About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, November 13, 2017

108. பதவி உயர்வு கிடைக்கவில்லை!

"என்னப்பா இப்பிடி ஆயிடுச்சு?" என்றான் ராஜ்.

"என்ன செய்யறது? நாம எதிர்பார்த்ததெல்லாம் நடக்குமா என்ன?" என்றான் பிருத்வி.

"உனக்கு இந்த ப்ரொமோஷன் கண்டிப்பாக் கிடைச்சிருக்கணும். ஜி எம்மைப் பார்த்துப் பேசு."

"பேசறதுக்கு என்ன இருக்கு? முடிஞ்சு போன விஷயம்."

"ஜி எம் உன் பேரை சிபாரிசு பண்ணியிருப்பாரு இல்ல?"

"பண்ணாம என்ன? ஆரம்பத்திலிருந்தே இந்த கம்பெனியில என்னை சப்போர்ட் பண்ணி இருக்காரு அவரு. இதுவரை என்னோட முன்னேற்றத்துக்கெல்லாம் அவர்தான் முக்கியக் காரணம். இது எம் டியோட முடிவு. அவரோட அபிப்பிராயம் வேற மாதிரி இருந்திருக்கலாம்."

"பொதுவா ஜி எம்மோட சிபாரிசின்படிதானே எம் டி நடந்துப்பாரு?" என்றான் ராஜ்.

பிருத்வி பதில் சொல்லவில்லை.

ன்று பிற்பகல் ஜி எம்மைப் பார்க்கும் சந்தர்ப்பம் பிருத்விக்குக் கிடைத்தது. பதவி உயர்வுப் பட்டியல் பற்றியோ அவன் பெயர் அதில் இல்லாதது பற்றியோ அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை. அலுவலக வேலையைப்  பற்றி மட்டும் பேசி விட்டு அனுப்பி விட்டார்.

ஜி எம் தன் பெயரை சிபாரிசு செய்ய மாட்டார் என்று ஆரம்பத்திலிருந்தே அவனுக்கிருந்த சந்தேகம் உறுதிப்பட்டு விட்டதாக அவன் நினைத்தான்.

மாலையில், ராஜ் மீண்டும் கேட்டான். "ஜி எம் ரூமுக்குப் போயிருந்தியே, ப்ரொமோஷன் கிடைக்காததைப் பத்தி ஏதாவது சொன்னாரா?" என்றான் ராஜ்.

"வருத்தப்பட்டார். எனக்கு ஏன் கிடைக்கலேன்னு அவருக்கே தெரியலியாம். அடுத்த தடவை கண்டிப்பா சான்ஸ் கிடைக்கும்னு ஆறுதல் சொன்னார்."

சமீப காலமாக ஜி எம்முடன் அலுவலக வேலைகள் விஷயமாகத் தனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்ததையும், அதன் காரணமாகவே அவர் பதவி உயர்வுக்குத் தன் பெயரை சிபாரிசு செய்ய மாட்டார் என்று தான் முன்பே ஊகித்திருந்ததையும், பதவி உயர்வு தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் இல்லை என்பதையும் தன் அலுவலக நண்பன் ராஜிடம் அவன் சொல்லவில்லை.

ஜி எம் தனக்கு முன்பு செய்த உதவிகளை மனதில் கொண்டு அவர் தனக்குச் செய்த அநீதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது என்று ப்ருத்வி முன்பே தீர்மானித்து விட்டான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

பொருள்:  
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறக்கக்கூடாது. ஆனால் ஒருவர் நமக்கு ஏதாவது தீமை செய்தால், அதை உடனே மறந்து விட வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்



















No comments:

Post a Comment