"என்னங்க, எக்ஸ்சேஞ்ஞ் ஆஃபர்ல இந்த சங்கிலியைக் கொடுத்துட்டுப் புதுசா ஒரு நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்!" என்றாள் கார்த்திகா.
அவள் கணவன் ராஜா எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.
"நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலியே நீங்க?"
"நீ எங்கிட்ட எதுவும் கேக்கலியே! நெக்லஸ் வாங்கிக்கப் போறேன்னு சொன்னே. இதில நான் பதில் சொல்றதுக்கு என்ன இருக்கு? 'தகவல் சொன்னதுக்கு நன்றி'ன்னு வேணும்னா சொல்லலாம்!" என்று சொல்லி விட்டு, மனைவி கோபித்துக் கொள்ளப் போகிறாளே என்ற பயத்தில், விளையாட்டுக்குச் சொன்னதாகக் காட்டிக் கொள்வது போல், உடனே சிரித்தான் ராஜா.
"எனக்குன்னு ஏதாவது வாங்கிக்கிட்டா உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். நீங்களா எனக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க மாட்டீங்க, நானா வாங்கிக்கிட்டாலும் உங்களுக்குப் பிடிக்காது" என்றாள் கார்த்திகா கோபத்துடன்.
'கோபித்துக் கொண்டு 'சரி வேண்டாம்' என்று மட்டும் சொல்ல மாட்டாயே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ராஜா, "இங்க பாரு, கார்த்திகா! நீ எதை வாங்கினாலும் நான் வேண்டாம்னு தடுத்ததில்ல. ஆனா நீ நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படற. தேவையில்லாம குக்கர், மிக்ஸி மாதிரி பொருட்களை அடிக்கடி மாத்தற. வாரத்தில ரெண்டு நாள் மாட்னி ஷோ போற. நமக்கு வசதி இருக்குதான். ஆனா, நிறைய விஷயங்களுக்கு ஆசைப்படறது உனக்கே நல்லது இல்லைன்னு எனக்குத் தோணுது. அப்புறம் உன் இஷ்டம்" என்று சொல்லி விட்டு ,அவள் பதில் சொல்வதற்கு முன் அங்கிருந்து வெளியேறி விட்டான் ராஜா.
பல பொருட்களை வாங்குவது, வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது போன்ற கார்த்திகாவின் பழக்கம் தொடர்ந்தது.
அவள் மகனும், மகளும் கூட, "ஏம்மா, சோஃபா, டிவின்னு எல்லாத்தையும் அடிக்கடி மாத்திக்கிட்டே இருக்கே? நாங்களே அந்த அளவுக்குப் புதுசா வர பொருட்களை வாங்க ஆசைப்படறதில்லையே!" என்று அவளிடம் பலமுறை சொன்னார்கள்.
"உங்க சந்தோஷத்துக்காகத்தான் நான் எதையுமே வாங்கறேன். அதைப் புரிஞ்சுக்காம, நீங்களும் உங்கப்பா சொல்ற மாதிரியே சொல்றீங்களே!" என்று குறைப்பட்டுக் கொண்டாள் கார்த்திகா.
சில வருடங்களுக்குப் பிறகு, பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தாள் கார்த்திகா. சினிமாவுக்குப் போவதையும் விட்டு விட்டாள்.
அவளுடைய மாற்றத்துக்குக் காரணம் ராஜாவுக்குப் புரியவில்லை. யாராவது ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொன்னதைக் கேட்டு மனம் மாறி இருப்பளோ என்று நினைத்தான்.
ஒருமுறை, ராஜாவே அவளிடம் புதிதாக வந்திருக்கும் ஒரு விலை உயர்ந்த கைபேசியை வாங்கிக் கொள்ளச் சொன்னபோது, அவள் வேண்டாமென்று சொல்லி விட்டாள். "இந்த ஃபோன்லேயேதான் எல்லாம் இருக்கே! இதுக்கு மேல என்ன வேணும்?" என்றாள் அவள்.
"ரொம்ப ஆச்சரியமா இருக்கே! எப்படி இப்படித் தலைகீழா மாறின?"
"நீங்க சொன்ன மாதிரி, எல்லாத்துக்கும் ஆசைப்படற மனநிலைதான் எனக்கு இருந்தது. ஆனா, அப்பல்லாம் நான் சந்தோஷமாவே இல்லை. புதுசா ஏதாவது வாங்கினா கூட, அதை சந்தோஷமா அனுபவிக்காம வேற எதுக்காவது ஆசைப்படறது, அதைப் பத்தி நினைக்கறதுன்னு எப்பவும் மனசு அலைபாஞ்சுக்கிட்டே இருந்தது.
"சினிமா பாக்கறது, கச்சேரிகளுக்குப் போறது, லேடீஸ் கிளப் நிகழ்ச்சிகளுக்குப் போறது எல்லாம் கூட அப்படித்தான். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா யோசிச்சுப் பாத்தேன். எங்கிட்ட ஏதோ குறை இருக்கற மாதிரி தெரிஞ்சுது. 'அத்தனைக்கும் ஆசைப்படு'ன்னு ஒரு சாமியார் சொல்லுவாரே, அது மாதிரிதான் நான் உண்மையிலேயே இருக்கேனோன்னு தோணிச்சு!
"எனக்கு வந்த ஆசைகளையெல்லாம் அலட்சியப்படுத்த ஆரம்பிச்சேன். அதுக்கப்பறம் எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்க ஆரம்பச்சுது. நம்ம பிள்ளைங்களோட படிப்பு, அவங்களோட, தேவைகள், உங்களோட தேவைகள் எல்லாம் என் கவனத்துக்கு வர ஆரம்பச்சுது. அப்புறம் செய்ய வேண்டிய காரியங்கள்ள கவனம் செலுத்திக்கிட்டு இருக்கறப்ப, ஒரு அலாதியான திருப்தியும் சந்தோஷமும் கிடைக்குது. இப்பல்லாம் நான் முன்னை விட ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்றாள் கார்த்திகா.
ராஜா அவளை வியப்புடன் பார்த்தான்.
குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
No comments:
Post a Comment