எழுதிட்டேன். இனிமே அதை மாத்த முடியாது!" என்ற இன்ஸ்பெக்டர், பரந்தாமனை ஏளனத்துடன் பார்த்து விட்டுப் போனார்.
"என்னடா இப்படிப் பண்ணிட்டே! கொஞ்சம் பொறுமையாப் பேசியிருந்தா வேலை முடிஞ்சிருக்கும்!" என்றான் அசோக், பரந்தாமனிடம்.
"அவர் வேணும்னுட்டு இல்லாத குறையை எல்லாம் சொல்லிக்கிட்டிருக்காரு. நான் கேட்டுக்கிட்டு சும்மா இருக்கணுமா? அதான் சூடாக் கேட்டுட்டேன்!" என்றான் பரந்தாமன்.
"டேய் முட்டாள்! அவர் என்ன உனக்குக் கீழே வேலை செய்யறவரா? அவர்கிட்ட அதிகாரம் இருக்கு. அதை அவர் தப்பாவும் பயன்படுத்தலாம். கொஞ்சம் பொறுமையா இருந்தாத்தான் காரியம் நடக்கும். அவர் சொன்னது தப்பா இருந்தாலும், அவர்கிட்ட முறைச்சுக்கிட்டா நமக்குத்தான் நஷ்டம். உனக்கு உதவி செய்யத்தான் நான் கூட வந்தேன். நீ சும்மா இருந்திருந்தா, வேலை முடிஞ்சிருக்கும். நீ அவர்கிட்ட கோபமாப் பேசிக் காரியத்தைக் கெடுத்துட்ட! இப்ப நீ வண்டியை மறுபடி சர்வீஸ் பண்ணி, அவர் சொன்ன விஷயங்களைச் சரி பாக்கணும். அதுக்குக் கூடுதல் செலவு. அதோட, இன்னொரு நாளைக்கு வேற வரணும். டயம் வேற வேஸ்ட். அடுத்த தடவையாவது நீ பேசாம இரு. நான் பொறுமையாப் பேசிச் சமாளிச்சுக்கறேன்" என்றான் அசோக்.
"நீ கூட எங்கிட்ட இப்ப கோபமாத்தான் பேசற!" என்றான் பரந்தாமன்.
"ஆமாம். நீ என் நண்பன். அதனால உரிமையோடு பேசறேன். அது மாதிரி எல்லார்கிட்டயும் பேச முடியுமா?" என்ற அசோக், "ஆனா, இதிலேயும் ஒரு ஆபத்து இருக்கு! நான் கோபமாப் பேசினதால நீ அப்செட் ஆகி, 'உன்னோட நட்பே வேண்டாம்'னுட்டுப் போயிட்டா அதுவும் ஒரு மோசமான விளைவுதானே! அதனால, நமக்கு நெருக்கமானவங்ககிட்ட கூடக் கோபமாப் பேசறதைத் தவிர்க்கறது நல்லதுன்னு இப்ப எனக்குத் தோணுது!" என்றான் அசோக்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
குறள் 302செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
பொருள்:
தன் கோபம் செல்லுபடியாகாத இடத்தில் தன் கோபத்தைக் காட்டுவது தீங்கு விளைவிக்கும். செல்லும் இடத்தில் கோபத்தைக் காட்டினாலும், அதை விடத் தீதானது வேறு எதுவும் இல்லை.
No comments:
Post a Comment