About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, November 7, 2017

105. ஆவடியில் ஒரு வேலை

ராமன் பஸ்ஸுக்காக அந்த பஸ் நிறுத்ததில் காத்திருந்தபோது, பஸ் நிறுத்தத்தைத் தாண்டிச் சில அடிகள் தள்ளி அந்தக் கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய இளைஞன் அவர் அருகில் வந்து, "என்ன சார் என்னைத் தெரியுதா?" என்றான்.

"ஓ! ரமணியா? எப்படி இருக்கே? அம்மா எப்படி இருக்காங்க?" என்றார் ராமன்.

"எல்லாரும் நல்லா இருக்கோம் சார், உங்க புண்ணியத்தில. வீட்டில ஆன்ட்டி, ரவி, கமலி எல்லாரும் சவுக்கியம்தானே? எங்கே சார் போய்க்கிட்டிருக்கீங்க?"

"ஆவடி வரைக்கும் போகணும்ப்பா! அதான் பஸ்ஸுக்கு நின்னுக்கிட்டிருக்கேன்."    

"நானும் அங்கதான் சார் போறேன். வாங்க கார்லேயே போயிடலாம்."

"இல்லப்பா. நீ போ! உனக்கு எதுக்கு சிரமம்? நான் பஸ்லேயே போய்க்கிறேன்."

"எனக்கென்ன சார் சிரமம்? காருக்குத்தான் சிரமம்! நானும் ஆவடிக்குத்தானே போறேன்? நீங்களும் வந்தா எனக்குப் பேச்சுத் துணையா இருக்கும்."

ராமன் கொஞ்சம் தயங்கி விட்டுக் காரில் ஏறிக் கொண்டார்.

சுமார் எட்டு வருடங்களுக்கு முன் ரமணியின் தந்தை திடீரென்று இறந்து விட்டார். அப்போது ரமணிக்கு வயது 18 இருக்கும். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். குடும்பத்தில் அவனும் அவன் அம்மாவும் மட்டும்தான்.

உலகம் தெரியாத அவன் அம்மாவும், அனுபவம் இல்லாத அவனும் செயலிழந்து நின்றபோது, அவர்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்த ராமன்தான் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்தார்.

அவன் தந்தையின் காரியங்கள் முடிந்த பிறகு கூட ரமணிக்கும் அவன் அம்மாவுக்கும் மேற்கொண்டு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றிச் சரியான விவரம் தெரியவில்லை. அவர்கள் உறவினர்கள் யாரும் அருகில் வசிக்கவில்லை. அவர்களுடன் சில நாட்கள் தங்கி அவர்களுக்கு உதவி செய்யும் நிலையிலும் யாரும் இல்லை.

அப்போதும் ராமன்தான் உதவிக்கு வந்தார். ராமன் அவர்கள்  குடும்பத்துக்கு நெருக்கமானவர்  இல்லை. ரமணியின் தந்தையிடம் கூட ஓரிரு முறைகள்தான் பேசியிருப்பார்.

ஆயினும், ரமணி மற்றும் அவன் தாயாரின் நிலையை உணர்ந்து கொண்டு, ஒரு நெருங்கிய நண்பர் போல் அவர்களுக்கு உதவினார் அவர்.

ரமணியுடன் அவன் தந்தையின் அலுவலகத்துக்குச் சென்று அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றைப் பெற்றுத் தந்தது, இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளுக்கு விண்ணப்பித்து அவர்களுக்குச் சேர வேண்டிய இன்ஷ்யூரன்ஸ் தொகையைப் பெற்றுத் தந்தது, அவன் தந்தையின் பெயர்களிலிருந்த வங்கிக் கணக்குகளை அவன் தாயின் பெயருக்கு மாற்றித் தந்தது என்று கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ரமணிக்கும் அவன் தாயாருக்கும் உதவியாக இருந்தார்.

ரமணியுடன் அவன் தந்தை வேலை செய்த அலுவலகம், இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் என்று பல இடங்களுக்குப் பலமுறை போயிருப்பார், ஓரிரு நாட்கள் அவருடைய அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டுக் கூட இவர்கள் வேலையைக் கவனித்திருக்கிறார்.

அவர் செய்த உதவிக்கெல்லாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று ரமணியும் அவன் தாயாரும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.

சில மாதங்கள் கழித்து ரமணியும் அவன் அம்மாவும் ரமணியின் கல்லூரி இருந்த இடத்துக்கு அருகிலேயே வீடு பார்த்துக் கொண்டு போய் விட்டார்கள். அவ்வப்போது ராமனுக்கு ஃபோன் செய்து நலம் விசாரிப்பான் ரமணி. காலப்போக்கில் அதுவும் குறைந்து விட்டது.

ந்த எட்டு வருடங்களில் ரமணி படித்து முடித்து, நல்ல வேலையில் சேர்ந்து காரும் வாங்கி விட்டான். தற்செயலாக இந்தச் சந்திப்பு அன்று நிகழ்ந்தது.

காரில் போகும்போது இருவரும் பழைய நாட்களைப் பற்றியும், இருவரது குடும்ப நடப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தனர்.

கார் ஆவடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ரமணியின் கைபேசி அடித்தது. எடுத்துப் பேசினான்.

"...ஆமாம் சார். பதினோரு மணிக்கு வரதாச் சொன்னேன். வேற ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு. ரெண்டு மணிக்குள்ள வந்துடறேன். சாரி சார்..." என்றான்.

ராமன் அவனைத் திரும்பிப் பார்த்தார். "வேறெங்கேயோ போக வேண்டியவன் எனக்காக இந்தப் பக்கம் வந்திருக்கியா?" என்றார்.

ரமணி பதில் சொல்லாமல் இருந்தான்.

"நீ எங்கே போகணும்?"

"மவுண்ட் ரோட்."

"மவுண்ட் ரோடா? ஆவடிப் பக்கம் போறேன்னு சொன்னியே? எதிர்ப் பக்கமாச்சே இது? எனக்காகவா?"

"ஆமாம் சார்!"

"என்னப்பா இது? முப்பது நாப்பது கிலோ மீட்டர் தூரம். மூணு மணி நேரம் டைம் வேஸ்ட். உன்னோட வேலையைக் கெடுத்துக்கிட்டு, எதுக்கு இதெல்லாம்?"

"சார்! நீங்க என் குடும்பத்துக்கு செஞ்ச உதவிக்கு பதில் உதவி செய்யறதுங்கறது நடக்காத காரியம். ஆனா இன்னிக்கு உங்களுக்கு ஒரு சின்ன உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சது. அதை எப்படி சார் நான் நழுவ விட முடியும்?"

ராமன் அவன் கையைப் பிடித்து மெதுவாக அழுத்தினார்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பொருள்:  
ஒரு உதவிக்குச் செய்யப்படும் பதில் உதவி அந்த உதவியின் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில்லை, உதவி பெற்றவரின் (பதில் உதவி செய்பவரின்) பண்பின் அளவுக்கு  அது இருக்கும்.

(குறிப்பு: 'ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், உதவி பெற்றவரின் பண்பைப் பொறுத்து அவர் செய்யும் பதில் உதவி பெரிதாக அமையலாம் என்றும் இந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.)


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்













.



No comments:

Post a Comment