"ஒரு நல்லவருக்கு எதிரா பொய் சொல்லச் சொல்றீங்களே சார், தப்பு இல்லையா?" என்றான் நவநீத்.
"நீ பொய் சொல்லப் போறதில்லப்பா. நமசிவாயத்துக்கு லஞ்சம் கொடுத்ததா ஒத்தர் சொல்லப் போறாரு. அவர் நமசிவாயம் அறைக்குள்ள போனதையும், அவர் நமசிவாயத்துக்கிட்ட ஒரு கவர் கொடுத்ததையும் கண்ணாடித் தடுப்பு வழியா பாத்ததா நீ சொல்லப் போற. அவ்வளவுதானே?" என்றார் சுந்தரலிங்கம்.
"சார்! நமசிவாயம் அறைக்குள்ள யாரும் போனதையும் நான் பாக்கல, அவர்கிட்ட கவர் கொடுத்ததையும் நான் பாக்கல. ஒரு நல்ல மனுஷனைப் பத்திப் பொய்யான தகவல் சொல்லி, அவரை மாட்ட வைக்கறது தப்பு சார்."
"யாருப்பா நல்ல மனுஷன்? இந்த ஆளு வந்ததிலேந்து நமக்கு வர வருமானம் போயிடுச்சு. அவர் லஞ்சம் வாங்க மாட்டார்ங்கறதுக்காக, நாம எதுக்கு கஷ்டப்படணும்? ஒரு சின்ன செட் அப் பண்ணி அவர் லஞ்சம் வாங்கற மாதிரி காட்டிட்டா, அவரைத் தூக்கிடுவாங்க. அவர் இடத்தில வேற யார் வந்தாலும் நமக்கு பாதிப்பு இருக்காது."
"தப்பு செய்யாத ஒத்தரை வேலையை விட்டுத் தூக்க வைக்கறது எப்படி சார் சரியாகும்?"
"அட நீ யாருப்பா? அவருக்கு வேலையெல்லாம் போகாது. ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்ணிட்டு, என்கொயரின்னு ஒண்ணு நடத்துவாங்க. அதுக்கப்பறம், அவரை வேற இடத்துக்கு மாத்திடுவாங்க. ரெண்டு மாசம் கழிச்சு எல்லாருமே இதை மறந்துடுவாங்க. அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்காததுக்காக அவர் கொடுக்கற சின்ன விலை இது, அவ்வளவுதான். நீ வேலையில சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல. சம்பாதிக்க வேண்டிய வயசு இது. உன் பிழைப்பைக் கெடுக்கற ஆளை அப்புறப்படுத்தற விஷயம் இது. அவ்வளவுதான்!" என்றார் சுந்தரலிங்கம்.
நவநீத் அரை மனதுடன் தலையாட்டினான்.
சுந்தரலிங்கம் ஏற்பாடு செய்தபடி, ஒரு விண்ணப்பதாரர் தன் விண்ணப்பத்தைப் பரிசீலிக்க நமசிவாயம் தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், அதன்படி ஒரு கவரில் பத்தாயிரம் ரூபாய் போட்டு அவர் அறைக்குச் சென்று அதை அவரிடம் கொடுத்ததாகவும் சொன்னார். அவர் நமசிவாயத்தின் அறைக்குச் சென்றதையும், அவரிடம் ஒரு கவர் கொடுத்ததையும் தான் பார்த்ததாக நவநீத் கூறினான்.
நமசிவாயத்தின் அறையில் சுந்தரலிங்கம் முன்பே வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் அடங்கிய கவர் எடுக்கப்பட்டது.
நமசிவாயம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது விரைவிலேயே விசாரணை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
நவநீத் நமசிவாயத்தின் பார்வையைத் தவிர்த்தான். அவர் அலுவலகத்தில் இருந்தவரை அவர் கண்ணில் படாமல் பார்த்துக் கொண்டான். தான் செய்த செயல் பற்றி அவனுக்கு ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.
இது நடந்து இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே, எதிர்பாராத விதமாக நவநீதுக்கு ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. போபாலில் வேலை. தன் அரசாங்க வேலையை ராஜினாமா செய்தான் நவநீத்.
நமசிவாயத்தின் மீது விசாரணை நடக்கும்போது சாட்சியம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவன் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
நவநீத் போபாலுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. இதுவரை விசாரணைக்காக அவன் அழைக்கப்படவில்லை. சுந்தரலிங்கத்தின் தொலைபேசி எண் அவனிடம் இருந்தபோதும், அவன் அவருக்கு ஃபோன் செய்து கேட்கவில்லை.
ஒருவேளை அவன் சாட்சியம் அவசியமில்லை என்று அவர்கள் முடிவு செய்திருக்கலாம். தானே ஏன் வலுவில் போய்த் தகவல் அறிய முற்பட வேண்டும் என்று நினைத்துப் பேசாமல் இருந்து விட்டான்.
நவநீத் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே சற்றுத் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்தவரின் முகம் பரிச்சயமானது போல் தோன்றியது. நவநீத்தின் வயிற்றுக்குள் இனம் தெரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. ஏன் இப்படி என்று அவன் யோசிக்க ஆரம்பித்தபோதே, அந்த மனிதர் நமசிவாயம் போல் இருக்கிறாரே என்று தோன்றியது. ஆமாம், அவரேதான்!
'இங்கே எப்படி வந்தார் அவர்? ஒருவேளை என்னைப் பார்க்கத்தான் போபாலுக்கு வந்திருக்கிறாரோ?'
அவரைத் தவிர்த்து எதிர்ப் பக்கம் போக நினைத்தான். ஆனால் போக்குவரத்து அதிகம் இருந்ததால், சாலையைக் கடக்க முடியவில்லை. அதற்குள், அவர் அருகில் வந்து, அவன் தோளைத் தொட்டுத் திருப்பினார்.
"ஏண்டா, பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டு இங்க ஓடி வந்துட்டா, நான் விட்டுடுவேன்னு நினைச்சியா? நீ எங்கே போனாலும் எனக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்" என்றார், அவன் தோளை அழுத்தியபடி.
அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வேகமாக ஓடினான் நவநீத்.
வீட்டுக்குப் போனதும், சுந்தரலிங்கத்தைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி, "அவர் எப்படி இங்கே வந்தார்?" என்றான் நவநீத்.
சுந்தரலிங்கம் பெரிதாகச் சிரித்து விட்டு, "நீ கிளம்பிப் போன கொஞ்ச நாளிலேயே நமசிவாயம் மாரடைப்பால் இறந்து போயிட்டார். உனக்கு ஏதோ மனப்பிரமை. கொஞ்சம் ஒய்வு எடுத்துக்க. சரியாயிடும்" என்றார்.
துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
குறள் 293தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
பொருள்:
தன் மனத்துக்குத் தெரிந்த ஒன்றைப் பற்றிப் பொய் கூறக் கூடாது. அவ்வாறு கூறினால், நம் நெஞ்சே நம்மைச் சுடும்.
No comments:
Post a Comment