
அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவருக்கு ராமன் என்று பெயர் வைப்பார்களாம். ராமன் என்றால் சீதாராமன், ஜானகிராமன், ராஜாராமன் என்றெல்லாம் கூட இருக்கும், ஆனால் பெயரில் ராமன் என்று வரும் என்று அந்தப் பத்திரிகையில் ஒரு துணுக்கு வெளியிட்டிருந்தார்கள்.
ஏன் இப்படி என்று தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக, எனக்கு இது போன்ற சுவையான விஷயங்களின் பின்னணி பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. என் நண்பன் பரசுவுடன் அந்த ஊருக்குச் சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
பரசு இதைப் பெரிதாக நினைக்கவில்லை.
"இதில பெரிசா ஒண்ணும் இருக்காது. அந்த ஊர்ல ஒரு ராமர் கோவில் இருக்கும். அதனால, எல்லோரும் ராமர்னு பேர் வச்சுக்கலாம்!" என்று இதை எளிதாக விளக்க முயன்றான் அவன்.
ஆயினும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவருக்கு இந்தப் பெயர் வைப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு விதி அல்லது சம்பிரதாயமாகப் பின்பற்றப்படுத்துவது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றுகிறது என்று நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு, பரசு என்னுடன் வரச் சம்மதித்தான்.
அந்த கிராமத்தில் காலடி வைத்ததுமே, எதிர்ப்பட்ட ஒருவரிடம் பரசு கேட்ட முதல் கேள்வி, "இங்கே ராமர் கோவில் எங்க இருக்கு?" என்பதுதான்.
அவர் அவனை ஒரு மாதிரி பார்த்து விட்டு, "இந்த ஊர்ல ராமர் கோவிலே இல்லியே! ஒரு கிருஷ்ணர் கோவிலும், ஒரு சிவன் கோவிலும்தான் இருக்கு" என்றார்.
நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு, பரசுவைப் பார்த்தேன். "பின்ன ஏன் இந்த ஊர்ல எல்லாரும் ராமன்னு பேர் வச்சுக்கறாங்க?" என்றான் அவன், அசராமல்.
"அது எனக்குத் தெரியாது. அதோ அந்தத் தெருவுக்குள்ள போனீங்கன்னா, இடது பக்கமா இருக்கற மூணாவது வீட்டில ரமணின்னு ஒத்தர் இருக்காரு. அவருக்குத்தான் இந்த விஷயம்லாம் தெரியும்" என்றார் அவர்.
"தாங்க்ஸ். உங்க பேர் என்ன?"
"கோசல்ராம்!" என்றார் அவர்.
ரமணி வீட்டுக்குச் சென்று, நாங்கள் பல ஊர்களுக்கும் பயணம் செல்பவர்கள் என்று எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்த ஊரில் எல்லாக் குடும்பத்திலும் ராமன் என்று பெயர் வைப்பதின் பின்னணி பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவதாகச் சொன்னோம்.
"அது ஒரு பெரிய கதை" என்று ஆரம்பிப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர், "பல வருஷங்களுக்கு முன்னே, இந்த ஊர்ல ராமன்னு ஒத்தர் இருந்தாரு. அவருக்கு மரியாதை செலுத்தறதுக்காக, இந்த ஊர்ல அப்படி ஒரு வழக்கத்தை எல்லாரும் பின்பற்றிக்கிட்டு வராங்க. இந்த ஊர்லேந்து போய் வெவ்வேறு ஊர்ல செட்டில் ஆகி நவீன வாழ்க்கை வாழறவங்க கூட, குழந்தைகளுக்குப் பேர் வைக்கறப்ப, அதில் ராம்ங்கற வார்த்தை இருக்கற மாதிரி பாத்துப்பாங்க" என்றார்.
"அவரைப் பத்திச் சொல்லுங்களேன்" என்றேன்.
"இந்த ஊர்ல ஒரு ஜமீன்தார் இருந்தாரு. அவர் ஒரு குட்டி ராஜா மாதிரி இந்த ஊரை ஆண்டுக்கிட்டிருந்தாரு. இந்த ஊர்ல இருக்கற நிலத்தில பெரும்பகுதி அவரோடதாகத்தான் இருந்தது. மீதி நிலங்களை வச்சுக்கிட்டிருந்தவங்க கூட அவர்கிட்ட அடிபணிஞ்சுதான் நடப்பாங்க.
"அவரோட பெண் முத்துன்னு ஒரு கூலிக்காரனைக் காதலிச்சா. அவன் பயந்தான். ஆனா, அந்தப் பொண்ணு தைரியமா இருந்தா. ஒருநாள், ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிட்டாங்க.
"ஜமீன்தார் அவங்க இருக்கற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டாரு. ஆனா, அவங்க போய்த் தங்கி இருந்த ஊர் பிரிட்டிஷ் அரசோட கட்டுப்பாட்டில இருந்தது. அதனால ஜமீன்தாரால எதுவும் செய்ய முடியல.
"அவன் தன் பெண்ணைக் கடத்திக்கிட்டுப் போனதா, அந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல ஜமீன்தார் புகார் கொடுத்தாரு. அவங்க விசாரிச்சுட்டு, அந்தப் பெண் மேஜர்ங்கறதால அவங்களால சட்டப்படி எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம், தன் வீட்டிலேந்து நகை, பணம் இவற்றையெல்லாம் முத்து திருடிக்கிட்டுப் போயிட்டான்னு இன்னொரு புகார் கொடுத்தாரு.
"போலீஸ்ல முத்துவைக் கைது செஞ்சு விசாரிச்சாங்க. அவங்களுக்கு உண்மை தெரியும். இருந்தாலும் ஜமீன்தாருக்கு சாதகமா அப்படி நடந்துக்கிட்டாங்க. அப்பதான் இந்த ஊரைச் சேர்ந்த ராமன்கற பெரியவர் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், ஜமீன்தார் வீட்டிலேந்து ஒரு காசோ, ஒரு குந்துமணி நகையோ திருட்டுப் போகலேன்னு சொன்னாரு. அதுக்கப்பறம், போலீஸ்காரங்க வேற வழியில்லாம முத்துவை விட்டுட்டாங்க. முத்துவும், ஜமீன்தார் பெண்ணும் வேற எங்கேயோ போய் செட்டில் ஆயிட்டாங்க."
"ராமன்கறவர் யாரு? அவர் சொன்னா போலீஸ்ல ஏன் ஏத்துக்கணும்?" என்றேன் நான்.
"ஏன்னா, அவர்தான் ஜமீனோட கணக்குகளைப் பாத்துக்கிட்ட காரியதரிசி. அவர் சொன்னா சரியாத்தானே இருக்கணும்?"
"அவர் ஏன் ஜமீன்தாரை எதுத்துக்கிட்டு அப்படிச் சொன்னாரு? முத்து அவருக்கு வேண்டியவனா?"
"முத்து யார்னே அவருக்குத் தெரியாது. ஜமீன்ல அவருக்கு நல்ல சம்பளம், மரியாதை எல்லாம் இருந்தது. அப்படியும் அவர் இதைச் செஞ்சார்னா, அதுக்கு ஒரே காரணம், தனக்கு ஒரு விஷயம் பொய்னு தெரிஞ்சப்ப, அதை வெளிப்படுத்தி உண்மையை நிலைநாட்டணும்னு அவர் நினைச்சதுதான்."
"இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்றான் பரசு.
நான் குறுக்கிட்டு, "அதுக்கப்பறம் அவருக்கு என்ன ஆச்சு?" என்றேன்.
"என்ன ஆகும்? ஜமீன் வேலை போயிடுச்சு. அவருக்கு இந்த ஊர்ல சொந்த வீடு இருந்தாலும், ஜமீன்தாரோட கோபத்தைச் சம்பாதிச்சுக்கிட்டு அவரால இந்த ஊர்ல இருக்க முடியாம, ஊரை விட்டே போய், வேற ஒரு ஊர்ல ஒரு கடையில கணக்கு எழுதி, ரொம்பக் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தினாரு."
"அப்புறம் அவர் இந்த ஊருக்குத் திரும்ப வரவே இல்லையா?"
"வந்தாரு. 1956-ல அரசாங்கம் ஜமீன்தாரி முறையை ஒழிச்சப்பறம், அவர் குடும்பம் இங்கே திரும்பி வந்தது. அவரோட பழைய வீட்டிலேயே அவர் கொஞ்ச நாள் இருந்துட்டு இறந்து போயிட்டாரு. இதோ இந்த பெஞ்ச்ல படுத்துக்கிட்டுத்தான் அவர் இறந்து போனாரு" என்று பரசு அமர்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பழைய பெஞ்ச்சைக் காட்டினார் அவர்.
பரசு நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தான்.
"அப்ப இதுதான் அவர் வீடா?" என்றேன் நான் வியப்புடன். "அப்ப நீங்க?"
"நான் அவரோட பேரன். என் பேரும் ராமன்தான்" என்றார் ரமணி!
"நல்ல வேளை, 'நான்தான் இறந்து போன அந்த ராமன்'னு சொன்னாம போனீங்களே!" என்று பரசு முணுமுணுத்தது எனக்கு மட்டும் கேட்டது!
"உங்க பேர் ரமணின்னு சொன்னாங்களே!" என்றேன் நான்.
"தன் மாமனார் பேரைச் சொல்லி என்னைக் கூப்பிடக் கூடாதுங்கறதுக்காக, என்னை என் அம்மா ரமணின்னு கூப்பிடுவாங்க. அந்தப் பேரே எனக்கு நிலைச்சுடுச்சு. ஆனா, ரிகார்டுல எல்லாம் என் பேர் ராமன்தான். உண்மையைப் பேசின என் தாத்தாவோட நினைவு எப்பவுமே அழியக் கூடாதுங்கறதுக்காக, இந்த ஊர்ல இருக்கற எல்லாக் குடும்பமும் குழந்தைகளுக்கு அவர் பேரை வைக்கறப்ப, எங்க குடும்பத்தில மட்டும் அப்படி வைக்காம இருப்பாங்களா?" என்றார் ரமணி என்கிற ராமன்.
"வைங்க, வைங்க. உங்க பையன் பேர் என்ன, ரகுராமனா?" என்றான் பரசு.
"இல்ல, பலராமன்!"
"பலராமனா? ஏற்கெனவே இந்த ஊர்ல பல ராமர்கள் இருக்காங்க போலருக்கே! இருக்கட்டும். என் பேர் பரசுராமன்!" என்ற பரசு, "வாடா, போகலாம்" என்றான் என்னிடம்.
துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
குறள் 294உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
பொருள்:
தன் உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் இருப்பவன் உலகத்திலுள்ள மக்களின் உள்ளங்களில் இருப்பான்.
No comments:
Post a Comment