![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdK7zBTKu4Wt9rBHJUA17ffRohfPxW96gnk57SQEE3L2sDXitUJz7ph1ZndwjPK-Ewt0e2AXqXqCsqw-BFozaEPYZ5eKM_gtkq1vVyVHjyXtlN1FbEOxQEzE0iavb-YMfwK4FIq5g8k78/s400/download+%252839%2529.jpg)
"எந்த உயிரையும் கொல்லக் கூடாது, சகுந்தலா!" என்றான் சரவணன்.
"நாம என்ன அதுகளைக் கத்தியால குத்தறமா, இல்ல துப்பாக்கியால சுடறமா? மருந்து வைக்கறோம். அதுங்க அதைத் தின்னுட்டு, விஷத்தினால செத்துப் போகுதுங்க. அதுங்க செத்துப் போறது கூட நமக்குத் தெரியாது! எங்கேயோ போய் செத்துக் கிடக்கும்!"
"விஷத்தைத் தின்னு அதுங்க செத்துப் போகணுங்கற எண்ணத்திலதானே இந்த மருந்தையெல்லாம் வாங்கிக்கிட்டு வந்து வைக்கறோம்?"
"அப்ப அதுங்களோட சேர்ந்துதான் நாம குடித்தனம் பண்ணணுங்கறீங்களா?" என்றாள் சகுந்தலா, எரிச்சலுடன்.
"எறும்புங்க ஒண்ணும் செய்யாது. கரப்பு இருந்தா, அதைப் பிடிச்சு ஒரு பேப்பர்ல வச்சு வெளியே தூக்கிப் போட்டுடலாம். எதுக்குக் கொல்லணும்?" என்றான் சரவணன், பொறுமையாக.
பலமுறை நடக்கும் முடிவற்ற உரையாடல் இது என்பதால், பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து, சகுந்தலா அதோடு நிறுத்திக் கொண்டாள்.
சரவணன் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தான். சகுந்தலா வீட்டில் இருந்தாள். அப்போது அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரவணனுக்கு விபத்து நேர்ந்து விட்டதாம்.
மருத்துவமனைக்குச் சென்ற பிறகுதான் அவளுக்கு முழு விவரமும் தெரிந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரவணனுக்கு திடீரென்று இதயவலி ஏற்பட்டிருக்கிறது. சில வினாடிகள் அவன் செயலற்று இருந்தபோது கட்டுப்பாட்டை விட்டு விட்டதால், வண்டி கீழே விழுந்து அவனுக்குத் தலையில் அடிபட்டு விட்டது.
தலையில் பட்ட அடி, இதய பாதிப்பு இரண்டுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சரவணன் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்றார்கள் மருத்துவர்கள். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு இதையே சொல்லி வந்தார்கள்.
ஒரு மாதம் கழித்து, சரவணன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
"அவர் பிழைப்பார் என்று ஆரம்பத்தில் எங்களுக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. அவர் பிழைத்தது அதிசயம்தான். போன பிறவியில் அவர் நிறையப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!" என்றார் டாக்டர்.
"போன பிறவியில் அவர் என்ன செய்தாரோ எனக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் ஒரு சிறு உயிரைக் கூடக் கொல்லக் கூடாது என்று அவர் வைராக்கியமாக இருந்ததுதான் எனக்குத் தெரியும். மற்ற உயிர்களைக் கொல்லக் கூடாது என்று இவ்வளவு உறுதியாக இருந்த இவர் உயிரைக் கொடுமையாகப் பறிக்க எமனுக்கு எப்படி மனம் வரும்?' என்று நினைத்துக் கொண்டாள் சகுந்தலா.
அறத்துப்பால் துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை
குறள் 326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
கொல்லாமை என்ற அறத்தைப் பின்பற்றுபவனின் வாழ்நாளின் மீது உயிரைக் குடிக்கும் எமன் கூடக் குறுக்கிட மாட்டான்.
No comments:
Post a Comment