About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, December 18, 2019

303. சதீஷின் முடிவு

"அப்பா! ரொம்ப சந்தோஷமா இருக்கு! ரொம்ப நாளா மனசில இருந்த கோபம் இன்னிக்குத்தான் போச்சு!" என்றான் சதீஷ்.

"என்ன கோபம்? எப்படிப் போச்சு?" என்றாள் அவன் மனைவி வசந்தா.

"எங்க கம்பெனிக்காக காம்பஸ் ரெக்ரூட்மெண்ட்டுக்காக இன்னிக்கு ஒரு காலேஜுக்குப் போயிருந்தேன். ஆப்டிட்யூட் டெஸ்ட்ல பாஸ் பண்ணினவங்களை இன்டர்வியூ பண்ணி செலக்ட் பண்றதுக்காக. அதில ஒரு பையன் டெஸ்ட்ல நிறைய மார்க் வாங்கி இருந்தான். இன்டர்வியூவும் நல்லாத்தான் பண்ணினான். இன்டர்வியூ கமிட்டில இருந்த மத்த ரெண்டு பேரும் அவனை செலக்ட் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா அவனுக்கு கம்யூனிகேஷன் ஸ்கில் போதாதுன்னு சொல்லி நான் அவனை ரிஜெக்ட் பண்ணிட்டேன். மத்த ரெண்டு பேரும் அவனுக்காக ரொம்ப வாதாடினாங்க. ஆனா நான்தானே சீனியர்? அதனால நான் சொன்னதை அவங்க ஒத்துக்க வேண்டியதாயிடுச்சு!"

"ஏன் அப்படிப் பண்ணினீங்க? அவனோட கம்யூனிகேஷன் ஸ்கில் அவ்வளவு மோசமா இருந்ததா என்ன?"

"இல்லை. ஓரளவுக்கு நல்லாவே இருந்தது. ஆனா அவனை நான் வேண்டாம்னு சொன்னதுக்கு வேற ஒரு காரணம் இருக்கு."

"என்ன காரணம்?"

"நம்ப கல்யாணத்துக்கு முன்னால, எங்க குடும்பம் ஒரு வீட்டில வாடகைக்குக் குடியிருந்தப்ப, வீட்டுக்காரர் பக்கத்து போர்ஷன்ல இருந்துக்கிட்டு எங்களுக்கு தினம் தொந்தரவு கொடுத்துக்கிட்டிருந்தார்னு சொல்லி இருக்கேன்ல?"

"ஆமாம். எப்பவோ நடந்தது அது. நமக்குக் கல்யாணம் ஆகியே இருபது வருஷத்துக்கு மேல ஆயிடுச்சே!"

"ஆமாம். ஆனா அவர் அப்ப எங்களுக்குக் கொடுத்த டார்ச்சரை நான் இன்னும் மறக்கல. அவர் மேல எனக்கு இருந்த கோபமும் போகல. அதனாலதான் இப்ப பழி தீர்த்துக்கிட்டேன்!"

"பழி தீர்த்துக்கிட்டீங்களா? என்ன செஞ்சீங்க?" என்றாள் வசந்தா பதட்டத்துடன்.

"இன்னிக்கு நான் ரிஜெக்ட் பண்ணினதாச் சொன்னேனே, அவன் அவரோட பையன்தான்!"

வசந்தா சட்டென்று சிரித்து விட்டாள்.

"ஏன் சிரிக்கிற?"என்றான் சதீஷ்.

"சாரி! நீங்க செஞ்சது எவ்வளவு சில்லியான காரியம்னு தெரிஞ்சதும் சிரிப்பு வந்துடுச்சு. நியாயமாப் பாத்தா உங்க மேல கோபம்தான் வந்திருக்கணும்!"

"இதில நீ கோபப்படறதுக்கு என்ன வந்தது?"

"ஏங்க, நீங்க ஒரு கம்பெனியில பெரிய பதவியில் இருக்கீங்க. உங்ககிட்ட ஒரு பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க. அதை நீங்க சரியா நிறைவேத்த வேண்டாமா? ஏதோ ஒரு பழைய கோபத்தைத் தீர்த்துக்கறதுக்காக உங்க அதிகாரத்தைப் பயன்படுத்தி தகுதியுள்ள ஒரு பையனோட வாய்ப்பைக் கெடுத்திருக்கீங்களே, இது தப்புன்னு உங்களுக்குத் தோணலியா?"

"பெரிய தப்பு ஒண்ணுமில்ல. அவனுக்கு பதிலா தகுதியுள்ள இன்னொருத்தனுக்கு அந்த வேலை கிடைக்கப் போகுது. அவனுக்கும் வேற கம்பெனியில வேலை கிடைச்சுடும்."

"அப்ப, நீங்க சாதிச்சது என்ன? உங்க பழைய கோபத்தைத் தீர்த்துக்க நியாயம் இல்லாம நடந்துக்கிட்டு நீங்களே உங்களுக்கு ஒரு சறுக்கலை ஏற்படுத்திகிட்டிருக்கீங்க. உங்க கூட இருந்த ரெண்டு ஜுனியர் அதிகாரிகளும் உங்களைப் பத்தி என்ன நினைப்பாங்க? இதனால அவங்க மதிப்பில நீங்க தாழ்ந்து போயிருப்பீங்களே, அது ஒரு பெரிய இழப்பு இல்லையா உங்களுக்கு?"

சதீஷ் மௌனமாக இருந்தான்.

"இங்க பாருங்க, உங்க அலுவலக சம்பந்தமான விஷயங்கள்ள நான் எப்பவுமே தலையிட்டதில்ல. இப்ப நீங்களே எங்கிட்ட இதைச் சொன்னதால என் மனசில தோணினதைச் சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க" என்றாள் வசந்தா.

"இல்லை வசந்தா. நீ சொன்னப்பறம் நானும் யோசிச்சுப் பாக்கிறேன். செலக்ட் ஆனவங்க பட்டியலை நாங்க இன்னும் வெளியிடல. நாளைக்குத்தான் வெளியிடப் போறோம். அந்தப் பையனை செலக்ட் பண்ணிடலாம்னு சொல்லி லிஸ்ட்ல சேக்கச் சொல்லிடறேன். நீ சொன்னபடி என் சக ஊழியர்கள் என்னைப் பத்தி இன்னிக்கு தப்பா நினைச்சிருந்தாலும், நான் மனசை மாத்திக்கிட்டதும், இன்னிக்கு நான் ஏதோ ஒரு மூட்ல அப்படிச் சொல்லிட்டேன்னு நினைச்சு, என்னைப் பத்தின அவங்களோட தப்பான மதிப்பீட்டை மாத்திப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றான் சதீஷ். 

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

பொருள்:
யார் மீதும் கோபப்படாமல், கோபம் வருவதற்குக் காரணமான செயலை மறந்து (மன்னித்து) விட வேண்டும். கோபத்தினால் பல தீய விளைவுகள் தோன்றும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்

























2 comments: