![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgs78AORN2x60TM5DpOftMvy4s1eZqAhtmsyYsTldbVXh8ZMfSXWbupdmY2CaKPt3ToW7aspCH2P1dnKC8tM2qW6v1NCzkk_a_hBnHwSU1TS54-Tl4937ypKgOA8cHMPTt1QyaWHHk3CQ8/s400/323.jpg)
அமைச்சர் அநிருத்தர் சற்றுப் பதட்டத்துடன் அரசனின் முன் நின்றார். 'மன்னர் எதற்கு என்னிடம் தனியாகப் பேச விரும்புகிறார்?'
"அமைச்சரே! நம் நாடு தனித்தன்மை வாய்ந்த நாடு என்பது உங்களுக்குத் தெரியும்."
"ஆம், அரசே! தங்கள் ஆட்சியில் நம் நாடு பல விஷயங்களில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குகிறது."
"நான் சொல்வது நாம் கடைப்பிடித்து வரும் கொல்லாமை என்ற அறத்தைப் பற்றி. நம் முன்னோர்கள் வகுத்த வழிப்படி, நம் நாட்டு மக்கள் அனைவரும் மரக்கறி உணவையே உண்கிறார்கள். நம் நாட்டில் கொலைகள் நடப்பதில்லை. எந்தப் பெரிய குற்றத்துக்கும் நாம் மரண தண்டனை விதிப்பதில்லை. ஆயுள் தண்டனை அல்லது நாடு கடத்துதல் என்பதுதான் நாம் விதிக்கும் அதிக பட்ச தண்டனை. இவ்வாறு கொல்லாமையைக் கடைப்பிடிக்கும் நாடு உலகிலேயே நம் நாடு மட்டும்தானே?"என்றான் அரசன்.
"ஆமாம், அரசே! இவற்றை நாம் பல தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கிறோமே!" என்றார் அமைச்சர்.
"ஆயினும், நம் நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் காடுகளில், சில விலங்குகள் வேட்டையாடிக் கொல்லப்படுவது என்பது எப்போதாவது நிகழ்கிறது அல்லவா?"
"ஆமாம், அரசே! காட்டில் வாழும் சில ஆதிவாசிகள் இந்தச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நம் நாட்டு எல்லைக்கு வெளியே வசிப்பவர்கள். அந்தக் காட்டில் ஒரு பகுதிதான் நம் நாட்டுக்குள் வருகிறது என்பதால், நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை" என்றார் அமைச்சர்.
அரசர் என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தது போல், அவரிடம் ஒரு பதட்டம் இருந்தது.
" உண்மைதான். ஆனால், சமீபத்தில் நம் நாட்டுக் குடிமகன் ஒருவன் அந்தக் காட்டுக்குச் சென்று அங்கே ஒரு புலியை வேட்டையாடி இருக்கிறானாமே, உண்மையா?" என்றான் அரசன், அமைச்சரின் கண்களை நேராகப் பார்த்து.
"எனக்கு அத்தகைய தகவல் எதுவும் வரவில்லை, அரசே!" என்றார் அமைச்சர், பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு.
"இளவரசனைக் காப்பாற்ற நீங்கள் முயற்சி செய்ய வேண்டாம், அமைச்சரே! எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நான் இளவரசனை விசாரித்து விட்டேன். அவனே என்னிடம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டான்!" என்றான் அரசன்.
"என்னை மன்னித்து விடுங்கள், அரசே! எனக்கும் இந்தத் தகவல் வந்தது. எல்லைப்புறப் பகுதிகளுக்கு ஒரு வேலையாகச் சென்றபோது, வேட்டையாட வேண்டும் என்ற ஆர்வத்தால், தான் ஒரு புலியின் மீது அம்பு எய்ததாகவும், இறந்து விட்ட புலியின் உடலைச் சில ஆதிவாசிகள் எடுத்துச் சென்று விட்டதாகவும், இளவரசரே என்னிடம் சொன்னார். தங்களுக்குத் தெரிந்தால் கோபிப்பீர்கள் என்பதால், தங்களுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால்தான், நீங்கள் கேட்டபோது, முதலில் உண்மையைச் சொல்லவில்லை!" என்றார் அமைச்சர்.
"நல்லது, அமைச்சரே! நம் நாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொல்லாமை என்ற அறத்தை மீறியதற்காக, இளவரசன் ஓராண்டு விவசாயத் தொழிலாளியாகப் பணி புரிய வேண்டும் என்று அவனுக்கு தண்டனை விதித்திருக்கிறேன். அவன் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று, அங்கே விவசாயத் தொழிலாளியாகப் பணி செய்ய ஏற்பாடு செய்யுங்கள். இதைச் சொல்லத்தான் உங்களை வரச் சொன்னேன்!" என்று சொல்லி விட்டு எழுந்தான் அரசன்.
இது பற்றி மேலே பேச அரசன் தயாராயில்லை என்று புரிந்து கொண்ட அமைச்சர், "சரி, மன்னா!" என்றார், சுரம் இறங்கிய குரலில்.
அவர் திரும்பி நடக்கத் தொடங்கியபோது, "இன்னொரு விஷயம், அமைச்சரே!" என்றான் அரசன்.
அமைச்சர் திரும்பினார்.
"கொல்லாமைக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியது பொய்யாமை. முதல் அறத்தை இளவரசன் மீறி விட்டான் என்றால், இரண்டாவது அறத்தை நீங்கள் மீறி விட்டீர்கள். இளவரசன் செய்த குற்றத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்தது மட்டுமின்றி, உண்மை அறிந்து நான் கேட்டபோதும், நீங்கள் உண்மையை மறைத்துப் பொய் கூறினீர்கள். எனவே, உங்களுக்கும் தண்டனை உண்டு! ஒரு மாதம் நீங்கள் ஊதியம் பெறாமல் பணியாற்ற வேண்டும். இதைச் சொல்ல எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆயினும், நீதி வழங்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது அல்லவா?"
அமைச்சரின் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டு, அரசன் தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள, அமைச்சர் அரசன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டுத் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டார்.
துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை
குறள் 323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
அறங்களில் முதன்மையானது பிற உயிர்களைக் கொல்லாமல் இருத்தல். அதற்கு அடுத்ததாக பொய்யாமையைக் கொண்டால் நன்று.
No comments:
Post a Comment