
"கீழே விழுந்துட்டேன்" என்றார் பரமசிவம்.
"எங்கே விழுந்தீங்க? கீழே விழுந்தா, உள்ளங்கையில அடிபடுமா என்ன - அதுவும் சுண்டுவிரலுக்குக் கீழ, விளிம்பில?"
'எப்படி அடிபடும்னு மறுபடி விழுந்து காட்டட்டுமா?' என்று வெடிக்க நினைத்த பரமசிவம், அன்று தான் அலுவலகத்தில் செய்து கொண்ட தீர்மானத்தை நினைத்துக் கோபத்தை அடக்கிக் கொண்டு, "மாடிப்படியில் ஏறும்போது கால் தடுக்கி விழுந்துட்டேன். மேல் படியில கை செங்குத்தா இடிச்சுருக்கும் போல!" என்றார்.
"இனிமேலயாவது எச்சரிக்கையா இருங்க!" என்றாள் மீனாட்சி.
மனைவியின் இயல்பான வார்த்தைகளைக் கேட்டபோது, 'இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று தான் அன்று அலுவலகத்தில் நினைத்ததை அவை பிரதிபலிப்பதாக அவருக்குத் தோன்றியது.
பரமசிவம் எப்போதுமே கோபத்துக்குப் பெயர் போனவர். அலுவலகத்தின் கிளை நிர்வாகியான அவர் அறைக்குச் செல்லவே ஊழியர்கள் அஞ்சுவார்கள்.
அவர் யாரையாவது உள்ளே அழைத்தால், அவர்கள் கவலையுடனும், பயத்துடனும்தான் உள்ளே போவார்கள். அவர் யாரையாவது கடிந்து பேச மட்டும் செய்தால், 'அப்பா! இதோடு விட்டாரே!' என்று அவர்கள் நிம்மதி அடைவார்கள்.
ஏனெனில், பல சமயம் அவர் ஃபைலைத் தூக்கி ஊழியர் மீது எறிவார். ஏதாவது கடிதம் சரியாக எழுதப்படவில்லை என்றாலோ, அல்லது எழுத்துப் பிழைகளுடன் டைப் செய்யப்பட்டிருந்தாலோ, அந்தக் கடிதத்தைக் கசக்கி ஊழியர் முகத்தை நோக்கி வீசுவார்!
அன்று அவருடைய கோபம் மிக அதிகமாக இருந்தது. ஒரு ஊழியர் ஒரு முக்கியமான விஷயத்தை அவர் கவனத்துக்குக் கொண்டு வரத் தவறி விட்டார். இதன் காரணமாக, அவர் செய்யத் தவறிய விஷயம் குறித்துத் தலைமை அலுவலகத்திலிருந்து அவருக்கு ஒரு கண்டனக் கடிதம் வந்தது.
அன்று அவருடைய கோபம் மிக அதிகமாக இருந்தது. ஒரு ஊழியர் ஒரு முக்கியமான விஷயத்தை அவர் கவனத்துக்குக் கொண்டு வரத் தவறி விட்டார். இதன் காரணமாக, அவர் செய்யத் தவறிய விஷயம் குறித்துத் தலைமை அலுவலகத்திலிருந்து அவருக்கு ஒரு கண்டனக் கடிதம் வந்தது.
அந்தக் கடிதத்தைப் படித்ததும், அதிர்ச்சியும் கோபமும் அடைந்த பரமசிவம், ஊழியரை அழைத்து விசாரித்தார். ஊழியர் செய்த தவறு தெரிந்ததும், "நீங்கள் எல்லாம் எதுக்கு வேலைக்கு வரீங்க?" என்று கத்தியபடியே, தன்னை அறியாமலேயே மேஜையின் மீது ஓங்கிக் குத்தினார்.
வலுவான மரத்தில் செய்யப்பட அந்தப் பழைய மேஜையில் ஓங்கிக் குத்தியதால் அவர் கையில் அதிக வலி ஏற்பட்டதுடன், சற்று சொரசொரப்பாக இருந்த மேஜையின் மேற்பரப்பின் மீது அவர் கை அழுத்தமாக விழுந்ததால், சுண்டு விரலுக்குக் கீழே அவர் கையின் ஓரத்தில் சிராய்ப்பும் ஏற்பட்டது. அதைத்தான் மனைவியிடம் கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயம் என்று சொல்லி அவர் சமாளித்தார்!
"என்ன சார், இப்படி அடிபட்டுக்கிட்டீங்களே!" என்று அந்த ஊழியர் அவர் கையைப் பிடித்துப் பார்த்து விட்டு, வெளியே ஓடிப் போய், முதல் உதவிப்பெட்டியை எடுத்து வந்து, சிராய்த்த இடத்தைப் பஞ்சால் துடைத்துக் களிம்பு தடவி விட்டார்.
"தாங்க்ஸ்!" என்று பரமசிவம் பலவீனமான குரலில் அவருக்கு நன்றி கூறினார். ஊழியர் வெளியே சென்றதும், தன் கோபத்தின் விளைவை நினைத்துப் பரமசிவத்துக்கு அவமானமாக இருந்தது.
மேஜையின் மீது ஓங்கி அடித்தால் கை வலிக்கும், காயம் படக் கூடும் என்ற சிந்தனையைக் கூட எழ விடாமல் தன் கோபம் தன்னைச் செயல்பட வைத்து விட்டதே என்று நினைத்தபோது, அவருக்கு வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
இனி தனக்குக் கோபம் வரும்போதெல்லாம், இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்த்துத் தன் கோபத்தை அடக்கப் பழக வேண்டும் என்று அவர் அப்போது முடிவு செய்தார்.
அதனால்தான், உள்ளங்கையில் எப்படி அடிபடும் என்று மனைவி கேட்டபோது, 'விழுந்து காட்டட்டுமா?' என்று மனதில் உடனே எழுந்த கோபமான பதிலை அடக்கிக் கொண்டு, பொறுமையாக அவளுக்கு அவரால் பதில் சொல்ல முடிந்தது.
'பரவாயில்லை. கோபத்தின் விளைவாகக் கையில் காயம் ஏற்பட்டாலும், அதைப் பயன்படுத்திக் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிகிறதே!' என்று நினைத்து ஆறுதல் அடைந்தார் பரமசிவம்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
குறள் 307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
பொருள்:
நிலத்தைக் கையால் அறைந்தவன் வலியிலிருந்து தப்ப முடியாதது போல், கோபத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவன் கேடு அடைவதிலிருந்து தப்ப முடியாது.
No comments:
Post a Comment