![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHfFpbWRJ4PWOrms94xt6nk7B4RoKMQKgh6sh2zLvzyEpcZXjJhYY1c6qEVg5cqrNi2lEzSCB0gK8pr_OKxhnBk3AYkUv9veznTLsiGcrG-USdmvgLO592_b06D8KY1lXGrkmr1F63QWo/s400/321.jpg)
"சாப்பிட வரீங்களா?" என்றாள் அவன் மனைவி தங்கம்.
"அஞ்சு நிமிஷம் படுத்துக்கிட்டு, அப்புறம் வரேன். வெய்யில்ல நடந்து வந்தது களைப்பா இருக்கு" என்ற மாணிக்கம், "ஆமாம், பசங்க வந்து சாப்பிட்டுட்டுப் போயிட்டாங்களா?" என்றான்.
பசங்க என்று அவன் குறிப்பிட்டது அவன் வயலில் வேலை செய்த இரண்டு இளைஞர்களை.
"இப்பதான் போறாங்க" என்ற தங்கம், "ஏன் நீங்க வரதுக்கு மட்டும் இவ்வளவு நேரமாச்சு?" என்றாள்.
"நம்ப தோட்டத்தில அடிபட்டு விழுந்து கிடந்த புறாவை சிகிச்சைக்காக வைத்தியர் வீட்டில விட்டிருந்தேன் இல்ல? அது எப்படி இருக்குன்னு பாத்துட்டு வந்தேன்."
"எப்படி இருக்கு? கால் குணமாயிடுச்சா? சிகிச்சை முடியறதுக்குள்ள பறந்து கிறந்து போயிடப் போகுது!"
"வைத்தியர் பச்சிலை மருந்து போட்டிருக்காரு. ரெண்டு நாள்ள குணமாயிடும்னு சொன்னாரு. அது அங்கேயே பக்கத்துலதான் சுத்திக்கிட்டிருக்கு. அவர் சாப்பாடு போடறதால, திரும்ப வருது. இன்னிக்குக் கால்ல மறுபடி மருந்து தடவினாராம். நேத்து முதல்ல மருந்து போடச்சே, பயந்து ஓடப் பாத்துச்சு. நான்தான் புடிச்சுக்கிட்டிருந்தேன். ஆனா இன்னிக்கு மருந்து போடச்சே, அழகாக் காலைக் காட்டிச்சுன்னு வைத்தியர் சொன்னாரு!"
"ஆச்சரியமா இருக்கே!"
"நாம அன்பு காட்டினா, பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் புரியும். நம்மைப் பாத்து பயப்படாது!"
"ஆமாம், வயல் வேலை இன்னியோட முடிஞ்சுட்டுதாமே, பையங்க நாளைக்கும் இங்க சாப்பிட வருவாங்களா?" என்றாள் தங்கம்.
"இல்ல. வேற வேலைக்குப் போறாங்களாம். அப்ப கூட மதியம் இங்க வந்து சாப்பிட்டுட்டுப் போங்கன்னு சொன்னேன். அவங்க வேலைக்குப் போகப் போற இடம் ரொம்ப தூரமாம். அதனால வரலைன்னுட்டாங்க" என்றான் மாணிக்கம்.
"தினம் ரெண்டு பேருக்கு சாப்பாடு போடறதுன்னு வச்சிருக்கமே, நாளையிலேந்து வேற யார் சாப்பிட வருவாங்க?" என்றாள் தங்கம்.
"கோவிலுக்கு வர வெளியூர்க்காரங்க யாரையாவது அழைச்சுக்கிட்டு வரேன்" என்றான் மாணிக்கம்.
சொன்னது போலவே, மறுநாள் கோவிலுக்கு வந்திருந்த வெளியூர்க்காரர்கள் இருவரைத் தன் வீட்டுக்குச் சாப்பிட அழைத்து வந்தான் மாணிக்கம்.
இருவரில் ஒருவர் ஒரு துறவி. ஊர் ஊராகச் சுற்றுபவர். அதனால், அவரை மட்டும் அன்று முழுவதும் தன் வீட்டில் தங்கி விட்டு மறுநாள் போகும்படி கேட்டுக் கொண்டான் மாணிக்கம். அவரும் சம்மதித்துத் தங்கினார். மற்றவர் சாப்பிட்டு விட்டுக் கிளம்பி விட்டார்.
மாலையில் மாணிக்கத்தின் வீட்டுக்குப் பின்னிருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்த துறவி, "ஆடு, கோழி எல்லாம் வளக்கற போலருக்கே!" என்றார்.
"ஆமாம், சாமி!" என்றான் மாணிக்கம்.
துறவி சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "கேக்கறேன்னு தப்பா நினைக்காதே. தினமும் ரெண்டு பேருக்கு சாப்பாடு போடறதுன்னு ஒரு வழக்கம் வச்சிருக்கே. பறவைகளுக்கு உணவு போடறே, அடிபட்ட பறவைகளுக்கு வைத்தியம் பாக்கற. ஆனா, ஆடு கோழியெல்லாம் வளக்கறியே, இதையெல்லாம் நீ யாருக்கு விப்ப? அதுகளை வெட்டிக் கறிக்கடைகளுக்கு அனுப்பறவங்களுக்குத்தானே? இது பாவம் இல்லையா? இவ்வளவு நல்லது செய்யற நீ, இந்தப் பாவத்தைச் செய்யலாமா?" என்றார்.
"சாமி! நீங்க நினைக்கிற மாதிரி, இதையெல்லாம் நான் யாருக்கும் விக்கறதில்ல. எங்கேயோ காயம் பட்டுக்கிட்ட அல்லது வியாதி வந்த ஆடு, கோழிகளை அவற்றை வளக்கறவங்க வச்சுக்க விரும்பாம சில சமயம் வெளியில விட்டுடுவாங்க. அதுகளை எடுத்து வந்துதான் நான் வளர்க்கறேன். அதுகளுக்கு வைத்தியம் பண்ணுவேன். சிலது பிழைக்காது. சிலது குணமாகி நல்லாயிடும். குணமானப்பறம், சில சமயம் அதை வளர்த்தவங்க எங்கிட்டேந்து திரும்ப வாங்கிட்டுப் போயிடுவாங்க. அப்படி வாங்கிக்கிட்டுப் போகலேன்னா, அதெல்லாம் இங்கேயே வளரும். அதுங்க சாகற வரையிலும் அதுங்களைக் காப்பாத்துவேன். ஒரு ஆடு, கோழியைக் கூட வித்ததில்ல!" என்றான் மாணிக்கம்.
"நான் எத்தனையோ அறநூல்களைப் படிச்சிருக்கேன். நீ செய்யறதை விட உயர்ந்த அறம் எதுவும் இல்லை!" என்றார் துறவி.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 33
கொல்லாமை
குறள் 322பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்து, தானும் உண்டு, வேறு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அற நூல்களை எழுதியவர்கள் தொகுத்து அளித்துள்ள அறங்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும்.
குறள் 321
ஐயா, வணக்கம்🙏
ReplyDeleteநான் கந்தன், கல்லிடைக்குறிச்சி.
நாளும் உங்கள் திருக்குறள்கதைகளில் உற்சாகம் கொள்கிறோம். அறிவை வளர்க்கிறோம். அதற்கான உங்கள் உழைப்பிற்கு எங்கள் அன்பும் வாழ்த்துகளும்💐💐🙏
இன்றைய குறளில் சிறு தெளிவுக்காக என் பகிர்வு... உங்கள் பார்வைக்கு...!
கொல்லாமை அதிகாரத்தில் 'ஒருவருக்கொருவர் பங்கிட்டு உண்டு பசியாறுங்கள்' என்று வள்ளுவர் சொல்வதாக எண்ணுவது சரியாகத் தோன்றவில்லை.
மாறாக, பகுத்துண்டு... பகுத்து... என்பது ஆராய்ந்து என்னும் பொருளைக் கொண்டதாகத்தான் கொள்ளமுடியும். குறளுக்கும் பொருந்தும்.
அதாவது, இவை உண்ணத்தக்கன, இவை தகாதன என்று ஆய்ந்து உண்ணும் பொருட்டு உயிர்க்கொலை தவிர்த்து அனைத்து உயிர்களையும் பேணுதல்' என்பதாகத்தான் வள்ளுவர் கருத்து இருக்க முடியும் என்று கருதுகிறேன்.
அன்புடன் உங்கள் சகோதரன்🙏
தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன் ஐயா, நன்றி 💐
தங்கள் கருத்துக்கு நன்றி. குறளின் பொருளை உரையாசிரியர்கள் கூறியபடிதான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பகிர்ந்து உண்பதன் மூலம் பல உயிர்களைக காப்பாற்ற முடியும் என்ற கருத்து கொல்லாமை அதிகாரத்துக்குப் பொருத்தமுடைந்துதானே? தாமதமாக பதிலளித்ததற்கு மன்னிக்கவும். உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன். மீண்டும் என் நன்றி.
Delete