About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, May 28, 2020

332. வந்ததும் போனதும்

சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டான் சுப்பு.

கூலி வேலைக்குச் சென்று மகனைக் காப்பாற்றி வந்த அவன் தாயும் அவனுக்குப் பத்து வயதாகும்போது திடீரென்று இறந்து விட்டாள்.

அவன் தாயின் மரணத்துக்கு வந்து போன உறவினர்கள் யாரும் சுப்புவை வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பொருளாதார உதவி செய்யவும் முன் வரவில்லை. 

தனித்து விடப்பட்ட சுப்புவுக்கு அவன் பெற்றோருக்குச் சொந்தமான சிறிய வீடு மட்டும் இருந்தது.

ஊரில் சிலர் அவனுக்கு அவ்வப்போது ஒரு வேளை சாப்பிட ஏதாவது கொடுத்து வந்தனர். சிலர் அதற்கு விலையாக அவனிடம் சிறு வேலைகளையும் வாங்கிக் கொண்டனர். 

விரைவிலேயே உழைத்தால்தான் தனக்கு உணவு கிடைக்கும் என்று புரிந்து கொண்ட சுப்பு தன்னால் முடிந்த சிறு வேலைகளைச் செய்து சிறிதளவு சம்பாதித்துத் தன் வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டான். 

அந்த நிலையில்தான் எதிர்பாராத அந்தச் செய்தி வந்தது.

அவன் அம்மாவைத் தேடிக்கொண்டு அந்த ஊருக்கு வந்த ஒரு வக்கீல் சமீபத்தில் காலமான அவன் அம்மாவின் சித்தப்பா ஒருவர் தன் சொத்தை சுப்புவின் அம்மாவுக்கு எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அந்த சித்தப்பா நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவன் அம்மா இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்!  

சுப்புவுக்கு எதுவும் புரியவில்லை. அந்த ஊரிலிருந்த விஷயம் தெரிந்த ஓரிருவர் சுப்புவின் உதவிக்கு வந்தனர். 

வக்கீல் அவனிடம் சில கையெழுத்துக்கள் வாங்கிக் கொண்டார். அவனுக்கு உதவ வந்தவர்களின் ஒப்புதலைப் பெற்று அவன் கையெழுத்துக்களைப் போட்டான். 

சொத்தின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறிய வக்கீல் நீதிமன்ற ஒப்புதல் பெற்று சொத்துக்கள் சுப்புவின் மேல் மாற்றப்பட சில வாரங்கள் ஆகும் என்றும் தான் தகவல் தெரிவித்ததும் சுப்பு நீதிமன்றத்துக்கு நேரில் வர வேண்டி இருக்கும் என்றும் சொல்லி விட்டுப் போனார்.

வக்கீல் வந்து விட்டுப் போன செய்தி பரவியதும் ஊரில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. 

அவனை யாரும் வேலை செய்ய அனுமதிக்கவில்லை. ''நீ எதுக்குடா வேலை செய்யணும்? இனிமே நீயே வேலைக்கு ஆள் வச்சுக்கலாமே!'' என்றார் கூலி குறைவாகக் கொடுத்தால் போதும் என்பதற்காகவே அவனுக்கு அதிகம் வேலை கொடுத்துக் கொண்டிருந்த அய்யாவு.

அவனுக்கு சாப்பாடு போடப் பலர் முன் வந்தனர். பல சமயம், "இல்ல நான் சாப்பிட்டுட்டேன், மூணாவது தெருவிலேந்து கொடுத்து விட்டாங்க'' என்பது போல் அவன் பதில் சொல்ல வேண்டி இருந்தது. 

சுப்புவுக்குப் புதிதாக சில நண்பர்களும் கிடைத்தனர். அவன் வயதை ஒத்தவர்கள், அவனை விடப் பெரியவர்கள் என்று பலரும் அவன் வீட்டுக்கு வந்து அவனிடம் அன்பாகப் பேசினர். 

''உனக்கு நான் இருக்கேன். உனக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காம எங்கிட்ட கேளு!'' என்பது அவர்களில் பலர் சொன்னது.

இத்தனை நாட்களாக ஏன் யாரும் இப்படிச் சொல்லவில்லை என்று சுப்புவுக்குத் தோன்றினாலும் அதைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கவில்லை, அப்படி யோசிக்கும் திறனும் அவனிடம் இல்லை.

தனக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை இத்தனை பேர் வந்து பார்ப்பதும், தன்னை மதித்துப் பேசுவதும் சுப்புவுக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேல், தான் இனி எடுபிடி வேலை செய்ய வேண்டியதில்லை, தான் கௌரவமாக வாழலாம் என்ற எண்ணமே அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. 

ஒரு மாதத்துக்குப் பிறகும் வக்கீலிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை. சுப்புவிடம் புதிதாக அக்கறை காட்டியவர்களில் ஒருவரான துரைசாமி என்பவர், தான் வக்கீலுக்கு ஃபோன் செய்து பார்ப்பதாகச் சொன்னார். 

அடுத்த நாள் சுப்பு ஒரு மாறுதலை உணர்ந்தான். அன்று காலையிலிருந்து அவன் வீட்டுக்கு யாரும் வரவில்லை.

வீட்டுக்கு வெளியே வந்து நின்றான். தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அய்யாவு அவனைப் பார்த்து, ''டேய் சுப்பு! தோட்டத்தில செடியெல்லாம் வெட்ட வேண்டி இருக்கு. நாளைக்கு வந்து செஞ்சுடு!'' என்றார்.

சுப்பு எதுவும் புரியாமல் அவரைப் பார்க்க, ''ஓ! உனக்குத் தெரியாதா? துரைசாமி ஊர் பூரா சொல்லிட்டான், உங்கிட்ட சொல்லலியா? உன் அம்மாவோட சொந்தக்காரன் யாரோ கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்டே வாங்கிட்டானாம். கேஸ் முடிய நிறைய வருஷம் ஆகுமாம். சொத்து உனக்குக் கிடைக்கறது கஷ்டம்னு வக்கீல் சொன்னாராம். என்ன, நாளைக்கு வந்துடறியா?'' என்று  சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பாரமல் நடந்தார் அய்யாவு.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 34    
  நிலையாமை  
குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

பொருள்:
பெரிய செல்வம் வந்து சேர்வது கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது. அது நீங்கிப் போவது கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து செல்வதைப் போன்றது.

பொருட்பால்                                                                                       காமத்துப்பால்



























Monday, May 25, 2020

331. நண்பனின் வீடு

"அப்பா! ரமேஷ் அவன் கம்பெனி வேலையா ஆறு மாசம் அமெரிக்கா போயிட்டான். அவன் அப்பா அம்மா டெல்லியில இருக்காங்க. அவங்க இங்க வர மாட்டாங்க. அவன் திரும்பி வர வரை நான்தான் அவன் வீட்டைப் பாத்துக்கணும்னு சொல்லி சாவியை எங்கிட்ட கொடுத்திருக்கான்" என்றான் மூர்த்தி.

"சரி, வீட்டைப் பூட்டிட்டு சாவியை பத்திரமா வச்சுக்க. மாசம் ஒரு தடவை நம்ம வீட்டு வேலைக்காரியை அழைச்சுக்கிட்டுப் போய் வீட்டை சுத்தம் பண்ணச் சொல்லு" என்றார் சபேசன்.

"அப்பா! என் டியூஷன் வகுப்பையெல்லாம் அவன் வீட்டில வச்சுக்கலாம்னு பாக்கறேன். நம்ம வீட்டில இடம் போறல'' என்றான் மூர்த்தி.

'அதெல்லாம் வேண்டாண்டா, நமக்கு இருக்கற இடத்தில அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு நடத்தறதுதான் நல்லது" என்றார் சபேசன்.

"இல்லப்பா! உனக்கு வேணும்னா என் வீட்டைப் பயன்படுத்திக்கன்னு அவன் எங்கிட்ட சொல்லி இருக்கான்."

"ஒரு பேச்சுக்கு சொல்லி இருப்பான். நீ வகுப்பையெல்லாம் அங்க நடத்த ஆரம்பிச்சுட்டா, அப்புறம் அவன் திரும்பி வந்தப்பறம் என்ன செய்வ?"

"அப்ப பாத்துக்கலாம். ஆறு மாசம்கறது ஒரு வருஷம் ரெண்டு வருஷம்னு கூட நீண்டுகிட்டே போகும்" என்றான் மூர்த்தி.

ண்பன் வீட்டில் தன் டியூஷன் வகுப்புகளை நடத்த ஆரம்பித்த மூர்த்தி அங்கே அதிக இடம் இருந்ததால் அதிக மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.

"உன் நண்பன் கிட்ட சொல்லிட்டு வாடகை ஏதாவது கொடுத்துடு" என்றார் சபேசன்.

"அதெல்லாம் வேண்டாம்னுடுவான்.'' 

''நீ டியூஷன் வகுப்பு நடத்தறேன்னு அவன் கிட்ட சொல்லி இருக்கியா இல்லையா?''

''சொன்னேன். அவன் ரெண்டு மூணு பேர்னு நினைச்சுக்கிட்டிருப்பான். 20 பேர் வராங்கன்னு அவனுக்குத் தெரியாது. எத்தனை பேர்னு அவன் கேக்கல, நானும் சொல்லல.''

மூர்த்தி எதிர்பார்த்தபடியே, ரமேஷின் அமெரிக்கப் பணிக்காலம் ஆறு மாதத்துக்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று தெரிந்தது..

''புதுசா ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருக்காங்களாம். அதனால இப்போதைக்குத் திரும்பி வர மாட்டானாம். ரெண்டு வருஷம் கூட ஆகலாம்'' என்றான் மூர்த்தி.

''வாடகைன்னு ஒரு சிறிய தொகையாவது கொடுக்கறேன்னு சொல்லிப் பாரு. அதுதான் உனக்கு நல்லது'' என்றார் சபேசன்.

''அதெல்லாம் வேண்டாம்ப்பா. அப்படி நான் சொன்னா நான் டியூஷன்ல நிறைய சம்பாதிக்கறதா நினைச்சுப்பான்'' என்றான் மூர்த்தி.

''அப்பா! ரமேஷ் ஃபோன் பண்ணினான். அடுத்த வாரம் வரானாம்!' என்றான் மூர்த்தி.

''இப்போதைக்கு வர மாட்டான்னு சொன்ன?''

'விசா எக்ஸ்டெண்ட் ஆகலியாம். அதனால திரும்பி வரானாம். அவன் வரத்துக்குள்ள டியூஷனை வேற எங்கேயாவது மாத்தணும்.''

''என்ன செய்யப் போற?'' என்றார் சபேசன்.

''இப்ப டியூஷன்ல 20 பேரு இருக்காங்க. அவங்களை நம்ம வீட்டுல வச்சு டியூஷன் நடத்த நம்ம வீட்டில இடம் போதாது. வெளியில வாடகைக்கு இடம் எடுத்து நடத்தலாம்னா இந்த வருமானத்தில அது கட்டுப்படியாகாது. நான் இதை பார்ட் டைமா செய்யறதால அதிகமா மாணவர்களை சேர்த்து நடத்தவும் முடியாது. அப்படியே செய்ய நினைச்சாலும் நிறைய மாணவர்களை சேர்க்க டைம் ஆகும். அதுவரையிலேயும் நம்ம கையிலேந்து காசு போட்டுத்தான் நடத்தணும். இப்ப இருக்கற 20 பேருக்கும் அவங்க பரீட்சை முடியறவரை வகுப்பு நடத்தியாகணும். என்ன செய்யறதுன்னே தெரியல'' என்றான் மூர்த்தி.

'உன் நண்பன் வீட்டை நிரந்தரமாப் பயன்படுத்தலாம்னு நினைச்சது உன்னோட முட்டாள்தனம். இதெல்லாம் வேண்டாம்னு நான் அப்பவே சொன்னேன்' என்று சபேசன் மனதில் நினைத்துக் கொண்டார். மனதில் தோன்றியதை வெளியே சொல்லி ஏற்கெனவே நொந்திருக்கும் மகனின் வலியை அவர் அதிகப்படுத்த விரும்பவில்லை.  

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 34    
  நிலையாமை  
குறள் 331
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

பொருள்:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்









Friday, May 15, 2020

330. இனம் காண முடியாத நோய்

ஆறு மாதமாக குமரகுரு படுத்த படுக்கையாக இருந்தான். உள்ளூர் மருத்துவர்களால் என்ன பிரச்னை என்று கண்டு பிடிக்க முடியவில்லை.

வெளியூருக்குச் சென்று பெரிய மருத்துவர்களிடம் காட்ட அவன் மனைவி முத்தழகுக்கு வசதியில்லை. 

குடும்பத்தைக் காப்பாற்ற முத்தழகு வயல் வேலை, வீட்டு வேலை என்று நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருந்தது. 

'நல்ல வேளை எனக்குக் குழந்தைகள் இல்லை. இருந்திருந்தால் அவர்களைக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருந்திருக்கும்' என்று நினைத்துக் கொண்டாள் முத்தழகு. 

இத்தனை காலமாக ஒரு குறையாக இருந்த விஷயம் இப்போது ஒரு ஆறுதலாக அமைந்து விட்டது விசித்திரமாக இருந்தது. 

ன்று முத்தழகு வெளியில் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது குமரகுருவின் அருகில் யாரோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள் .

"இவன் என் சிநேகிதன் தண்டபாணி. சின்ன வயசில நாங்க ஒண்ணா வேலை செஞ்சோம்!" என்றான் குமரகுரு.

"எங்கே?" என்றாள் குமரகுரு. 

தண்டபாணி என்ன பதில் சொல்லலாம் என்று யோசிப்பது போல் தோன்றியது.

"நான் என்ன கம்பெனியிலேயா வேலை செஞ்சேன்? கூலி வேலை செய்யறப்ப அவனும் நானும் சில சமயம் சேர்ந்து வேலை செஞ்சிருக்கோம்" என்றான் குமரகுரு எரிச்சலுடன்.

"சாதாரணமாத்தான் கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி வள்ளுன்னு விழற?" என்ற முத்தழகு, தண்டபாணியைப் பார்த்து, "காப்பித் தண்ணி குடிக்கறீங்களா?" என்றாள் குரலில் கனிவை வரவழைத்துக் கொண்டு ..

"அதெல்லாம் வேணாம். நீங்களே வெளியில போயிட்டுக் களைச்சு வந்திருக்கீங்க!" என்றான் தண்டபாணி .

"காப்பி போடு முத்தழகு. நீயும் களைச்சுப் போய் வந்திருக்க. நீயும் கொஞ்சம் குடிச்சுக்க!" என்றான் குமரகுரு, மனைவியைச் சமாதானப்படுத்துவது போல். 

"இதோ போடறேன்" என்று உள்ளே போன முத்தழகு, "காப்பித்தூள் இல்ல. கடையில போய் வாங்கிட்டு வந்துடறேன்" என்று கிளம்பினாள். 

"அதான் வேணாம்னு சொன்னேனே!" என்று தண்டபாணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே முத்தழகு வெளியே போய் விட்டாள்.

முத்தழகு வெளியே சென்றதும் நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். 

"சின்ன வயசில செய்யக் கூடாததெல்லாம் செஞ்சுட்டோம். கூலி வாங்கிக்கிட்டு அடிதடிஎல்லாம் செஞ்சிருக்கோம். ஒரு அப்பாவி மனுஷனைக் கொலை கூட செஞ்சிருக்கோம். அதான் இப்படிப் படுத்துதுன்னு நினைக்கறேன்" என்றான் குமரகுரு.

காப்பி தம்ளருடன் முத்தழகு உள்ளே வந்தாள்.

"நீ கடைக்குப் போயிட்டு எப்ப திரும்பி வந்தே? நீ வந்ததை நான் பாக்கவே இல்லையே!" என்றான் குமரகுரு சற்று அதிர்ச்சியுடன்.

"அப்பவே வந்துட்டேன். நீங்க ரெண்டு பெரும் சேந்து செஞ்ச கொலையைப் பத்திப் பேசிக்கிட்டிருந்ததில நான் வந்ததை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க!" என்றாள் முத்தழகு, தண்டபாணியிடம் காப்பி தம்ளரை நீட்டியபடியே. 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 330
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

பொருள்:
நோய் மிகுந்த உடலுடன் வறுமையில் வாழ்பவர் முன்பு கொலைகள் செய்தவர்களாக இருப்பார்கள் என்று அறிஞர் கூறுவர்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்












Friday, May 8, 2020

329. அரசியலில் இதெல்லாம் சகஜம் இல்லை!

தமிழ் மக்கள் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராஜரத்தினம் திடீரென்று அந்தக் கட்சியிலிருந்து விலகியது ஒரு பரபப்பான செய்தி ஆயிற்று. அவர் சமூக நீதிக் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சமூக நீதிக் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் சாமிநாதன் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

"இன்னிக்கு சாயந்திரம் ராஜரத்தினம் என்னை வந்து சந்திக்கப் போறாரு. அவரு அநேகமா நம்ம கட்சியில சேர விருப்பம் தெரிவிப்பார்னு எதிர்பாக்கலாம். அது பத்தி நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்க?" என்றார் சாமிநாதன்.

ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் ராஜரத்தினம் தங்கள் கட்சியில் இணைந்தால் அது கட்சிக்கு வலு சேர்க்கும் என்றே எல்லோரும் கருத்துத் தெரிவித்தனர். தங்கள் கட்சிக்கும், தமிழ் மக்கள் கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால், ஜாதிச் செல்வாக்கு உள்ள ராஜரத்தினத்தின் வரவு தங்கள் கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

கட்சியில் ராஜரத்தினம் தனக்கு ஒரு முக்கிய பதவியை எதிர்பார்ப்பார் என்றும் அவர் விரும்பும் பதவியைக் கொடுத்து அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.

"உங்களோட கருத்துக்களை சொல்லிட்டீங்க. நான் என்ன முடிவு எடுத்தாலும் அதை நீங்க ஏத்துப்பீங்க இல்ல?" என்றார் சாமிநாதன்.

"நிச்சயமா தலைவரே!" என்றனர் அனைவரும்.

ராஜரத்தினம் விரும்பியபடி அவர் சாமிநாதனுடன் பேசும்போது வேறு யாரும் உடன் இருக்கவில்லை.

தான் சமூக நீதிக் கட்சியில் சேர்ந்தால் அந்தக் கட்சிக்கு அது எந்த விதத்தில் பயனளிக்கும் என்பதை பற்றி ராஜரத்தினம் கூறியதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட சாமிநாதன், "ஆமாம், அரசியலுக்கு வரதுக்கு முன்னால நீங்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க?" என்றார்.

ராஜரத்தினம் சற்று திடுக்கிட்டவராக," ம்ம்... சொந்தமா தொழில் செஞ்சுக்கிட்டிருந்தேன்" என்றார்.

"என்ன தொழில்?"

"அதைப் பத்தி என்ன? நாம என்ன கூட்டா தொழில் செய்யவா போறோம்?" என்றார் ராஜரத்தினம் சற்று எரிச்சலுடன்.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சாமிநாதன், "எங்க கட்சியில சேர விரும்பறவங்களோட பின்னணியை விசாரிக்கிறது என்னோட பழக்கம். உங்க பின்னணி பத்தி நான் விசாரிச்சுட்டேன்" என்று சொல்லி நிறுத்தி ராஜரத்தினத்தைப் பார்த்தார்.

ராஜரத்தினம் மௌனமாக இருந்தார்.

"ஆரம்பத்தில  நீங்க கூலிக்குக் கொலை செய்யறவரா இருந்திருக்கீங்க. பெரிய மனுஷங்ககிட்ட பெரிய தொகை வாங்கிக்கிட்டு அவங்க சொல்ற ஆளைக் கொலை செய்யற கான்டராக்ட் கில்லர்!"

"அதனால் என்ன? நீங்க என்ன சாமியார் மடமா நடத்தறீங்க?" என்றார் ராஜரத்தினம் கோபம் பொங்கிய குரலில்.

"நான் நடத்தறது ஒரு அரசியல் கட்சிதான். அரசியல் கட்சிகளைப் பத்திப் பொதுவா எல்லோரும் சொல்ற குற்றச்சாட்டுகளை எங்களைப் பத்தியும் சொல்லலாம். ஆனா ஒரு விஷயத்தில நாங்க உறுதியா இருக்கோம். வன்முறை அறவே கூடாதுங்கறது நாங்க கடுமையாக கடைப்பிடிக்கிற கொள்கை. எங்களோட எந்தப் போராட்டத்திலேயும் கடுகளவு வன்முறை கூட இருந்தது கிடையாது. எங்களைக் கடுமையா விமர்சனம் பண்றவங்க கூட இதை ஒத்துக்கிட்டிருக்காங்க."

"நான் கூலிக்குக் கொலை செஞ்சதெல்லாம் பழங்கதை. அரசியலுக்கு வந்தப்பறம் நான் எந்தக் கொலையும் செஞ்சதில்லை. உங்க கட்சியில சேந்தப்பறம் நானும் முழு அஹிம்சாவாதியா மாறிடறேன்! ஏதாவது உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுக்கணும்னாலும் எழுதிக் கொடுக்கறேன்" என்றார் ராஜரத்தினம்.

"மன்னிச்சுக்கங்க ராஜரத்தினம். கொலைப் பின்னணி உள்ள உங்களை எங்க கட்சிக்குள்ள சேத்துக்க முடியாது" என்றார் சாமிநாதன் சுருக்கமாக.

சாமிநாதனைச் சந்தித்து விட்டு வெளியே வந்த ராஜரத்தினம் வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் காரில் ஏறிச் செல்ல, சாமிநாதனின் அறைக்கு வெளியே காத்திருந்த அவர் கட்சியின் முக்கியத் தலைவர்கள் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தனர். 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 329
 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

பொருள்:
கொலைத் தொழில் செய்பபவர்கள் அதன் இழிவை ஆராய்ந்து உணர்ந்தவர்களிடையே கீழ்த்தரமானவர்களாகத்தான் கருதப்படுவர்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

















Thursday, May 7, 2020

328. எட்டு வழிச் சாலை!


மக்கள் புரட்சி மையம் என்ற அமைப்பு பல வருடங்களாக இருந்து வந்தாலும், அதன் நடவடிக்கைகள் தீவிரமாகியது கடந்த ஐந்து வருடங்களாகத்தான்.

தேர்தலில் நம்பிக்கை இல்லாமல் மக்கள் புரட்சி மூலம்தான் அரசியல், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கையுடன் சுமார் இருபது வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட மக்கள் புரட்சி மையம் ஒரு தலைமறைவு இயக்கமாக இயங்கி வந்தது.

அவ்வப்போது காவல் நிலையங்களைத் தாக்கி துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு போவது, ஏழை மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்பட்ட சில அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் சுட்டுக் கொல்வது போன்ற செயல்களில் அந்த இயக்கம் ஈடுபட்டு வந்தது.

அவ்வப்போது மக்கள் புரட்சி மையத்தின் ஆதரவாளர்கள் என்று சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாலும், முக்கியத் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே தெரிந்த நிலையில், அரசு இயந்திரத்தால் அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களைக் கைது செய்ய முடியவில்லை.  

மக்கள் ஆதரவுடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் தலைமறைவாக இருந்த முக்கியத் தலைவர்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எப்படியோ தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

ந்து ஆண்டுகளுக்கு முன் அந்த இயக்கத்தின் தலைவராக சதீஷ் சந்திரா பொறுப்பேற்றதும், இயக்கத்தின் அணுகுமுறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. தனி மனிதர்கள் தாக்கப்படுவது அடியோடு நிறுத்தப்பட்டது. 

நாட்டின் சில பகுதிகளில் மக்களிடையே ரகசியமாகப் பிரசாரம் செய்து மக்களைத் தேர்தல்களைப் புறக்கணிக்க வைப்பது, அரசாங்கத்தின் சில சட்டங்களுக்குக் கட்டுப்பட மறுத்து அவற்றை வெளிப்படையாக மீறும்படி மக்களைத் தூண்டுவது, விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்க அனுமதி கொடுத்தால் மக்களைப் போராட்டம் செய்ய வைத்து தொழிற்சாலை வேலைகளைத் துவங்க விடாமல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு தங்கள் உத்தியை மாற்றிக் கொண்டது மக்கள் புரட்சி மையம்.

இந்தப் புதிய அணுகுமுறையால் மக்கள் புரட்சி மையத்துக்கு முன்பு இருந்த வன்முறை இயக்கம் என்ற பெயர் மாறியதுடன், மக்களிடையே நன்மதிப்பு ஏற்படவும் தொடங்கியது. 

க்கள் புரட்சி மையத்தின் முக்கிய நிர்வாகிகளின் ரகசியக் கூட்டம் நடைபெற்றது.

செயல்படுத்த வேண்டிய திட்டங்களைப் பற்றி விரிவாகப் பேசி முடித்ததும், கூட்டம் நிறைவேறும் தருவாயில், "வேறு ஏதாவது விஷயம் உண்டா?" என்றார் சதீஷ்சந்திரா. 

"இருக்கிறது தோழர் சதீஷ்!" என்றார் சோமா என்ற மூத்த உறுப்பினர். துவக்கத்திலிருந்தே இந்த இயக்கத்தில் இருந்தவர் என்ற முறையிலும், முந்தைய தலைவருக்கு நெருக்கமாக இருந்தவர் என்ற முறையிலும், அவர் சதீஷ் சந்திராவைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசக் கூடியவர்.  

"சொல்லுங்க தோழரே!" என்றார் சதீஷ் சந்திரா. 

"எங்க ஏரியாவில அரசாங்கம் எட்டு வழிச் சாலை போடப் போறேன்னு சொல்லி பல ஊர்ல இருக்கற விவசாய நிலங்களை அழிக்கப் பாக்குது. எல்லா எதிர்ப்பையும் மீறி டெண்டர் விட்டு கான்ட்ராக்ட் கொடுத்துட்டாங்க. கான்ட்ராக்ட் எடுத்திருக்கறவன் பெரிய ரவுடி. மந்திரிக்கு வேண்டியவன். அவனை நாம போட்டுத் தள்ளிட்டா அப்புறம் அந்த வேலைக்கு கான்ட்ராக்ட் எடுக்க யாரும் முன் வர மாட்டாங்க. நிலத்தை இழக்கப் போறமேன்னு கதறிக்கிட்டிருக்கிற விவசாயிகளுக்கு நிம்மதி கிடைக்கும்!" என்றார் சோமா.

"தோழரே! நான் இந்த இயக்கத்துக்குத் தலைமை ஏத்ததிலேந்து யாரையும் கொல்லக் கூடாதுங்கற கொள்கையைப் பின்பற்றிக்கிட்டிருக்கோம். எவ்வளவு மோசமான ஆளா இருந்தாலும் வேற வழிகள்ள போராடி அவனைத் தோக்கடிக்கணுமே தவிர, அவனைக் கொல்லக் கூடாது. வேற வழியில முயற்சி செஞ்சு அந்த நிலங்களை அரசாங்கம் எடுக்க முடியாம பண்ணுவோம்!" என்றார் சதீஷ் சந்திரா.

"இல்லை. தோழர் சதீஷ்! நீங்க அனுமதிக்காட்டாலும் நான் இதைத்தான் செய்யப் போறேன். ஏழை விவசாயிகளைக் காப்பாத்த வேற வழி எனக்குத் தெரியல!" என்றார் சோமா பிடிவாதமாக.

மற்ற தலைவர்கள் அதிர்ச்சியுடன் சதீஷ் சந்திராவைப் பார்க்க, அவர் மௌனமாக இருந்தார்.

"அப்படி செஞ்சா என்ன பண்ணுவீங்க? என்னைக் கொன்னுடுவீங்களா? ஆனா யாரையும் கொல்லக் கூடாதுங்கறது உங்க கொள்கையுமாச்சே!" என்றார் சோமா எகத்தாளமாக.

"தோழர் சோமா! நிச்சயமா உங்களை நான் கொல்ல மாட்டேன். உங்க முடிவைச் செயல்படுத்த நான் அனுமதிக்கவும் மாட்டேன். இந்தப் பிரச்னையை அமைதியான போராட்டங்கள் மூலம் நானே தீர்க்கறேன். அதுவரையில் நீங்க என் விருந்தாளியா இங்கேயே இருங்க!" என்ற சதீஷ் சந்திரா அங்கிருந்த இருவரைப் பார்த்துக் கண்ணசைக்க, அவர்கள் சோமாவைப் பிடித்து அருகில் இருந்த அறைக்குள் தள்ளிக் கதவைப் பூட்டினார்கள்.   

                                                                   அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 328
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

பொருள்:
கொலையால் பெரிய நன்மை கிடைக்கும் என்றாலும், சான்றோர்கள், கொல்லும் செயலை இழிவானதாகவே கருதுவார்கள்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்










Wednesday, May 6, 2020

327. அரியணையில் பாய்ந்த அம்பு

"அரசே விராஜ நாட்டு மன்னரிடமிருந்து தூதுவன் வந்திருக்கிறான்" என்றார் அமைச்சர்.

"வரச் சொல்லுங்கள்!" என்றான் அரசன்.

காவலர்களால் அரசவைக்கு அழைத்து வரப்பட்ட தூதன் அரசருக்குத் தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தி விட்டு, "வணக்கம் அரசே! எங்கள் மன்னர் தங்களுக்கு ஒரு ஓலை அனுப்பி இருக்கிறார்!" என்றான்.

"நல்லது. எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருந்த உங்கள் மன்னர் ஓலை அனுப்பி இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஓலையைக் கொடு" என்றான் அரசன்.

தூதனிடமிருந்து ஓலையை  வாங்கி மன்னனிடம் எடுத்துச் செல்ல ஒரு காவலன் தூதனை நோக்கி வந்தான்.

தன் இடுப்புக் கச்சையிலிருந்து ஓலையை எடுத்த தூதன் யாரும் எதிர்பாராத விதத்தில் ஓலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அம்பை எடுத்து மின்னல் வேகத்தில் அதை அரசனை நோக்கி வீசி விட்டான்.

தூதனையே பார்த்துக் கொண்டிருந்த அரசன் ஏதோ ஒரு உந்துதலில் சட்டென்று அரியணையிலிருந்து பக்கவாட்டில் குதிக்க, தூதன் விட்ட அம்பு அரியணையின் மீது குத்தி நின்றது 

காவலர்கள் உடனே தூதனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். ஒரு வீரன் ஓடிச் சென்று அரியணையில் குத்தியிருந்த அம்பைப் பிடுங்கி அமைச்சரிடம் கொடுத்தான்.

அரசன் மீண்டும் அரியணையில் அமர்ந்து கொண்டான்.

அமைச்சர் எழுந்து  "அரசே! விராஜ நாட்டு மன்னர் தான் ஒரு கோழை என்பதைக் காட்டி விட்டார். இல்லாவிட்டால் ஒரு தூதனைக் கொலையாளியாக அனுப்பி இருப்பாரா? தங்கள் உள்ளுணர்வால் உந்தப் பட்டதால் தாங்கள் உயிர் தப்பினீர்கள். நாங்கள் அனைவருமே உங்களுக்குப் பாதுகாப்புக்கு கொடுக்கத் தவறி விட்டோம்..." என்று உணர்ச்சி பொங்கப் பேச ஆரம்பித்தார்.

அரசன் அமைச்சரைக் கையமர்த்தி விட்டு தூதனைப் பார்த்து, "சொல் தூதா! உன் திட்டம் என்ன? என்னைக் கொன்று விட்டு நீ எப்படித் தப்பிக்கலாம் என்று திட்டம் போட்டிருந்தாய்?" என்றான்.

"அரசே! நான் எங்கள் நாட்டின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவன். என் உயிர் எனக்கு ஒரு பொருட்டல்ல. உங்களைக் கொன்ற பிறகு நான் உயிர் பிழைக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். எங்கள் நாட்டின் எதிரியான உங்களைக் கொன்று விட்டு நானும் மடிந்து போகத் தயாராகத்தான் வந்தேன்" என்றான் தூதன் வீராப்புடன்.   

"பாவம்! உன் இரண்டு நோக்கங்களுமே நிறைவேறப் போவதில்லை!" என்றான் அரசன் சிரித்தபடி.

"அரசே!" என்றான் தூதன் புரியாதவனாக.

"என்னைக் கொல்லும் முயற்சியில் நீ தோற்று விட்டாய். நீயும் உயிர் துறக்கப் போவதில்லை!"

"மன்னிக்க வேண்டும் மன்னரே! தூதனைக் கொல்லக் கூடாது என்ற விதி இந்தக் கொலைகாரனுக்குப் பொருந்தாது. உங்களைக் கொல்ல முயன்ற இவனுக்கு மரண தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்" என்றார் அமைச்சர்.

"நம் நாட்டில்தான் மரணதண்டனை கிடையாதே அமைச்சரே!"

"அரசே! அந்தப் பொதுவான விதி தூத தர்மத்தை மாறிய இவனைப் போன்ற வேற்று நாட்டுக் கொலையாளிகளுக்குப் பொருந்தாது."

"அமைச்சரே! கொல்லாமை என்பது ஒரு விதி அல்ல, ஒரு அறம். அந்த அறத்தை நாம் பின்பற்றுவதால்தான் விராஜ நாடு நமக்கு எவ்வளவோ தொல்லை கொடுத்தாலும் அவர்கள் மீது படையெடுக்காமல் இருக்கிறோம். ஒருவேளை அவர்கள் நம் மீது படையெடுத்தால் நாமும் போர் செய்யத்தான் வேண்டும். அது வேறு நிலை. அந்த நிலை வரும் வரை நாம் கொல்லாமை அறத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்" என்றான் அரசன்.

"அப்படியானால் இவனுக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதித்து விடலாம்!" என்றார் அமைச்சர்.

"வேண்டாம் அமைச்சரே. இவனை இவன் நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவோம். தன் தற்கொலைப்படை வீரன் ஒருவனை பலி கொடுத்தாவது என்னைக் கொல்ல வேண்டும் என்று நினைத்த விராஜ அரசனுக்கு, தன்னைக் கொல்ல வந்தவனையும் கொல்வதில்லை என்ற நம் அறக் கோட்பாடு சென்று சேரட்டும். நம் நாட்டு எல்லையைத் தாண்டி விராஜ நாட்டில் காலெடுத்து வைக்கும் வரை இந்த தூதனுக்கு எதுவும் ஆகக்கூடாது. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு அமைச்சரே!" என்றான் அரசன். 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 327
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

பொருள்:
தன் உயிரே போவதாயினும், இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்

Tuesday, May 5, 2020

326. சரவணனுக்கு நேர்ந்த விபத்து

"என்னங்க நீங்க, எறும்புப் பவுடர், கரப்பான் பூச்சி மருந்தெல்லாம் கூடப் பயன்படுத்தக் கூடாதுங்கறீங்க!" என்று அலுத்துக் கொண்டாள் சகுந்தலா.

"எந்த உயிரையும் கொல்லக் கூடாது சகுந்தலா!" என்றான் சரவணன்.

"நாம என்ன அதுகளைக் கத்தியால குத்தறமா, இல்ல துப்பாக்கியால சுடறமா? மருந்து வைக்கறோம். அதுங்க அதைத் தின்னுட்டு விஷத்தினால செத்துப்போகுதுங்க. அதுங்க செத்துப் போறது கூட நமக்குத் தெரியாது! எங்கேயோ போய் செத்துக் கிடக்கும்!"

"விஷத்தைத் தின்னு அதுங்க செத்துப் போகணுங்கற எண்ணத்திலதானே இந்த மருந்தையெல்லாம் வாங்கிக்கிட்டு வந்து வைக்கறோம்?"

"அப்ப அதுங்களோட சேந்துதான் நாமக் குடித்தனம் பண்ணணுங்கறீங்களா?" என்றாள் சகுந்தலா எரிச்சலுடன். 

"எறும்புங்க ஒண்ணும் செய்யாது. கரப்பு இருந்தா பிடிச்சு ஒரு பேப்பர்ல வச்சு வெளியே தூக்கிப் போட்டுடலாம். எதுக்குக் கொல்லணும்?" என்றான் சரவணன் பொறுமையாக.

பலமுறை நடக்கும் முடிவற்ற உரையாடல் இது என்பதால் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து சகுந்தலா அதோடு நிறுத்திக் கொண்டாள்.

ரவணன் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தான். சகுந்தலா வீட்டில் இருந்தாள். சற்று நேரம் கழித்து அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சரவணனுக்கு விபத்து நேர்ந்து விட்டதாம்.

மருத்துவ மனைக்குச் சென்றபோதுதான் அவளுக்கு முழு விவரமும் தெரிந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சரவணனுக்கு திடீரென்று இதயவலி ஏற்பட்டிருக்கிறது. சில வினாடிகள் அவன் செயலற்று இருந்தபோது கட்டுப்பாட்டை விட்டு விட்டதால் வண்டி கீழே விழுந்து அவனுக்குத் தலையில் அடிபட்டு விட்டது.

தலையில் பட்ட அடி, இதய பாதிப்பு இரண்டுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சரவணன் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்றார்கள் மருத்துவர்கள். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இதையே சொல்லி வந்தார்கள்.

ரு மாதம் கழித்து சரவணன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். 

"அவர் பிழைப்பார் என்று ஆரம்பத்தில் எங்களுக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. அவர் பிழைத்தது அதிசயம்தான். போன பிறவியில் அவர் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும்" என்றார் டாக்டர்.

"போன பிறவியில் அவர் என்ன செய்தாரோ எனக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் ஒரு சிறு உயிரைக் கூடக்  கொல்லக் கூடாது என்று  அவர் வைராக்கியமாக இருந்ததுதான் எனக்குத் தெரியும். மற்ற உயிர்களைக் கொல்லக் கூடாது என்று இவ்வளவு உறுதியாக இருந்த இவர் உயிரைக் கொடுமையாகப் பறிக்க எமனுக்கு எப்படி மனம் வரும்?' என்று நினைத்துக் கொண்டாள் சகுந்தலா. 

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 33     
  கொல்லாமை  
குறள் 326
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

பொருள்:
கொல்லாமை என்ற அறத்தைப் பின்பற்றுபவனின் வாழ்நாளின் மீது உயிரைக் குடிக்கும் எமன் கூடக் குறுக்கிட மாட்டான்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்