மேல்வளைவு நாட்டின் மன்னன் சிங்கவர்மன், தனக்கு வயதாகி விட்டதால் தன் மூத்த மகன் சூரியவர்மனுக்கு முடிசூடத் தீர்மானித்து, அண்மையிலிருந்த நாடுகள், தொலைவிலிருந்த நாடுகள் என்று பல்வேறு நாடுகளின் அரசர்களையும் முடிசூட்டு விழாவுக்கு அழைத்திருந்தான்.
அத்துடன், பல முனிவர்களையும் அழைத்திருந்தான்.
முடிசூட்டு விழா அரங்கம் முழுவதும், ஒரு புறம் அரசர்கள், மறுபுறம் முனிவர்கள் என்று நிறைந்திருக்க, நாட்டு மக்கள் சற்றுப் பின்னே நின்று விழாவைக் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
முடிசூட்டு விழா முடிந்ததும், விழாவை நடத்திக் கொடுத்த புரோகிதர், "அரசே! இப்போது விழாவுக்கு வந்திருக்கும் விருந்தினர்களை கௌரவிக்க வேண்டும். முதலில் யாரை கௌரவிப்பது என்பதைத் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
"இதில் முடிவு செய்வதற்கு என்ன இருக்கிறது? முதலில் கௌரவிக்கப்பட வேண்டியவர் இங்கு வந்திருக்கும் முனிவர்களுக்குள் மிக உயர்ந்தவர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கௌதம முனிவர்தான்!" என்று கூறிய சிங்கவர்மன், கௌதம முனிவர் இருக்கும் இடத்துக்கு நடந்து சென்றான்.
அவனைத் தொடர்ந்து அரசியும், அரசியைத் தொடர்ந்து மாலை, மற்ற பரிசுகள் கொண்ட பெரிய தங்கத் தட்டுக்களை ஏந்தியபடி சில ஊழியர்களும் சென்றனர்.
அரசன் கௌதம முனிவர் அருகில் சென்று அவரை வணங்க முற்பட்டபோது, அவனைத் தடுத்த முனிவர், "சிங்கவர்மா! ஒரு நிமிடம் இரு! என்னை விடத் தகுதி வாய்ந்த ஒருவர் இந்த அரங்கில் இருக்கிறார். அவருக்குத்தான் நீ முதல் மரியாதை செய்ய வேண்டும்!" என்றார்.
"தங்களை விடத் தகுதி வாய்ந்தவர் யார் இருக்க முடியும், முனிவரே!" என்றான் சிங்கவர்மன், வியப்புடன்.
அமர்ந்திருந்த மன்னர்களில் ஒருவரைக் காட்டி, "அதோ அமர்ந்திருக்கிறானே, ஆதித்ய வர்மன் அவன்தான் இந்த முதல் மரியாதை பெறத் தகுதி உடையவன். என்னை விட உயர்ந்தவன்!" என்றார் கௌதமர்.
"மன்னிக்க வேண்டும், முனிவரே! ஆதித்ய வர்மர் ஒரு சிறிய நாட்டின் மன்னர். நீங்களோ உலகம் போற்றும் ஒரு மாமுனிவர். அவர் எப்படி உங்களை விடச் சிறந்தவராக இருக்க முடியும்?" என்றான் சிங்கவர்மன்.
"சிங்கவர்மா! என் போன்ற முனிவர்கள் இந்த உலக வாழ்வை விரும்பாமல், துறவற வாழ்க்கை மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், ஆதித்ய வர்மன் உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற விரதத்தை மேற்கொண்டிருக்கிறான். கொல்லாமை என்னும் அறத்தைப் பின்பற்றுவதால்தான், அவன் போரை விரும்பாமல், தன்னைப் பகைத்த நாடுகளுடன் கூடப் போரிடாமல் சமாதானம் செய்து கொண்டு, ஒரு சிறிய நாட்டுக்கு அரசனாக இருப்பதில் திருப்தி அடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். போரில் மனிதர்களைக் கொல்வது க்ஷத்திரிய தர்மம் என்ற சமாதானத்தைக் கூட ஏற்காமல், மிகக் கடினமான விதத்தில் கொல்லாமை அறத்தைக் கடைப்பிடித்து வரும் ஆதித்ய வர்மன்தான் துறவு வாழ்க்கை வாழும் என்னை விட மேலானவன்!" என்றார் கௌதமர்.
சிங்கவர்மன் மௌனமாக ஆதித்ய வர்மன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி நடக்க, அரசியும், பரிசுத்தட்டுகள் ஏந்திய ஊழியர்களும் அரசனைப் பின் தொடர்ந்தனர்.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
இவ்வுலக வாழ்க்கை என்னும் நிலையைக் கண்டு அஞ்சிப் பிறவாமை வேண்டித் துறவு பூண்டவர்கள் எல்லோரையும் விட, உயிர்களைக் கொல்வதற்கு அஞ்சி, கொல்லாமை என்ற அறத்தைக் கடைப்பிடிப்பவனே உயர்ந்தவன்.
No comments:
Post a Comment