![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwzpHAWQL5NgJVUA6X6tgmFmlBDx4Cr9zQVJxgILWlIqWn5cbKcEmTb9ZHjPyeYgfA1LK75Brf8TXbE9WGEdezzQqe-TKSAcnklcne5RXhnfY5NO0dfxXzmdrqkQsumNkqhaz5WwKwKG4/s400/download+%252811%2529.png)
சமூக நீதிக் கட்சி அலுவலகத்தில், கட்சித் தலைவர் சாமிநாதன், கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
"இன்னிக்கு சாயந்திரம் ராஜரத்தினம் என்னை வந்து சந்திக்கப் போறாரு. அநேகமா, அவர் நம்ம கட்சியில சேர விருப்பம் தெரிவிப்பார்னு எதிர்பாக்கலாம். அது பத்தி நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்க?" என்றார் சாமிநாதன்.
ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், ராஜரத்தினம் தங்கள் கட்சியில் இணைந்தால், அது கட்சிக்கு வலு சேர்க்கும் என்றே எல்லோரும் கருத்துத் தெரிவித்தனர். தங்கள் கட்சிக்கும், தமிழ் மக்கள் கட்சிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிப்பதால், ஜாதிச் செல்வாக்கு உள்ள ராஜரத்தினத்தின் வரவு, தங்கள் கட்சிக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
கட்சியில் ராஜரத்தினம் தனக்கு ஒரு முக்கிய பதவியை எதிர்பார்ப்பார் என்றும், அவர் விரும்பும் பதவியைக் கொடுத்து அவரைக் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அனைவரும் ஒருமித்த குரலில் கூறினர்.
"உங்களோட கருத்துக்களை சொல்லிட்டீங்க. நான் என்ன முடிவு எடுத்தாலும், அதை ஏத்துப்பீங்க இல்ல?" என்றார் சாமிநாதன்.
"நிச்சயமா, தலைவரே!" என்றனர் அனைவரும்.
ராஜரத்தினம் விரும்பியபடி, அவர் சாமிநாதனைச் சந்தித்துப் பேசியபோது, வேறு யாரும் உடன் இருக்கவில்லை.
தான் சமூக நீதிக் கட்சியில் சேர்ந்தால், அந்தக் கட்சிக்கு அது எந்த விதத்தில் பயனளிக்கும் என்பதைப் பற்றி ராஜரத்தினம் கூறியதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட சாமிநாதன், "ஆமாம், அரசியலுக்கு வரதுக்கு முன்னால நீங்க என்ன செஞ்சுக்கிட்டிருந்தீங்க?" என்றார்.
ராஜரத்தினம் சற்று திடுக்கிட்டவராக," ம்ம்... சொந்தமாத் தொழில் செஞ்சுக்கிட்டிருந்தேன்" என்றார்.
"என்ன தொழில்?"
"அதைப் பத்தி என்ன? நாம என்ன கூட்டா தொழில் செய்யவா போறோம்?" என்றார் ராஜரத்தினம், சற்று எரிச்சலுடன்.
ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சாமிநாதன், "எங்க கட்சியில சேர விரும்பறவங்களோட பின்னணியை விசாரிக்கிறது என்னோட பழக்கம். உங்க பின்னணி பத்தி நான் விசாரிச்சுட்டேன்" என்று சொல்லி நிறுத்தி, ராஜரத்தினத்தைப் பார்த்தார்.
ராஜரத்தினம் மௌனமாக இருந்தார்.
"ஆரம்பத்தில, நீங்க கூலிக்குக் கொலை செய்யறவரா இருந்திருக்கீங்க. பெரிய மனுஷங்ககிட்ட பெரிய தொகை வாங்கிக்கிட்டு, அவங்க சொல்ற ஆளைக் கொலை செய்யற கான்டராக்ட் கில்லர்!"
"அதனால் என்ன? நீங்க என்ன சாமியார் மடமா நடத்தறீங்க?" என்றார் ராஜரத்தினம், கோபம் பொங்கிய குரலில்.
"நான் நடத்தறது ஒரு அரசியல் கட்சிதான். அரசியல் கட்சிகளைப் பத்திப் பொதுவா எல்லோரும் சொல்ற குற்றச்சாட்டுகளை எங்களைப் பத்தியும் சொல்லலாம். ஆனா, ஒரு விஷயத்தில நாங்க உறுதியா இருக்கோம். வன்முறை அறவே கூடாதுங்கறது நாங்க உறுதியாக் கடைப்பிடிக்கிற கொள்கை. எங்களோட எந்தப் போராட்டத்திலேயும் கடுகளவு கூட வன்முறை இருந்தது கிடையாது. எங்களைக் கடுமையா விமர்சனம் பண்றவங்க கூட இதை ஒத்துக்கிட்டிருக்காங்க."
"நான் கூலிக்குக் கொலை செஞ்சதெல்லாம் பழங்கதை. அரசியலுக்கு வந்தப்பறம் நான் எந்தக் கொலையும் செஞ்சதில்லை. உங்க கட்சியில சேந்தப்பறம், நானும் முழு அஹிம்சாவாதியா மாறிடறேன்! ஏதாவது உறுதிப் பத்திரம் எழுதிக் கொடுக்கணும்னாலும், எழுதிக் கொடுக்கறேன்!" என்றார் ராஜரத்தினம், சிரித்துக் கொண்டே.
"மன்னிச்சுக்கங்க, ராஜரத்தினம். கொலைப் பின்னணி உள்ள உங்களை எங்க கட்சியில சேத்துக்க முடியாது" என்றார் சாமிநாதன், சுருக்கமாக.
சாமிநாதனைச் சந்தித்து விட்டு வெளியே வந்த ராஜரத்தினம், வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமல் காரில் ஏறிச் செல்ல, சாமிநாதனின் அறைக்கு வெளியே காத்திருந்த அவர் கட்சியின் முக்கியத் தலைவர்கள். என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தனர்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை
குறள் 329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
கொலைத் தொழில் செய்பபவர்கள், அதன் இழிவை ஆராய்ந்து உணர்ந்தவர்களிடையே, கீழ்த்தரமானவர்களாகத்தான் கருதப்படுவர்.
இந்த கதையில் வரும் சம்பவம் மாதிரி ஏதாவது தமிழக அரசியலில் நடந்துள்ளதா?
ReplyDeleteஇது ஒரு கற்பனைக்கதை.
Delete