"அரசே! விராஜ நாட்டு மன்னரிடமிருந்து தூதுவன் வந்திருக்கிறான்" என்றார் அமைச்சர்.
"வரச் சொல்லுங்கள்!" என்றான் அரசன்.
காவலர்களால் அரசவைக்கு அழைத்து வரப்பட்ட தூதன், அரசருக்குத் தலை தாழ்த்தி வணக்கம் செலுத்தி விட்டு, "வணக்கம் அரசே! எங்கள் மன்னர் தங்களுக்கு ஒரு ஓலை அனுப்பி இருக்கிறார்!" என்றான்.
"நல்லது. எங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருந்த உங்கள் மன்னர் ஓலை அனுப்பி இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஓலையைக் கொடு" என்றான் அரசன்.
தூதனிடமிருந்து ஓலையை வாங்கி மன்னனிடம் எடுத்துச் செல்ல, ஒரு காவலன் தூதனை நோக்கி வந்தான்.
தன் இடுப்புக் கச்சையிலிருந்து ஓலையை எடுத்த தூதன், யாரும் எதிர்பாராத விதத்தில் ஓலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய அம்பை எடுத்து, மின்னல் வேகத்தில் அதை அரசனை நோக்கி வீசி விட்டான்.
தூதனையே பார்த்துக் கொண்டிருந்த அரசன் ஏதோ ஒரு உந்துதலில் சட்டென்று அரியணையிலிருந்து பக்கவாட்டில் குதிக்க, தூதன் விட்ட அம்பு அரியணையின் மீது குத்தி நின்றது
காவலர்கள் உடனே தூதனை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். ஒரு வீரன் ஓடிச் சென்று, அரியணையில் குத்தியிருந்த அம்பைப் பிடுங்கி அமைச்சரிடம் கொடுத்தான்.
அரசன் மீண்டும் அரியணையில் அமர்ந்து கொண்டான்.
அமைச்சர் எழுந்து, "அரசே! விராஜ நாட்டு மன்னர் தான் ஒரு கோழை என்பதைக் காட்டி விட்டார். இல்லாவிட்டால், ஒரு தூதனைக் கொலையாளியாக அனுப்பி இருப்பாரா? தங்கள் உள்ளுணர்வால் உந்தப் பட்டதால், தாங்கள் உயிர் தப்பினீர்கள். நாங்கள் அனைவருமே உங்களுக்குப் பாதுகாப்புக்கு கொடுக்கத் தவறி விட்டோம்..." என்று உணர்ச்சி பொங்கப் பேச ஆரம்பித்தார்.
அரசன் அமைச்சரைக் கையமர்த்தி விட்டு, தூதனைப் பார்த்து, "சொல், தூதா! உன் திட்டம் என்ன? என்னைக் கொன்று விட்டு நீ எப்படித் தப்பிக்கலாம் என்று திட்டம் போட்டிருந்தாய்?" என்றான்.
"அரசே! நான் எங்கள் நாட்டின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவன். என் உயிர் எனக்கு ஒரு பொருட்டல்ல. உங்களைக் கொன்ற பிறகு நான் உயிர் பிழைக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். எங்கள் நாட்டின் எதிரியான உங்களைக் கொன்று விட்டு, நானும் மடிந்து போகத் தயாராகத்தான் வந்தேன்" என்றான் தூதன், வீராப்புடன்.
"பாவம்! உன் இரண்டு நோக்கங்களுமே நிறைவேறப் போவதில்லை!" என்றான் அரசன், சிரித்தபடி.
"அரசே!" என்றான் தூதன், புரியாதவனாக.
"என்னைக் கொல்லும் முயற்சியில் நீ தோற்று விட்டாய். நீயும் உயிர் துறக்கப் போவதில்லை!"
"மன்னிக்க வேண்டும், மன்னரே! தூதனைக் கொல்லக் கூடாது என்ற விதி இந்தக் கொலைகாரனுக்குப் பொருந்தாது. உங்களைக் கொல்ல முயன்ற இவனுக்கு மரண தண்டனை கொடுக்கத்தான் வேண்டும்" என்றார் அமைச்சர்.
"நம் நாட்டில்தான் மரணதண்டனை கிடையாதே, அமைச்சரே!"
"அரசே! அந்தப் பொதுவான விதி, தூத தர்மத்தை மாறிய இவனைப் போன்ற வேற்று நாட்டுக் கொலையாளிகளுக்குப் பொருந்தாது."
"அமைச்சரே! கொல்லாமை என்பது ஒரு விதி அல்ல, ஒரு அறம். அந்த அறத்தை நாம் பின்பற்றுவதால்தான், விராஜ நாடு நமக்கு எவ்வளவோ தொல்லை கொடுத்தாலும், அவர்கள் மீது படையெடுக்காமல் இருக்கிறோம். ஒருவேளை அவர்கள் நம் மீது படையெடுத்தால், நாமும் போர் செய்யத்தான் வேண்டும். அது வேறு நிலை. அந்த நிலை வரும் வரை, நாம் கொல்லாமை அறத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்போம்" என்றான் அரசன்.
"அப்படியானால், இவனுக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதித்து விடலாம்!" என்றார் அமைச்சர்.
"வேண்டாம், அமைச்சரே. இவனை இவன் நாட்டுக்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவோம். தன் தற்கொலைப்படை வீரன் ஒருவனை பலி கொடுத்தாவது என்னைக் கொல்ல வேண்டும் என்று நினைத்த விராஜ அரசனுக்கு, தன்னைக் கொல்ல வந்தவனையும் கொல்வதில்லை என்ற நம் அறக் கோட்பாடு சென்று சேரட்டும். நம் நாட்டு எல்லையைத் தாண்டி விராஜ நாட்டில் காலெடுத்து வைக்கும் வரை, இந்த தூதனுக்கு எதுவும் ஆகக் கூடாது. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு, அமைச்சரே!" என்றான் அரசன்.
துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை
குறள் 327தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
தன் உயிரே போவதாயினும், இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக் கூடாது.
No comments:
Post a Comment