About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, June 24, 2019

266. ஓய்வுக்குப் பின்...

''ரிடயர் ஆயாச்சு. இனிமே என்ன செய்யப்  போறீங்க?'' என்றாள் விமலா.

''என்ன செய்யறது? இத்தனை வருஷமா ஒடியாடி வேலை செஞ்சாச்சு. வீட்டில உக்காந்துக்கிட்டிருக்கறது கஷ்டமாத்தான் இருக்கும். பாக்கலாம்'' என்றார் பரமசிவம். 

''நம்ம ஏரியால 'சேவை இன்பம்'னு ஒரு சமூக சேவை அமைப்பு இருக்கில்ல?''

"ஆமாம். நீ கூட அங்கே போய் ஏதோ உதவி செஞ்சுக்கிட்டிருக்கியே?''

''ஆமாம். எனக்குப் படிப்பு அதிகம் இல்ல. நான் ஏதோ என்னால முடிஞ்சதை செஞ்சுக்கிட்டிருக்கேன். உங்களை மாதிரி படிச்சவங்களால இன்னும் நல்லபடியா உதவ முடியும்.''

''சரியாப் போச்சு! ரிடயர் ஆனப்பறம் இன்னொரு வேலையா? அதுவும் சம்பளமில்லாம! நான் பணம் வர மாதிரி ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்.''

"இனிமே நீங்க எதுக்குப் பணம் சம்பாதிக்கணும்? நம்மகிட்ட இருக்கற பணம் போதாதா? மத்தவங்களுக்கு உதவி செய்யற மாதிரி ஏதாவது செய்யலாமே!''

''நீ செய்!'' என்றார் பரமசிவம் சுருக்கமாக.

'ய்வு பெற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சுலபமாகப் பணம் சம்பாதிக்கலாம்' என்ற விளம்பரத்தைப் பார்த்து விட்டு, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்துக்குப் போன பரமசிவம், அது ஒரு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் விளம்பரம் என்று அறிந்து சற்று ஏமாற்றம் அடைந்தாலும், அவர்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு இன்ஷ்யூரன்ஸ் ஏஜன்டாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

''உங்களுக்கு எதுக்குங்க இது? உங்களால இது முடியுமா? பொழுதுபோக்கா ஏதாவது செஞ்சாலும் பரவாயில்ல!" என்றாள் விமலா.

''நம்ப சொந்தக்காரங்க தெரிஞ்சவங்க கிட்ட கேட்டாலே போதும். கொஞ்சம் பேர் பாலிசி எடுத்துக்கிட்டாக் கூட நல்ல வருமானம் வரும்!'' என்றார் பரமசிவம்.

''அதான் எதுக்குன்னு கேக்கறேன்.''

''நீ 'சேவை இன்ப'த்துக்குப் போறியே, அது எதுக்கு?''

''மத்தவங்களுக்கு உதவி செய்யறதில எனக்கு திருப்தி கிடைக்குது.''

''பணம் சம்பாதிக்கறதில எனக்குத் திருப்தி!'' என்றார் பரமசிவம்.

ரமசிவம் இன்ஷ்யூரன்ஸில் இறங்கி ஆறு மாதம் ஆகி விட்டது. அவர் எதிர்பார்த்தபடி அவருடைய உறவினர்களும் நண்பர்களும் அவர் மூலம் இன்ஷ்யூரன்ஷ் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. தேவையில்லாமல் இதில் இறங்கி விட்டோமோ என்று அவர் நினைக்க ஆரம்பித்தார்.

''உங்க கஸின் வீட்டுக்குப் போகப் போறதா சொன்னீங்களே!'' என்றாள் விமலா.

''போகல. அவன் எங்கேயோ வெளியில போறானாம்'' என்ற பரமசிவம், சற்றுத் தயங்கி விட்டு, ''சும்மாதான் அவனைப் பாத்துட்டு வரலாம்னு நெனச்சேன். நான் இன்ஷ்யூரன்ஸ் எடுத்துக்கச் சொல்வேன்னு அவன் பயந்துட்டான் போலருக்கு! அதனாலதான் என்னைத் தவிர்க்கிறான்'' என்றார் சற்று வருத்தத்துடன். 

சற்று மௌனமாக இருந்த விமலா, ''நீங்க வருத்தப்படுவீங்கன்னு நான் உங்ககிட்ட சொல்லல. என் சொந்தக்காரங்க சில பேரு கூட எங்கிட்ட, 'உங்களுக்கு ஏதாவது பணக் கஷ்டமா என்ன? நல்லா சம்பாதிச்சு ரிடயர் ஆனப்பறம் உன் புருஷன் எதுக்கு  பணம் சம்பாதிக்கறதில குறியா இருக்காரு?'ன்னு கேட்டாங்க'' என்றவள், 'யார் அப்படிச் சொன்னது?' என்று பரமசிவம் கோபமாகக் கேட்பாரோ என்று பார்த்தாள். 

ஆனால் பரமசிவம் எதுவும் சொல்லவில்லை.

விமலாவின் கைபேசி அடித்தது. எடுத்துப் பேசினாள். 

பேசி  முடித்ததும் பரமசிவத்திடம், ''என்னங்க, சேவை இன்பத்தில என்னைக் கூப்பிடறாங்க. போயிட்டு வந்துடறேன்" என்றாள்.

பரமசிவம் சிரித்தபடி, ''உன்னை ஃபோன் பண்ணிக் கூப்பிடறாங்க. எனக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னு சொல்றாங்க!'' என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று விமலா யோசித்துக் கொண்டிருந்தபோது பரமசிவம், ''நானும் உன்னோட வரேன்'' என்றார்.

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 266
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

பொருள்:  
தவம் செய்பவரே தங்கள் கடமையைச் செய்பவர். மற்றவர்கள் ஆசை வலையில் அகப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவரே ஆவார்.
 குறள் 267 
குறள் 265
      பொருட்பால்                                                                                   காமத்துப்பால்

Tuesday, June 18, 2019

265. குருவும் சீடனும்

''குருவே! ஐந்தாண்டுகளாகத் தங்களிடம் வேதங்கள், இதிகாசங்கள் மற்ற பல விஷயங்களைக் கற்று வருகிறேன். சில சந்தேகங்களை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்''  

''கேள், அருட்செல்வம்!'' என்றார் குரு.

''தவம் ஏன் செய்ய வேண்டும்? யார் செய்ய வேண்டும்?"

''அதற்கு முன்னால் தவம் என்றால் என்னவென்று சொல்.''

அருட்செல்வம் கொஞ்சம் யோசித்து விட்டு, ''புலன்களை அடக்கி மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைப் பிரார்த்திப்பது'' என்றான். 

''என்னவென்று பிரார்த்திக்க வேண்டும்?''

''எதற்காகத் தவம் இருக்கிறோமோ அது நிறைவேற வேண்டுமென்று.''

"உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாயே! யாரும் எதற்காகவும் தவம் செய்யலாம்!"

''அப்படியானால் சுயநல நோக்கத்துக்காகத் தவம் செய்யலாமா?''

''அசுரர்கள் தீய நோக்கங்களுக்காகத் தவம் செய்திருக்கிறார்களே!''

''தவம் என்ற உயர்ந்த செயல் தீய நோக்கங்களுக்கு உதவும் என்றால், அது எப்படி ஒரு உயர்ந்த செயலாக இருக்க முடியும்?''

''தவம் என்பது ஒரு பயிற்சி. தவம் செய்பவர்கள் தாங்கள் விரும்புவதைப் பெற அது வழி வகுக்கிறது. தவம் செய்பவர்கள் தவறான நோக்கத்துக்காக அதைப் பயன்படுத்தினால் அது அவர்கள் தவறு. நெருப்பு  ஒரு சக்தி. அதை ஒருவன் எதையாவது கொளுத்தப் பயன்படுத்தினால், அதற்கு நெருப்பு என்ன செய்யும்?''

''அப்படியானால், தவம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது இல்லையா?''

குரு சிரித்து விட்டு, ''இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால் தெய்வீகம் என்றால் என்ன என்று நான் விளக்க வேண்டும்! இப்படிச் சொல்லலாம். தவம் நமக்கு அசாதாரண சக்தியைக் கொடுக்கிறது. அசாதாராணமான எதையும் தெய்வீகம் என்று நினைப்பது நம் இயல்பு!'' என்றார்.

அருட்செல்வம் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, ''குருவே! தவம் என்பது ஒரு பயிற்சி என்று சொன்னீர்கள். அது எப்படிச் செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா?''

''தவம் என்பது மனத்தை ஒருமுகப்படுத்துவது என்று சொன்னேன். நம் மனத்தை ஒருமுகப்படுத்தி நாம் ஒரு நோக்கத்தை விரும்பும்போது அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் வலுப்படுகின்றன.''

''அப்படியானால் தவம் செய்யும்போது உண்ணாமலும் வேறு வகைகளிலும் உடலை வருத்திக் கொள்கிறோமே, அது ஏன்? மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் போதாதா? உடலை வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?''

''நாம் ஒன்றை வேண்டும்போது அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். உடலை வருத்திக் கொள்வது போன்ற சிறு துன்பங்கள் நாம் விரும்புவதைப் பெற நாம் கொடுக்க முயலும் விலைதான்.''

''நன்றி குருவே! தவம் என்பது சொர்க்கத்துக்குப் போக நினைப்பவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய செயல் என்று இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.''

''சரி. இப்போது எதற்காகாகவாவது தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயா?'' 

''நான் துறவியாயிற்றே குரு? நான் எதற்கும் ஆசைப்படக் கூடாதே?''

''உனக்காக வேண்டாம். வேறு யாருக்காவது ஏதாவது வேண்டி நீ தவம் செய்யலாமே?''

சற்று நேர மௌனத்துக்குப் பின், ''குருவே! நான் துறவறம் பூண்ட பிறகு என் பெற்றோருக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை. எனவே அவர்களுக்கு நிறையச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று வேண்டித் தவம் செய்யப் போகிறேன். செய்யலாம் அல்லவா?'' என்றான் அருட்செல்வம்.

''நிச்சயம் செய்யலாம். அவசியம் செய்யவும் வேண்டும். துறவறம் பூண்டாலும் பெற்றோர் உறவு விட்டுப் போகாது. விரைவிலேயே உன் பெற்றோரிடமிருந்து உனக்கு நல்ல செய்தி வரும். உன் தவத்துக்குப் பலன் ஏற்பட்டிருப்பதை அப்போது நீ புரிந்து கொள்வாய்!'' என்றார் குரு.

''நன்றி குருவே!'' என்றான் அருட்செல்வம்.

''நான்தான் உனக்கு நன்றி சொல்ல வேண்டும்'' என்றார் குரு சிரித்தபடியே.

''என்ன சொல்கிறீர்கள் குருவே?''

''உன்னிடம் பேசிய பிறகுதான் எனக்கும் ஒரு கடமை இருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது. இப்போது நம் நாட்டில் கடும் வறட்சி நிலவுகிறது. நாட்டில் மழை பெய்து சுபீட்சம் நிலவ வேண்டும் என்று வேண்டி நான் தவம் செய்யப் போகிறேன்'' என்றார் குரு.

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

பொருள்:  
தவம் செய்வதால் விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியும் என்பதால், இவ்வுலகிலேயே தவம் செய்ய வேண்டும்.
குறள் 266
குறள் 264
பொருட்பால்                                                                                              காமத்துப்பால்













Friday, June 14, 2019

264. பிரச்னைகள் திருமா?

''அந்தக் காலத்தில முனிவர்கள் தவம் செஞ்சு, தங்களோட தவ வலிமையினால பல விஷயங்களைச் சாதிப்பாங்களாமே, உண்மையா சுவாமி?'' என்று கேட்டார் குழந்தைவேலு.  

''புராணங்கள்ள அப்படித்தான் சொல்லியிருக்கு. எதுக்குக் கேக்கற?'' என்றார் சுவாமிஜி.

''இந்தக் காலத்திலேயும் அப்படியெல்லாம் தவம் செஞ்சு தவ வலிமை பெற முடியுமான்னு யோசிச்சுப் பாத்தேன்.''

''முடியும். இப்ப அதெல்லாம் இன்னும் சுலபம் கூட!''

''சுலபமா? ஆச்சரியமா இருக்கே!'

''இப்ப தவம் செய்யக் காட்டுக்குப் போக வேண்டாம். சுயக் கட்டுப்பாடோட, எளிமையா வாழ்ந்துக்கிட்டு மத்தவங்களுக்குத் தன்னால முடிஞ்ச உதவியை செஞ்சுக்கிட்டு வாழ்ந்தா, அதுவே தவம்தான்!'' என்றார் சுவாமிஜி.

''அப்படி வாழறவங்க யாராவது இருக்காங்களா?'' என்றார் குழந்தைவேலு.

'நீ அப்படி வாழறவன்தான்! ஆனா நீ வாழறது ஓரு தவ வாழ்க்கைன்னு உனக்குத் தெரியாம இருக்கறது உன்னோட அடக்கம். இந்த அடக்கம் உன் தவ வலிமையை இன்னும் அதிகமாக்கும்! உன் தவ வலிமை உனக்கு எப்படியெல்லாம் உதவும்னு உனக்குத் தெரியாது!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சுவாமிஜி, ''நிச்சயம் இருப்பாங்க'' என்று மட்டும் சொன்னார்.

''சுவாமிஜி என்ன சொன்னார்?'' என்றாள் குழந்தைவேலுவின் மனைவி அலமேலு.

''சுவாமிஜி கிட்ட என் பிரச்னைகளைச் சொல்லல. ஏதோ ஒரு தயக்கம், தப்பா நினைச்சுப்பாரோன்னு.''

''தப்பா நினைச்சுக்கறதுக்கு என்ன இருக்கு? நீங்க எப்பவோ உங்க ஆஃபீஸ் நண்பர் நடராஜனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டீங்க. அவரு பணம் கட்டாம இறந்து போயிட்டாரு. இப்ப அவர் வாங்கின கடன் பாக்கியை வட்டியோட சேத்து ஒரு லட்ச ரூபா கட்டச் சொல்லி உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கு. இது அநியாயம் இல்லையா? இதை உங்க குருகிட்ட முறையிடறதில உங்களுக்கு என்ன தயக்கம்? இந்த லட்சணத்தில உங்க நண்பர் கணேசன் பொண்ணு கல்யாணத்துக்கு வேற ஒரு லட்சம் ரூபா கடன் கொடுக்கறதா சொல்லியிருக்கீங்க!''

''நடராஜன் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்கான். அவனுக்கு உதவி தேவைப்படறச்சே நான் செய்யத்தான் வேணும். அதனாலதான் அவனோட கடனுக்கு ஷ்யூரிட்டி கையெழுத்துப் போட்டேன். அவன் உயிரோட இருந்திருந்தா கடனை அடைச்சிருப்பான். கணேசனுக்கு க் கொடுக்கறதா சொன்ன பத்தைத்தான் சீட்டுப் பணத்திலேந்து கொடுக்கறதா சொல்லியிருக்கேனே! நாம ரெண்டு தவணைதான் கட்டியிருக்கோம். நாம கட்டின பணத்தை கணேசன் நமக்குக் கொடுத்துடுவான். இனிமே வரப்போற மாசத் தவணைகளை அவனே கட்டிடுவான். அதில ஒண்ணும் பிரச்னை இல்ல.''

''ஆனா சீட்டு உங்களுக்கு விழணுமே? அதுதானே பிரச்னை! அப்படி விழுந்தா கூட அதை வச்சுக் கடனைக் கட்டுவீங்களா, இல்ல, உங்க நண்பருக்குக் கொடுப்பீங்களா?''

''குருவைப் பாத்துட்டு வந்திருக்கேன்ல? ஏதாவது வழி பிறக்கும்.''

''அதான் குருகிட்ட உங்க பிரச்னையைச் சொல்லாம வந்துட்டீங்களே, அவரு எப்படி உதவுவாரு?'' என்று முணுமுணுத்தாள் அலமேலு.

ரண்டு தினங்களுக்குப் பிறகு குழந்தைவேலு வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், ''என்னங்க, சிட்ஃபண்ட்லேந்து ஃபோன் பண்ணினாங்க. இந்த மாசம் குலுக்கல்ல சீட்டு உங்களுக்கு விழுந்திருக்காம்'' என்றாள் அலமேலு உற்சாகத்துடன்.

''ஆச்சரியமா இருக்கே! சீட்டு எனக்கு விழணும்னு ஆசைப்பட்டேன். விழுந்துடுச்சே! .நல்லவேளை, கணேசனுக்கு உதவ முடிஞ்சுது.''

''இந்தாங்க! ஒரு லெட்டர் வந்திருக்கு'' என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தாள் அலமேலு.

ஷ்யூரிட்டி போட்டதால் குழந்தைவேலு பணம் கட்ட வேண்டும் என்று முன்பு கேட்டிருந்த நிதி நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்தக் கடிதம் இறந்து போன நடராஜனின் மகன் தன் தந்தையின் கடன் பற்றி அறிந்து அதை முழுவதுமாகக் கட்டி விட்டதால், குழந்தைவேலு கடன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. 

''பாத்தியா அலமேலு? சுவாமிஜியைப் போய் சும்மா பாத்துட்டுத்தான் வந்தேன். அவர் கிட்ட என் பிரச்னைகளைப் பத்தி சொல்லக் கூட இல்ல. சுவாமிஜி என் பிரச்னைகளைத் தீர்த்து வச்சுட்டாரு பாரு!'' என்றார் குழந்தைவேலு உற்சாகத்துடன்.

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 264
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

பொருள்:  
தீமை செய்யும் பகைவரை வீழ்த்துவதும், நன்மை செய்யும் நண்பர்களை உயர்த்துவதும் நினைத்த மாத்திரத்தில் தவ வலிமையால் நிறைவேறும்.
குறள் 265 
குறள் 263
பொருட்பால்                                                                                               காமத்துப்பால்



















Thursday, June 13, 2019

263. வேண்டாம் தவ வாழ்க்கை!

"என்னங்க? அரிசி இன்னும் ரெண்டு நாளைக்குத்தான் வரும்" என்றாள் பொன்னம்மாள். 

"சரி" என்றான் அழகேசன். "நாளைக்கு வியாபாரத்துக்குப் போயிட்டு வரேன். பணம் வசூலிச்சுட்டு அரிசி, மத்த சாமான்கள் எல்லாம் வாங்கிக்கிட்டு வரேன்."

"இன்னிக்கே போயிருக்கலாமே!"

"இன்னிக்குக் காலையிலதானே ராமலிங்க சாமி போனாரு? அப்புறம் உடனே கிளம்ப முடியல. ரெண்டு மூணு நாள்ள வேற யாராவது வருவாங்க. அதுக்குள்ளே அரிசி மத்த சாமான்களை வாங்கி வச்சுக்கணும்."

அழகேசன் எதிர்பார்த்தது போல் நான்கு நாட்களில் இன்னொரு துறவி அவனைத் தேடி வந்தார்.

"இந்த ஊருக்குள்ள நுழைஞ்சதுமே, எல்லாரும் உன் வீட்டைத்தான் காட்டறாங்க. துறவிகளை வரவேற்று உபசரிக்கிற வேலையைப் பல காலமாகச் செஞ்சுக்கிட்டிருக்கியாமே!" என்றார் துறவி.

"ஆமாம் சாமி. ஏதோ என்னால முடிஞ்சது!" என்றான் அழகேசன்.

"பெரிய சேவைப்பா இது. உன்னைப் போன்றவர்கள் இருக்கறதாலதான் எங்களைப் போன்றவர்கள் தவம், துறவு இதிலெல்லாம் ஈடுபட முடிகிறது. சரி. உன்னைப் பத்திச் சொல்லு."

"என்னைப் பத்திச் சொல்றதுக்கு என்னங்க இருக்கு?  நான் ரொம்ப நாளா துணி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். காஞ்சிபுரத்திலேந்து மொத்தமா துணி வாங்கிக்கிட்டு வந்து சுத்தி இருக்கிற கிராமத்துக்குக்கெல்லாம் போய் வித்துட்டு வருவேன். எல்லாரையும் நம்பிக் கடன் கொடுத்து, தவணை முறையில பணம் வாங்கிக்கறதால எங்கிட்ட நிறைய பேரு வாங்கறாங்க. ஓரளவுக்கு நல்ல வருமானம் வருது."

"நல்லது. ஆனால், துறவிகளுக்கும், தவம் செய்பவர்களுக்கும் உதவி செய்யணுங்கற எண்ணம் உனக்கு எப்படி வந்தது?"

"இந்த ஊருக்கு வெளியில பெரிய சாலை இருக்கு. யாத்திரை போறவங்க நிறைய பேர் அதில போவாங்க. நீங்களும் அப்படித்தான் வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். துறவிகள் சில பேர் பல நாள் சாப்பிடாம சோர்வோட நடந்து போறதைப் பாத்து அவங்களை என் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்து அவங்களுக்கு உணவு கொடுத்து ஓய்வு எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னேன். அதுக்கப்புறம் இந்தப் பக்கமாப் போற துறவிங்க நிறைய பேரு அவங்களாவே என் வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. கடவுள் புண்ணியத்தில என்னால முடிஞ்ச சேவையை அவங்களுக்கு செஞ்சுக்கிட்டிருக்கேன்."

"துறவிகளைப் பாத்துக்கிட்டு வியாபாரத்தையும் எப்படிப்பா கவனிக்கற?"

"மாசத்துல இருபது நாள் வியாபாரம், பத்து நாள் வீட்டில இருந்துக்கிட்டு துறவிகளுக்கு சேவைன்னு வச்சுக்கிட்டிருக்கேன். நான் இல்லாதப்ப என் மனைவி துறவிகளை கவனிச்சுப்பா."

மாலையில் துறவி அவனிடம் விடை பெற்றுக் கிளம்பினார். கிளம்பும்போது, "ஆமாம், கேக்க மறந்துட்டேன். உன் குழந்தைங்க என்ன செய்யறாங்க?" என்றார். 

"எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டு பேருக்கும் காஞ்சிபுரத்திலேயே கடை வச்சுக் கொடுத்துக் கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்."

"அப்ப உங்க இல்லறக் கடமைகள் முடிஞ்சு போச்சு. நீயும் உன் மனைவியும் இல்லறத்தை விட்டுட்டுத் துறவறம் மேற்கொள்ளலாமே!"

"அதுக்கு என்ன செய்யணும் சாமி? காட்டில போய்த் தவம் செய்யணுமா?"

"தவம்னா காட்டுக்குப் போகணும்னு இல்ல. உணவு, உடை மற்ற சௌகரியங்களைக் குறைச்சுக்கிட்டு, திருத்தலங்களுக்குப் போறது, ஏதாவது ஆசிரமத்தில் சேர்ந்து தவ வாழ்க்கை வாழப் பழகிக்கறது இது மாதிரி செயல்கள்ள ஈடுபடலாம்."

"வேண்டாம் சாமி. உங்களை மாதிரி தவம் பண்றவங்களுக்கு சேவை செய்யறதே எங்களுக்குத் திருப்தியா இருக்கு. எங்களுக்கு இதுவே போதும்" என்றான் அழகேசன். 

"நீ சொல்றதும் சரிதான். உன்னை மாதிரி இருக்கறவங்க இல்லறத்தை விட்டுட்டுத் தவம் பண்ணப் போயிட்டா, என்னை மாதிரித் துறவிகளுக்கு உதவி செய்ய யாரும் இருக்க மாட்டாங்க!" என்றார் துறவி சிரித்தபடியே.

துறவி உண்மையாகச் சொல்கிறாரா இல்லை விளையாட்டாகப் பேசுகிறாரா என்று அழகேசனுக்குப் புரியவில்லை.  

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்  
குறள் 263
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

பொருள்:  
துறவிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற சேவைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் தவம் செய்ய நினைக்காமல் இல்லறத்திலேயே இருக்கிறார்களோ?
குறள் 264
குறள் 262
பொருட்பால்                                                                                           காமத்துப்பால்










Sunday, June 2, 2019

262. ஏகாதசி விரதம்

காலை மணி எட்டுதான் ஆகியிருந்தது. அதற்குள் குமாருக்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. 

'காலையில் சீக்கிரம் எழுந்து அவசரமாகக் குளித்திருக்க வேண்டாம்! குளித்தவுடன் பழக்கத்தினால் வயிறு உணவு கேட்கிறது.'

"என்னங்க, கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் லதா சமையலறையிலிருந்து, உரத்த குரலில்.  

"காப்பி குடிக்கறதா இருந்தா காலையில எழுந்தவுடனேயே குடிச்சிருக்க மாட்டேனா? நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே?" என்றான் குமார் எரிச்சலுடன்.

"உங்களை யாரு ஏகாதசி விரதம் இருக்கச் சொன்னது?" என்று லதா முணுமுணுத்தது அவன் காதில் விழுந்தது. 

ல்லாம் அந்த வாட்ஸ் ஆப் செய்தியால் வந்தது. ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப் பற்றி விளக்கிய அந்தச் செய்தி, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விரிவான ஆராய்ச்சிக்குப் பின் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் வருவதில்லை என்றும் அவர்கள் நீண்ட நாள் வாழ்கிறாரகள் என்றும் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

அதைப் படித்ததுமே ஏகாதசி விரதம் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குமாரின் மனதில் எழுந்தது. இந்தச் செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. அடுத்த நாளான சனியன்றே ஏகாதசி. அன்று அவனுக்கு அலுவலக விடுமுறை. அதனால் அன்றே ஏகாதசி விரதம் இருக்கலாம் என்று தீர்மானித்து விட்டான். 

வழக்கமாக விடுமுறை நாளன்று காலை 8 மணிக்கு மேல் எழுந்திருப்பவன் அன்று காலை 6 மணிக்கே எழுந்து குளித்து விட்டான். லதா காப்பி போடும் மணம் வந்தபோதும் தன் காப்பி ஆசையை அடக்கிக் கொண்டான்.

"காப்பி சாப்பிட்டா தப்பு இல்லேங்க" என்று லதா சொன்னபோதும் மறுத்து விட்டான். 

இப்போது 8 மணிக்கு மறுபடியும் காப்பி வேண்டுமா என்று கேட்டு அவனுக்கு சபலம் ஏற்படுத்துகிறாள்!

9 மணிக்கு, "கோவிலுக்குப் போயிட்டு வரேன்" என்று கிளம்பினான் குமார். 

தெருவில் நடந்து செல்லும்போது ஹோட்டல்கள், டீக்கடைகள், நடமாடும் சிற்றுண்டிச் சாலைகள் இவற்றிலிருந்து வந்த மணம் அவன் பசியை அதிகமாக்கியது.

கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலில் ஏதாவது பிரசாதம் கிடைத்தால் அதை உண்ணலாம், அதனால் விரதத்துக்கு பங்கம் வராது என்று நினைத்தான். ஆனால் ஏகாதசியன்று பெருமாளுக்கே உணவு படைப்பதில்லையாம்! அதனால் கோவிலில் பிரசாதம் எதுவும் கிடைக்கவில்லை. 

கோவிலிலிருந்து திரும்பும்போது மிகவும் அலுப்பாக இருந்தது. சட்டென்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.

சர்வரிடம் "ஒரு காப்பி" என்றான். "இட்லி, பொங்கல் எல்லாம் சூடா இருக்கு சார்!" என்றான் சர்வர். "காப்பி மட்டும் கொண்டு வா, போதும்" என்றான் குமார் எரிந்து விழாத குறையாக. 

'ஒரு காப்பி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. வீட்டில் காப்பி சாப்பிட்டால் லதா கொஞ்சம் ஏளனமாக நினைப்பாள். அதனால் ஹோட்டலில் சாப்பிட்டது சரிதான்' என்று நினைத்துக் கொண்டான்.

தினோரு மணிக்கு அவனைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். லதா அவருக்கு மட்டும் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.

"நீங்க சாப்பிடலியா?" என்று நண்பர் குமாரிடம் கேட்டதும், "உங்களுக்கும் காப்பி கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. 

"சரி" என்று தலையாட்டினான் குமார். தன்னை அறியாமலேயே சரி என்று சொல்லி விட்டோமா என்று நினைத்தவன், 'ஏற்கெனவே ஹோட்டலில் ஒரு காப்பி சாப்பிட்டாகி விட்டது. இன்னொரு காப்பி சாப்பிட்டால் தவறில்லை' என்று சமாதானப்படுத்திக் கொண்டான். 

1 மணிக்கு, சமைத்த உணவுகளைச் சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு லதா சாப்பிட உட்கார்ந்தாள். குமாரைப் பார்த்து, "நீங்களும் சாப்பிடறீங்களா?" என்றாள்.

"உனக்கு மட்டும்தானே சமைச்சிருப்பே?" என்றான் குமார்.

"அப்படி கரெக்டா சமைக்க முடியுமா? நான் சமைச்ச சாப்பாடு ரெண்டு பேருக்குக் காணும். உங்களுக்கும் தட்டு எடுத்து வைக்கட்டுமா?"

"நான்தான் இன்னிக்கு விரதம்னு சொன்னேனே!" என்றான் குமார் எரிச்சலுடன்.

"எனக்குத் தெரிஞ்சு ஏகாதசி விரதம் இருக்கறவங்க நிறைய பேரு ஒருவேளை மட்டும் சாப்பிடுவாங்க. நீங்க கூட இப்ப சாப்பிட்டுட்டு ராத்திரி சாப்பிடாம இருக்கலாம்."

பசி வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த நிலையில், "சரி" என்றான் குமார் அவசரமாக. "முதல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுட்டு விரதம் இருக்கேன். இது பழகிடுச்சுன்னா, நாள் முழுக்க  விரதம் இருக்கறது சுலபமா இருக்கும்" என்றான்.

"ஒரு வேளைதானே சாப்பிடப் போறீங்க? கொஞ்சம் தாராளமாவே சாப்பிடுங்க. எல்லாம் நிறையவே செஞ்சிருக்கேன். எனக்கு இல்லாம போயிடுமோன்னு கவலைப்படாதீங்க" என்றாள் லதா.

தன் மீது எவ்வளவு அக்கறை இவளுக்கு என்று நினைத்தபடியே வயிறு முட்டச் சாப்பிட்டான் குமார்.

பிற்பகலில் காப்பி போடும்போது, "என்னங்க உங்களுக்கும் காப்பி கலக்கட்டுமா? ராத்திரி மட்டும்தானே விரதம் இருக்கப் போறீங்க? இப்ப காப்பி சாப்பிடலாம் இல்ல?" என்றாள் லதா.

குமார் எதுவும் சொல்லவில்லை.

சற்று நேரத்தில் லதா காப்பி கொண்டு வைத்தாள். "பிஸ்கட் ஏதாவது வேணுமா?" என்றாள்.

இவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று நினைத்தபடி அவளை முறைத்த குமார், "வேண்டாம்" என்றான். 

மாலை லதா கடைக்குப் போய் விட்டாள். மத்தியானம் வயிறு நிறையச் சாப்பிட்டும் சீக்கிரமே ஜீரணம் ஆகி விட்டது போல் வயிறு பசிக்க ஆரம்பித்தது. 'பிஸ்கட் வேணுமா?' என்று மனைவி கேட்டது நினைவு வந்தது.

சமையலறை ஷெல்ஃபில் தேடினான். இரண்டு மூன்று வகை பிஸ்கட்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டு எடுத்துக் கொண்டான். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு அருகிலேயே கடையில் வாங்கிய ஒரு மிக்சர் பாக்கெட் மற்றும் ஒரு வேர்க்கடலை பாக்கெட் ஆகியவை இருந்தன. அவற்றையும் எடுத்துக் கொண்டான்.

டிவி பார்த்தபடியே பிஸ்கட், மிக்ஸர், வேர்க்கடலை எல்லாவற்றையும் சுவைத்தான்.

கடைக்குப் போன லதா ஆறு மணிக்குத் திரும்பி வந்தவுடன், "ராத்திரி உங்களுக்காக வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தேன். வெறும் வயத்தோட படுக்க வேண்டாம். பழமும் பாலும் சாப்பிட்டா தப்பு இல்லை" என்றாள்.

உள்ளே சென்று கடையில் வாங்கியவற்றை வைத்து விட்டு வந்தவள் கையில் ஒரு பொட்டலத்துடன் வந்தாள். "போளி ஸ்டால்ல சூடா பஜ்ஜி போட்டுக்கிட்டிருந்தாங்க. சூடா இருக்கு. சாப்பிட்டுப் பாருங்க" என்று பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.

இரவில்தான் விரதம். மணி ஆறுதான் ஆகிறது. 7 மணிக்குத்தான் இரவு வரும். 7 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தபடி பஜ்ஜியை உண்டு முடித்தான் குமார். பஜ்ஜி சூடாகவும் சுவையாகவும் இருந்தது. 

"வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தியே அதைக் கொடு. இப்பவே சாப்பிட்டுடறேன். ராத்திரி சாப்பிட வேண்டாம்" என்றான்.

மனைவி கொடுத்த நான்கு வாழைப்பழங்களைத் தின்றபின் வயிறு முழுமையாக நிறைந்திருந்தது.

ரவு 9 மணிக்கு "என்னங்க பால் கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. "சரி" என்றான் குமார் பலவீனமாக. சாயந்திரம் நிறைந்திருந்த வயிற்றில் இப்போது மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது.

"இல்லை, கொஞ்சம் உப்மா சாப்பிட்டுட்டு பால் குடிக்கிறீங்களா?"

"உப்மா செஞ்சிருக்கியா என்ன?"

"எனக்கு ரவா உப்மா பண்ணப் போறேன். வேணும்னா உங்களுக்கும் சேர்த்து செய்யறேன்" என்றாள் லதா.

உப்மாவை நினைத்ததும் நாவில் நீர் ஊறியது. "சரி" என்றான்.

சூடான உப்புமாவை உண்டு விட்டுப் பால் குடித்தான்.

இரவு படுக்கப்போகும்போது, விரதம் இருக்க முயன்ற இன்று எப்போதும் சாப்பிடுவதை விட அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாகத் தோன்றியது. 

துறவறவியல்
     அதிகாரம் 27      
தவம்   
குறள் 262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.

பொருள்:  
ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவர்க்கே தவம் கூடும். தவத்துக்கே உரித்தான இந்த குணங்கள் இல்லாதவர் தவம் மேற்கொள்ள முயல்வது வீண்.
குறள் 263
 குறள் 261
பொருட்பால்                                                                                                காமத்துப்பால்