About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, November 30, 2019

298. அரிசி ஆலை

தன் ஊருக்கு அருகில் ஒரு அரிசி ஆலை விலைக்கு வருகிறது என்று அறிந்து அதை வாங்குவதில் ஆர்வம் கொண்ட சண்முகம், தன் நண்பர் ஒருவர் மூலம் அரிசி ஆலை உரிமையாளரின் தரகருடன் தொடர்பு கொண்டார். 

உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு பேசிய பின் அவரிடம் சண்முகத்தை அழைத்துச் சென்றார் தரகர் கன்னையா. 

"பார்ட்டி ரொம்ப சுத்தமானவர்!" என்றார் கன்னையா, போகும் வழியில். 

"எப்பவும் குளிச்சுட்டு சுத்தமா இருப்பாரா?" என்றார் சண்முகம் சிரித்தபடி.

"அதுவும்தான்! ஒரு நாளைக்கு ரெண்டு வேளை கண்டிப்பா குளிச்சுடுவாரு. ஆனா நான் சொன்னது அவரோட தொழில் சுத்தம், வார்த்தை சுத்தம் பத்தி!" என்றார் கன்னையா.

"இந்த ஊர்ல இவ்வளவு தண்ணி கஷ்டம் இருக்கே! எப்படி ரெண்டு வேளை  குளிக்கிறாரு?" என்றார் சண்முகம் விடாமல். 

இதற்கு பதில் சொல்வதா வேண்டாமா என்று கன்னையா யோசித்துக் கொண்டிருந்தபோதே, சண்முகம், "சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்!" என்றார். 

பார்ட்டி என்று குறிப்பிடப்பட்ட முருகனின் வீட்டுக்கு இருவரும் சென்றபோது, முருகன் குளித்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். 

அப்போது மாலை வேளை. சண்முகம் கன்னையாவைப் பார்த்து, 'நீங்கள் சொன்னது சரிதான்!' என்பது போல் சிரித்தார். 

முருகன் குளித்து விட்டு வந்ததும் அவருடைய அரிசி ஆலையை விலைக்கு வாங்குவது பற்றி அவரிடம் பேசினார் சண்முகம். அரிசி ஆலை பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல் தாளை சண்முகத்திடம் கொடுத்த முருகன், அவரிடம் மேலும் சில விவரங்களைத் தெரிவித்த பிறகு, தான் எதிர்பார்க்கும் விலையையும் குறிப்பிட்டார். வரும் வியாழனன்று சண்முகம் வந்து அரிசி ஆலையை நேரில் பார்த்தபின் விலையை இறுதி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

புதன்கிழமை இரவு சண்முகத்துக்கு கன்னையாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

"சார்! நாளைக்கு மில்லைப் பார்க்கணும்னு முடிவு செஞ்சோம் இல்ல?" என்றார் கன்னையா.

"ஆமாம். காலையில 8 மணிக்கு கார்ல கிளம்பி வரேன். வரப்ப  உங்க வீட்டுக்கு வந்து உங்களையும் அழைச்சுக்கறேன்" என்றார் சண்முகம்.

"இல்ல சார். அதுக்கு முன்ன உங்க கிட்ட சில விஷயங்கள் பேசணும். நானே உங்க வீட்டுக்கு வரேன்" என்றார் கன்னையா.

"எதுக்கு கன்னையா நீங்க இவ்வளவு தூரம் வரணும்? நான் உங்க ஊரைத் தாண்டித்தானே முருகன் ஊருக்குப் போகணும்? போகும்போது உங்களை காரிலேயே அழைச்சுக்கிட்டுப் போறேன். கார்ல போய்க்கிட்டே பேசலாமே!"

"இல்ல சார். நான் வரேன். நேர்ல பேசலாம்" என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டார் கன்னையா. 

'எதுக்கு இங்கே வரேங்கறாரு? முருகன்கிட்ட எப்படியும் கமிஷன் வாங்கப் போறாரு. என்கிட்டயும் கமிஷன் கேக்கறதுக்காக வராரோ?' என்று யோசித்தார் சண்முகம்.

சொன்னபடி காலையில் வந்து விட்டார் கன்னையா. 

"எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு காலையில பஸ்ல வரீங்க? நான்தான் சொன்னேனே..." என்று ஆரம்பித்தார் சண்முகம்.

"சார்! உங்களுக்கு அந்த ரைஸ் மில் வேண்டாம்" என்றார் கன்னையா குறுக்கிட்டு.

"என்னது? ஏன் அப்படிச் சொல்றீங்க?" என்றார் சண்முகம் சற்று அதிர்ச்சியுடன்.

"சார்! நேத்துதான் ஒரு விஷயம் தெரிஞ்சுது. ரைஸ் மில்ல வேலை செஞ்ச பழைய அக்கவுண்டண்ட்டைத் தற்செயலாய் பாத்தேன். அவர் எனக்குத் தெரிஞ்சவரு. பாங்க்ல கடன் வாங்கித்தான் முருகன் ரைஸ் மில் ஆரம்பிச்சாரு. ஆனா தரக்குறைவான மெஷின்களை வாங்கிட்டு போலியா பில் தயாரிச்சு பாங்குக்குக் காட்டி அதிகமா கடன் வாங்கி இருக்காரு. அதிகப்படியா வாங்கின பணத்தை வேற எங்கேயோ முதலீடு செஞ்சிருக்காரு. தரமில்லாத மெஷின்கள்ங்கறதால அதெல்லாம் அடிக்கடி பழுதாகி மில்லை சரியா ஓட்ட முடியல. பாங்குக்குக் கட்ட வேண்டிய தவணைத் தொகையை ஒழுங்காக் கட்ட முடியல. அதனாலதான் மில்லை விக்கப் பாக்கறாரு. உங்களுக்கு இது வேண்டாம்னு சொல்லத்தான் நேர்ல வந்தேன்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கன்னையா.

சண்முகம் கன்னையாவை வியப்புடன் பார்த்தார். "நீங்க முருகனுக்குத்தானே தரகர்? எங்கிட்ட ஏன் இதைச் சொல்றீங்க?" என்றார்.

"சார்! எனக்கு முருகனைப் பத்தி இதுக்கு முன்னே தெரியாது. நான் அவரோட ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரன். என்னைப் பத்திக் கேள்விப்பட்டு என்னைக் கூப்பிட்டு அவர் ரைஸ் மில்லை வித்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டாரு. என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினவரு எங்கிட்ட அவரைப் பத்தி நல்லபடியாத்தான் சொன்னாரு. ஆனா அவர்கிட்ட தப்பு இருக்கறது தெரிஞ்சப்பறம் உங்ககிட்ட உண்மையைச் சொல்லி உங்களை எச்சரிக்கை வேண்டியது என் கடமை. அதான் சொன்னேன். இனிமே வேற யார்கிட்டயும் இந்த ரைஸ் மில்லை விக்க முயற்சி செய்யவும் மாட்டேன், முருகன்கிட்ட வேற வியாபாரத் தொடர்பு வச்சுக்கவும் மாட்டேன்."

சண்முகம் அடங்காத வியப்புடன் கன்னையாவைப் பார்த்தார். சற்றே அழுக்கான உடை அவர் பஸ்ஸில் வந்ததால் கசங்கி இருந்தது. காலையில் சீக்கிரமே வீட்டை வீட்டுக் கிளம்பி விட்டதால் குளித்திருக்க மாட்டார் என்று தோன்றியது.

ஆனால் முருகன் இந்நேரம் குளித்து விட்டு 'சுத்தமாக' இருப்பார் என்று நினைத்துக் கொண்டார் சண்முகம்.

துறவறவியல் 
அதிகாரம் 30      
வாய்மை   
குறள் 298
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

பொருள்:
உடல் நீரினால் தூய்மை அடையும்.  மனம் தூய்மை பெறுவது உண்மையினால்தான். 
பொருட்பால்                                                                             காமத்துப்பால்














No comments:

Post a Comment