கூலி வேலைக்குச் சென்று மகனைக் காப்பாற்றி வந்த அவன் தாயும் அவனுக்குப் பத்து வயதாகும்போது திடீரென்று இறந்து விட்டாள்.
அவன் தாயின் மரணத்துக்கு வந்து போன உறவினர்கள் யாரும் சுப்புவை வளர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. பொருளாதார உதவி செய்யவும் முன் வரவில்லை.
தனித்து விடப்பட்ட சுப்புவுக்கு, அவன் பெற்றோருக்குச் சொந்தமான சிறிய வீடு மட்டும் இருந்தது.
ஊரில் சிலர் அவனுக்கு அவ்வப்போது ஒரு வேளை சாப்பிட ஏதாவது கொடுத்து வந்தனர். சிலர் அதற்கு விலையாக அவனிடம் சிறு வேலைகளையும் வாங்கிக் கொண்டனர்.
உழைத்தால்தான் தனக்கு உணவு கிடைக்கும் என்று புரிந்து கொண்ட சுப்பு, தன்னால் முடிந்த சிறு வேலைகளைச் செய்து சிறிதளவு சம்பாதித்துத் தன் வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டான்.
அந்த நிலையில்தான், எதிர்பாராத அந்தச் செய்தி வந்தது.
அவன் அம்மாவைத் தேடிக் கொண்டு அந்த ஊருக்கு வந்த ஒரு வக்கீல், சமீபத்தில் காலமான அவன் அம்மாவின் சித்தப்பா ஒருவர், தன் சொத்தை சுப்புவின் அம்மாவுக்கு எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அந்த சித்தப்பா நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவன் அம்மா இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை போலும்!
சுப்புவுக்கு எதுவும் புரியவில்லை. அந்த ஊரிலிருந்த விஷயம் தெரிந்த ஓரிருவர் சுப்புவின் உதவிக்கு வந்தனர்.
வக்கீல் அவனிடம் சில கையெழுத்துக்கள் வாங்கிக் கொண்டார். அவனுக்கு உதவ வந்தவர்களின் ஒப்புதலைப் பெற்று, அவன் கையெழுத்துக்களைப் போட்டான்.
சொத்தின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறிய வக்கீல், நீதிமன்ற ஒப்புதல் பெற்று சொத்துக்கள் சுப்புவின் மேல் மாற்றப்பட சில வாரங்கள் ஆகும் என்றும், தான் தகவல் தெரிவித்ததும் சுப்பு நீதிமன்றத்துக்கு நேரில் வர வேண்டி இருக்கும் என்றும் சொல்லி விட்டுப் போனார்.
வக்கீல் வந்து விட்டுப் போன செய்தி பரவியதும், ஊரில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
அவனை யாரும் வேலை செய்ய அனுமதிக்கவில்லை. ''நீ எதுக்குடா வேலை செய்யணும்? இனிமே நீயே வேலைக்கு ஆள் வச்சுக்கலாமே!'' என்றார், கூலி குறைவாகக் கொடுத்தால் போதும் என்பதற்காகவே அவனுக்கு அதிகம் வேலை கொடுத்துக் கொண்டிருந்த அய்யாவு.
அவனுக்கு சாப்பாடு போடப் பலர் முன் வந்தனர். பல சமயம், "இல்ல, நான் சாப்பிட்டுட்டேன், மூணாவது தெருவிலேந்து கொடுத்து விட்டாங்க'' என்பது போல் அவன் பதில் சொல்ல வேண்டி இருந்தது.
சுப்புவுக்குப் புதிதாக சில நண்பர்களும் கிடைத்தனர். அவன் வயதை ஒத்தவர்கள், அவனை விடப் பெரியவர்கள் என்று பலரும் அவன் வீட்டுக்கு வந்து அவனிடம் அன்பாகப் பேசினர்.
''உனக்கு நான் இருக்கேன். உனக்கு எந்த உதவி வேணும்னாலும் தயங்காம எங்கிட்ட கேளு!'' என்பது அவர்களில் பலர் சொன்னது.
இத்தனை நாட்களாக ஏன் யாரும் இப்படிச் சொல்லவில்லை என்று சுப்புவுக்குத் தோன்றினாலும், அதைப் பற்றி அவன் அதிகம் யோசிக்கவில்லை, அப்படி யோசிக்கும் திறனும் அவனிடம் இல்லை.
தனக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை இத்தனை பேர் வந்து பார்ப்பதும், தன்னை மதித்துப் பேசுவதும் சுப்புவுக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.
எல்லாவற்றுக்கும் மேல், தான் இனி எடுபிடி வேலை செய்ய வேண்டியதில்லை, கௌரவமாக வாழலாம் என்ற எண்ணமே அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.
ஒரு மாதத்துக்குப் பிறகும், வக்கீலிடமிருந்து தகவல் ஏதும் வரவில்லை. சுப்புவிடம் புதிதாக அக்கறை காட்டியவர்களில் ஒருவரான துரைசாமி என்பவர் வக்கீலுக்கு ஃபோன் செய்து விசாரிப்பதாகச் சொன்னார்.
அடுத்த நாள் சுப்பு ஒரு மாறுதலை உணர்ந்தான். அன்று காலையிலிருந்து அவன் வீட்டுக்கு யாரும் வரவில்லை.
வீட்டுக்கு வெளியே வந்து நின்றான். தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த அய்யாவு, அவனைப் பார்த்து, ''டேய் சுப்பு! தோட்டத்தில செடியெல்லாம் வெட்ட வேண்டி இருக்கு. நாளைக்கு வந்து செஞ்சுடு!'' என்றார்.
சுப்பு எதுவும் புரியாமல் அவரைப் பார்க்க, ''ஓ! உனக்குத் தெரியாதா? துரைசாமி ஊர் பூரா சொல்லிட்டான், உங்கிட்ட சொல்லலியா? உன் அம்மாவோட சொந்தக்காரன் யாரோ கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்டே வாங்கிட்டானாம். கேஸ் முடிய நிறைய வருஷம் ஆகுமாம். சொத்து உனக்குக் கிடைக்கறது கஷ்டம்னு வக்கீல் சொன்னாராம். என்ன, நாளைக்கு வந்துடறியா?'' என்று சொல்லி விட்டு, அவன் பதிலை எதிர்பாராமல் நடந்தார் அய்யாவு.
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
குறள் 332கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
பொருள்:
பெரிய செல்வம் வந்து சேர்வது கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது. அது நீங்கிப் போவது கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்து செல்வதைப் போன்றது.
No comments:
Post a Comment