"உங்களுக்கு சுந்தரமூர்த்தின்னு பேர் வச்சதுக்கு பதிலா, ருத்ரமூர்த்தின்னு பேர் வச்சிருக்கலாம்" என்றாள் சியாமளா. "இவ்வளவு கோபம் வருது உங்களுக்கு!"
"தப்புப் பண்ணினா கோபம் வராம என்ன செய்யும்?" என்றார் சுந்தரமூர்த்தி. அப்போது அவர் கோபமாக இல்லை. கோபமாக இருந்திருந்தால், அவர் மனைவி அவரிடம் அப்படிப் பேசி இருக்கவே மாட்டாளே!
"என்ன பெரிசா தப்புப் பண்றேன்? நீங்க சொன்ன எதையாவது செய்யாம விட்டிருப்பேன். அதுக்கு ஒரு கோபம்! என்னை விடுங்க. நம்ம பையன் உங்க முன்னால வரவே பயப்படறான். படிக்கிற பையனை இப்படியா பயமுறுத்தி வச்சிருப்பீங்க?"
"பயமுறுத்தறேனா? ஒழுங்காப் படின்னு சொல்லுவேன். படிக்காம எங்கேயாவது வெளியில போய் சுத்திட்டு வந்தா, ரெண்டு வார்த்தை சொல்லுவேன். இதெல்லாம் ஒரு தப்பா?"
"இங்க பாருங்க! டியூஷன் போயிட்டு வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சவன், உங்க குரலைக் கேட்டதும் ரூமுக்குள்ள போய்க் கதவைச் சாத்திக்கிட்டான்!" என்றாள் சியாமளா.
அன்று அலுவலகத்திலிருந்து வரும்போதே சோர்வுடன் வந்தார் சுந்தரமூர்த்தி.
அவர் முகபாவத்தைப் பார்த்ததும், இன்று மனிதர் வெடிக்கப் போகிறார் என்று நினைத்து, அவசர அவசரமாக காப்பியைப் போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள் சியாமளா. அவர் பையன் கணேஷ் சந்தடியின்றி ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு நழுவினான்.
சுந்தரமூர்த்தி காப்பியைக் குடிக்காமல், ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.
"என்னங்க, காப்பி ஆறிடப் போகுது!" என்றாள் சியாமளா, காப்பி ஆறி விட்டால் அதற்கு வேறு கத்தப் போகிறாரே என்று பயந்து!
சுந்தரமூர்த்தி அன்று அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை நினைத்துக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. அதற்குக் காரணம் அவருடைய மேலதிகாரி. ஆனால் அந்த மேலதிகாரி சுந்தரமூர்த்தியின் இருக்கைக்கு வந்து, சுந்தரமூர்த்திதான் அந்தத் தவறுக்குக் காரணம் என்று கூறி, அலுவலகத்தில் எல்லோர் முன்னிலையிலும் அவரைக் கடுமையாக ஏசி விட்டார்.
சுந்தரமூர்த்திக்கு, "சார்! அது என்னோட தப்பு இல்ல, உங்களோட தப்பு. என்னை ஏன் குத்தம் சொல்றீங்க?" என்று கூவ வேண்டும் போல் இருந்தது. ஆனால் மேலதிகாரியை எதிர்த்துப் பேச தைரியமின்றி, வாய் மூடி மௌனமாக அவருடைய ஏச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சுந்தரமூர்த்தி நிமிர்ந்து மனைவியின் முகத்தைப் பார்த்தார். அவர் காப்பி குடிக்காமல் காலம் கடத்தி, அதனால் காப்பி ஆறி விட்டால் கூடத் தன்னைக் கோபித்துக் கொள்வாரோ என்ற பயத்துடன் அவள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
மனைவியிடமும், மகனிடமும் சிறிய விஷயங்களுக்குக் கூட இவ்வளவு கோபம் காட்டும் தன்னால், அநியாயமாகத் தன்னைக் குற்றம் சொன்ன மேலதிகாரியிடம் தன் நியாயமான கோபத்தை ஏன் காட்ட முடியவில்லை என்று அவர் யோசித்துப் பார்த்தார்.
"கணேஷ் எங்கே?"
"படிக்கறதுக்கு மாடிக்குப் போயிருக்கான். காப்பியைக் குடிங்க. ஆறிடும்" என்றாள் மனைவி.
சுந்தரமூர்த்தி மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
திருமணமான புதிதில் அவர் முகத்தில் இருந்த கனிவும், பரிவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தெரிந்ததாக சியாமளாவுக்குத் தோன்றியது.
துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
குறள் 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
பொருள்:
எந்த இடத்தில் தன் கோபம் செல்லுபடியாகுமோ, அந்த இடத்தில் தன் கோபத்தைக் காட்டாமல் அடக்கிக் கொள்பவன்தான் உண்மையிலேயே கோபத்தைக் கட்டுப்படுத்துபவன். தன் கோபம் செல்லுபடியாகாத இடத்தில் கோபத்தை அடக்கினால் என்ன, அடக்காவிட்டால் என்ன?
No comments:
Post a Comment