About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, March 30, 2020

319. பாலியல் புகார்

கங்காதரனின் அந்தரங்க உதவியாளர் ரேணுகா அவர் மீது கொடுத்திருந்த பாலியல் புகார் மீது முதல் கட்ட விசாரணை நிறுவனத்தின் 
சி இ ஓ வின் அறையில் நடைபெற்றது. 

வழிகாட்டல் முறைப்படி சி இ ஓ, நிறுவனத்தின் ஒரு பெண் அதிகாரி இவர்களைத் தவிர, ஒருவெளி நபராக ஒரு தன்னார்வ நிறுவனத்தின் அதிகாரி ஆகிய மூவர் கொண்ட குழு விசாரணை  நடத்தியது.

புகார் கொடுத்த ரேணுகாவும், அவர் சார்பாக வாதாட பெண் உரிமை ஆக்டிவிஸ்ட் என்று அழைக்கப்பட்ட லதா என்ற பெண்மணியும் வந்திருந்தனர். கங்காதரன் தன் சார்பாக வாதிட யாரையும் வைத்துக் கொள்ளவில்லை.

லதா புகாரின் விவரங்களை சுருக்கமாகத் தெரிவித்தார்.

"மிஸ்டர் கங்காதரனுக்கு ஆரம்பத்திலேந்தே ரேணுகா மேல ஒரு கண் இருந்திருக்கு. அவருக்கு மானேஜரா பதவி உயர்வு கிடைச்சதும், அலுவலகத்திலிருந்த நாலு பெண் ஸ்டெனோக்கள்ள ரேணுகாவைத் தன்னோட அந்தரங்கச் செயலாளரா நியமிச்சுக்கிட்டிருக்கார். 

"அடிக்கடி அவங்க கிட்ட விஷமத்தனமா பேசறது, தெரியாம மேல கை படற மாதிரி தொடுவது மாதிரி பல சில்மிஷங்கள் செஞ்சிருக்கார். 

"ஒரு நாள் முக்கியமான கடிதம் டிக்டேட் செய்யறதாச் சொல்லி, அவங்களை அறைக் கதவை சாத்தித் தாளிடச் சொல்லி இருக்காரு. அவங்களும் அப்பாவித்தனமா கதவைச் சாத்தி இருக்காங்க. 

அப்பத்தான் அவர் ரேணுகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செஞ்சிருக்காரு. ரேணுகா தன்னை விடுவிச்சுக்கிட்டு கதவைத் திறந்துக்கிட்டு அழுது கிட்டே வெளியே ஓடியிருக்காங்க. இதை அலுவலகத்தில எல்லாரும் பாத்திருக்காங்க." 

"நீங்க என்ன சொல்றீங்க, கங்காதரன்?" என்றார் சி ஈ ஓ.

"சார்! ரேணுகா கிட்ட நான் எப்பவும் தப்பாப்  பேசினது இல்ல. அவளைத் தொட்டதும் இல்லை..." என்று ஆரம்பித்தான் கங்காதரன்.

"சார்! ஒரு பெண் ஊழியரை அவள் இவள்ன்னு பேசறதே தப்பு. இதுவே ஒருவித வன்முறைதான்!" என்றார் லதா.

"ஐ ஆம் சாரி! என்னை விட வயசில சின்னவங்கறதால அவளை - சாரி அவங்களை -  நான் வா, போ ன்னுதான் பேசுவேன். அதனால்தான் அவன்னு சொல்லிட்டேன். மறுபடியும் சாரி!" என்றான் கங்காதரன். 

தானும் தனக்காக வாதாட ஒருவரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் போலிருக்கிறது என்று அப்போது அவனுக்குத் தோன்றியது.

"நாலு ஸ்டெனோக்கள்ள ரேணுகாவை நான் தேர்ந்தெடுத்தது ரேண்டமாத்தான். நாலு பேர்ல யாரைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் ஏன் குறிப்பிட்ட ஒருத்தரைத் தேர்ந்தெடுத்தேன்னு கேட்க முடியும்! இதுக்கு என் கிட்ட பதில் இல்ல. 

"ரேணுகா அடிக்கடி ஃபோன்ல யார்கிட்டயாவது பேசிக்கிட்டிருப்பாங்க. அதை நான் கண்டிச்சிருக்கேன். அவங்களோட டைப்பிங்கில் நிறையத் தப்பு இருக்கும். நிறைய தடவை கடிதங்களை ரீடைப் பண்ணச் சொல்லி இருக்கேன்.

"இதனால எல்லாம் அவங்களுக்கு என் மேல கோபமா இருக்கலாம். ஒரு தடவை அவங்களை வேற செக்‌ஷனுக்கு அனுப்பிட்டு நான் வேற ஒரு ஸ்டெனோவை என் உதவியாளரா வச்சுக்கப் போறதா சொன்னேன். 

"அவங்க தன்னை இப்ரூவ் பண்ணிக்கணுங்கறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். அதில அவங்க அப்செட் ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம்தான் என் மேல ஒரு பொய்யான புகாரைக் கொடுத்திருக்காங்க."

"நீங்க அவங்களை அறைக்கதவை உள்பக்கமா பூட்டச் சொன்னது?" என்றார் தன்னார்வ நிறுவனத்தின் அதிகாரி.

"சார்! நான் அப்படிச் சொல்லல. அவங்களே பூட்டி இருக்காங்க. அது எனக்குத் தெரியாது. திடீர்னு தலை, உடையை எல்லாம் கலைச்சுக்கிட்டு கதவைத் திறந்துகிட்டு வெளியே போனாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. வெளியில போய் அழுது கிட்டே என்னைக் கை காட்டி மத்தவங்க கிட்ட ஏதோ சொன்னாங்க. அப்புறம்தான் அவங்க இப்படி ஒரு டிராமா போடறதே எனக்குப் புரிஞ்சுது!" என்றான் கங்காதரன்.

"பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணோட பதட்டத்தை டிராமான்னு கொச்சைப் படுத்தாதீங்க, மிஸ்டர் கங்காதரன்!" என்றார் லதா.

ங்காதரன் வெளியே வந்ததும் அங்கே நின்றிருந்த சேது அவனிடம் வந்தான்.
"என்ன ஆச்சு, கங்காதரா?" என்றான் பரிவுடன்.

"ஷோ இன்னும் நடந்துக்கிட்டிருக்கு. இப்ப ஒரு ஷார்ட் கமர்ஷியல் பிரேக்!" என்றான் கங்காதரன் வெறுப்புடன். "இப்படியா ஒருத்தி போய் சொல்லுவா?"

"கவலைப்படாதே கங்காதரா! உனக்கு ஒண்ணும் ஆகாது!" என்றான் சேது ஆறுதலாக.

கங்காதரன் சேதுவின் முகத்தைப் பார்த்தான்.

அந்த நிறுவனத்தில் கங்காதரனுக்கு முன்பே வேலையில் சேர்ந்தவன் சேது. வேலையில் மிகவும் திறமையானவன். ஆனால் நேர்மையும், பிடிவாத குணமும் உடையவன். தன் மூத்த அதிகாரிகள் சொன்னதெற்கெல்லாம் ஆடாமல், முறைப்படியும், விதிகளின்படியும் எது சரியோ அதையே செய்ய வேண்டும் என்று உறுதியாக இருப்பவன். இதனாலேயே மேலதிகாரிகளுக்கு அவன் மீது கொஞ்சம் அதிருப்தி உண்டு. 

வேலையில் சேர்ந்ததுமே இதைப் புரிந்து கொண்ட கங்காதரன் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டான். மேலதிகாரிகளிடம் சேதுவைப் பற்றிப் பல தவறான செய்திகளைச் சொல்லி சேதுவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் தந்திரமாக ஈடுபட ஆரம்பித்தான். 

தன் மேலதிகாரிகளைப் பற்றி சேது தன் சக ஊழியர்களிடம் அவதூறான கருத்துக்களைப் பரப்புவதாக கங்காதரன் ஜோடித்த கதைகள் சேதுவின் மீது  ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த அவன் மேலதிகாரிகளிடம் அவன் மீது தவறான கருத்து உருவாக வழி செய்தன.

இதனால் சேதுவை முந்திக் கொண்டு பதவி உயர்வு பெற்று கங்காதரன் நிறுவனத்தின் பதவிப் படிக்கட்டில் மேலே வந்து விட்டான். இதை அறியாத சேது இன்னும் கங்காதரனிடன் நட்புடன் இருந்து வந்தான். 

"நீ நிச்சயம் இதிலேந்து குற்றமில்லாதவனாக வெளியே வருவே. பொய்யான விஷயங்களைச் சொல்லி ஒத்தரைத் தப்பானவரா ஆக்கி விட முடியுமா என்ன?" என்றான் சேது. 

'உன்னை நான் ஆக்கி இருக்கேனே! அதனாலதான் எனக்கு இப்படி நடக்குதோ என்னவோ!' என்று நினைத்துக் கொண்டான் கங்காதரன்.    

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்..

பொருள்:
முதலில் ஒரு சமயம் பிறருக்கு நாம் துன்பம் விளைவித்தால், பிற்காலத்தில் நமக்குத் துன்பம் வந்து சேரும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்














No comments:

Post a Comment