About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, January 12, 2020

309. வங்கியில் ஒரு விவாதம்!

சுந்தரம் என்ட்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் அதிபர் சோமசுந்தரம் தணிக்கையாளர் சாரங்கனைத் தொலைபேசியில் அழைத்து, "சார்! பாங்க்ல புதுசா ஒரு பிராஞ்ச்  மானேஜர் வந்திருக்காங்க. அவங்க எனக்கு ஃபோன் பண்ணி நம்ம கம்பெனியோட அக்கவுண்ட் திருப்திகரமா இல்லேன்னு சொல்லி ரொம்பக் கோபமாப் பேசினாங்க. அது பத்திப் பேச நாளைக்கு என்னை நேரில வரச் சொல்லி இருக்காங்க. நீங்களும் என்னோட வந்தீங்கன்னா நல்லா இருக்கும்" என்றார்.

"வரேன்" என்றார் சாரங்கன்.

சோமசுந்தரமும், சாரங்கனும் வங்கியின் கிளை மேலாளர் கவிதாவின் அறைக்குள் அழைக்கப்பட்டனர். சுந்தரம் என்ட்டர்ப்ரைசஸ் அக்கவுண்ட்டை நிர்வகிக்கும் வங்கி அதிகாரி சுதாகரும் உள்ளே அமர்ந்திருந்தார்.

அவர்கள் உள்ளே சென்று அமர்ந்ததுமே கிளை மேலாளர் கவிதா பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டார்.

"போன வருஷம் உங்க விற்பனை ரொம்பக் குறைஞ்சு போயிருக்கு. உங்க வங்கிக் கணக்கில பண வரவு ரொம்பக் கம்மியா இருக்கு. நீங்க கட்ட வேண்டிய காலாண்டு வட்டியை நேரத்துக்குக் கட்டறதில்ல. இப்ப உங்க ஒர்க்கிங் காப்பிடல் லோனைப் புதுப்பிக்க வேண்டிய நேரம். உங்களுக்குக் கொடுத்திருக்கிற அம்பது லட்சம் ரூபாய் லிமிட்டை முப்பது லட்சமாக் குறைக்கப் போறோம்" என்றார் கவிதா. 

சோமசுந்தரம் கோபமாக ஏதோ சொல்ல முயல, அவர் கையை அழுத்தி அவரைப் பேச வேண்டாம் என்று சைகை செய்த சாரங்கன், "மேடம்! நீங்க சொல்றதெல்லாம் சரிதான். உங்க பார்வையில எங்க லிமிட்டைக் குறைக்கணும்னு நீங்க நினைக்கிறதும் சரிதான். ஆனா எங்களோட பிரச்னையை நான் விளக்கமா சொல்றேன். நீங்க கொஞ்சம் அதைக் கேக்கணும்!" என்றார் பணிவான குரலில். 

"நீங்க சொல்றதைக் கேக்கறத்துக்காக நான் உங்களை வரச் சொல்லல. எங்க முடிவை உங்களுக்கு சொல்றதுக்காகத்தான் வரச் சொன்னேன்!" என்றார் கவிதா அலட்சியமாக.

சோமசுந்தரம் மீண்டும் எதோ சொல்லத் துவங்க, சாரங்கன் மீண்டும் அவர் கையை அழுத்தினார்.

"மேடம். இந்த கம்பெனியோட ஆடிட்டர்ங்கற முறையில நீங்க சுட்டிக் காட்டின குறைகளுக்கு பதில் சொல்ற கடமை எனக்கு இருக்கு. அதைக் கேட்டுட்டு நீங்க முடிவு செய்யுங்க. எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் கொடுக்க முடியுமா?" என்றார் சாரங்கன்.

"எனக்கு நிறைய வேலை இருக்கு" என்று முணுமுணுத்த கவிதா, தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டு, "சீக்கிரமா சொல்லுங்க" என்றார்.

மோட்டார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் என்ட்டர்ப்ரைசஸ் மோட்டார் வாகனத் தொழிலில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு விற்பனை குறைந்திருப்பதன் காரணத்தை சாரங்கன் விளக்கினார்.

"பெரிய ஆட்டோமொபைல் கம்பெனிகள்கிட்டேந்து எங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாக வந்ததாலதான் காலாண்டு வட்டித்தொகையைக் கட்டறதில தாமதம் ஏற்பட்டுச்சு. ஆனா நாங்க கட்ட வேண்டிய வட்டித்தொகையைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கோம். இப்ப எங்க லிமிட்டைக் குறைச்சீங்கன்னா எங்களுக்கு கஷ்டமா இருக்கும்..." என்றார் சாரங்கன்.

"நீங்க அவங்க ஆடிட்டர்தானே! அவங்க பிரச்னையைத்தான் பேசுவீங்க. அதையெல்லாம் நான் ஏன் கேட்டுக்கணும்?" என்றார். கவிதா இடைமறித்து.  

"அதோட நீங்க அப்படிச் செஞ்சா, எங்களால உடனே 20 லட்ச ரூபாய் கட்டி எங்க கடன் தொகையைக் குறைக்க முடியாது. அதனால எங்க அக்கவுண்ட் வராக்கடன் நிறுவனங்கள் பட்டியல்ல சேந்துடும். அதனால பாங்குக்கும்தான் பிரச்னை!" என்றார் சாரங்கன், கவிதாவின் குறுக்கீட்டைப் பொருட்படுத்தாமல்.

"என்ன பயமுறுத்தறீங்களா? எங்க பிரச்னையை நாங்க பாத்துக்கறோம்!" என்று சீறினார் கவிதா.

"ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க. நிலைமை இம்ப்ரூவ் ஆகுதான்னு பாக்கறோம். இல்லாட்டா நாங்களே படிப்படியா லிமிட்டைக் குறைச்சு ஒரு வருஷத்துக்குள்ள 30 லட்சத்துக்குக் கொண்டு வந்துடுவோம்" என்றார் சாரங்கன்  

கவிதா பதில் சொல்வதற்குள், வங்கி அதிகாரி சுதாகர், "மேடம்! ஒரு நிமிஷம்" என்றார்.

கவிதா அவரிடம் திரும்ப, அவர் மெல்லிய குரலில் ஏதோ சொன்னார். 

கவிதா சாரங்கனிடம் திரும்பி, "அஞ்சு நிமிஷம் வெளியில வெயிட் பண்ணுங்க. நான் டிஸ்கஸ் பண்ணிட்டு உங்களைக் கூப்பிடறேன்" என்றார்.

வெளியே வந்ததும் சோமசுந்தரம் சாரங்கனிடம், "என்ன சார்  இது? அந்த அம்மா உங்களைக் கொஞ்சம் கூட மதிக்காம பேசறாங்க. நீங்க பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கீங்க. நான் பதில் சொல்ல முயற்சி பண்ணினப்ப என்னையும் தடுத்துட்டீங்க!" என்றார்.

"பாங்க் பார்வையில அவங்க பேசறாங்க!" என்றார் சாரங்கன்.

"அதுக்காக இப்படியா? நீங்க வயசில பெரியவர். ஒரு சீனியர் ஆடிட்டர். உங்க வயசுக்கும், அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்காம, ஏதோ நீங்க பெரிய குத்தம் பண்ணிட்ட மாதிரி உங்க கிட்ட பேசறாங்க. நீங்க ஏதாவது சொன்னா அதை முழுசாக் கேக்காம குறுக்கக் குறுக்கப் பேசறாங்க. நீங்க அவங்களுக்கு சூடா பதில் சொல்லி இருக்கலாம்!" 

"நமக்குக் காரியம் முக்கியம், சோமசுந்தரம். நானோ நீங்களோ பதிலுக்கு அவங்க கிட்ட கோபமா பேசி இருந்தா, பிரச்னை தீராம நாம பாதியில எழுந்து வர வேண்டி இருந்திருக்கும்."

"இப்ப மட்டும் பிரச்னை தீர்ந்திடுச்சா என்ன?" என்று சோமசுந்தரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தலைமை மேலாளரின் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சுதாகர், "சார்! நீங்க சொன்னதுக்கு மேடம் ஒத்துக்கிட்டாங்க. உங்க லிமிட்டைப் புதுப்பிச்சு இன்னிக்கே ஆர்டர் அனுப்பிடறேன்!" என்றார்.

துறவறவியல் 
அதிகாரம் 31      
வெகுளாமை   
குறள் 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

பொருள்:
மனதில் கோபம் இல்லாமல் இருப்பவரால் தான் விரும்பிய நன்மைகளைப் பெற முடியும்.
பொருட்பால்                                                                             காமத்துப்பால்















No comments:

Post a Comment