"எப்படி இருக்கே, வள்ளி? குழந்தைங்க எப்படி இருக்காங்க" என்றான் சுப்பு.
"நீங்க இப்படி ஜெயில்ல இருக்கச்சே, நாங்க எப்படி சந்தோஷமா இருக்க முடியும்?" என்றாள் வள்ளி, விம்மல்களுக்கிடையே.
"கவலைப்படாதே! சீக்கிரமே ஜாமீன் கிடைச்சுடும்னு வக்கீல் சொல்லி இருக்காரு" என்றான் சுப்பு.
"ஒரு மாசமா ஜெயில்ல இருக்கீங்க. ஜாமீன் கிடைச்சு வெளியில வந்தா கூட, வழக்கு முடிஞ்சதும் தண்டனை கிடைச்சா மறுபடி ஜெயிலுக்குத்தானே போகணும்?" என்றாள் வள்ளி, சற்றுக் கோபத்துடன்.
சுப்பு மௌனமாக இருந்தான்.
"அப்படி என்ன கோபம், ஒரு ஆளை அரிவாளால வெட்டற அளவுக்கு?" என்றாள் வள்ளி, ஆற்றாமையுடன்.
''நம்ம வயலுக்கு வர வேண்டிய தண்ணியைத் தன் வயலுக்குத் திருப்பி விட்டான். சொல்லிப் பாத்தேன். கேக்கல. ஆத்திரத்தில, கையில இருந்த அரிவாளால அவன் தோள்ள ஒரு போடு போட்டேன். வெட்டுக் காயம்தானே பட்டது? கொலையா பண்ணிட்டேன்?" என்றான் சுப்பு.
"உங்க ஆத்திரத்துக்காக, நானும், நம்ப பிள்ளைங்களும் கஷ்டப்படணுமா?"
"உங்களுக்கென்ன கஷ்டம்? சாப்பாட்டுக்கு அரிசி இல்லையா? இல்ல, செலவுக்குப் பணம் இல்லையா? என்னை மாதிரி ஜெயில் களியா தின்னுக்கிட்டிருக்கீங்க?" என்றான் சுப்பு, எரிச்சலுடன்.
"சாப்பாடு மட்டும் கிடைச்சுட்டா போதுமா? என்னால வெளியில நடமாடவே முடியல. ரோட்டில நடந்து போனா, என்னைப் பாத்து மத்த பொம்பளைங்கள்ளாம் ஒதுங்கிப் போறாங்க. சில பேர் என் காது படவே, 'சுப்பு பெண்டாட்டி போறா. அவகிட்ட எதுவும் வம்பு வச்சுக்காதீங்க. அவ புருஷன் ஜெயிலிலேந்து வந்து வெட்டிப்புடுவான். ஜாக்கிரதை!'ன்னு கேலியாப் பேசிக்கிறாங்க. கோவிலுக்குப் போனாக் கூட, எனக்குத் தெரிஞ்சவங்க எங்கிட்ட பேசாம விலகிப் போறாங்க."
"அதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் சரியாயிடும்" என்றான் சுப்பு.
"எங்க சரியாப் போறது? நம்ப பையன் ஸ்கூலுக்கே போக மாட்டேங்கறான். அவனோட நண்பர்கள் கூட அவன்கிட்ட பேச மாட்டேங்கறாங்களாம். சில பேர் கேலியாப் பேசறாங்களாம். அவனால தாங்கிக்கவே முடியலியாம். பள்ளிக்கூடம் போறதையே நிறுத்திடறேம்மான்னு அழறான். நம்ப பொண்ணு - சின்னக் குழந்தை - ஏம்மா என்னை யாரும் விளையாட்டுக்கே சேத்துக்க மாட்டேங்கறாங்கன்னு எங்கிட்ட வந்து அழறா!" என்றாள் வள்ளி.
சுப்புவின் அடிவயிற்றிலிருந்து ஏதோ வந்து அவன் தொண்டையை அடைப்பது போலிருந்தது.
அறத்துப்பால்துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
குறள் 306சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
பொருள்:
தன்னுடன் இணைந்தவரை அழிக்கும் சினம் என்ற நெருப்பு, ஒருவருடைய சுற்றத்தாரையும், அவருக்குத் துணையாக இருப்பவர்களையும் கூட அழித்து விடும்.
No comments:
Post a Comment