ஆளும் கட்சியின் தேர்தல் முறையீடுகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியதற்காக முத்துசாமி சிறையில் அடைக்கப்பட்டு இருபத்தைந்து நாட்கள் ஆகி விட்டன.
தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆளும் கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக, எதிர்க்கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
புதிய அரசின் உத்தரவுக்கேற்ப, தேர்தல் முறையீடுகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
முத்துசாமியைச் சிறையிலிருந்து விடுதலை செய்த சப் இன்ஸ்பெக்டர் பசுபதி, தயக்கத்துடன் அவரைப் பார்த்து, "ஐயா! உங்ககிட்ட நான் கடுமையா நடந்துக்கிட்டிருந்தா, என்னை மன்னிச்சுடுங்க!" என்றார்.
"நடந்துக்கிட்டிருந்தாலா? அப்ப நீங்க எங்கிட்ட கடுமையா நடந்துக்கலையா?" என்றார் முத்துசாமி, சிரித்தபடி.
"ஐயா! உங்களுக்குத் தெரியாதது இல்ல. அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்க எல்லாரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவா நடந்துக்க வேண்டிய கட்டாயத்திலதானே இருக்கோம்?" என்றார் பசுபதி.
"அப்படியா? அமைதியாப் போராடின என்னை வன்முறையில் ஈடுபட்டதா, பொய்யா வழக்குப் போட்டுக் கைது செஞ்சீங்க. என் வயசுக்குக் கூட மரியாதை கொடுக்காம என்னை வாடா போடான்னு பேசினதோட இல்லாம, தகாத வார்த்தைகளால் திட்டினீங்க. தினம் சிறைக்குள்ள வந்து என்னை மிருகத்தனமா அடிச்சுட்டுப் போனீங்க. இப்படியெல்லாம் செய்யச் சொல்லி உங்ககிட்ட அமைச்சர்களோ, ஆளுங்கட்சிக்காரங்களோ சொன்னாங்களா என்ன?"
"சார்! ஒண்ணு ரெண்டு நாள் ஏதோ கோபத்தில் உங்களை அடிச்சிருக்கலாம்..."
"ஒண்ணு ரெண்டு நாளா? இருங்க!" என்ற முத்துசாமி, தன் ஜிப்பா பையில் கைவிட்டு ஒரு நோட்டை எடுத்தார்.
"என்னைப் பாக்க வந்த என் மனைவிகிட்ட ஒரு நோட்டும் பேனாவும் கொண்டு வரச் சொன்னேன். அவளும் கொண்டு வந்து கொடுத்தா. நீங்க அதுக்கு ஆட்சேபணை சொல்லல. அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லணும்! என்னைக் கைது செஞ்ச நாள்ளேந்து தினமும் நடந்ததை விவரமா இந்த நோட்டில எழுதி வச்சிருக்கேன். ஒவ்வொரு நாளும் நீங்க எவ்வளவு நேரம் என்னை அடிச்சீங்க, என்னென்ன வாத்தைகள் எல்லாம் சொல்லித் திட்டினீங்கன்னு எல்லாம் தேதி, நேரம் போட்டு எழுதி வச்சிருக்கேன்!" என்றார் முத்துசாமி.
"சார்!"
"இப்ப எங்க கட்சி ஆட்சிக்கு வந்திருக்கு. இந்த டயரியை என் கட்சிக்காரங்க யார் மூலமாவது முதல்வருக்கே என்னால அனுப்பி வைக்க முடியும். இதைப் படிச்சுட்டு அவர் என்ன நடவடிக்கை எடுப்பாரோ எனக்குத் தெரியாது. இல்லாட்டா, ஏதாவது ஒரு பத்திரிகைக்கு இதை அனுப்பினா கூட, 'ஒரு கைதியின் டயரி' ன்னு தொடரா வெளியிடுவாங்க!"
"வேண்டாம் சார்! நான் செஞ்சது தப்புதான்!"
"ஆனா, நான் இதை யாருக்கும் அனுப்பப் போறதில்ல. ஏன், இதை எடுத்துக்கிட்டுக் கூடப் போகப் போறதில்ல" என்ற முத்துசாமி, நோட்டுப் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து, அருகிலிருந்த குப்பைக் கூடையில் போட்டார்.
"அப்புறம் எதுக்கு இதை எழுதினேன்னு யோசிக்கிறீங்களா? நீங்க என்னைக் கண்டபடி பேசி, அடிச்சுக் கொடுமைப்படுத்தினப்ப, எனக்கு உங்க மேல ஆத்திரம் வரது இயல்புதானே? ஆனா, அந்த ஆத்திரம் என் மனசில இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தான், என் கோபத்தையெல்லாம் கொட்டி இதை எழுதினேன். நல்லவேளை, இப்படி ஒரு வடிகால் இருந்ததால, என் கோபமெல்லாம் அப்பப்ப வெளியேறிடுச்சு. இப்ப எனக்கு உங்க மேல கோபம் இல்ல. நீங்க செஞ்சது தப்புதான். இனிமே இப்படிப்பட்ட தப்பைச் செய்யாம இருங்க. நான் வரேன்."
முத்துசாமி கையை வீசியபடி ஸ்டேஷனை விட்டு வெளியேறினார்.
அறத்துப்பால்துறவறவியல்
அதிகாரம் 31
வெகுளாமை
குறள் 308இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
பொருள்:
நெருப்பில் வாட்டி எடுப்பது போல் வேதனை தரும் அளவுக்கு ஒருவர் நமக்குத் துன்பம் விளைவித்தாலும், அவர் மீது கோபப்படாமல் இருப்பது நமக்குக் கைகூடுமானால் அது மிக நன்று.
No comments:
Post a Comment