
தன் யோசனையை அவர் விவரித்ததும், பலத்த கரகோஷம் எழுந்தது.
"பிரமாதம், சார்!"
"புது விதமான அணுகுமுறை. இது பிரமாதமா செயல்படும்."
"அற்புதம், சார். இது மாதிரி யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க."
இது போன்ற பல பாராட்டுக் கலந்த ஆமோதிப்புகள் வெளிப்பட்டன.
"அப்ப, நான் இதை உடனே அமல்படுத்தலாமா?" என்றார் விஜயராகவன்.
"நிச்சயமா, சார்!" என்றனர் பலரும்.
சில வினாடிகள் மௌனத்துக்குப் பின், "சார்! நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா, ஒண்ணு சொல்லலாமா?" என்ற ஒரு குரல் பலவீனமாக ஒலித்தது.
எல்லோரும் ஒரு சேரத் திரும்பிக் குரல் வந்த பக்கம் பார்த்தனர்.
உதவி மானேஜர் சதாசிவம்!
"சொல்லுங்க சதாசிவம்!" என்றார் விஜயராகவன்.
"சார், இதில சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்னு நினைக்கிறேன்" என்று ஆரம்பித்தார் சதாசிவம்.
"சொல்லுங்க!" என்றார் விஜயராகவன். அவருடைய உற்சாகம் சட்டென்று வடிந்து விட்டாற் போல் இருந்தது.
சதாசிவம் தன் கருத்தைச் சொன்னார்.
அவர் பேசி முடித்ததும், ஒரு நிமிடம் அமைதி நிலவியது.
"சார்! இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லைன்னு நான் நினைக்கிறேன்..." என்று ஆரம்பித்த ஒரு மூத்த அதிகாரியைக் கையமர்த்திய விஜயராகவன், "இதைப் பத்தி நாம அப்புறம் பேசலாம். இப்போ இந்த மீட்டிங்கை முடிச்சுக்கலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தார்.
"என்ன சதாசிவம், உங்களுக்கு முன்னேறணும்னு ஆசை இல்லையா?" என்றார் சதாசிவத்தின் மேலதிகாரி கார்த்திகேயன்.
"ஏன் சார்!"
"நம்ம ஜி.எம்முக்கு அவர் கருத்தை யாரும் மறுத்துப் பேசினாலே பிடிக்காது. அவர் ஒரு ஐடியாவை யோசிச்சு, அதைப் பத்தி ரொம்ப உற்சாகமாப் பேசி, நம்மகிட்ட ஆலோசனை கேட்டாரு. மூத்த அதிகாரிகள் எல்லாரும் ஆஹா, பிரமாதம்னு தலையாட்டினாங்க. நீங்களும் சேந்து தலையாட்டாட்டாலும், வாயை மூடிக்கிட்டாவது இருந்திருக்கலாம். அவர் சொன்னதில தப்பு கண்டு பிடிச்சுப் பேரைக் கெடுத்துக்கிட்டீங்களே! இப்ப ப்ரமோஷன் வர நேரம். உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கும்னு எல்லாரும் எதிர்பாத்துக்கிட்டிருக்காங்க. இந்த நேரம் பாத்துத் தேவையில்லாம பேசி, வாய்ப்பைக் கெடுத்துக்கிட்டீங்களே!" என்றார் கார்த்திகேயன்.
"சார்! அவர் நம்ம கருத்தைக் கேட்டார். எனக்கு உண்மைன்னு பட்டதைச் சொன்னேன். அதை அவர் தப்பா எடுத்துப்பார்னா, அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றார் சதாசிவம்.
"சார்! உங்களை ஜி.எம். கூப்பிடறாரு!" என்றான் பியூன்.
'நேர்ல கூப்பிட்டுத் திட்டப் போறாரா? அது நடந்துதான் கொஞ்ச நாள் ஆயிடுச்சே!' என்று நினைத்துக் கொண்டே, பொது மேலாளரின் அறைக்குச் சென்றார் சதாசிவம்.
பொது மேலாளரின் அறையில், துணைப் பொது மேலாளரும் அமர்ந்திருந்தார்.
"வாங்க சதாசிவம்! உக்காருங்க" என்றார் விஜயராகவன்.
"சார், நான் அன்னிக்குப் பேசினது அதிகப் பிரசங்கித்தனமா இருந்தா..." என்று ஆரம்பித்தார் சதாசிவம்.
"நோ, நோ! நீங்க அன்னிக்குச் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. மத்த சிலருக்கும் அதெல்லாம் தோணியிருக்கலாம். ஆனா, அதையெல்லாம் சொன்னா எனக்குப் பிடிக்காதுன்னு நினைச்சு அவங்க எதுவும் சொல்லாம இருந்தப்ப, நீங்க தைரியமா உங்க கருத்தைச் சொன்னதை நான் பாராட்டறேன். நீங்க சொன்ன கருத்துக்கள் அடிப்படையில, நாங்க கலந்து பேசி, என்னோட யோசனையில் சில மாறுதல்கள் செஞ்சிருக்கோம். இன்னொரு மீட்டிங் போட்டு அதை விவாதிக்கப் போறோம். நீங்க தைரியமா உண்மையைப் பேசினத்துக்காக உங்களைப் பாராட்டத்தான் உங்களைக் கூப்பிட்டேன்" என்றபடி, தன் கையை நீட்டினார் விஜயராகவன்.
சதாசிவம் நம்ப முடியாத மகிழ்ச்சியுடன், தன் கையை நீட்டினார்.
அவர் கைகளைப் பிடித்துக் குலுக்கிய விஜயராகவன், "பாராட்டுக்கள், சதாசிவம். நீங்க இனிமே அசிஸ்டன்ட் மானேஜர் இல்லை. உங்களை மானேஜரா ப்ரமோட் பண்ணி இருக்கோம்" என்று சொல்லி விட்டு, அருகில் இருந்த துணைப் பொது மேலாளரிடம் திரும்பி, "ப்ரோமோஷன் ஆர்டரை அவர்கிட்ட கொடுங்க " என்றார்.
துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
குறள் 296பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
பொருள்:
பொய் இல்லாமல் வாழ்வதை விடப் புகழான நிலை ஒருவனுக்கு வேறு எதுவும் இல்லை. அது அவன் கேட்காமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் தரும்.
No comments:
Post a Comment