![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNdQJYHWu0SSoqC8T0oesfwA5CH1FtzX2XRX5q8d8wYmnLvw9jJWJetZOscDF45SpfrpcNQmum27M7n9rfyhyphenhyphenLLLFTPqp6WwvZCxKr9C1dJVtHuya9kDeMK1U5R_-bkhdn4OXSclpIW3w/s400/320.jpg)
"அப்படியா? சங்கர் எனக்குத் தெரிஞ்சவன்தான்னாலும், என்கிட்டயும் திமிராத்தான் பேசுவான். எதுக்கும் நான் சொல்லிப் பாக்கறேன்" என்றார் பசுபதி.
இரண்டு நாட்கள் கழித்து நாகராஜனைச் சந்தித்த பசுபதி, "சங்கர் கிட்டப் பேசினேன். ஏதோ சாக்கு சொன்னான். ஒரு வாரத்தில அவன் வேற வேலைக்குப் போகப் போறானாம். அவன் வேலைக்குப் போகப் போற கம்பெனி பூந்தமல்லியில் இருக்கறதால, பூந்தமல்லியில வீடு பாத்துக்கிட்டிருக்கானாம். ஒரு மாசத்தில போயிடுவான். ஆனா, உங்க வாடகை பாக்கியைக் கொடுப்பானான்னு தெரியல. அவன் இதுக்கு முன்னால குடியிருந்த வீடுகள்ளேயும் இப்படித்தான் வாடகையை ஒழுங்காக் கொடுக்காம தாமதப்படுத்தறது, அஞ்சாறு மாச வாடகையை பாக்கி வச்சுட்டுக் காலி பண்றது இந்த மாதிரியெல்லாம் செஞ்சிருக்கானாம். அவனைப் பத்தி விசாரிச்சதில, இப்பதான் எனக்குத் தெரிஞ்சுது" என்றார் பசுபதி.
"காலி பண்ணினா போதும் சார்!" என்றார் நாகராஜன்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வீட்டைக் காலி செய்தான் சங்கர். இரண்டரை மாத வாடகை பாக்கியை அப்புறம் கொடுப்பதாகச் சொல்லி விட்டுப் போனான். ஆயினும், நாகராஜனுக்கு அந்தப் பணம் வரும் என்ற நம்பிக்கையில்லை. 'ஏதோ, இந்த மட்டும் காலி செய்தானே!' என்று நினைத்துக் கொண்டார்.
பசுபதியின் வீட்டுக்குச் சென்று, சங்கர் காலி செய்ததைச் சொல்லி அவருக்கு நன்றி தெரிவித்த நாகராஜன், "சார்! நான் கூட வாடகை வீட்டில குடியிருந்திருக்கேன். அப்பல்லாம் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வாடகையை ஓழுங்காக் கொடுத்துடுவேன். எப்பவாவது, ஒரு நாள் தாமதமானாக் கூட, வீட்டுக்காரர் ஏதாவது நினைச்சுப்பாரோன்னு பயமா இருக்கும். ஆனா, இப்ப எனக்கு வர வேண்டிய வாடகை முழுசா வரல. குடியிருந்தவர் ரெண்டு மூணு மாச வாடகை கொடுக்காம ஏமாத்திட்டுப் போயிட்டாரு. இதை நினைச்சாதான் எனக்கு மனசுக்குக் கஷ்டமா இருக்கு!" என்றார், வருத்தத்துடன்.
"வருத்தப்படாதீங்க, நாகராஜன். இந்த மூணு மாச வாடகை இழப்பு உங்களுக்குப்பெரிய விஷயம் இல்ல. புதுசா ஒத்தருக்கு வாடகைக்கு விடறப்ப வாடகை அதிகமாக் கூடக் கிடைக்கும். ஆனா, உங்களுக்குக் கஷ்டம் கொடுத்த சங்கர்தான் இப்ப கஷ்டப்படப் போறான்!'" என்றார் பசுபதி.
"எப்படிச் சொல்றீங்க?"
"இப்ப அவன் வாடகைக்குப் போயிருக்கிற வீடு ஒரு அரசியல்வாதியோடது. வீட்டுச் சொந்தக்காரர் ஒரு பினாமிதான். அந்த அரசியல்வாதி பண்ற கெடுபிடியில, எத்தனையோ பேர் அந்த வீட்டில ரொம்ப நாள் குடியிருக்க முடியாம ஓடி இருக்காங்க. ஒழுங்கா வாடகை கொடுத்தவங்களுக்கே இந்த கதின்னா, இவனை மாதிரி ஒழுங்கா வாடகை கொடுக்காதவங்களை வறுத்து எடுத்துட மாட்டாரா அந்த அரசியல்வாதி?" என்றார் பசுபதி.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 32
இன்னா செய்யாமை
குறள் 320நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
பொருள்:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சாரும். எனவே, துன்பம் இல்லாமல் வாழ விரும்புபவர்கள், பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment