அப்போதுதான் படிப்பை முடித்து விட்டு, வேலையில் சேர்ந்திருந்த அரவிந்தனுக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
அவன் பெற்றோரின் காரியங்கள் முடிந்து ஒரு வாரம் கழித்து, அவன் அப்பாவின் நண்பர் சாமிநாதன் அரவிந்தனைப் பார்க்க வந்தார்.
"அரவிந்தா! உன் அப்பா அம்மா எதிர்பாராத விதத்தில திடீர்னு போயிட்டாங்க. உன் அப்பா கிருஷ்ணசாமி பேர்ல இருக்கற வீடு, வேறு சில சொத்துக்கள், பாங்க்ல இருக்கற பணம், லாக்கர்ல இருக்கற உன் அம்மாவோட நகைகள் இதையெல்லாம் உன் பேருக்கு மாத்திக்கணும். நீ உன் பெற்றோருக்கு ஒரே பையன்தான்னாலும், உன் அப்பா உயில் எதுவும் எழுதி வைக்காததால, நீ வாரிசுத் சான்றிதழ் வாங்கணும். அப்பதான் எல்லாத்தையும் உன் பேருக்கு மாத்திக்க முடியும்" என்றார் அவர்.
அவருடைய யோசனைப்படி வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தான் அரவிந்தன். சில நாட்களில் வாரிசுத் சான்றிதழ் அளிக்கப்பட்டு விடும் என்று அவன் எதிர்பார்த்திருந்த நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில், அரவிந்தனின் அப்பாவின் சகோதரர் மகன் சுந்தர் ஒரு வழக்குப் போட்டான்.
அரவிந்தன் அவன் பெற்றோர்களின் சொந்தப் பிள்ளை இல்லையென்றும், முறையாகாத் தத்தெடுக்கப்படாமல் அவர்களால் வளர்க்கப்பட்டவன் என்பதால், காலஞ்சென்ற கிருஷ்ணசாமியின் சொத்தில் சட்டப்படி அவனுக்கு எந்த உரிமையும் கிடையாதென்றும், கிருஷ்ணசாமியின் சகோதரர் மகனான தான் மட்டுமே அவருடைய வாரிசு என்றும் சுந்தர் அந்த வழக்கில் கூறியிருந்தான்.
அரவிந்தன் தரப்பில், அவன் பள்ளிச் சான்றிதழில் அவன் கிருஷ்ணசாமியின் மகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஆதாரமாகக் காட்டப்பட்டது. ஆனால், பிறப்புச் சான்றிதழ் எதுவும் பெறாமலே அரவிந்தனின் பெற்றோர்களின் பெயர்கள் பள்ளிப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறிய சுந்தர், பள்ளியிலிருந்து பழைய பதிவுகளைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தான்.
பள்ளிச் சான்றிதழின் அடிப்படையில், அரவிந்தன்தான் கிருஷ்ணசாமியின் வாரிசு என்று நீதிமன்றம் கூறுமா, அல்லது பள்ளிப் பதிவேடுகளில் அவனைப் பற்றிய விவரங்கள், பிறப்புச் சான்றிதழ் பெறாமலே முறையற்ற விதத்தில் பதியப்பட்டதால், அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுமா என்று தெரியாமல் இருந்த நிலையில், ஒரு வயதான பெண்மணி சாட்சியம் கூற வந்தாள்.
அரவிந்தனுக்கு ஆதரவாகச் சாட்சி சொன்ன ருக்மிணி என்ற அந்தப் பெண்மணி, தான் கிராமத்தில் பலருக்கும் பிரசவம் பார்த்திருப்பதாகவும், கிருஷ்ணசாமியின் மனைவி மரகதத்துக்கும் தான்தான் பிரசவம் பார்த்ததாகவும், அரவிந்தன் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைதான் என்றும் கூறினாள். அவள் அந்த கிராமத்தில் தான் பிரசவம் பார்த்த சிலரைக் குறிப்பிட்டு, அவர்களிடம் தன்னைப் பற்றி விசாரித்துக் கொள்ளலாம் என்றாள். அவர்களில் ஓரிருவர் தாங்களே முன்வந்து அவளை அடையாளம் காட்டினர்.
கிராமங்களில் சில சமயம் பிறப்புகள் பெற்றோரின் கவனக் குறைவால் பதிவு செய்யப்படாமல் போவது உண்டென்றும், அத்தகைய சந்தர்ப்பங்களில், பிறப்புச் சான்றிதழ் இல்லாமலேயே, பெற்றோர் கொடுக்கும் விவரங்களின் அடிப்படையில் பள்ளியில் மாணவர்களின் பிறப்பு விவரங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம்தான் என்றும் அவள் கூறினாள்.
ருக்மிணியின் வலுவான சாட்சியத்தால், நீதிமன்றம் அரவிந்தனை அவன் பெற்றோர்களின் ஒரே வாரிசாக அறிவித்தது.
தீர்ப்பு வந்ததும், சாமிநாதன் ருக்மிணியைச் சென்று பார்த்தார்.
"ரொம்ப நன்றிம்மா! உங்களோட சாட்சியத்தால்தான் அரவிந்தனுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சொத்து கிடைச்சது" என்றார் அவர்.
ருக்மிணி மௌனமாகத் தலையாட்டினாள்.
"ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்!" என்றார் சாமிநாதன்.
"சொல்லுங்க."
"கிருஷ்ணசாமியோட மனைவி மரகதத்துக்குப் பிறந்த குழந்தை செத்துப் பிறந்ததுன்னும், அரவிந்தன் அவங்க எடுத்து வளத்த குழந்தைன்னும் கிருஷ்ணசாமியே எங்கிட்ட சொல்லி இருக்கான். ஆனா, இது வேற யாருக்கும் தெரியாது. அரவிந்தனுக்கும் தெரியாது. சுந்தர் மட்டும் யார் மூலமோ இதைக் கேள்விப்பட்டுட்டு வழக்குப் போட்டிருக்கான். ஆனா, நீங்க பிரசவம் பாத்ததா சொல்றீங்களே!" என்றார் சாமிநாதன், தயக்கத்துடன்.
"நான்தான் பிரசவம் பாத்தேன். குழந்தை இறந்துதான் பிறந்தது! அதுக்கப்புறம் அவங்க அரவிந்தனைத் தத்தெடுத்து வளர்த்தாங்கங்கறதும் எனக்குத் தெரியும்" என்றாள் ருக்மிணி.
"ஆனா, அரவிந்தன் அவங்களுக்குப் பிறந்த குழந்தைன்னு நீங்க சொன்னீங்களே!"
"ஆமாம், சொன்னேன். பொய்தான்! ஏன் பொய் சொன்னேன்னு கேக்கறீங்களா? நீங்க சொன்னீங்களே, என் சாட்சியத்தால அந்தப் புள்ளைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சொத்து கிடைச்சதுன்னு, அந்த நியாயத்துக்காகத்தான்!" என்றாள் ருக்மிணி.
துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
குறள் 292பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
பொருள்:
குற்றமற்ற நன்மையைத் தருமானால், பொய்யும் உண்மைக்கு சமமான இடத்தில் இருப்பதாகக் கருதப்படலாம்.
No comments:
Post a Comment