"நமக்கென்ன குறைச்சல்? அரசாங்க வேலை. நாம குடும்பம் நடத்தப் போதுமான அளவுக்கு சம்பளம். அளவா, அருமையா ரெண்டு குழந்தைகள். நாம சந்தோஷமாத்தானே இருக்கோம்?" என்றான் பரசு, தன் மனைவி பிரேமாவிடம்.
அவள் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல் மௌனமாகத் தலையசைத்தாள்.
ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவள் மனநிலை சற்று மாறி விட்டது.
"நம்ம பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேக்கணுங்க" என்றாள் ஒரு நாள்.
"ஏன், இந்தப் பள்ளிக்கூடம் நல்லாத்தானே இருக்கு? ரெண்டு பேரும் நல்லாத்தானே படிக்கறாங்க?" என்றான் பரசு.
"படிக்கிறாங்க. ஆனா, இப்பல்லாம் படிப்பு மட்டும் இருந்தாப் போதாதுங்க. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்னு சொல்றாங்களே, அதெல்லாமும் இருந்தாதான், எதிர்காலத்தில நம்ம பிள்ளைங்களால மத்தவங்களோட போட்டி போட்டு முன்னுக்கு வர முடியும். சில பள்ளிக்கூடங்கள்ள ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கெல்லாம் கூட மாணவர்களை ஆறாம் வகுப்பலேந்தே தயார் செய்யறாங்களாம்!" என்றாள் பிரேமா.
"சரி. விசாரிச்சுப் பாக்கறேன்" என்றான் பரசு.
சில நாட்கள் கழித்து, "நீ சொன்ன மாதிரி ரெண்டு மூணு பள்ளிக்கூடங்கள்ள விசாரிச்சுப் பாத்தேன், பிரேமா! அவங்க வாங்கற கட்டணம் நமக்குக் கட்டுபடியாகாது" என்றன் பரசு.
"அப்படியா?" என்றாள் பிரேமா, ஏமாற்றத்துடன்.
சில நாட்களுக்குப் பிறகு, "நீ சொன்ன மாதிரி நம்ப பிள்ளைங்களை வேற பள்ளிக்கூடத்தில சேத்துடலாம்!" என்றான் பரசு, பிரேமாவிடம்.
"எப்படிங்க? அவங்க வாங்கற ஃபீஸ் நமக்குக் கட்டுப்படி ஆகாதுன்னு சொன்னீங்களே!" என்றாள் பிரேமா, மகிழ்ச்சியுடனும், வியப்புடனும்.
லஞ்சம் புழங்கும் அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கக் கூடாது என்று நேர்மையுடன் செயல்பட்டு வந்த சிறுபான்மையருள் ஒருவனாக இருந்த தான், இப்போது பணத் தேவைக்காக மனம் மாறி லஞ்சம் வாங்கும் பெரும்பான்மையினர் கட்சியில் இணைந்து விட்டதை மனைவியிடம் தயக்கத்துடன் தெரிவித்தான் பரசு.
பிரேமா எதுவும் சொல்லவில்லை.
பரசுவிடம் பணப் புழக்கம் அதிகமானதும் அவர்கள் வீட்டில் பெரிய திரை எல்.ஈ.டி டிவி முதலிய பல புதிய வசதிகளும் இடம் பெறத் தொடங்கின.
"என்னங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் பிரேமா.
"நான் செய்யறது சரியான்னே தெரியல. ஒரு வருஷம் முன்னால வரைக்கும் சந்தோஷமா, நிம்மதியா இருந்தேன். இப்ப கொஞ்ச நாளா ஒரே மன உளைச்சல்!"
"ஏன், ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்னையா?"
"ஆமாம். ஆனா, எல்லாம் நானா வர வழைச்சுக்கிட்டதுதான். ஆஃபீஸ்ல நான் ஒரு சின்ன அதிகாரிதான்னா கூட எனக்கு ஒரு மதிப்பு, மரியாதை எல்லாம் இருந்தது. இப்ப எல்லாம் போயிடுச்சு. மதிப்பு, மரியாதையை விடு, அது முக்கியமில்ல.
"ஆனா இப்பல்லாம், விதிகளுக்கு மீறி சில விஷயங்களைச் செய்யச் சொல்லி எனக்கு அழுத்தம் கொடுக்கறாங்க. தங்களுக்கு வேலை நடக்க வேண்டியவங்க, 'அதான். பணம் வாங்கறியே, அப்புறம் என்ன? அட்ஜஸ்ட் பண்ணி செஞ்சு கொடுக்க வேண்டியதுதானே, ரூல்ஸ் பத்தி எல்லாம் ஏன் பேசறே?' ன்னு உரிமையோட கேக்கறாங்க. மேலதிகாரிகள் அவங்க விருப்பப்படி நான் நடந்துக்கணும்னு எதிர்பாக்கறாங்க. 'நீ ஒண்ணும் யோக்கியன் இல்லையே!' என்கிற மாதிரி பேசறீங்க.
"எனக்கு வேற, எப்ப மாட்டிக்கப் போறோமோன்னு எப்பவும் ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கு. முன்ன மாதிரி இருந்திருந்தா, நிம்மதியா, சந்தோஷமா இருந்திருக்கலாமேன்னு தோணுது,"
"எல்லாத்தையும் விட்டுடுங்க. பழையபடியே இருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, குடும்பத்துக்கும் நல்லது" என்றாள் பிரேமா.
"என்ன சொல்ற, பிரேமா? பிள்ளைங்க படிப்பு என்ன ஆறது? அதுக்காகத்தானே இப்படியெல்லாம் செய்யறேன்!" என்றான் பரசு, குழப்பத்துடன்.
"நானே உங்ககிட்ட சொல்லணும்னு இருந்தேன். பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் புதுப் பள்ளிக்கூடம் பிடிக்கவே இல்லையாம். 'என்னம்மா இது, எவ்வளவுதான் கத்துக்கறது? நாள் முழுக்க வாட்டி எடுக்கறாங்க. ஏகப்பட்ட ஹோம் ஒர்க் வேற. தூங்கக் கூட நேரமில்ல. வீட்டில பெரிய டிவி வாங்கி இருக்கீங்க. அதை அரை மணி நேரம் கூடப் பாக்க முடியல. சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ், ஞாயித்துக்கிழமை நாள் பூரா செய்ய வேண்டிய அளவுக்கு ஹோம் ஒர்க். எங்களால முடியல அம்மா. இந்த வருஷம் முடியப் போகுது, அடுத்த வருஷம் எங்களைப் பழைய ஸ்கூலிலேயே சேத்துடுங்க. நாங்க நல்லாப் படிக்கறோம்'னு எங்கிட்ட புலம்பறாங்க.
"அதிகமா ஆசைப்பட்டது என்னோட தப்புதான். அவங்களைப் பழைய பள்ளிக்கூடத்திலேயே சேத்துடலாம். அவங்களும் சந்தோஷமா இருப்பாங்க. நீங்களும் பழையபடியே நேர்மையானவரா சந்தோஷமா, நிம்மதியா இருக்கலாம்" என்றாள் பிரேமா.
பரசுவுக்கு ஏதோ லாட்டரியில் பெரிய பரிசு கிடைத்து விட்டதுபோல் இருந்தது.
குறள் 368
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
No comments:
Post a Comment