"பரதா! அங்கம், வங்கம், மகதம், விதேகம், பாஞ்சாலம் என்ற வரிசையில் வரும் ஐம்பத்தொன்பது நாடுகளையும் வென்று, உன் நாட்டையும் சேர்த்து அறுபது நாடுகளுக்கும் அதிபதியாகி விட்டாய். இந்த அறுபது நாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக ஆக்கியும் விட்டாய். இந்த நாடு இனி உன் பெயரிலேயே பாரத வர்ஷம் என்று வழங்கப்படும்" என்றார் முனிவர்.
"தங்கள் ஆசீர்வாதம், குருவே!" என்றான் பரதன், பணிவுடன். "என் நாட்டை விரிவாக்க வேண்டும் என்ற பேராசையால் நான் இதைச் செய்யவில்லை. இந்த நாடுகளின் அரசர்கள் அனைவரும் பெரும்பாலான சமயங்களில் ஒருவருடன் ஒருவர் போர் செய்து கொண்டு உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், சாதாரண மக்கள் போரினால் பெரும் இன்னல்களுக்கு ஆளாக வகை செய்து கொண்டும் இருந்தார்கள். அத்துடன், தொலைதேசங்களிலிருந்து யாரும் பெரும் படையுடன் வந்து நம்மைத் தாக்க முயன்றால், அத்தகைய தாக்குதல்களை முறியடித்து, அந்தப் படைகளை அடித்து விரட்ட ஒரு வலுவான நாடு இருக்க வேண்டும் என்றும் விரும்பினேன். இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான், பல சிறு நாடுகளை ஒன்றிணைத்து, ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினேன். நம் மன்னர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால், இதற்குத் தேவையே ஏற்பட்டிருக்காது."
"உன் நோக்கம் உயர்ந்ததுதான். அதனால்தான், ஒரு துறவியாக இருந்தும், நான் உன் போர் வெற்றியைப் பாராட்டினேன். உன்னுடைய இந்த ஒருங்கிணைப்பு, வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நின்று உனக்குப் புகழைத் தேடித் தரும். பல நூறு அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கூட, இந்த நாட்டின் அமைப்பிலும், எல்லைகளிலும் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டாலும், இந்த நாடு உன் பெயராலேயே அழைக்கப்படும்" என்று வாழ்த்தினார் முனிவர்.
"உங்கள் நல்லாசிகள் எனக்கு என்றும் வேண்டும், முனிவர் பெருமானே!" என்று கூறி, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான் பரதன்.
பிறகு, "முனிவரே! நம் நாட்டின் இலச்சினையில் ஒரு உயர்ந்த கருத்தைப் பொறிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது நம் நாட்டின், நம் மக்களின் அடிப்படைக் கோட்பாடாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். தாங்கள் ஒரு பொருத்தமான கருத்தைத் தெரிவிக்க வேண்டும்" என்றான் பரதன்.
முனிவர் சிரித்தபடி, "பரதா! நான் ஒரு முனிவன். என்னைப் பொருத்தவரை, தவம்தான் உயர்ந்தது. தவத்தின் உயர்வை வெளிப்படுத்தும்படியான ஒரு வாசகத்தை அமைத்துக் கொள் என்பதுதான் என் யோசனையாக இருக்கும். ஆனால், இது குறித்து நீ பலரையும் கலந்தாலோசிக்க வேண்டும். என் கருத்துதான் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. முதலில், உன் அமைச்சரைக் கேள்!" என்றபடி, அருகிலிருந்த அமைச்சரைப் பார்த்தார்.
"முனிவர் கருத்துக்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?" என்றார் அமைச்சர்.
"நீங்கள் இப்படிச் சொல்வதே உங்களிடம் வேறொரு கருத்து இருக்கிறது என்பதை வெளிக் காட்டுகிறது! 'சிறந்த எண்ணங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மை வந்தடையட்டும்' என்பது உபநிஷத் வாக்கியம். சிறந்த கருத்தைப் பெறுவதுதான் முக்கியம். அது யாரிடமிருந்து வருகிறது என்பது முக்கியமில்லை. சொல்லுங்கள்!" என்று அமைச்சரை ஊக்குவித்தார் முனிவர்.
அமைச்சர் சற்றுத் தயக்கத்துடன், "தவம் மிக உயர்ந்ததுதான். ஆனால், அது எல்லோருக்குமே கை கூடுவதில்லை. சாதாரண மனிதர்களைப் பொருத்தவரை மிகவும் உயர்ந்தது தானம்தான் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.
"அமைச்சரே! உங்கள் கருத்தும் மிக உயர்ந்ததுதான். தானத்தை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்பதும் ஏற்கக் கூடியதுதான்" என்றார் முனிவர்.
"நீங்கள் இருவர் கூறியவையும் மிக உயர்ந்த கருப்பொருட்கள்தான். ஆயினும், உங்கள் கருத்துக்களைக் கேட்ட பிறகு எனக்கு வேறொரு எண்ணம் தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான் பரதன்.
"சொல் பரதா!" என்றார் முனிவர்.
"என் தந்தை துஷ்யந்தர், காட்டுக்கு வேட்டையாட வந்தபோது, கண்வ முனிவர் ஆசிரமத்தில் வளர்ந்த என் தாய் சகுந்தலையைச் சந்தித்து, அவரை காந்தர்வ மணம் புரிந்து கொண்டார். பிறகு நான் பிறந்ததும், என் தாய் என்னை எடுத்துக் கொண்டு துஷ்யந்த மன்னரின் அரண்மனைக்குச் சென்றார்."
"ஆமாம். நான் கண்வ முனிவரின் சீடனாக அப்போது அவர் ஆசிரமத்தில் இருந்தேனே! இதெல்லாம் எனக்குத் தெரியும்" என்றார் முனிவர்.
"ஆனால், என் தாய்க்கு துர்வாசர் கொடுத்த சாபத்தால், துஷ்யந்தர் என் தாயை மறந்து விட்டார். அதனால், என் தாயையும், என்னையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். தான் சொல்வது உண்மைதான் என்று என் தாய் தன் தந்தையிடம் போராடினார்."
"ஆமாம். அப்புறம் சகுந்தலை சொல்வது உண்மைதான் என்று அசரீரி வாக்கு கூறியது. அதன் பிறகு, உன் தந்தை துஷ்யந்தர் உன் தாயையும் உன்னையும் ஏற்றுக் கொண்டார். அதனால்தானே நீ இளவரசனாகி, உன் தந்தைக்குப் பின் அரசனாகி, இன்று உன் முயற்சியால் ஒரு பேரரரசனாகவும் ஆகி இருக்கிறாய்!"
"ஆமாம். அன்று என் தாய் உண்மைக்காகப் போராடினார். உண்மை வென்றது. நான் தவத்தைப் பற்றிக் குறைத்துச் சொல்வதாக நினைக்காதீர்கள். துர்வாசர் தன் தவ வலிமையால்தானே சாபம் கொடுக்கும் சக்தியைப் பெற்றார்? அவர் என் தாய்க்குக் கொடுத்த சாபத்தை உண்மைதானே வென்றது?" என்றான் பரதன்.
"உண்மைதான்!" என்றார் முனிவர், சிரித்தபடி.
முனிவரின் சிலேடையை பரதனும், அமைச்சரும் புன்முறுவலுடன் ரசித்தனர்.
"அது மட்டுமில்லை, முனிவரே! என் தாத்தா விசுவாமித்திரர் ஒரு பெரிய முனிவர். அரசராக இருந்த அவர், கடும் தவம் செய்து பிரம்மரிஷி ஆனார். அவர் அரசராக இருந்தபோது, தானங்களில் அதிகம் ஈடுபட்டவர். உண்மையில், தன் நாட்டு மக்களுக்குப் பஞ்சமின்றி உணவு வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், கேட்டதெல்லாம் கொடுக்கும் காமதேனுவை வசிஷ்டரிடம் கேட்டார். வசிஷ்டர் கொடுக்காததால், அவருடன் போரிட்டுத் தோற்றார். பிறகு, வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்து, அவரைப் போலவே பிரம்மரிஷி ஆக விரும்பி, அரச வாழ்க்கையை விட்டு விட்டுத் தவம் செய்து, பெரிய முனிவரானார். ஆனால் தானத்திலும், தவத்திலும் உயர்ந்திருந்த விசுவாமித்திரர் ஒருவரிடம் தோற்று விட்டார்!"
"நீ சொல்ல வருவது எனக்குப் புரிகிறது" என்றார் முனிவர், சிந்தனையுடன்.
"விசுவாமித்திரர் யாரிடம் தோற்றார், அரசே!"என்றார் அமைச்சர்.
"அரிச்சந்திரனிடம். சரியாகச் சொல்வதானால் அவர் தோற்றது உண்மையிடம்! ஏனெனில், அரிச்சந்திரன் அவரை வெற்றி கொண்டது உண்மையின் மூலம்தானே?"
"அப்படியானால், தாங்கள் சொல்வது..." என்றார் அமைச்சர்.
"தவத்தையும் தானத்தையும் விட வாய்மையே உயர்ந்தது என்று நான் கருதுகிறேன். எனவே, 'வாய்மையே வெல்லும்' என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தாங்கள் என்ன சொல்கிறீர்கள், குருவே!"
"'வாய்மையே வெல்லும்' என்பதே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று நீ சொன்னது மிகப் பொருத்தமானது. 'சத்யமேவ ஜயதே' என்று முண்டகோபநிஷத் கூறுகிறது." என்றார் முனிவர்.
"'சத்யமேவ ஜயதே!' அதுவே நம் நாட்டின் தாரக மந்திரமாக இருக்கட்டும்!" என்றான் பரதன்
"பரதா! உன் முடிவு மிகப் பொருத்தமானது. உன் பெயர் எப்படி இந்த நாட்டுடன் எப்போதும் இணைந்திருக்குமோ, அது போல், 'சத்யமேவ ஜயதே' என்ற இந்தத் தாரக மந்திரமும் இந்த நாட்டுடன் என்றென்றும் இணைந்திருக்கும்" என்றார் முனிவர்.
துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
குறள் 295மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
பொருள்:
தன் உள்ளம் அறிய உண்மை பேசுபவன் தவம், தானங்கள் செய்பவர்களை விடவும் உயர்ந்தவன்.
No comments:
Post a Comment