![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh74oPABAVASvxJ9c3m0U0APOW4lTmOrroL5BnNndG6LFkJHovkFsonNm0TplXPn7BkDKFo9cCD5sZXDu1fbNNOrhaHzduhjb0E4kLCEdv2cS-ijrDDajbKPIF2by8DXgG4ACqE-GnUkxA/s400/download+%252812%2529.png)
வெளியூருக்குச் சென்று பெரிய மருத்துவர்களிடம் காட்ட, அவன் மனைவி முத்தழகுக்கு வசதியில்லை.
குடும்பத்தைக் காப்பாற்ற, முத்தழகு வயல் வேலை, வீட்டு வேலை என்று நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருந்தது.
'நல்ல வேளை, எனக்குக் குழந்தைகள் இல்லை. இருந்திருந்தால், அவர்களைக் காப்பாற்றுவது பெரும்பாடாக இருந்திருக்கும்' என்று நினைத்துக் கொண்டாள் முத்தழகு.
இத்தனை காலமாக ஒரு குறையாக இருந்த விஷயம், இப்போது ஒரு ஆறுதலாக அமைந்து விட்டது விசித்திரமாக இருந்தது.
அன்று முத்தழகு வெளியில் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, குமரகுருவின் அருகில் யாரோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள் .
"இவன் என் சிநேகிதன் தண்டபாணி. சின்ன வயசில நாங்க ஒண்ணா வேலை செஞ்சோம்!" என்றான் குமரகுரு.
"எங்கே?" என்றாள் முத்தழகு.
தண்டபாணி என்ன பதில் சொல்லலாம் என்று யோசிப்பது போல் தோன்றியது.
"நான் என்ன கம்பெனியிலேயா வேலை செஞ்சேன்? கூலி வேலை செய்யறப்ப, அவனும் நானும் சில சமயம் சேர்ந்து வேலை செஞ்சிருக்கோம்" என்றான் குமரகுரு, எரிச்சலுடன்.
"சாதாரணமாத்தான் கேட்டேன். அதுக்கு ஏன் இப்படி வள்ளுன்னு விழற?" என்ற முத்தழகு, தண்டபாணியைப் பார்த்து, "காப்பித் தண்ணி குடிக்கறீங்களா?" என்றாள், குரலில் கனிவை வரவழைத்துக் கொண்டு.
"அதெல்லாம் வேணாம். நீங்களே வெளியில போயிட்டுக் களைச்சு வந்திருக்கீங்க!" என்றான் தண்டபாணி .
"காப்பி போடு, முத்தழகு! நீயும் களைச்சுப் போய் வந்திருக்க. நீயும் கொஞ்சம் குடிச்சுக்க!" என்றான் குமரகுரு, மனைவியைச் சமாதானப்படுத்துவது போல்.
"இதோ போடறேன்" என்று உள்ளே போன முத்தழகு, "காப்பித்தூள் இல்ல. கடையில போய் வாங்கிட்டு வந்துடறேன்" என்று கிளம்பினாள்.
"அதான் வேணாம்னு சொன்னேனே!" என்று தண்டபாணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, முத்தழகு வெளியே போய் விட்டாள்.
முத்தழகு வெளியே சென்றதும், நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
"சின்ன வயசில, செய்யக் கூடாததெல்லாம் செஞ்சுட்டோம். கூலி வாங்கிக்கிட்டு அடிதடி எல்லாம் செஞ்சிருக்கோம். ஒரு அப்பாவி மனுஷனைக் கொலை கூட செஞ்சிருக்கோம். அதான் இப்படிப் படுத்துதுன்னு நினைக்கறேன்" என்றான் குமரகுரு.
காப்பி தம்ளருடன் முத்தழகு உள்ளே வந்தாள்.
"நீ கடைக்குப் போயிட்டு எப்ப திரும்பி வந்தே? நீ வந்ததை நான் பாக்கவே இல்லையே!" என்றான் குமரகுரு, சற்று அதிர்ச்சியுடன்.
"அப்பவே வந்துட்டேன். நீங்க ரெண்டு பெரும் சேந்து செஞ்ச கொலையைப் பத்திப் பேசிக்கிட்டிருந்ததில, நான் வந்ததை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க!" என்றாள் முத்தழகு, தண்டபாணியிடம் காப்பி தம்ளரை நீட்டியபடியே.
துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை
குறள் 330உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
நோய் மிகுந்த உடலுடன் வறுமையில் வாழ்பவர், முன்பு கொலைகள் செய்தவர்களாக இருப்பார்கள் என்று அறிஞர் கூறுவர்.
No comments:
Post a Comment